Monday, 19 May 2014

SOKKANAATHAA!!!


     சோத்துக்குப் பின் சொக்கநாதர்      புலவருக்குப் பின் சொக்க நாதர்




மதுரையை Temple City என்பார்கள்.
ஆனால் பெரும்பாலோருக்கு - படித்த அறிஞர்களுக்குக்கூட மதுரையில் எத்தனை கோயில்கள் இருக்கின்றன என்பது தெரியாது.

அதாவது நான் குறிப்பிடுவது பழமையான கோயில்களை.

மீனாட்சியம்மன் கோயிலில் இருக்கும் சுந்தரேஸ்வரைச் 'சொக்கநாதர்' என்றும் அழைப்பார்கள்.
"சோத்துக்குப் பின் சொக்கநாதன்' என்ற பழமொழி ஒன்று மதுரையில் வழங்கிவந்தது.

உவேசாமிநாதய்யரவர்கள் உயிருக்குயிராய் நேசித்த 'தமிழ் விடு தூது' என்னும் நூலின் பெயர் 'மதுரை சொக்கேசர் தமிழ் விடு தூது' என்பதாகும்.

மீனாட்சியம்மன் கோயிலில் இருக்கும் சொக்கநாதர் தவிர இன்னொரு
இடத்திலும் சொக்கநாதர் இருக்கிறார்.

அந்தக் கோயிலுக்கு இவரே Sole-Proprieter. மீனாட்சியம்மன்
கோயிலில்.......... அதுதான் பெயரைப் பார்த்தாலே தெரிகிறதே.

ஆனால் பாருங்கள்...... ஒரு காலத்தில் அதைத் 'திருவாலவாயுடையார்
கோயில்' என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.

சொக்கநாதருடைய கோயில் மதுரையின் வடகிழக்குப் பகுதியில் - ஈசான்யத்தில் - அது இருக்கவேண்டிய இடத்தில் இருக்கிறது.
ஒரு நகரத்தின் ஈசான்யத்தில் சிவன் கோயில் இருக்கவேண்டும் என்பது ஆகம-சில்பசாஸ்திர-வாஸ்து மரபு.

மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் ஊருக்கு நடுவில் இருக்கிறதே. அது எப்படி?
அதுவும் ஆகமப்படி சரிதான்.
அதை 'சர்வதோபத்திர' அமைப்பு என்பார்கள்.

அந்த இன்னொரு இடத்துச் சொக்கநாதர் இருக்கும் கோயிலைப் 'பழைய
சொக்கநாதர் கோயில்' என்று குறிப்பிடுவார்கள்.

அது சரி.......
"அவர் ஏன் அங்கு இருக்கிறார்......?" என்று யாரும் கேட்கப்போவதில்லை.

பரவாயில்லை.
கேட்கவில்லையென்றாலும் என்ன கேள்வி எழும் என்பதை இந்த
நாற்பத்தைந்து ஆண்டுகளில் தெரிந்துகொள்ளமுடியவில்லை என்றால்.......
என்னத்தப் படிச்சு, என்னத்த ஆராய்ஞ்சு, என்னத்தச் சொல்லி, என்னத்த எழுதி, என்னத்த அலக்குடுத்து என்னத்த ஒலக்கெ சாத்தி.......?

மீனாட்சியம்மன் கோயிலில் இருக்கும் சுந்தரேஸ்வரைச் 'சொக்கநாதர்' என்றும் அழைப்பார்கள்.
    "சோத்துக்குப் பின் சொக்கநாதன்' என்ற பழமொழி ஒன்று மதுரையில் வழங்கிவந்தது.

மதுரையை "City of Festivals", "Temple City" என்றும் கீழ்த்திசையின் ஏதென்ஸ் என்றும் சொல்வார்கள்.

இங்கு மதுரை மீனாட்சியம்மன்கோயிலில் வருடம் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களும் ஒரு குறிப்பிட்ட திருவிழா நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது.
அந்த தினசரித் திருவிழாவை "திருப்பள்ளியறைத் திருவிழா" என்று
சொல்வார்கள். இது தினந்தோறும் இஇரவில் நடைபெறும்.
எப்படியும் தொடங்குவதற்கே 10-30க்கு மேல் ஆகிவிடுகிறது.
திருப்பள்ளியறைக்குச் செல்லும்போது கோயில் பட்டர் சேலை கட்டிக்
கொண்டு போவார்.
அந்த விழாவின் இறுதியில் அருமையான பால் நைவேத்தியத்தைப்
பிரசாதமாகத் தருவார்கள். மிக ருசியாக இருக்கும்.
இந்த விழாவைப் பார்ப்பதற்கும், அந்தப் பால் பிரசாதத்தைச் சாப்பிடுவதற்கும் மக்கள் வந்திருப்பார்கள்.
இந்த மாதிரி ஒருவிழா நடப்பதே மதுரை சம்பிரதாயத்தில் நன்கு ஊறிப்போன மதுரைக் காரர்களுக்கு மட்டுமே தெரியும்.
ரொம்ப காலமாக நடந்துவரும் விழாவல்லவா?
இதை ஒட்டி மதுரையில் நீண்டகாலமாக ஒரு வழக்கம் உண்டு.
அக்கம்பக்கத்து மக்கள், அந்தக் காலத்தில் இரவு சாப்பாட்டுக்குப் பின்னர் கோயிலுக்கு வந்து, இந்த விழாவைப் பார்த்துவிட்டு, பால்பிரசாதத்தைச்
சாப்பிட்டுவிட்டுச் செல்வார்கள்.
இதனை ஒட்டியே மதுரையில், "சோத்துக்கப்புறம் சொக்கநாதர்", என்ற
சொல்வழக்கு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் திருவிளையாடற் புராணத்தில் தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தை எழுதியிருந்தேன்.
இதில் செண்பகமாறன் என்னும் வங்கியசேகர பாண்டியனின் சந்தேகத்தை
ஆலவாய்ச் சொக்கன் புலவராக வந்து கண்டசுத்தியாகப் பாடலொன்றைச்
சொல்லி ஐயம் தீர்த்ததாகச் சொன்னேன்.
அந்த செண்பகமாறனுக்ப் பின்னர் பதினைந்து பாண்டியர்கள் ஆண்டபிறகு குலேச பாண்டியன் என்னும் பாண்டியர் ஆண்டுவந்தார்.

இலக்கணம் இலக்கியத்தில் வரம்பு கண்டவர்; எத்தகைய பெருநூலையும் எல்லை கண்டவர். ஆகவே முத்தமிழ்ச் சங்கத்தில் இவருக்கும் இடம்
கொடுத்திருந்தார்கள்.
சாதாரணமாக சங்கத்தில் அங்கத்துவம் பெற்ற புலவர்கள் குறிப்பிட்ட
எண்ணிக்கையுடையவர்கள் இருப்பார்கள்.
அவர்களுக்கெல்லாம் தலைமைப் புலவர் ஒருவர் இருப்பார்.
தமிழ்ச்சங்கத்தின் புரவலராக அப்போது ஆட்சியிலிருக்கும் பாண்டியமன்னர் இருப்பார்.
குலேச பாண்டியனாரோ புரவலராகவும் புலவராகவும் இருந்திருக்கிறார்.
கல்வியில் கேள்விகளில் தேர்ந்து முழுதுணர்ந்த கபிலர் தமிழ்ச்சங்கத்துக்குத் தலைவராக இருந்தார்.
அவருடைய நெருங்கிய நண்பர் இடைக்காடர் என்னும் புலவர்; கபிலர்
தம் அரசனுடைய சிறப்பியல்வுகளைச் சொல்லக்கேட்டு, தாம் கபிலரின்பால் வைத்திருந்த அன்பினாலும் நெருக்கத்தினாலும் மிக இனிய பனுவல் ஒன்றைக் கொண்டுவந்து அரசனிடம் வாசித்தார்.

வழக்காத சொற்சுவையும் பொருட்சுவையும்
பகிர்ந்தருந்த வல்லோனுள்ளத்(து)
அழுக்காற்றாற் சிரந்துளக்கான் அகமகிழ்ச்சி
சிறிதும் முகதலர்ந்து காட்டான்
எழுக்காயும் திணிதோளான் ஒன்றும் உரை
யான்வாளா விருந்தான்; ஆய்ந்த
குழுக்காதல் நண்புடையான் தனைமானம்
புறம் தள்ளக் கோயில் புக்கான்

வழுக்களேயில்லாத, பொருட்சுவை, சொற்சுவை கொண்ட அந்தப் பனுவலைப் பாடியபோது, பாண்டியமன்னர் மனதில் பொறாமைகொண்டு தலையை அசைத்து ரசிக்காமலும், அக மகிழ்ச்சியை முகத்தில் காட்டாமலும் ஒன்றுமே
சொல்லாமலும் பேசாதிருந்தார்.

இதனால் தம்முடைய மானம் பின்னாலிருந்து உந்தித்தள்ள, இடைக்காடர்
கோயிலுக்குச்சென்றார்.

தமிழ்ச்சங்கத்தை அகத்தியரைக் கொண்டு நிறுவி, அந்தச் சங்கத்தில் தாமே ஒரு புலவராகவும் இருந்து, அதன் தலைவராகவும் விளங்கியவர் திரிபுரம்
எரித்த விரிசடைக் கடவுள் என்றும் இறையனார் என்றும் பெயர் பெற்ற
ஈசன்.
ஆகவே அவரிடமே சென்று முறையிட்டார் இடைக்காடர்.

சந்நிதியில் வீழ்ந்தெழுந்து "தமிழறியும்
பெருமானே! தன்னைச் சார்ந்தோர்
நன்னிதியே! திருவால வாயுடைய
நாயகனே! 'நகுதார் வேம்பன்
பொன்னிதிப்போல் அளவிறந்த கல்விமிக்(கு)
உளன்'என்று புகலக் கேட்டுச்
சொல்நிறையும் கவி தொடுத்தேன்; அவமதித்தான்,
சிறிதும் முடி துளக்கான் ஆகி"

"பொன் நிதி போன்ற அளவிறந்த கல்வியுடையவன் என்றெண்ணி அல்லவா
நான் அவனிடம் சென்று அரியதொரு பனுவலை வாசித்தேன்!
அவன் சிறிதும் தலை அசைக்காமல் அவமதித்தான்".

பரிவாயின் மொழி தொடுத்து வருணித்தோர்க்(கு)
அகமகிழ்ந்தோர் பயனு நல்கா
விரிவாய தடங்கடலே நெடுங்கழியே,
அடுங்கான விலங்கே, புள்ளே,
புரிவாய பராரைமர நிரையே, வான்
தொடுகுடுமிப் பொருப்பே, வெம்பும்
எரிவாய கொடுஞ்சுரமே, என இவற்றோர்
அ·றிணை ஒத்து இருந்தான், எந்தாய்!

"மிருகம், பறவை, நெடுமலை, எரிக்கும் சுரம் போன்ற
அ·றிணைப் பொருள்கள் போலவே இருந்தான்".

என்னை இகழ்ந்தனனோ, சொல்வடிவாய் நின்
னிடம்பிரியா இமையப்பாவை
தன்னையும்சொற் பொருளான உன்னையுமே
இகழ்ந்தனன்; என்றனுக்கியாதென்னா
முன்னைமொழிந்திடைக்காடன் தணியாத
முனிவீர்ப்ப முந்திச்சென்றான்
"அன்னவுரை திருச்செவியினூறுபா(டு)!"
என உறைப்ப அருளின் மூர்த்தி

"என்னையா அவன் இகழ்ந்தான்? சொல்வடிவாய் உன்னுடைய இடப்பாகத்தைப் பிரியாமல் இருக்கும் இமையப் பாவையையும், சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவன் இகழ்ந்தான். எனக்கு என்ன?" என்று சொன்னவாறு இடைக்காடர் முன்னால் சென்றார்.
"உன்னுடைய சொற்கள் என் காதுகளுக்கு ஊறுபாடாய் விளங்குகின்றன", என்றார் ஆலவாய் அண்ணல்.
அப்புறம் என்னவாயிற்று?.....

'போன இடைக்காடனுக்கும் கபிலனுக்கும்
மகத்துவகை பொலியுமாற்றான்
ஞானமயமாகிய தன் இலிங்க உரு
மறைத்து உமையா(ள்) நங்கையோடும்
வானவர் தம்பிரான் எழுந்து புறம்போய்த்தன்
கோயிலின் நேர் வடபால் வையை
ஆனநதித் தென்பால் ஓர் ஆலயம் கண்டு
அங்கண் இனிது அமர்ந்தான் மன்னோ!

அங்கிருந்து சென்றுவிட்ட இடைக்காடருக்கும் கபிலருக்கும் உவகை
உண்டாகுமாறு, கோயிலில் தம்முடைய லிங்க உருவை மறைத்துவிட்டு,
தாம் உமையம்மையுடன் எழுந்து அப்பாற்போய் தம்முடைய கோயிலுக்கும் வடக்கே வைகை என்னும் நதியின் தெற்கே ஓர் ஆலயத்தை ஏற்படுத்தி,
அதில் இனிதாக அமர்ந்தார், ஈசன்.   

சங்கவான் தமிழ்த்தெய்வப் புலவோரும்
உடனெழுந்து சைல வேந்தன்
மங்கைநாயகன்போன வழிபோய் அங்(கு)
இருந்தார் அவ்வழிநாள் வைகற்
கங்குல்வாய்ப் புலரவரும் வைகறையில்
பள்ளியுணர் காலத்தெய்தி
அங்கணாய் அகன் அடியார் சேவிப்பார்
இலிங்க உரு அங்குக் காணார்

மலையாண்டியாகிய மங்கைநாயகன் சென்ற வழியில் சங்கப்புலவர்கள் அனைவரும் உடனே எழுந்து போய் அவருடன் அங்கேயிருந்தனர்.
காலையில் வழிபாடு செய்ய வந்தவர்கள் கோயிலில் லிங்க உருவைக்காணாது திகைத்தார்கள்.
உடனே அரசனுக்கு விபரத்தைத் தெரிவித்தார்கள்.

அரசனிடைப் புகுந்து உள்ள நடுநடுங்கி
நாவுணங்கி, "அரசே! யாம் ஒன்று
உரைசெய அஞ்சுதும்! உங்கள் நாயகனைத்
திருப்பள்ளி யுணர்ச்சி நோக்கி
மரைமலர்ச்சேவடிபணியப் புகுந்தனம்; இன்று
ஆங்கு அவன்றன் வடிவம் காணோம்!"
புரமுநணி புலம்படைந்த தென்றழல்வேல்
எனச் செவியிற் புகுத்தலோடும்

"ராசா ராசா! நாங்க ஒண்ணு சொல்ல ரொம்ப பயப்படறொம்னா. காத்தால
கோயிலுக்கு திருப்பள்ளியெழுச்சிக்காகப் போயி நாங்க பாக்கறச்செ
சுவாமியக் காணொம்னா!"

சுவாமியைக் கர்ப்பக்கிரகத்தில் காணவில்லை என்பதைக் கேட்டதும் அரசன்.......

வழுதிஅரி யணையிலிருந்து அடியிற வீழ்
பழுமரம்போல் மண்மேல் யாக்கை
பழுதுற வீழ்ந்து, உயிர் ஒடுங்க, அறிவு ஒடுங்கி,
மண்பாவை படிந்தாங்கு ஒல்லைப்
பொழுதுகிடந்து, அறிவுசிறிது இயங்க, எழுந்து
அஞ்சலிக்கைப் போது கூப்பி,
அழுது இரு கண்ணீர்வெள்ளத்து ஆழ்ந்து "அடியேன்
என் பிழைத்தேன்? அண்ணால்! அண்ணால்!"

"எங்குற்றாய், எங்குற்றாய்" என்று புலம்பினார், மன்னர்.

சிலர்வந்து, "மன்னா! ஓர் அதிசயம் கண்டனம். வையைத் தென்சாராக
அலர்வந்தோன் படைத்த நாள் முதல் ஒருகாலமும் கண்டதன்று! கேள்வித் 

தலைவந்த புலவரொடும் ஆலவாய் உடையபிரான், தானே செம்பொன்
மலைவந்த வல்லியொடும் வந்து இறை கொண்டு உறைகின்றான், மாதோ!" என்றார்.

சிலர் அரசனிடம் வந்து சொன்னார்கள்: "மன்னா! நாங்கள் ஓர் அதிசயம் கண்டோம். பிரம்மா படைத்த நாள்முதல் ஒரு காலத்திலும் கண்டறியாதது, அது. வைகையின் தென்சார்பில் சங்கப்புலவர்களோடு ஆலவாய் இறைவன், மலைமகளோடு தலைமைகொண்டு உறைகின்றான்!"

அரசர் வேகமாக அங்கு சென்று பார்த்தார்.

படர்ந்து, பணிந்து, அன்புஉகுக்கும் கண்ணீர் சோர்ந்து,
ஆனந்தப் பௌவத்து ஆழ்ந்து
கிடந்தெழுந்து, நாக்குழறத் தடுமாறி,
"நின்றிதனைக் கிளக்கும் வேதம்
தொடர்ந்தறியா அடிசிவப்ப, நகர்புலம்ப,
உலகீன்ற தோகையோடு இங்கு
அடைந்து அருளும் காரணம் என்ன? அடியேனால்
பிழையுளதோ? ஐயா! ஐயா!"

அல்லதையென் றமரால் என் பகைஞரால்
கள்ளரால், அரிய கானத்து
ஒல்லை விலங்காதிகளால் இடையூறு இன்
தமிழ்நாட்டில் எய்திற்றாலோ?
தொல்லை மறையவர் ஒழுக்கம் குன்றினரோ?
தவம் தருமம் சுருங்கிற்றாலோ?
இல்லறனும் துறவறனும் பிழைத்தனவோ?
யான் அறியேன், எந்தாய்! எந்தாய்!

தொடர்ந்து பல்வகைத் துதிகளாலும் பாண்டியமன்னர், "போற்றி! போற்றி!" என்று வழுத்தினார்.


பாண்டிய மன்னரின் துதிகளைக் கேட்ட பரமன் மனமகிழ்ந்து ஆகாயவாணி மூலம் அரசனிடம் சொன்னார்:
தேவர் முதல் பலவித கணங்களால் வழிபடப்பெறும் சுயம்புவாகத்
தோன்றிய தம்முடைய லிங்கங்கள் எண்ணிக்கையற்றவை இருக்கின்றன.
அவற்றில் அறுபத்துநான்கு மேம்பட்டவை. அவற்றிலும் எட்டு மிக
முக்கியமானவை. அவற்றில் சிறப்புவாய்ந்ததாக இங்கு விளங்கும் லிங்கம் இருப்பதால் தாம் உத்தர ஆலவாய் என்னும் இத்தலத்தில் இங்கே வந்து உறைகின்றதாகக் கூறினார்.

"கடம்பவனத்தை விட்டு யாம் நீங்கி வந்துவிடமாட்டோம்.
நீயாக ஏதும் தீங்கு செய்யவில்லை. காடன் செய்யுளை இகழ்ந்ததாலே
அவனிடத்தில் யாம் வைத்த அருளினால் இடம் பெயர்ந்து வந்தோம்",
என்றார்.
அரசன் அடிபணிந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
அதன் பேரில் உமையுடனும் சங்கப்புலவர்களுடனும் திருக்கோயிலுக்கு இறைவன் திரும்பினார்.
இடைக்காடருக்கு மிகுந்த மரியாதைகள் செய்து அவரை உயரிய
ஸ்தானத்தில் வைத்து அவருடைய பனுவலை அரசர் கேட்டார்.

காடருக்கும் புலவர்களுக்கும் 'முறைமையால் ஆரம் தூசு,
குளிர் மணியாரம் தாங்கி, மங்கல முழவம் ஆர்ப்ப, மறையவர்
ஆக்கங் கூற, நங்கையர் பல்லாண்டேத்த, நன்மொழிப் பனுவல்
கேட்டார். நிறைநிதி, வேழம், பாய்மான், விளைநிலம், நிரம்ப
நல்கினார்.

அவர்கள் முன்செல்ல, அரசன் அவர்களின் பின்னே ஏழடி நடந்துவந்து "இடைக்காடனாருக்கு நான் செய்த குற்றமெல்லாவற்றையும் பொறுக்க வேண்டும்", என்று அவர்களைப் பரவித் 'தாழ்ந்தார்'.

"நுண்ணிய கேள்வியுடைய மன்னவனே, நீ சொன்ன சொற்கள் என்னும் குளுமையான அமுதத்தால் எங்கள் கோபத்தீ தணிந்தது", என்றார்கள்.
இந்தக் கதை திருவிளையாடற் புராணத்தில் 'இடைக்காடர் பிணக்குத்
தீர்த்த படலம்' என்னும் பகுதியில் இருக்கிறது.
இதுபோலவே புலவர் பின்னே சென்ற இன்னொரு கதையும்
உள்ளது.....

 
                          $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday, 15 May 2014

EXILE

   தேசப்ரஷ்டம்
EXILE



 'தேசப்ரஷ்டம்' என்பது அக்காலத்தில் வழங்கப்பட்ட தண்டனைகளில் ஒன்று.
    மிகக் கொடுமையானதாகக் கருதப்பட்ட தண்டனைகளில் இதுவும் ஒன்று. ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் தண்டனைக்குரியவன் நாட்டை விட்டுச் சென்றுவிடவேண்டும். அவனுக்கு யாரும் உணவோ இருக்கையோ கொடுக்கக்கூடாது. பேசவும்கூடாது. அவ்வாறு மீறிச் செய்பவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடும்தண்டனைக்கும் ஆளாவார்கள்.

    ப்ரஷ்டத்துக்கு உரிய ஆள் என்பதை அடையாளம்காட்ட நெற்றியில் அடையாளத்தைச் சுட்டுவிடுவார்கள்.
    அவனுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவனுடைய
குடும்பத்தினரும் ஆதரவற்றவர்களாக்கப்படுவார்கள். ப்ரஷ்டனுடைய
குடும்பத்தினர் என்ற வகையில் அவர்களுக்கு யாரும் உதவி செய்யக்கூடாது.

    அவனுக்குக் கொடுக்கப்படும் கெடுவுக்குள் அவன் செல்லவில்லை யென்றால் சித்திரவதைக்கு ஆளாகி முடிவில் கொல்லப்படுவான்.
  
    இன்னொரு நாட்டுக்குச் சென்றாலும்கூட அவன் ஒரு 'ப்ரஷ்டன்' என்பதைக் கண்டுபிடித்துவிடுவார்கள். என்ன காரணத்துக்காக அவன் ப்ரஷ்டம் செய்யப்பட்டான் என்பதை கவனத்தில் கொள்வார்கள். ப்ரஷ்டத்துக்கு ஆளாகியவன் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவன்தான். எங்கு போனாலும் அவனுக்கு மரியாதை இருக்காது. இன்னொரு நாட்டிலும் அவன் ஒதுக்கப் பட்டவனாகவும் தாழ்த்தப்பட்டவனாகவும் உரிமைகள் அற்றவனாகவும்தான் கருதப்படுவான். மற்றவர்களுக்காக இருக்கும் சட்டங்களின் பாதுகாப்பும் அவனுக்கு இருக்காது.
    ஒருநாட்டின் ப்ரஷ்டன் இன்னொரு நாட்டில் ஆதரிக்கப்பட்டால் அது முந்தைய நாட்டை அவமதிப்பதாகும்.
    அவன் அரசியல் காரணங்களுக்காக நாடு கடத்தப்பட்டு, அவனுடைய நாட்டுமன்னனுக்கு விரோதியாக இருக்கக்கூடிய இன்னொரு நாட்டுக்குச் சென்று, அந்த நாட்டில் அவனுக்கு asylum கிடைக்கக்கூடும். ஆனால் எல்லாருக்கும் இந்த வாய்ப்பு கிட்டாது அல்லவா?
    இப்படிச் செய்வது பல சமயங்களில் ஓர் Act of War என்று கருதப் படுவதுமுண்டு.
    சிரச்சேதம் போன்ற கொலைத்தண்டனை அக்காலத்தில்
merciful-ஆகக் கருதப்பட்டது.
    சுக்கிரநீதி, கௌட்டில்யம், பார்ஹஸ்பத்யம், மானவ்யம் போன்ற
நீதிநூல்களில் ப்ரஷ்டத்தைப் பற்றி காணலாம்.
  
    தீவாந்தர சிட்சை என்பதும் ஒரு நாடு கடத்தல் மாதிரிதான்.
    ஏதாவது அநாமத்துத் தீவில் கொண்டுபோய் இறக்கிவிட்டுவிடுவதும்
உண்டு.
    தீவாந்தர சிட்சைக்கென்று சில தீவுகள் வைத்திருந்தார்கள். தண்டனைக்குரியவர்களை அத்தகைய தீவுகளில் காவலில் வைப்பார்கள். சில தீவுகளில் சும்மா விட்டுவிடுவார்கள். சில தீவுகளில் கடுமையான காவலுடன் கூடிய சிறைச்சாலைகள் இருக்கும். பிற்காலத்தில் அந்தமான், Devils Island, Alcatraz போன்றவை இருந்தன.
    பினாங்கும் தீவாந்தர சிட்சைக்குரிய இடமாகத்தான் இருந்தது.
1801-இலேயே அது அவ்வாறு இயங்கியது. அங்கு பலகாலமாக அந்தத்
தீவின்வாசிகள் வசித்துவந்தனர். அவர்கள் ஏற்கனவே அங்கு இருந்தவர்கள்.
தீவாந்தர சிட்சைக்கு ஆளாகியவர்களை கூலிவேலைக்குப் பயன் படுத்தினார்கள்.
    அந்தக் காலத்தில் தீவாந்தர சிட்சைக்குரியவர்களின் நெற்றியிலும்
அடையாளக்குறி வைத்தார்கள். பிரிட்டிஷ்காரர்கள் நம்பர் போட்டு விட்டார்கள்.
    இந்தக் குறிகளை அழிப்பதற்குரிய Plastic Surgeryகூட இருந்தது. கன்னத்திலிருந்து Skin Graft எடுத்து நெற்றியில் ஒட்டிவிட்டார்கள்.
    இந்த ப்லாஸ்ட்டிக் ஸர்ஜரியைப் பற்றிய பழைய இழையை அகத்திய ஆவணத்தில் பார்க்கலாம்.

    ஆம். பினாங்குக்குத்தான் Prince of Wales Island என்று
பெயரிட்டிருந்தார்கள்.
    அந்தக் காலத்தில் சையாம் என்றழைக்கப்பட்ட தாய்லந்து ஒரு Regional Power. இப்போதைய மலாயாவின் வட பகுதிகள் எல்லாம் சையாம் நாட்டிற்கு உட்பட்டவை. அக்காலத்தில் இருந்த கடாரத்தின் சுல்த்தானும் சையாமுக்குக் கப்பம் செலுத்துபவராக இருந்தார்.
    கப்பப் பாக்கி, வரி, வட்டி, கிஸ்தி, வசூல் என்ற பிரச்னைகள் இருந்து கொண்டேயிருந்தன.
    அப்போது இந்தியாவில் வெகுவேகமாக பிரிட்டிஷ் கிழக்கிந்தியக்
கம்பெனியின் ஆதிக்கம் பரவிக்கொண்டிருந்ததால், பிரிட்டிஷ்காரர்களை தம் பக்கம் இழுத்துக்கொண்டால் நல்லது என்று நினைத்து கும்பினியில் அதிகாரியாக இருந்த Francis Light என்பவர் மூலமாக் கடாரத்து சுல்த்தான் கும்பினியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.
    அதன் மூலம் கடாரத்துக்குச் சொந்தமான 140 சதுரமைல்கள் பரப்பளவு கொண்ட தீவாகிய பினாங்கை அவர்களுக்கு வர்த்தகம், படையிருப்பு ஆகியவற்றுக்காகக் கொடுப்பதென முடிவாகியது.
    அந்த இடத்தில் பிரிட்டிஷ்காரர்கள் இருந்தால் சையாம் வாலாட்டாது என்ற எண்ணம்.
    ஆகவே பினாங்கை ஓசியாக வாங்கிக்கொண்டு அதற்கு Prince of Wales Island என்று பெயரிட்டார்கள். அப்போது இங்கிலாந்து மன்னராக இருந்த மூன்றாம் ஜார்ஜின் பேரால் பினாங்குத்தீவின் ஒரு பகுதியில் Georgetown என்ற ஊரை ஏற்படுத்தினர். அங்கு ஏற்கனவே மக்கள் இருந்தனர். பிரிட்டிஷார் ஏற்படுத்தியது ஒரு Grid-plan படி ஆறுவீதிகள், ஆறு குறுக்குத்தெருக்கள் கொண்ட அமைப்பு. அதிலிருந்து வடக்கும் தெற்குமாய் பல பாகங்களுக்கும்
செல்லும் வீதிகள்.
    அத்துடன் ஒரு கோட்டையையும் கட்டிக்கொண்டனர். மலாக்கா ஜலசந்தியைக் காவல் புரியும்வண்ணமும் தென்கிழக்காசியா, கல்கத்தா, மதராஸ் ஆகியவற்றுடன் நேரடித் தொடர்பு கொண்டதாகவும் அக்கோட்டையும் பட்டனமும் விளங்கியது.
    அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்ட்டனிடம் தோல்வியுற்றுத் திரும்பிய Lord Cornwallis பிரபு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தார். ஆகவே அவருடைய பெயரையே அந்தக் கோட்டைக்கு வைத்தனர். தோத்துப்போன ஆசாமிக்கு இப்படி ஒரு யோகம், பாருங்கள். The Patriot படத்தில் அவருடைய கால்சட்டை, அண்டர்வேர், முதற்கொண்டு நாய்கள்வரைக்கும் Mel Gibson கைப்பற்றி வைத்துக்கொண்டு போனால்போகிறதென்று திருப்பிக்கொடுப்பதாகக் காட்டுவார்கள். அற்புதமான படம். மெல் கிப்ஸனின் முத்திரை பதிந்த படம்.



    ஆனால் பினாங்கில் வர்த்தகத்துக்கு அதிகம் வாய்ப்பில்லை.
    அதை ஏதாவது ஒரு காரியத்துக்குப் பயன்படுத்த வேண்டுமே. சும்மா வேஸ்ட்டாப் போடமுடியுதே. கும்பினி கணக்குக் கேட்குமே. இல்லையா, பின்னே.
    ஆகவே அதை தீவாந்திர சிட்சைக்குரிய இடமாக ஆக்கிவிட்டார்கள்.
    அப்போது கர்நாட்டிக் நாட்டின் பாளையக்காரர்கள் போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களில் தூக்கில் போடப்படாதவர்களையும் சந்தியில் வைத்து சாட்டையடி வாங்காதவர்களையும் பினாங்குக்கு தீவாந்தர சிட்சையில் கும்பினி அனுப்பியது.
    ஆர்காட்டு நவாபின் ஆட்சிக்குட்பட்ட பகுதிதான் கர்நாட்டிக் நாடு. அந்த ஆளின் பதவிக்குப் பெயரே Nawab of Carnaticதான். திப்பு சுல்த்தானின் மைசூர், ஏதோ ஒரு ராவ்ஜியின் தஞ்சாவூர், என்னமோ ஒரு வர்மாவுடைய திருவாங்கூர் போன்றவை நீங்கலாக உள்ள தமிழ்நாடு - அதுதான் கர்நாட்டிக். இப்போதுள்ள கர்நாடகா இல்லை. இது வேறு.
    1820-ஆம் ஆண்டு பினாங்கில் தீவாந்திர சிட்சையின்கீழ் 200 பேர் இருந்தனர்.
    அவர்களில் ஒருவர் துரைச்சாமி சேர்வைக்காரர்.
    சின்ன மருதுவின் கடைசி மகன்.
    எப்படி இத்தனை கணக்காகச் சொல்கிறேன்?
    அது ஒரு பெரிய கதை.

    $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Wednesday, 5 March 2014

AASTHIKAM AND NAASTHIKAM


ஆத்திகமும் நாத்திகமும்

இருபதாண்டுகளுக்கு முன்னர் மலேசியாவிலிருந்து வெளிவந்த 'மயில்' இலக்கியப் பத்திரிக்கைகாக சமயக் கேள்விகளுக்குப் பதில் எழுதி வந்தேன்.
அந்தப் பகுதியில் வந்த நாத்திகம் -ஆத்திகம்' பற்றிய கேள்வி பதில்
.

இந்து சமய விளக்கம்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
மயில் இலக்கிய இதழ்
1992

கேள்வி:
எம்.இந்திரன்,
கம்போங் போகூல்,
பூச்சோங்

கேள்வி: நம்மிடையே ஒரு சாரார் கடவுள் இருக்கிறது என்றும் மற்றொரு
சாரார் கடவுள் இல்லையென்றும் கூறும் நிலைமை எப்படி ஏற்பட்டது?

பதில்: 'அஸ்து' என்றால் இருக்கிறது என்று பொருள். 'ந அஸ்து' என்றாலோ 'இல்லை' அல்லது 'இல்லாமல் இருக்கிறது' என்று அர்த்தம். இருக்கிறது என்போர் ஆஸ்திகர். இல்லை என்போர் நாஸ்திகர்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்து சமயத்தில் ஒரு மாபெரும் சரிவு ஏற்பட்டது. பெருமளவில் ஊழல்கள், மனிதன் மானிதனை மதிக்காத நிலைகள், சடங்கு சம்பிரதாயங்களின்மூலம் மக்களிடையே சிந்தனை முடக்கத்தைத் தோற்றுவித்துவிட்டனர். சமுதாயத்தில் ஒரு பிற்போக்கு வாதம் நீடித்து நிலவ ஆரம்பித்தது.

அந்த நிலையைத் தக்ர்ப்பதற்குப் பல சிந்தனையாளர்கள் தோன்றினர். சமுதாய வாழ்வை முடக்கிவைத்துக்கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளினின்றும் மக்களை விடுபடச் செய்வதற்காகப் பலவித முயற்சிகளை மேற்கொண்டு பலவித வழிகளைக் கண்டுபிடிக்கலாயினர். இந்து சமயத்திற்கு ஆணிவேராக விளங்குபவை நான்கு வேதங்கள். அந்த வேதங்களை அனுசரித்து மேலும் ஆறு நூல்கள் உள்ளன. இவற்றை 'அங்க நூல்கள்' என்பர். 'சடங்கு' என்னும் சொல்லும் 'சாங்கியம்' என்னும் சொல்லும் இதிலிருந்து ஏற்பட்டவைதாம் வேதங்கள்

நான்கினின்றும் தோன்றிய பகுதி நூல்களாகப் 'பிராமணங்கள்' ஆரண்யகங்கள்', உபநிடதங்கள், முதலியவைகளும் விளங்கின. இவை தவிர தர்ம நூல்கள் புராணங்கள் இதிகாசங்கள் முதலிய நூல்களும் ஏற்பட்டன. பிராம்மணர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. சமுதாயத்தின்மீது இரும்புப்பிடியொன்றை அவ்வர்க்கத்தினர் போட்டுவிட்டனர்.
வேதங்களில் சொல்லப்பட்டுள்ள தத்துவக் கருத்துக்களைவிட, , அவற்றில் காணப்படும் தெய்வங்களை எளிமையாகத் துதிக்கும் முறைகளை விட, அவற்றில் உள்ள வாழ்வியல் உண்மைகளை விட, சடங்குகள் தட்சணைகள் போன்றவையே முக்கியத்துவம் பெற்றன.

    இந்தத் தேக்கநிலைகள்மீது பலதுறைகளைச்சேர்ந்த அறிஞர்கள் பல்முனைத் தாக்குதல்களை நடத்தினர்.
    அவர்களில் புத்தர் மகாவீரர் பொன்றோர் வேதங்களை அறவே மறுத்து,
சடங்குகளைப் புறக்கணித்துப் புதிய சமயங்களைத் தோற்றுவித்தனர். புத்தர் தோற்றுவித்த மதத்தில் கடவுள் கொள்கையும் கிடையாது. வேதங்களும் புறக்கணிக்கப்பட்டன.
    சமணத்தில் அருகன், மலர்மிசை ஏகினான், எண்குணத்தான், வாலறிவன், பொறிவாயில் ஐந்தவித்தான் போன்ற பல பெயர்களில் ஒரு பேரிறைவனையும் அவனுக்குப் பரிவார சக்திகளாகப் பல தெய்வங்களையும் வணங்கினர். ஆனால் வேதங்களுக்குப் பதில்
இவர்கள் 'ஸ்ரீபுராணம்' என்னும் நூலையும் அதன் தொடர்பாக உள்ள பல வழி நூல்களையும் அவர்கள் பின்பற்றினர். 


    வேதங்கள் மார்க்கத்தில் கர்ம காண்டம், ஞானகாண்டம் என்ற இருவேறுபாடுகள் உண்டு. கர்மகாண்டத்தைப் பூர்வமீமாம்சை என்று ஞானகாண்டத்தை உத்தரமீமாம்சை என்றும் சொல்வ்துண்டு. பூர்வமீமாம்சையை கடைபிடிப்பவர்களை பூர்வமீமாம்சகர் அல்லது கர்மகாண்டர் என்றும் குறிப்பிடுவார்கள். வேதங்களில் குறிப்பிடப்பட்ட பூஜை, புனஸ்காரம், கடமைகள் சடங்குகள் முதலியவற்றை மட்டுமே இவர்கள் செய்தனர். பூர்வமீமாம்சையில் கடவுள் கொள்கையே கிடையாது. தேவர்கள் போன்றவர்கள் உண்டு. ஜைமினி என்னும் பெரும் ரிஷி நிறுவியது.  இந்தக் கோட்பாடு. குமாரில பட்டர், மண்டனமிசிரர் போன்ற பெரும் பெரும் மேதைகள் இந்த மதத்தில் இருந்தனர்.
    இவர்களை ஆதிசங்கரர் வாதத்தில் வென்று கடவுள் கொள்கையை ஏற்றுக்கொள்ளச்செய்தார்.
    வேதங்களையும் கடவுட் கொள்கையையும் ஏற்றுக்கொள்ளாத இன்னொரு மதமும் இருந்தது. அதன் பெயர் லோகாயாதம். 'கண்டதே காட்சி; கொண்டதே கோலம்; அனுபவிப்பதே உண்மை. நோக்கத்தின் வழி காரணம்; காரணத்தால் காரியம்; காரியத்தின் மூலம் பலன் - இவ்வாறுதான் தர்க்கரீதியாக அதன் தத்துவங்கள் செல்லும்.
    இதில் இறைவனுக்கே இடமில்லை. பச்சையான நாஸ்திக வாதம். இதில் உயிர், இறைவன், மறுமை, பாவம், புண்ணியம், கற்பு முதலிய விஷயங்கள் கிடையாது. வல்லவன் வகுத்ததே சட்டம், வழி, நியதி, நீதி, எல்லாமே. உடலும் உலகுமே மெய். இப்படியாக மிக விரிவாகவும் ஆணித்தரமாகவும் விவரித்துக்கொண்டே இவ்வாதம் போகும். .
    இந்த வாதத்தைச் 'சார்வாகம்' என்றும் குறிப்பிட்டனர். இந்த மதத்தில் ஆறு உட்பிரிவுகள் இருந்தன.
    அவற்றுள் ஒன்று 'பார்ஹஸ்பத்யம்' எனப்படுவது. அசுரர்களின் குரு சுக்கிரன். அசுரர்களின் விரோதிகள் தேவர்கள். தேவர்களின் குரு பிரஹஸ்பதி. சுக்கிரன் தவம் செய்யச் சென்றிருந்த காலத்தில் சுக்கிரனின் வடிவத்தில் பிரஹஸ்பதி அசுரர்களிடம் வந்தார்.
தேவர்களுடைய மாபெரும் சக்திகளையும் தவவலிமைகளையும் ஆன்மீக ஆற்றலையும் குன்றச்செய்து, அவர்களின் பலத்தையும் பராக்கிரமத்தையும் அழிப்பதற்காக சுக்கிரன் உருவில்
வந்த பிரஹஸ்பதி அவர்களிடம் தவறான முறைகளையும் வழிகளையும் நாஸ்திக வாதத்தையும் பரப்பிவிட்டார்.
    போலி சுக்கிரனாக வந்த பிரஹஸ்பதி பரப்பிவிட்ட மதமாதலால் அதற்கு 'பார்ஹஸ்பத்யம்' என்ற பெயர் ஏற்பட்டது.
 



    உபநிடதங்கள் மிகச்சிறந்த உள்ளர்த்தங்களை உள்ளடக்கியவை. இவற்றில் உள்ள சில தத்துவங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு, அவற்றை விவரித்து, வியாக்கியானம் செய்த உட்சமயங்களும் உண்டு. அவற்றில் ஒன்று ஸாங்க்யம், இதை நிறுவியவர் 'கபிலர்' என்னும் முனிவர். வேதங்களை ஸாங்க்யம் ஏற்றுக்கொண்டது. ஆனால் கடவுள் கொள்கையை இது ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே இதை நிரீஸ்வர சாங்க்யம் என்று அழைத்தார்கள்.
    பிற்காலத்தில் வந்த ஸாங்க்யர்கள் கடவுள் தத்துவத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்களை 'சேஸ்வர ஸாங்க்யர்' - 'ச ஈஸ்வர ஸாங்க்யர்' என்பர்.
    கோயில்களையும் சடங்குகளையும் சாஸ்திரங்களையும் அறவே வெறுத்து மிகக்கடுமையாகக் கண்டித்திருக்கின்றனர் சிவவாக்கியர் போன்ற சித்தர்கள்.
    இந்து சமயத்தில் மட்டுமே நாஸ்திக வாதம் உண்டு என்று எண்ணி விடவேண்டாம்.
    இரண்டாயிரத்து ஐந்நூற்று ஆண்டுகளுக்கு முன்னரேயே கிரேக்க நாட்டில் 'எப்பிக்யூரஸ்', ஸீனோ, டெமாக்ரிட்டஸ் போன்ற ஞானிகள் அவரவர் பாணியில் நாஸ்திக வாதங்களை ஏற்படுத்தினர். ஸ்க்கெப்டிக்ஸ் என்ற வகை நாஸ்திக வாதிகளும் இருந்தனர்.
    கிருஸ்தவ மதத்தைச் சேர்ந்த சிலர் ஏக்நோஸ்ட்டிக் எனப்படும் நாத்திகத்தை ஏற்படுத்தினர். அதலை சிறந்த அரசியல் ராஜ தந்திரிகளாகிய மாக்கியவெல்லி, ரேனே டேய்கார்ட் போன்றோரின் கொள்கைய்களில் இதன் சாயல் அதிகமாக உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் நீட்ஷவின் சித்தாந்தங்களை புதுமை வாதத்தை விரும்பிய இளைஞர்கள் படித்தனர்.
    பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த அறிஞர் இங்கர்ஸால். ஒரு மாலை நேரச் சொற்பொழிவுக்கு அந்தக் காலத்திலேயே மூவாயிரத்து ஐந்நூறு டாலர்கள் வாங்கியவர். 'Why I Am Agnostic' - 'நான் ஏன் நாத்திகன்' என்னும் நூல் பகுத்தறிவு பூர்வமாகச் சிந்திக்கும் ஆத்திகர்களாலும் கட்டாயமாகப் படிக்கப்படவேண்டிய புத்தகம். பேரறிஞர் அண்ணதுரையின் சிந்தனையில் மிகப் பெரிய தக்கத்தைத் தோற்றுவித்தவர் இங்கர்ஸால்தான்.
    ஐரோப்பிய சிந்தனை மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் வால்ட்டேய்ரும் ரோஸோவும். இவர்களில் வால்ட்டேய்ர் சிறந்ததொரு நாத்திகவாதி.
    இவர்களுடைய சிந்தனைகளைத் தூண்டிவிட்டவர் 'பெனடிக் தே ஸ்ப்பிநோஸா'. இவர் ஒரு யூதர். இவருடைய கொள்கைகள்தாம் இன்றளவும் ஐரோப்பிய பகுத்தறிவு வாதச் சிந்தனைகளில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
    நாஸ்திக வாதம் எப்போதுமே இந்து மதத்தில் இருந்து வந்திருக்கிறது. கடவுள் இல்லை என்று கூறுபவர்களை 'நிரீசுவர வாதிகள்' என்று எண்பது தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள் குறிப்பிட்டனர்.
    எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் என் தந்தையார் சின்னமுத்து பிள்ளையவர்களை அவ்வாறுதான் தென்கிழக்காசியாவில் அன்று வாழ்ந்த இந்து சமயப்பிரமுகர்கள் அழைத்தனர்.
    அதன் நிமித்தம் 'கடவுளின் உண்மைத் தோற்றம்' என்ற தலைப்பில் 1936-ஆம் ஆண்டில் அவர் ஒரு சிறிய விளக்க நூலை எழுத நேரிட்டது. அந்தச் சிறிய நூலின் தாக்கத்தைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியாமல் அந்தக் காலத்துத் தமிழ் நேசன் பத்திரிக்கை அச்சிறு  நூலைத் தாக்கி தலையங்கங்களையே எழுதிவிட்டது.


    பெரியாரைப் பற்றி யார் யாரோ ஏதேதோ கூறுவார்கள். ஆனால் உண்மையிலேயே பெரியாரின் நாத்திக வாதத்தால் இந்து சமயம் நன்மையே பெற்றது என்பதுதான் ஆணித்தரமான அசைக்கமுடியாத யதார்த்தமாகும்.
    நாஸ்திக வாதம் இந்து சமயத்துக்கு எந்தக் காலத்திலேயுமே மிரட்டலாக விளங்கியதே கிடையாது. உண்மையிலேயே அதனால்தான் அவ்வப்போது இந்துசமயம் புத்துணர்வு பெற்றே வந்திருக்கிறது. இதுதான் உண்மை.
    நம் சமுதாயத்தில் பல நாஸ்திகர்கள் தங்களை ஆஸ்திகர்கள் என்று கருதிக் கொள்பவர்களைவிடச் சிறந்த நேர்மையாளர்களாகவும் பெரும் சிந்தனையாளர்களாகவும், மேதைகளாகவும் விளங்கியிருக்கின்றனர்.
    சமுதாயத்தில் மலிந்துவிட்ட பிற்போக்கு வாதத்தைத் தைரியமாக எப்போதுமே எதிர்த்து வந்துள்ள வீரம் மிகுந்த சிறுபான்மையினர் அவர்கள்.










                                        $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
    
  










RARE LITERATURE-#01


"முன் தோன்றிய மூத்தகுடி"
ஓர் அரிய நூல் -#01

புறப்பொருள் வெண்பா மாலை

ஓர் அரிய நூலைனைப் பற்றி இங்கு கொஞ்சம் பார்ப்போம்.

ஆதிகாலத்தில் அகத்தியர் தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும்
தம்முடன் இருத்திக்கொண்டு தமிழாய்ந்த காலத்தில், அந்தப் பன்னிரு
சீடர்களும் 'பன்னிரு படலம்' என்னும் நூல் தொகுப்பை யாத்தனர்.
அதன் வழிநூல்களாகப் பல நூல்கள் எழுந்தன. அவற்றுள் பல,
மறைந்துபோயின.
சிலநூல்கள் கிடைத்துள்ளன. அவற்றில் ஒருநூல்தான்
'புறப்பொருள் வெண்பாமாலை'
அதன் பெயர் உணர்த்துவது போல, இது வெண்பாக்களால் ஆகிய
நூல். புறவொழுக்கத்தைப் பற்றி விளக்கிக்கூறும் நூல் இது.
ஒவ்வொரு திணையிலும் உள்ள துறைகளுக்குரிய சூத்திரங்களையும்
குறிப்பிட்டு, அவற்றை எடுத்துக்காட்டும் விதத்தில் ஒரு வெண்பாவையும் அமைத்திருக்கிறார் நூலாசிரியர்.

நூலாசிரியர் - ஐயனாரிதனார்.
அவர் சேரர்குடியைச்சேர்ந்தவர்.

கடவுள்வாழ்த்தில் வினாயகர் துதி:

நடையூறு சொல்மடந்தை அல்குவது நம்மேல்
இடையூறு நீங்குவதும் எல்லாம் - புடையூறும்
சேனைமுகத் தாளிரியச் சீறுமுகத் தூறுமதத்து
ஆனைமுகத் தானை நினைத்தால்

தொகுதி தொகுதியாக மேலும் மேலும் வந்து குவிகின்ற எதிரிகளின்
படைகள் எல்லாம் பயந்து சிதறி ஓடிப்போகுமாறு சீற்றமுடன்கூடிய
திருமுகத்தை ஆனைமுகன் கொண்டுள்ளான். சுரக்கும் மத நீரையும்
கொண்டிருக்கிறான். அவன் திருவடிகளை நினைத்தால்
சொல்மடந்தையாகிய சரஸ்வதி, நடைவளம் சுரக்கின்ற
நாவளத்தைத் தந்து அருளுவாள். அதுமட்டுமல்லாது, நம்மைத்
தாக்கும் இடையூறுகளெல்லாமே நம்மைவிட்டு நீங்குவதும் கைகூடும்.

அடுத்து சிவனை வழுத்துவார்:

கண்அவனைக் காண்கஇரு காதுஅவனைக் கேட்கவாய்ப்
பண்ணவனைப் பாடப் பதஞ்சூழ்க - எண்ணிறைந்த
நெய்யொத்து நின்றானை நீலமிடற்றானை என்
கையொத்து நேர் கூப்புக.

எள்ளினுள் விளங்கும் எண்ணெய் போல் அனைத்திலும் இரண்டறக்
கலந்து நின்றானாகிய முதல்வன் சிவன். திருநீலகண்டத்தை
உடையவன். அப்படிப்பட்ட சிவனையே என் கண்கள் பார்க்கட்டும்.
அவன் திருநாமத்தையே என் காதுகள் கேட்கட்டும். என் வாயில்
தோன்றும் பண்ணெல்லாமே அவனைப் போற்றிப் புகழ்வதற்காகவே
உரிய சொற்பதங்களைப் புனைந்து விளங்கட்டும். என் கைகள், என்
உள்ளத்தோடு ஒருமைகொண்டு, அவன் திருவின் முன்பாக குவிந்து
வணங்கியிருக்கக்கூடியவையாக விளங்கட்டும்.

பழங்கால மரபில் கலைமகள் வாழ்த்தும் காணப்படும்.
பிற்காலத்தில் அவ்வாறு காணப்படுவதில்லை.

நாமகள் வாழ்த்து:

தவளத் தாமரைத் தாதார் கோயில்
அவளைப் போற்றுதும் அருந்தமிழ் குறித்தே!

அருமையான இந்தத் தமிழ்நூல், இனிதாக நிறைவெய்துதலே குறி;
அதற்காக வெண்தாமரை மலர்களின் மகரந்தம் நிறைந்துவிளங்குகின்ற
கோயிலிடத்தே எழுந்தருளியிருப்பவளாகிய கலைமகளை நாம்
போற்றுவோம்.

இந்நூலின் சிறப்புப்பாயிரத்தையும் கவனிப்போம்.

மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை இருந்த சீர்சால் முனிவரன்
தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதல்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோன்
ஓங்கிய சிறப்பின் உலகமுழு தாண்ட
வாங்குவில் தடக்கை வானவர் மருமான்
ஐய னாரிதன் அகலிடத் தவர்க்கு
மையறு புறப்பொருள் வழாலின்று விளங்க
வெண்பா மாலை எனப்பெயர் நிறீஇப்
பண்புற மொழிந்தனன் பான்மையின் தெரிந்தே

இதன் உரையை அப்படியே கொடுக்கிறேன்.

'நிலைபெற்ற சிறப்பினை உடையவரானவானோர்கள் வேண்டிக்
கொள்ளுதலினாலே, தென்மலையாகிய பொதியத்திடத்தே வந்து
வீற்றிருந்தவர், சீர்மை நிறைந்த முனிவராகிய அகத்தியர்.
அவரிடத்தே, தண்மை செறிந்த தமிழ்மொழியின் நுட்பங்களிப்
பழுதின்றிக் கற்றுணர்ந்த கிடைத்தற்கரிய புகழினைப் பெற்றவர்கள்,
தொல்காப்பியர் முதலாகிய பன்னிரு புலவர்களும் ஆவர்.
அவர்கள் பகுதியோடும் அமையச் சொல்லிய புறப்பொருள் நூல்,
'பன்னிரு படலம்' என்பது.
அந்நூல் முழுவதையும் குற்றமின்றிக் கற்றுணர்ந்த சிறப்பினையுடையவர்
'ஐயனாரிதனார்' என்னும் இவர்.
உயர்ந்த மேம்பாட்டினையுடைய உலகம் முழுவதையுமே ஆட்சி
செலுத்திவந்தவரும், வளைந்த வில்லினைத் தம் பெரிய கையிடத்தே
கொண்டவருமான சேரர் குடியினரின் வழிவந்தவரும் இவராவர்.
அகற்சியை உடைய நிலப்பரப்பினதான தமிழ்நாட்டின்கண்
உள்ளவர்க்குக் குற்றமற்ற வகையிலே புறப்பொருள் இலக்கணம்
வழுவின்றி விளங்கும் பொருட்டாக, வெண்பாமாலை என்னும்
பெயரினை இட்டு, அப்பொருளினை முறையோடும் தெளிந்தவராக,
நூற்பண்பு பொருந்த, அவர் இதனைச் சொல்லி அருளினார்'.

இந்நூலைக் கண்டெடுத்து வெளியிட்டவர் தமிழ்த்தாத்தா
உ.வே.சாமிநாதய்யரவர்கள். அதற்குப் பொருளுதவி செய்தவர்
நான்காவது மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவியவரும் பாலவநத்தம்
ஜமீன்தாருமாகிய பாண்டித்துரைத் தேவரவர்கள்.

நமக்கெல்லாம் நன்கு அறிமுகமாகிய ஒரு சொற்றடர்
இந்நூலில் உள்ளதொரு வெண்பாவில் காணப்படுவதுதான்.
'கரந்தைப் படலம்' எனும் பகுதியில் 'குடிநிலை' என்னும்
துறையை விளக்கும்படியாக இயற்றப்பட்டது.

பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடி.

உரை:

'பண்டு, இந்த வையகத்தினைக் கவிந்துகொண்ட, தெளிந்து
ஆரவாரிக்கும் ஊழிக்கடல் வெள்ளமானது விட்டு நீங்கியதாக,
அதன்பின் முற்பட மலைதோன்றி மண்தோன்றாதிருந்த அந்தப்
பழங்காலத்திலேயே, எல்லா மக்கட்குடியினும் முற்படத்தோன்றி,
வாளாண்மையுடன் முதிர்ச்சி பெற்றுவருவதும் அம்மறவனின்
குடியாகும். அதனால் இவன், பொய்மை நீங்க நாள் தோறும்
புகழினை விளைத்துச் சிறப்புறுதல் என்னதான் வியப்போ?' 





          $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Saturday, 22 February 2014

AASTHIGAM AND NAASTHIGAM


ஆஸ்திகமும் நாஸ்திகமும் 
மயில் இதழ் - சமயக் கேள்வி பதில் 
1992






$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$