வரி, வட்டி, கிஸ்தி........
அர்த்தசாஸ்திரம் என்றதும் கௌடில்யர் எனப்படும் சாணக்கியர் எழுதிய நூல்தான் நினைவுக்கு வரும்.
உள்ளபடிக்கு அதுமட்டுமேதான் நினைவுக்கு வரும்.
தர்ம,காமார்த்தமோக்ஷம் எனப்படுபவை நால்வகைப் படும். இவற்றைத் தமிழில் அறம் பொருள் இன்பம் வீடு என்று சொல்வோம்.
இவற்றில் அர்த்தம் என்னும் துறையாகிய பொருள்நூல்தான் அர்த்தசாஸ்திரம்.
கௌடில்யரின் அர்த்தம் நூல் தவிர இன்னும் பல நூல்கள் இருந்தன. சுக்கிரநீதி, நாரதீய நீதி,
பார்ஹஸ்பத்ய நீதி, பராசர நீதி என்று சில நூல்கள் இன்றும் இருக்கின்றன. அவற்றில் சில பகுதிகள் அழிந்தும் விட்டிருக்கின்றன.
ஜாதீய அடிப்படையில் அமைந்த இந்த நூல்கள் பிராம்மணர்களுக்குச் சார்பாக ஓரவஞ்சகமாக எழுதப் பட்டிருந்தன. கடந்த பல நூற்றாண்டுகளாக இந்த நூல்களின் அடிப்படையில்தான் சமுதாயத்தின் சட்ட திட்டங்கள் நீதி முதலியவை அமைந்திருந்தன.
விஜயநகரப் பேரரசின் விவசாயிகள் கொடுக்கவேண்டிய வரிகள் முதலியவற்றின் விகிதம் காணப்படுகிறது. இது பராசரநீதியின் அடிப்படையில் உள்ளது.
ஒரு குட்டி என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பளவு. அதில் முப்பது மூட்டைகள் நெல் விளையும் என்பது ஒரு தோராயமான கணக்கு.
அந்தக் காலத்தில் நிலங்கள் யாருக்காவது சொந்தமாகத்தான் இருந்தன. மொத்த அறுவடையில் நிலச் சொந்தக்காரருக்கு கால் பங்கு. அதில் விவசாயம் செய்தவருக்கு அரைப் பங்கு. அரசாங்கத்துக்கு ஆறில் ஒரு பங்கு. கோயில்களுக்கு முப்பதில் ஒன்று. பிராம்மணர்களுக்கு இருபதில் ஒன்று என்ற
விகிதத்தில் மகசூல் பிரிக்கப்பட்டது.
அரசாங்கம் பல சமயங்களில் மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் கொண்டுவிடும். போட்டி அரசாங்கம் இருந்தால் ஆளுக்கு மூன்றில் ஒரு பங்கு என்று எடுத்துக்கொள்வார்கள்.
பல சமயங்களில் பாதிக்குப் பாதியை அரசு எடுத்துக்கொள்ளும்.
பல சமயங்கள் படையெடுப்புகள் அடுத்தடுத்து நடக்கும் அப்போதெல்லாம் இடங்கள் வெகுவேகமாகக் கைமாறும். அந்த மாதிரி சமயங்களில் வருகிறவன் போகிறவனெல்லாம் ஆளாளுக்குப் பறித்துக்கொண்டு செல்வார்கள்.
இவை போக மகமை என்று ஒன்றும் இருந்தது.
புலவர்கள், ஆசிரியர்கள், வண்ணார், நாவிதர், புரோகிதர், சோதிடர், வைத்தியர், மருத்துவச்சி, பாடிக்காவல், கொத்தவால், தலையாரி, கணக்கன் போன்றவர்களுக்கு நிலத்தின் அளவுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நிலத்துக்காரரும் கொடுப்பார்கள். இதனை 'அளந்துபோடுதல்' என்றும் சொல்வார்கள். குறிப்பிட்ட எண்ணிகையுள்ள படிகள் கொள்ளக்கூடிய ஓலைக் கொட்டான்கள், 'பொட்டி'கள் இருக்கும். அவைதான் கணக்கு.
விஜயநகரப்பேரரசின் விவசாயவரி வருமானம் மட்டுமே ஓராண்டுக்கு எண்பத்தோரு கோடி வராகன் பெறுமானமாக இருந்தது. வராஹன் என்பது ஒரு பொன் நாணயம். கிட்டத்தட்ட இப்போதைய கணக்குக்கு அரைப் பவுன் எடை இருக்கும்.
Militaristic அமைப்பாகப் பேரரசை ஆக்கும்போது அதைப் பல பகுதிகளாகப் பிரித்து பல நாயக்கர்கள், பாளையக்காரர்களின் மேற்பார்வையில் விட்டிருந்தார்கள்.
அவர்கள் மட்டுமே அறுபது லட்சம் வராகன் செலுத்தி யிருக்கிறார்கள். அது பேரரசின் மகசூலில் பாதியின் மதிப்பு. அவர்கள் எடுத்துக்கொண்டது, அவர்களின் படைகளின் செலவு ஆகியவை போக மீதியைத்தான் அவர்கள் பேரரசின் கஜானாவுக்கு அனுப்பியுள்ளார்கள்.
தலைக்கோட்டைப் போருக்குப்பின்னர் பேரரசின் பரப்பளவு குறைந்துவிட்டது. ராய்ச்சூர் தோவாப் போன்ற வளமிக்க பிரதேசங்கள் கைமாறிப்போயின.
சதாசிவராயர் என்பவர் கிருஷ்ணதேவராயருடைய தம்பி மகன். அவருடைய காலத்தில் பேரரசின் வருமானம் பன்னிரண்டு கோடியாகக் குறைந்துவிட்டது.
அறுவடையின் பங்கை அரசு நெல்லாகவோ காசாகவோ வாங்கிக்கொண்டது. நெல்லாயம், காசாயம் என்று சொல்வார்கள். புதுக்கோட்டைப் பகுதியில் இருந்த வரிவிதிப்பு:
கார்காலத்துக் குறுவை - மூன்றில் ஒரு பகுதி
எள், கேப்பை, கொள், பாசிப்பயிறு, மொச்சை முதலியவை - கால் பகுதி
வரகு, சாமை, கம்பு முதலியவை - ஆறில் ஒரு பங்கு
இவை போக இன்னும் பலவிதமான வரிகள் நிலங்களின் பேரில் விதிக்கப்பட்டிருந்தன.
விவசாயிகளுக்கு என்னத்தை எஞ்சியிருக்கப்போகிறது?&&&&&&&&&&&&&&&&&&&&&&