"ஜக்கரித்தல்"
டாக்டர் எஸ். ஜெயபாரதி
கடாரம்
மலேசியா
JayBee
டாக்டர் எஸ். ஜெயபாரதி
கடாரம்
மலேசியா
JayBee
"ஜக்கரித்தல்"என்றால் என்ன?
நான் அறிந்ததைச்சொல்கிறேன்.
ரொம்ப காலத்துக்கு முன் - சுமார் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் சொந்த ஊராகிய சிங்கம்புணரியிலும் என் தந்தையார் ஒரு ஜவுளிக்கடை வைத்திருந்தார்.
என் தந்தையாரிடம் ஒரு தையற்காரர் இருந்தார். பெரிய ஜவுளிக்கடைகளில் - அந்தக் காலத்தில் - தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் - ஜவுளிக் கடையிலேயே தையற் காரர்களை வைத்திருப்பதுண்டு. கடையின் வாசலிலேயே ஒரு பக்கமாகத் தையல் மெஷினை வைத்துக்கொண்டு தைத்துக் கொண்டிருப்பார்கள். இதெல்லாம் கிட்டத்தட்ட நூற்றாண்டுக் கதை. தையல் வேலையுடன் என் தந்தையாருக்கு அவர் பாடி கார்டாகவும் இருந்தார். அவர் பெயர் ஹஸான். ஆனால் எல்லாரும் 'சோட்டா பாய்' என்றே அழைப்பர். அவர் ஓர் அலாதி கேரக்டர். அவர் ஒரு பத்தான். உருது கலந்த புஷ்ட்டுதான் பேசுவார். மோசமான புஷ்டு. ஆஃப்கானிஸ்தானிலிருந்து எவனாவது வந்தால் நிச்சயம் அவனுக்குப் புரியாது. அவர் மகன் அப்துல்லா தம்முடைய மகன்களைக் டீக்கடைக்கு ஏவும்போது கூட, "அரே...... சுந்தரம்க்கீ துக்கான்க்கே ஜாக்கோ.... தோ சாயா லேலக்ரே ஆ.....! மஞ்சி ஏக்கு... டாக்டர்க்கி ஏக்கு, ஜல்தி லேலக்ரே ஆ!" என்பார். ("அடேய்... சுந்தரம் கடைக்குப் போய் இரண்டு சாயா வாங்கிக்கொண்டு வா. எனக்கு ஒன்று(முஜே ஏக்) டாக்டருக்கு ஒன்று... வேகமாகக் கொண்டு வா!" அந்த 'டாக்டர்' நான்தான்)
சோட்டா பாய்க்குத் தமிழ் கடைசிவரை சரளமாக வரவேயில்லை. மிகுந்த கோபக்காரர். ஒரு முழத்தில் கனமான கத்திரிக்கோல் வைத்திருந்தார். ["ஏண்டா @#$%%பய மவனே! எனய இனாடா நெனஸ்கிட்டே. ஒக்@#$$ நா யாரு தெர்யுமா? சீம ஓடு இருக்ல சீம ஓடு; அத்கே ஒரப்(உரை) போட்றவண்டா நானு! ஒம்%$#@ %$#! இந்த கத்ரி கோல் ஒனால தூக முடியுமா மொதல்ல? இனா பேஸ்ஸ¤ பேஸ்ரான்!"
என்னவோ தெரியவில்லை. தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகள் மட்டும் சர்வசரளமாக அவருக்கு வந்தன. இந்த சில வரிகளுக்குள் இன்னும் சிலவற்றை சேர்த்திருப்பார். ஆனால் பெர்ய மன்ஸன், மர்வாதி பட்ட ஆத்மியெலாம் இர்குறதுனால நானே குறைத்துக்கொண்டேன். பொறுத்தருள்க. (பொறுத்தருளச் சொல்லியது, சோட்டா பாயை. காரத்தைக் குறைத்து விட்டேனல்லவா?)
அந்தக் காலத்தில் காட்டா குஸ்தி என்றொரு வகை இருந்தது. அதில் ஆளைப் பிடித்துத் தள்ளி, மல்லாக்க வீழ்த்தி, எழமுடியாமல் அமுக்கிக் கொள்வது. இதை "முதுகில் மண் காட்டுதல்" என்று சொல்வார்கள். அதுதான் வெற்றிக்கு அடையாளமாம். இப்போது மாதிரி நாக்-அவுட்டெல்லாம் கொடுக்க மாட்டார்களாம். சுமோவில்கூட அடித்து வீழ்த்தக் காணோமே? அந்த வட்டத்தின் எல்லைக்கு அப்பால் தள்ளுவதைத் தானே வெற்றிக்கு அடையாளமாகக் கொள்கிறார்கள்.
அவரிடம் காட்டா குஸ்தியைப் பற்றி அவ்வப்போது கேட்பதுண்டு.
நான் நேரில் பார்த்ததெல்லாம் தாராசிங் - கிங்காங்க் குஸ்திதானே. எங்கே காட்டா குஸ்தியெல்லாம்? நான் பிறப்பதற்கு முன்னரே அதெல்லாம் எக்ஸ்டிங்ட் ஆகியிருக்கும்.
அவர் போட்ட காட்டாகுஸ்திகளைப் பற்றியெல்லாம் சொல்வார். அந்தக் காட்டா குஸ்திகளைவிட அவற்றிற்கு முன்னர் அவர் விடுக்கும் சவால், முஸ்தீபூ, அந்தக் குஸ்தியை
அவர் வர்ணிக்கும் விதம் இன்னும் படா ஜோரா இர்கும். "அரே சைத்தான்கீ பச்சா! அமாவாஸ்லே பொறந்த @#$%*&னே! சண்டேலே ஓமண்டே நான் ஒட்ஸி ஒன் ரத்தம் நான் குட்க்கலே நான் பட்டாணிக்கிப் பொற்கலே!".... இப்படியாக இருக்கும் அவரின் சவால்கள். சண்டைகளில் எதிராளியின் மண்டையை யெல்லாம் சொல்லி வைத்து உடைத்திருக்கிறார். ஒரு முக்கிய சண்டையின்போது எடுத்த எடுப்பிலேயே எதிராளி பயில்வான் உள்ளங்கையை ஒரு தினுசாக வைத்துக்கொண்டு காதில் ஓங்கி அடித்ததில் காதைக் கையால் பொத்திக்கொண்டு "ஆ.... ஆ.... ஆ...." என்று அலறியவாறு நின்றார் என்பார்கள். அதிலிருந்து காது பழுதாகிவிட்டது. அதன்பின் சண்டை போட்டாரா என்பது தெரியவில்லை.
காட்டா குஸ்தியில் உள்ள பாவ்லாக்களில் ஜக்கரித்தல் ஒன்று. முன்னால் பாய்ந்து பாய்ச்சல் காட்டி, பக்கவாட்டில் ஒதுங்கி, அப்படியே பின்வாங்கி தப்பித்துக் கொள்வதை ஜக்கரித்தல் என்பார்கள். ஜகா வாங்குதல் என்பதுவும் பின்வாங்குதலாயிற்றே. It seems to complete the move initiated by ஜக்கரித்தல்.
இதை வீட்டிலேயே செய்து பார்த்துக்கொள்ளுங்கள். மட்டுப்பட்டுவிடும்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$