Thursday, 14 April 2011

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - Epilogue

திருப்பரங்குன்றத்து முருகன் சம்பந்தம்:

திருப்பரங்குன்றம் முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் ஒன்று. கடைச்சங்க காலத்திலேயே அது அவ்வாறு சிறப்புப் பெற்றுவிட்டது.  திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் முதலாவதாக வைத்துப் பாடப்படுவது அதுதான்.  பழங்குறிப்புகளிலிருந்து முருகனுடைய வழிபாட்டுத்தலம், திருப்பரங்குன்றத்தின் வடபுறச்சரிவில் அடிவாரத்தில் இருந்திருக்கிறது.  கடைச்சங்க காலத்துக்குப் பின்னர் கி.பி. ஆறாம் ஏழாம் நூற்றாண்டுகள் சமயத்தில் திருப்பரங்குன்றத்தின் தென் பக்கச் சரிவில் குடைவரைக் கோயில்களை இடைக்காலப் பாண்டியர்கள் கட்டினர்.

குடைவரைக் கோயில் என்றால் பாறையை அப்படியே குடைந்து அதில் சிற்ப வேலைப்பாடுகள், தூண்கள் ஆகியவற்றையும் செதுக்கி நிறுவி அமைக்கப்படும் கோயில்.  மேலும் கீழுமாக இரண்டு குடைவரைக் கோயில்கள். இப்போது கண்ணுக்குத் தெரிவது ஒன்றுதான். மேலேயுள்ளது.
கீழேயுள்ளது.....
கீழேதான் இருக்கிறது. பார்க்கமுடியாது. ஆகவே இருப்பதுவும்கூட வெளிப்படத் தெரியாது. எல்லாம் அவளுக்கே வெளிச்சம்.  அவற்றில், மேலேயுள்ள குடவரைக் கோயில் ஐந்து கருவறைகளைக் கொண்டிருந்தது. சிவன்,விஷ்ணு, துர்க்கை போன்ற தெய்வங்களுக்கு அவை உரியவையாயிருந்தன.  அந்த தெய்வங்களின் புடைப்புச் சிற்பங்கள் அந்த கருவறைகளில் திகழ்ந்தன.  ஆனால் அவற்றுள் முருகனுக்குரிய கருவறை இல்லாமலிருந்தது.  ஏனெனில் முருகனின் சன்னிதி அங்கேயில்லை.  திருமலை நாயக்கர் செய்த திருப்பணிகளில் திருப்பரங்குன்றக் கோயிலும் ஒன்று. அவர் அக்கோயிலைப் பெரிதாக எடுத்துக்கட்டி, அழகு படுத்தினார். மேலேயுள்ள ஐந்து தெய்வங்களுடன் முருகனுக்கும் ஒரு  சன்னிதியை ஏற்படுத்திவைத்தார். அதில் முருகனுக்கும் சிலை எடுப்பித்தார். ஆனால் அது புடைப்புச் சிற்பமல்ல. 
இவ்வளையும் செய்துவிட்டு அந்த சன்னிதியில் ஒரு நல்ல இடத்தில், நல்ல தூணில், பார்க்கக்கூடிய உயரத்தில், பட்டமகிஷிகள் புடைசூழ, தன்னுடைய உருவச்சிலையையும் வைக்கச்செய்தார்.  மலையின் வடபுறத்தில் இருந்த முருகத்தலம் என்னவாயிற்று என்பது தெரியவில்லை. ஆனால் அன்றிலிருந்து தென்புறத்திலிருந்த ஐந்து தெய்வங்களின் கூட்டுக்கோயில்தான் அதிகாரபூர்வமாக திருப்பரங்குன்றது முருகன் கோயிலாக மாறிவிட்டது.

மதுரை வட்டாரத்தில் ஒரு சொல்வழக்கு உண்டு.  "திருமலை நாயக்கன் திருப்பரங்குன்றத்தைத் திருப்பி வச்சான்."  வடபுறத்து வழிபாட்டுத்தலம் தென்புறத்துக்கு வந்துவிட்டதல்லவா?  இங்கிருந்து முருகனை மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவில் கலந்துகொள்ளுமாறு எழுந்தருளச்செய்துவிட்டார்.  ஏற்கனவே மதுரையில் இருந்த கூடல் முருகன், சோமாஸ்கந்தர் சம்பிரதாயத்துடன் இது கலந்துவிட்டது. அப்படித்தான் திருப்பரங்குன்றது சுப்பிரமணியர், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் கலந்துகொள்ளும் மரபு நிறுவப்பட்டது.  வந்தவர் சும்மாவா வருவார்? அந்த வட்டாரத்து மக்கள் கூட்டத்தை யெல்லாம் அவர் பங்குக்குக் கூட்டிவந்தார். 

இதையெல்லாம் நாயக்கர் எப்படிச்செய்தார்?

'The Good, the Bad, and the Ugly' என்ற படத்தின் கடைசிக்காட்சியில் Clint Eastwood துப்பாக்கியை நீட்டியவாறு Eli Wallach இடம் சொல்வார்......

"In this world, there are two kinda people. 
Them that carry guns; and them that dig. 
You dig".

நாயக்கரிடத்திலும் துப்பாக்கி இருந்தது. பணமும் இருந்தது.  இரண்டையும் செலுத்த அதிகாரமும் இருந்தது. மூன்றையும் சேர்த்து பிரயோகிக்க ஆள்பலமும் இருந்தது. அதற்கு மேல் குயுக்தியும் இருந்தது.  அதற்கும் மேலாக தைரியம் இருந்தது
எல்லாவற்றையும்விட தன்னம்பிக்கை இஇருந்தது.

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - Part 6

திருமலை நாயக்கரால் சித்திரை மாதவசந்த விழா, பெரும் பரிமாணங்களைப் பெற்றது. தைமாதத்தின் மீனாட்சி திருக்கல்யாணம், மாசி மாதத்தின் "நாயக்கர் செங்கோல் வாங்கும் வைபவம்", மாசித் தேரோட்டம், பங்குனித் தேரோட்டம், ஆகியவைகளைத் தனக்குள் அடக்கிக்கொண்டு, கள்ளழகர் சித்திரா பௌர்ணமி உற்சவத்தையும் இழுத்து வைத்துக்கொண்டு, பெருவிழாவாக மாறியது.

சித்திரத் திருவிழா பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படுவதாயிற்று.  இன்றும்தான். இந்தத் திருவிழாவின்போது மீனாட்சி பட்டாபிஷேகம் அம்மன் சன்னிதியின் ஆறுகால் பீடத்தில் நடைபெறும். அப்போது நாயக்கர், அம்மனிடம் செங்கோல் வாங்கும் விழாவும் நடைபெறும். திருமலை நாயக்கர் அந்த விழாவை ஏற்படுத்திய காலத்தில் அது மிகப் பெரிய அளவில் நடந்தது.  இதைப் பற்றி "ஸ்ரீதளப் புஸ்தகம்" என்னும் பழைய ஆவணச்சுவடியில் விலாவாரியாக எழுதியிருக்கிறார்கள். பழைய காலத் தமிழ்நடை. அதனைச் சுருக்கி எழுதியுள்ளேன்.

மதுரை நாட்டின் எழுபத்திரண்டு பாளையக்காரர்கள் -  கட்டபொம்மனைத் தவிர - அனைவரும் வந்திருப்பார்கள்.  ஒவ்வொருவரும் அவரவருக்குரிய பட்டாளம் பரிவாரம் புடைசூழ அவரவர் கொண்டுவந்த தாரை தப்பட்டை, பதினெட்டு வாத்தியங்கள் முழங்க, வரிசையாக திருமலைநாயக்கர் மஹாலிலிருந்து புறப்படுவார்கள்.  பின்னால் யானைமீது நாயக்கர் வருவார். இப்படி பயங்கரமாகக் கொட்டி முழக்கிக்கொண்டு எழுபத்திரண்டு செட்டுகளுடனும் நாயக்கர்  கோயிலுக்கு வந்து சேர்வார்.

அம்மன் சன்னிதியின் ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மனை ரத்தின சிம்மாசனத்தில் எழுந்தருளுவித்திருப்பார்கள்.  நாயக்கர் கோயிலுக்குள் சென்று சிறப்பு வழிபாடுகள் செய்வார். சுவாமிக்குச் சாத்தியிருக்கும் மாலையை நாயக்கருக்கு சமர்ப்பிப்பார்கள்; பரிவட்டங்கள் கட்டுவார்கள். செங்கோலை எடுத்து நாயக்கர் கையில் கொடுப்பார்கள்.  அதை வாங்கிக்கொண்டு, நாயக்கர் மீண்டும் தன்னுடைய பெரும் பரிவாரங்களுடன் "பட்டணப்பிரவேசம்" என்ற ஊர்வலம் வருவார். அப்போது மீனாட்சி சுந்தரேசுவரருடன் கோயிலில் உள்ள 'இளைய பிள்ளையார்' எனப்படும் முருகனையும் ஊர்வலமாகக் கொண்டு வருவார்கள்.

சிவன் கோயிலில் உள்ள உற்சவ மூர்த்தியை 'சோமாஸ்கந்த மூர்த்தம்' என்று சொல்வார்கள். சிவனும் உமையும் அமர்ந்திருக்க இருவரின் நடுவிலும் சிறிதான உருவில் முருகனின் திருவுரு விளங்கும்.  'ச' = உடன்; ச + உமா + ஸ்கந்த = சோமாஸ்கந்தமூர்த்தி =  உமை கந்தனுடன் உள்ள மூர்த்தி.  இந்த மூர்த்தமே விழாக்களில் சம்பந்தப்படுவது. முருகனும் உடன் இருப்பது ஆகம மரபு.

அதுமட்டுமல்ல. மீனாட்சி திருக்கல்யாணத்தில் 'பவளக் கனிவாய்ப் பெருமாள்' என்னும் விஷ்ணுவும் விநாயகரும்கூட இருப்பார்கள்.  அடுத்து திருப்பரங்குன்றத்து முருகனின்சம்பந்தம்.....

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - Part 5

இதை மாதத்தில் தைப்பூசத்தன்று தெப்பத்திருவிழாவை நடைபெறச் செய்தார் திருமலை நாயக்கர். 

But even this was not without strings.
அதுதான் திருமலை நாயக்கரின் பிறந்தநாள்.
அவர் அமைத்த தெப்பக்குளத்தை இப்போது 'வண்டியூர் தெப்பக்குளம்' என்று சொல்கிறோம். ஆனால் அதற்கு நாயக்கர் இட்ட பெயரோ,

'திருமலை நாயக்கர் சமுத்திரம்'.

மாசி மாதம் நடந்த தேர்த் திருவிழாவையும் சித்திரை மாதத்தின் வசந்த விழாவுக்குள் கொண்டுவந்துவிட்டார். 
அதே விழாவில் நடைபெற்ற மீனாட்சியம்மன் பட்டாபிஷேகத்தையும் நாயக்கமன்னர் செங்கோல் வாங்கும் வைபவத்தையும் சித்திரை விழாவுக்குள் சேர்த்துவிட்டார்.  அவர் செய்து விட்ட தேர்களோ மிகப் பெரிய தேர்கள். மிகப்பெரிய சிறந்த திருவிழாவாகவும் சித்திரைத் திருவிழா  நடைபெற வேண்டும். ஆள் சேரவேண்டுமே?  இதில் இருந்த பல பிரச்னைகளில் பெரும்பாலானவற்றைக் கடந்துவிட்ட திருமலை நாயக்கருக்கு ஒரு மிகப் பெரிய பிரச்னை எதிர்நோக்கியது.  சித்திரா பௌர்ணமிக்குத்தான் அழகர்கோயிலிலும் பெரிய திருவிழா நடைபெறும். மதுரைக்கு வடக்கிலும் மேற்கிலும் இருக்கும் பெருந்திரளான மக்கள்கூட்டம் அந்தத் திருவிழாவில் கலந்துகொள்ளும்.  அதெல்லாம் கள்ளர்நாடு.  அந்த விழாவின்போது அழகர்கோயிலிலிருந்து கள்ளழகர் உலா புறப்பட்டு, ஒவ்வொரு ஊராகச் சென்று மதுரைக்கு மேற்கே இருந்த தேனூர் வரைக்கும் வந்து செல்வது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமாக இருந்தது.  அந்தக் கூட்டத்தையெல்லாம் மதுரைவரைக்கும் இழுத்துச் சேர்த்துக் கொண்டார் நாயக்கர். 

எப்படி?

கள்ளழகரை மீனாட்சியம்மனின் திருக்கல்யாணத்துடன் சம்பந்தப்படுத்தி, அவரையும் சீர்வரிசை எடுத்துவரச் செய்து மதுரை வரை வந்து வைகை ஆற்றின் வழியாகப் பல மண்டபங்களில் திருக்கண் சாற்றிச்செல்ல ஏற்பாடு செய்தார். 
மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் எப்போதும் உள்ள வழக்கப்படி, மதுரையிலேயே கோயில்கொண்டுள்ள விஷ்ணுவாகிய கூடல் அழகரே நடத்திவைப்பது மரபு. அதனை நாயக்கர் மாற்றவில்லை.  கூடல் அழகரே நடத்திவைக்குமாறு செய்தார். கள்ளழகர் பல மண்டபங்களில் திருக்கண் சாற்றி, மக்களின் மரியாதையை ஏற்றுக்கொள்ளும் மரபை நீட்டிச் செய்வித்தல்மூலம் கள்ளழகர், திருக்கல்யாணத்தின்போது மதுரையின் வெளிப்புறத்திலேயே உலா வந்து கொண்டிருப்பார். 

திருமணம் நடந்துமுடிந்தவுடன் தேரோட்டம். கள்ளழகரோ மதுரையின் எல்லையில். ஆகவே கூட்டத்துக்குக் குறைச்சலில்லை.  கள்ளழகர் சித்திரா பௌர்ணமியன்று வைகையாற்றில் இறங்கி அதன்வழியே செல்வது ஒரு பிரம்மாண்டமான விழாவாகவும் உருப்பெற்றது.  அனுபவம் போதாத பேர்வழிகளைப் பற்றி வர்ணிக்கும்போது அந்தக் காலத்தில் மதுரை வட்டகையில் சொல்வார்கள்,"நீ ஆத்தக் கண்டியா...இல்ல, அளகர சேவிச்சியா? என்னத்தக் கண்டெ நீ?"  அப்படியென்றால் "Green-horn" அந்தஸ்த்தே உள்ளவன் என்று அர்த்தம்.

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - Part 4

திருமலை நாயக்கர் மதுரைக்கு வந்தபோது பல திருவிழாக்கள் இருந்தன; சிலவற்றிற்குஆள் சேர்வது கிடையாது. ஆண்டு முழுமையிலும் ஏதாவது திருவிழாக்கள் நடந்து கொண்டேயிருக்க ஏற்பாடு செய்தார். மதுரையில் நடந்த அறுபத்துநான்கு திருவிளையாடல்களில்சிலவற்றை அடிப்படையாகக் கொண்ட விழாக்களும் இஇருந்தன. அதில் அவை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் அப்படியே உருவாக்கிக்காட்டப்படும்.

மற்ற திருவிழாக்களைவிட ஒரு மிகப்பெரிய திருவிழாவை மிக விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார்.  அதுதான் "The Festival among Festivals".
"La Grand Carnival".

அந்த விழாவுக்கு வழிவிடும்வகையிலும் வசதி செய்து கொடுக்கும் வகையிலும் மற்ற விழாக்களை இப்படி அப்படி மாற்றி அமைக்கலானார்.
 
 இனித்தொடருங்கள்.......

மதுரையிலேயே குடியிருப்பதாக முடிவுசெய்து மதுரைக்கு வந்தபின்னர், நாயக்கர் தன்னுடைய முன்னோர்கள் தங்கிய அரண்மனையிலேயே தங்கி யிருந்தார்.  ஆனால் எதையுமே பெரிதாகவும் புதிதாகவுமே செய்ய விழையும் நாயக்கர் தனக்கென்று ஒரு பெரிய அரண்மனையைக் கட்டிக் கொண்டார்.  அப்படி அவர் கட்டியதுதான் திருமலைநாயக்கர் மஹால்.  இது ஒரு தனிக்கதை. அதைப்பற்றி ஏற்கனவே தமிழ் இணையத்தில் எழுதிருக்கிறேன். அந்த மஹாலைக் கட்டுவதற்காக தரமான மண்/மணலை வண்டியூர்  என்னும் கிராமத்தின் அருகில்தோண்டி எடுத்தார்கள்.  இது மதுரைக்கு மிக அருகாமையில், வைகை ஆற்றின் கரையில் இருக்கிறது. இஇங்குள்ள மாரியம்மன் கோயில் மிகவும் சிறப்பும் புகழும் மிக்கது.  மிகப் பெரிய அரண்மனையல்லவா? இப்போது இருப்பதே பெரிதாகத்தான் இன்னும்தோன்றுகிறது. ஆனால் இது, அந்த ஆதி மஹாலில் ஐந்தில் ஒரு பகுதிதான். மீதி நான்கு பங்கு அழிக்கப் பட்டுவிட்டது.  வண்டியூரில் அதற்காக மண்தோண்டிய இஇடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுவிட்டது. நாயக்கர் அந்தப் பள்ளத்தை அப்படியே அழகிய தெப்பக்குளமாக மாற்றிக்கட்டினார். அதன் நடுவில் ஓர் அழகிய மையமண்டபமும் கட்டுவித்தார். கிட்டத்தட்ட ஆயிரம் அடிகள் நீளமும் அகலமும் உடையது இந்தத் தெப்பக்குளம்.

மீண்டும் திருவிழாவுக்கு வருவோம்.

தை மாதத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத் திருவிழா கோயிலில் நடந்து வந்துகொண்டிருந்தது. 
அந்தத் திருக் கல்யாணத்தை சித்திரைமாத வசந்தவிழாவுக்கு மாற்றிவிட்டார்.  தை மாத்திற்கு ஒன்றுமில்லாமல் போகக்கூடாதல்லவா?
ஆகவே தன்னால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழாவை விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். இஇதில் மீனாட்சி சுந்தரேசுவரரை ஓர் அலங்காரத் தெப்பத்தில் எழுந்தருளுவித்து, மையமண்டபத்தைச் சுற்றிலும் தெப்பத்தை , கரையில் இருக்கும் மக்கள் கூட்டம் இழுத்து வரும்.  இப்படி ஏற்பட்ட தெப்பத் திருவிழா தற்சமயம் இலட்சக்கணக்கில் ஆள்கூடும் திருவிழாவாகத் தனித்தன்மை பெற்றுத் திகழ்கிறது.

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - Part 3

திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்னர், தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் முக்கிய திருவிழாக்கள் நடைபெற்றிருக்கின்றன. மாசியில் ஒரு தேர்திருவிழாவும் பங்குனியில் ஒரு தேரோட்டமும் நடைபெற்றன.

திருமலை நாயக்கர் தன்னுடைய திருப்பணிகளில் ஒன்றாக மிகப் பெரிய தேர்களைச் செய்துவைத்தார். தைப்பூசத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும்.

மாசி மாதத்தில் மண்டலபூசை நடைபெறும். அந்த சமயத்தில் மாசிமகத் திருவிழா நடைபெற்றது. அதன்போது, நாயக்கமன்னர் மீனாட்சியம்மனிடமிருந்து செங்கோல் வாங்கும் வைபவமும் நடந்தது. பங்குனியில் ஒரு தேரோட்டத் திருவிழா நடைபெற்றது.  பின்னர் சித்திரையில் வசந்த உற்சவம்.  வைகாசியில் வைகாசி வசந்த உற்சவம்.  அடிக்கடி திருவிழாக்கள். அடிக்கடி தேரோட்டம்.  அதுவும் நாயக்கர் செய்துவிட்ட தேரோ அளவில் மிகப் பெரியது.  அதை இழுக்க ஆட்கள் ஆயிரக்கணக்கில் வேண்டும். பழைய திருவாரூர் தேரை இஇழுக்கவே பன்னிரண்டாயிரம் பேர் தேவைப்பட்டனர். தை, மாசி மாதங்கள் அறுவடை நடந்து, முடியும் சமயம். அந்தச் சமயத்தில் தேரிழுக்க ஆள் கிடைப்பது மிகவும் சிரமம்.

தனது முதலமைச்சரும், ஆகமத்தில் விற்பன்னரும், சிறந்த ஸ்ரீவித்யா உபாசகருமான நீலகண்ட தீட்சிதர், கோயில் பட்டர்மார் ஆகியோருடன் கலந்து தீர்க்கமாக ஆலோசித்தார்.

அதன் பிறகு சில சீரமைப்புகளும் மாறுதல்களும் செய்தார்.  அந்தக் காலத்து மக்கள் இதற்கெல்லாம் எப்படிப்பட்ட உணர்வுகளைக் காட்டினர் என்பது இப்போது தெரியக்கூடுவதில்லை.

ஆனால் ஒன்று.

நாயக்கர் ஆட்சிக்கு வந்து ஆண்டபோது ஐந்து பெரும் யுத்தங்களில் மதுரை நாடு ஈடுபடவேண்டியிருந்தது. அவருடைய காலம் வரையில் அவருடைய மதுரைநாடு, விஜயநகரப் பேரரசுக்குக் கீழ் விளங்கியது. 

இது நாம்கேவாஸ்தே அல்லது de jure நிலைமைதான்.

அந்த காலகட்டத்தில் கோல்கொண்டா, பீஜாப்பூர் சுல்த்தானியரிடம் பெருமளவில் தன்னுடைய வடபாகத்தை தலைநகரங்களுடன் விஜயநகரம் இஇழந்துவிட்டு வேலூரில் மையம் கொண்டிருந்தது. அதன் கீழ் விளங்கிய மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய அரசுகள்,பேரரசைவிட வலிமை வாய்ந்தவையாக இருந்தன. நாயக்கர் விஜயநகரை அடியோடு ஒழித்துக்கட்ட நினைத்து, மேற்படி இரண்டு சுல்த்தானியரையும் மாற்றி மாற்றி பெரும் கையூட்டுக்கள் வழங்கி தூண்டிவிட்டார்.  அவர்கள் ஒருவழியாக விஜயநகரை சப்ஜாடா செய்துவிட்டார்கள். அதன் கடைசி ராயனான ஸ்ரீரங்க ராயனுக்கு முற்பட்ட ராயராகிய அவருடைய சிற்றப்பா, மைசூரில் அகதியாக வாழ்ந்து வாழ்வின் இறுதியில் மைசூர்க் காடுகளில் பைத்தியமாக அழைய நேரிட்டது. அந்த ராயருக்கு அத்தகைய கொடுமையைச் செய்த ஸ்ரீரங்க ராயன் சூழ்ச்சிகளாலும் கையாலாகாதத் தனத்தாலும் திருமலை நாயக்கர் செய்த துரோகத்தாலும் கோல்கொண்டா, பீஜாப்பூர் ஆகியவற்றிடம் நாட்டை இழந்து மைசூரில் அகதியாக பிறர் தயவில் வாழவேண்டியதாயிற்று. இவ்வாறு ஒரு பெரும் செல்வாக்கும் பலமுமிக்க ஒரு பேரரசு இருந்த இடம் தெரியாமற் போயிற்று.   தடுப்பாக விளங்கிய வேலூர் ஆட்சி அகன்றவுடன் சுல்தானியர் மதுரையின்மீது கண்ணோட்டமிட்டனர். அவர்களை நாயக்கர் ஒருவர்மீது ஒருவரை "ஜூட்" காட்டி ஏவிவிட்டு அவ்வப்போது தப்பிக்கொண்டிருந்தார்.

இதற்கெல்லாம் நிறைய செலவழிக்கவேண்டியிருந்தது. படைகளையும் அங்கும் இங்குமாக தனக்கு நேரடியாக சம்பந்தமே இஇல்லாத இடங்களுக்கெல்லாம் அனுப்பி ஊரான் போடும் சண்டையிலெல்லாம் கலந்து கொள்ளவேண்டியிருந்தது. 
போதாததற்கு தன் சொந்தப் போர்கள் வேறு.
மக்கள் மனோநிலை எப்படி இருக்கமுடியும்?
அதற்கும் உதவக்கூடியவகையில் சிலகற்களில் பல மாங்காய்களை விழச்செய்தார்.

கவனத்தை திசைதிருப்பிவிட்டால்......?

அவருக்கு போர்த்துகீசிய, ரோம், வெனிஸ் நகரத்து பரிச்சயம் நிறையவே உண்டு. அவர்களிடமிருந்து பண்டைய ரோமாபுரி வரலாற்றை அறிந்திருப்பார்போல! ஸீஸர்கள் செய்ததை நாயக்கரும் செய்தார்.

வேண்டுமென்றே செய்தாரா? 

பக்தியால்தான் செய்தார். 
சந்தேகமில்லை. 

ஆனால் அதே நேரம் அதில் சில மறைவான உள்நோக்கங்கள் இருந்தனவோ என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை.

ஸீஸர்கள் மக்களை திசைதிருப்ப விழாக்கள், கேளிக்கைகள், க்லேடியேட்டர் போட்டிகள், மிருகங்களுக்கிடையில் சண்டை, சர்க்கஸ் என்றெல்லாம் காட்டினார்கள். அந்த "சரக்கோஸ¤ பயாஸ¤க்கோப்பு" எல்லாத்தையுமே நாயக்கரும் மக்களுக்குக் காட்டியிருக்கிறார். மிருகங்களுக்கிடையில் சண்டை, பயில்வான்களின் குஸ்தி, ஆயுதப் போட்டி முதலியவற்றுக்காகவே ஒரு பெரிய மைதானத்தை நிறுவினார். அந்த அரங்கத்தின் பெயர் "தமுகமு" மைதானம்(மைதானமு?). அங்கு யானைச்சண்டைகூட நடத்தியிருக்கிறார்கள். இப்போதும் அது "தமுக்கம்" என்ற பெயரில் இருக்கிறது. அங்குதான் காந்தி நினைவு மண்டபம் கட்டியிருக்கிறார்கள். (What irony?)

ஆண்டு முழுமையிலும் ஏதாவது திருவிழாக்கள் நடந்துகொண்டேயிருக்க ஏற்பாடு செய்தார். மதுரையில் நடந்த அறுபத்துநான்கு திருவிளையாடல்களில் சிலவற்றை அடிப்படையாகக் கொண்ட விழாக்களும் இருந்தன. அதில் அவை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் அப்படியே உருவாக்கிக் காட்டப்படும். மற்ற திருவிழாக்களைவிட ஒரு மிகப் பெரிய திருவிழாவை மிக விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார்.

அதுதான் "The Festival among Festivals".

"La Grand Carnival".

அந்த விழாவுக்கு வழிவிடும்வகையிலும் வசதி செய்து கொடுக்கும் வகையிலும் மற்ற விழாக்களை இப்படி அப்படி மாற்றி அமைக்கலானார்.

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - Part 2

திருமலை நாயக்கர் ஏற்கனவே வேண்டுதல் செய்திருந்தபடி ஐந்து லட்சம் பொன்னுக்கு திருப்பணிகள், ஆபரணங்கள் முதலியன மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செய்து வைத்தார். 

கோயிலின் நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் பலவற்றைச் செய்யும் போதுதான் அதிகப் பிரச்னைகள் ஏற்பட்டன. அனைத்து கோயில் ஊழியர்களும் கலகம் செய்தனர் அல்லவா? அதுமட்டுமல்லாது பட்டர்மாரிலேயே இரு பிரிவினர். குலசேகர் பாண்டிய பட்டர், விக்ரமபாண்டிய பட்டர் என்று இரண்டு மரபினர். யார்யாருக்கு என்ன உரிமைகள், முறைமைகள் என்பதில் போட்டி. 

அதை வரையறுத்துத் தந்தார். 

கோயிலில் தெய்வங்களுக்குரிய காரியங்களைச் செய்பவர்களை "தேவகன்மிகள்" என்று சொல்வார்கள். எல்லோரும் பூணூல் போட்டிருப்பதைப் பார்த்துவிட்டு, எல்லோரும் "பிரம்மணர்" என்று முடிவு கட்டிவிடுகிறோம்.

ஆனால் அவர்களில் எல்லோருமே சிவ ஆலயங்களில் தெய்வங்களுக்குரிய எல்லாக் காரியங்களையும் செய்துவிட முடியாது.

அவர்களில் உச்சகட்டத்தில் இருப்போர் "ஆதிசைவர்" எனப்படுவர். வைதிக பிராம்மணர்கள் "பிரம்மஸ்ரீ" என்று பெயருக்கு முன்னாலும் "சர்மா" என்ற பட்டத்தை பின்னாலும் போட்டுக்கொள்வார்கள். 

இவர்களோ "சிவஸ்ரீ" என்று போட்டுக்கொள்வார்கள். "பட்டர்" என்ற பட்டமுண்டு.

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - Part 1

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் ஆட்சியை திருமலை நாயக்கர் கைப்பற்றியவுடன் அபிஷேகப் பண்டாரத்தின் கீழ் கோயில் வருமானத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கோயில் ஸ்தானிகர்கள் முதலியோர் கலகம் செய்தனர்.

அவர்களுக்கு நிரந்தர வருமான வருமாறு மான்யங்கள் விட்டுக் கொடுத்தார். அது தவிர கோயிலின் வழிபாடுகள், ஊழியர்களின் கடமைகள், திருவிழாக்கள் ஆகியவற்றை சீர்படுத்தினார். அவை எப்போதுமே நடை பெற்று வருமாறு இருபது ஊர்களையும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு பட்டயம் போட்டுக் கொடுத்தார்.

இதுதான் "திருமலைநாயக்கன் கட்டளை" எனப்படுவது. 

How did he go about it?
What did he do?
விளக்குகிறேன்.

முதலில் சிதிலமடைந்த கோயிலை செப்பனிட்டார். திருமலை நாயக்கர் செய்த பல விஷயங்கள் குறித்து நமக்கு நிறைய குறிப்புகள் கிடைத்துள்ளன. திருப்பணி மாலை, ஸ்ரீதல புஸ்தகம் என்று பல ஆவணங்கள் உள்ளன.

அவற்றில் பலவற்றை நாயக்கரே எழுதச்செய்தார். 

அவருக்கு இந்த "PR" என்று இந்தக் காலத்தில் சொல்கிறார்களே, அது மிகவும் அத்துப்படி. சிதிலமடைந்த கோயிலைச் செப்பனிட மட்டும் நிறைய செலவிட்டார். அதற்காக விஷேசமாக தயாரிக்கப் பட்ட சுண்ணாம்பில் காரை தயாரிக்கப்பட்டது.

சாதாரணமாக பூமிக்கு அடியில் படிவங்களாகவும் பாறைகளாகவும் விளங்கும் சுண்ணாம்புப்பாறைகளை உடைத்து, கற்களாக்கி, காளவாயில் இட்டு, சுட்டு, பிறகு தண்ணீர் ஊற்றி சுண்ணாம்பு தயாரிப்பார்கள்.  சுண்ணாம்புடன் மணலைச் சேர்த்துத் தண்ணீர்விட்டு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து சாந்து தயாரிப்பார்கள்.

ஆனால் மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பயன்படுத்தியது வேறு வகை.  சுண்ணாம்புப் பாறைகளுக்குப் பதில் கடல் சங்குகளைக் காளவாயில் சுட்டு, எடுக்கப்பட்டதில் வெல்லச்சாறு விட்டு அறைத்தார்கள். அதன்பின் உளுந்து, நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், முதலியவை ஊறியநீர் விட்டு, மெல்லிய சல்லடைகளால் சலித்தெடுக்கப்பட்ட பொடி மணலைச் சேர்த்து அரைத்து, சாந்து செய்து வச்சிரக்காரை தயாரித்தார்கள்.

அதுபோலவே, நயமான களிமண் கலவையில் செய்யப்பட்ட செங்கற்களை அடுக்கி, இஇந்த வச்சிரக்காரையை வைத்துப் பூசியிருக்கிறார்கள்.  பழங்கற்கள், கெட்டுப்போன உத்திரங்கள், மோசமான பகுதிகளை எடுத்து நீக்கிவிட்டு அங்கெல்லாம் புதிதாக வேலைகளைச் செய்வித்தார்.

பல புதிய பகுதிகளையும் கட்டி சேர்த்தார்.

கிழக்குக் கோபுரத்துக்கு வெளிப்புறமாக கொலுமண்டபம் அல்லது வசந்தமண்டபம் எனப்படும் "புதுமண்டப"த்தைக் கட்டுவித்தார். 

அந்தக் காலத்துக்கு அதுவே மிக அலங்காரமானதாகவும் நீராழி, அகழி சூழ்ந்து புதுமுறையில் புதிதாகக் கட்டப்பட்ட வசந்தமண்டபமாகவும் திகழ்ந்தபடியால் மதுரை மக்கள் அதனைப் "புதுமண்டபம்" என்றே அழைத்தனர்.

அதன்பின்னர் வேறுபல மண்டபங்கள் பலரால் மீனாட்சியம்மன் கோயிலிலும் மதுரையிலும் கட்டப்பட்டுவிட்டன.

ஆனாலும் புதுமண்டபத்திற்கு மட்டும் "புதுமண்டபம்" என்ற பெயர் நிலைத்துவிட்டது. ஆனால் சமீபகாலமாகத்தான் அதை வீணடித்து பாழாக்கிக் கொண்டிருக்கின்றனர்.  அந்த "புதுமண்டப"த்திற்கு இப்போது வயது 384 ஆண்டுகள்.

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - Prologue

இப்போது Prologue......

"தமிழ்கெழுகூடல்" "மாட மதுரை மாநகர்" வந்து சேர்ந்த திருமலை நாயக்கர், தன்னுடைய முன்னோர் வசித்த அரண்மனையில் தங்கலானார்.  கோயிலின் நிலைமையை ஒரு நோட்டம் விட்டார்.  மாலிக் க·பூரின் காலத்தில் பாண்டியர்கள் கட்டிய கோயிலின் பல பகுதிகள் இஇடிக்கப்பட்டுவிட்டன. அதன்பின்னர் ஏற்பட்ட சுல்த்தானியர் ஆட்சியில் நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு அம்மன் கருவறையும் சுவாமி  கருவறையும் பூட்டியே இஇருந்தது.

குமாரகம்பண உடையார் வந்து திறந்து, பூஜைகளை மீண்டும் தொடங்கி வைத்தார். அர்ச்சகர் மரபினர் பலர் இறந்துவிட்டிருந்தனர். சிலருடைய வாரிசுகள் தொலைவில் உள்ள ஊர்களில் வசித்துக் கொண்டிருந்தனர்.  கோயிலின் கைக்கோளர் படை என்னும் செங்குன்றர் பாதுகாவற் படையினராகிய வயிராவிகளில் சிலர் மட்டும் மதுரையிலும் பக்கத்து ஊர்களிலும் இருந்தனர். 

அவர்களை வைத்து, இரண்டு தலைமுறைகளாக விடுபட்டுப் போனவைகளையும், காணாமற்போன மரபினரையும் மீட்டு, மிச்சம் சொச்சம் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆபரணங்கள் முதலியவற்றைத் தேடி எடுத்து கோயிலை நிலைநிறுவினார்.

இந்த விபரங்களும் மேலும் இஇந்தப் பகுதியில் காணப்படும்விபரங்களும் டாக்டர் ஏ.வி ஜெயச்சந்திரனுடைய Ph.D. doctoral thesis ஆன "The Madurai Temple Complex" என்னும் நூலில் உள்ளவை. அத்துடன் நான் சேகரித்த சில விபரங்களையும் கலந்துள்ளேன். 

மேற்குறித்த நூல் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது.  " Turning stumbling blocks into stepping stones" என்பதற்கும், விடாமுயற்சியுடன் கூடிய கடும் உழைப்புக்கும், ஒன்றைச் செய்யும்போதே இன்னொன்றையும் சாதித்துக்கொள்ளமுடியும் என்பதற்கும் ஏ.வி.ஜே.யின் இந்த நூல் ஒன்று சான்று.  அந்த சரிதத்தை நம் இளைஞர்களுக்காக எப்போதாவது சொல்ல முயல்கிறேன்.

பின்னர் ஏற்பட்ட விஜயநகரத்தாரின் ஆட்சியில் பல அரசப் பிரதிநிதிகளும் பிரதானிகளும் செல்வந்தர்களும் சிறிது சிறிதாகக் கோயிலை எடுப்பித்து வரலாயினர்.  விசுவநாத நாயக்கரின் மரபினர் காலத்தில் இந்த திருப்பணிகள் தொடர்ந்தன. திருமலை நாயக்கர் மதுரையில் குடியேறியபோது, அபிஷேகப் பண்டாரம் என்னும் பண்டாரசன்னிதியிடம் கோயில் இஇருந்தது.  அந்த ஆசாமி கோயில் வருமானத்தையெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார். கோயில் நிர்வாகமும் சீரழிந்துவிட்டிருந்தது. வழிபாடுகளும் ஒழுங்காக நடைபெறவில்லை.  ஒருநாள் இரவில், மீனாட்சியம்மன் நாயக்கரின் கனவில் தோன்றி, "திருமலையே! என்னை ஒருவரும் கவனிக்கவில்லை!" என்று சொன்னாளாம்.

நாயக்கர் ஒரு தினுசான கேரக்டர்.

அவருடைய நடவடிக்கைகளைப் பார்த்தால் இப்போதுள்ள மா·பியா டான்களின் சாயல் நிறைய அடிக்கும். பாய்ந்து பதுங்குவார்; பதுங்கிப் பாய்வார். 

கோயிலை சீர்திருத்தம் செய்யவேண்டுமானால், முதலில் தன்னுடைய கைக்கு கோயில் வந்து விடவேண்டும். அதற்கு சில வழிகளைக் கையாண்டார். அவை கட்டொழுங்குடையனவா என்பது கேள்விக்குரியதாக இருக்கலாம்.

ஆனால் நாயக்கரோ ஒரு விஷயத்தை மிக நன்கு புரிந்துவைத்துக் கொண்டு, அதனையே ஒரு பாலிஸியாகக் கடைபிடித்தவர்.

அதாவது, "The ends will always justify the means. So, make sure that the suitable ends are there; otherwise make the people accept the means - whatever the ends might turn out to be."

இஇதுதான் நாயக்கரின் வாழ்வியல் தர்மம்.

ஆகவே வைஷ்ணவ மரபைச்சேர்ந்த திருமலை நாயக்கர் சைவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த அபிஷேக பண்டாரத்தைத் தன்னுடைய குருவாக ஆக்கிக்கொண்டார். பெரும்பணம் கொடுத்தார். நிலங்களை உரிமையாக்கினார். அபிஷேகபண்டாரத்தின் பெயரும் மீனாட்சியம்மன் கோயிலின் திருப்பணியில் முக்கிய இடம் பெறவேண்டும் என்பதற்காக சுவாமி சன்னிதியின் இரண்டாம் பிரகாரத்தைக் கட்டத்தூண்டினார்.  பண்டாரத்தின் சிலையையும் கோயிலின் ஒரு தூணில் வைத்துவிட்டார்.  கோயிலின் ஆட்சியை திருமலை நாயக்கர் அபிஷேகப் பண்டாரத்திடமிருந்து பெற்றுக்கொண்டார்.

அந்தக் காலத்தில் "Forceful persuasion and willing compliance" என்பது ஒரு கலையாக விளங்கியது.  அபிஷேகப்பண்டாரம் was only too willing to comply.

திருமலை நாயக்கருக்குத் திருப்பணிகள் திருவிழாக்கள் செய்வதும் பிடிக்கும்; ஆட்களை மாறுகால் மாறுகை வாங்குவதும் பிடிக்கும்.

இந்த விருப்புகளெல்லாம் அபிஷேகப் பண்டாரத்துக்கும் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா?  After all, he was a learned man who understood the ways of  the world.

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்அன்பர்களே,


அகத்தியம் ஆரம்பித்த புதிதில் - 1999 ஆண்டின் சித்திரை மாதத்தில் அன்பர் சுமன் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், பட்டர் செங்கோல் வாங்கும் சடங்கு முதலியவற்றைப் பற்றி எழுதி, மேல்விபரம் கேட்டிருந்தார்.  அதற்காக 'நாயக்கர் கட்டளை' என்ற பெயரில் ஒரு தொடரை எழுதினேன்.

சிதறிக்கிடந்த மடல்களில் பெரும்பான்மையானவற்றைத் தேடி எடுத்துத் தொகுத்துள்ளேன்.  ஏதோ...மீனாட்சியம்மனுக்கு நான் செய்யும் ஒரு கைங்கர்யமாக இருக்கட்டும். 

இதற்கு முன்னர் prelude ஒன்றைச்சொல்லியே ஆகவேண்டும்.

மதுரையை ஆண்ட பாண்டியர்களை வீழ்த்தி மாலிக் க·பூர், குஸ்ரவ் கான், முகம்மது துக்லக் ஆகியோர் தமிழகத்தின் பெரும் பகுதியைக் கைப்பற்றினார்கள். அவர்களில் துக்லக், தன்னுடைய தளபதியான ஷரீ·ப் அஹ்ஸனை மதுரையில் கவர்னராக நியமித்து, தமிழகத்தை ம'ஆபர் என்ற பெயரில் தன்னுடைய பேரரசின் இஇருபத்தாறாவது மண்டலமாக நிறுவிக்கொண்டான்.

அஹ்ஸன் சமயம் பார்த்து, மதுரையை தனி நாடாகப் பிரகடனம் செய்துகொண்டான். ஜலாலுத்தீன் அஹ்ஸன் ஷா என்று சுல்தானாகப் பட்டம் சூட்டிக்கொண்டு, தன்னுடைய பெயரால் பொன், வெள்ளி நாணயங்கள் வெளியிட்டுக் கொண்டு ஆட்சிபுரிய ஆரம்பித்தான். (அதற்காக அவருடைய மகனும் பெரிய அறிஞருமான ஷரீ·ப் இஇப்ராஹீம் கொடுமையான முறையில் துக்லக்கால் பழிவாங்கப்பட்டார் (அது வேறு ஒரு கதை). அஹ்ஸன் ஷாவைத் தொடர்ந்து நாற்பத்தெட்டு ஆண்டுகளில் ஏழு சுல்த்தானியர் ஆண்டனர்.

கடைசி சுல்த்தான் சிக்கந்தர் ஷாவை, கர்நாடகத்தில் புதிதாகத் தோன்றியிருந்த விஜயநகர் அரசின் இஇளவரசர் குமார கம்பணஉடையார் போரில் தோற்கடித்தார். கடைசியில் திருப்பரங்குன்றம் மலைமீது கம்பணருக்கும் சிக்கந்தருக்கும் இடையே நடந்த தனிப்பட்ட வாட்போரில் (duel)சிக்கந்தர் ஷா இறந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.

மதுரை விஜயநகரத்து ராயர்களின்கீழ் வந்தது. அவர்கள் நாட்டை சிறுசிறு பிரிவுகளாக ஆக்கி "அமரநாயக்கர்" என்ற படைத்தலைவர்களிடம் கொடுத்தனர். மதுரை தஞ்சைபோன்ற இடங்களில் பெருந்தலைவர் யாராவது இருப்பர். மதுரையைப் பழைய பாண்டியர்களில் ஒருவரிடம் ஒப்படைத்தனர். ஆனால் இதெல்லாம் சரிப்பட்டு வரவில்லை.  தமிழ் மன்னர்களிடையே ஒற்றுமையில்லாததால் ஏற்பட்ட குழப்பங்களைச் சரிக்கட்டி நியாயமான மன்னர் வகையறாவிடம் நாட்டை ஒப்படிக்கச் சொல்லி அப்போது விஜயநகரத்தின் போரசராக இருந்த கிருஷ்ணதேவ ராயர் ஆணையிட்டார். ஆணையை மேற்கொண்டு அவருடைய மஹாமண்டலேஸ்வரராகிய நாகம நாயக்கர் பெரும்படையுடன் மதுரைக்குச் சென்றார். ஆனால் தமிழ் மன்னர்களிடம் நாட்டை ஒப்படைக்கவில்லை.  தாமே வைத்துக்கொண்டார். அவரைத் தோற்கடித்து, பிடித்துவருமாறு ராயர் உத்தரவின்பேரில் நாகமரின் மகன் விஸ்வநாத நாயக்கர் புறப்பட்டு வந்தார். இருவருக்கும் இடையே நடந்த தனிப்பட்ட போரில் நாகமரை விஸ்வநாதர் வென்றார். நாகமர் பின்னால் ராயரால் மன்னிக்கப்பட்டு மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார். விஸ்வநாத நாயக்கர் தம்முடைய அமைச்சராகிய தளவாய் அரியநாத முதலியாருடன் மதுரையை ராயரின் பிரதிநிதியாக இருந்து ஆண்டு வந்தார். விசுவநாத நாயக்கர் கிருஷ்ணதேவராயரின் ஆளுனராக மதுரையில் நியமனம் பெற்றபோது, மதுரைநாட்டில் பல நிர்வாக சீரமைப்புகள் செய்தார்.  அவரா செய்தார்? அவருடைய தளவாய் அரியநாதமுதலியார் செய்தார்.

அதன்பின்னர் மதுரைநாடு இன்னும் விரிவாக்கம்பெற்று, கிட்டத்தட்ட தனியாட்சி அரசுபோல் விளங்கியது.  அப்போது மதுரையே அந்த நாயக்கமன்னர்களின் தலைநகராக விளங்கியது. 

மதுரை மீனாட்சியம்மன் குமாரகம்பணனிடம் ஒரு வாளைத் தந்ததாக "மதுராவிஜயம்" சொல்கிறது. மதுரையை ஆண்ட நாயக்கர்கள், மதுரையின் நாயகியாகிய மீனாட்சியம்மனின் பிரதிநிதிகளாகவே தங்களைக் கருதிக்கொண்டு, மதுரையை ஆட்சி புரிவது மரபாக விளங்கியது. ஒவ்வோர் ஆண்டும் மீனாட்சியம்மனின் பட்டாபிஷேகத் திருவிழாவின்போது, அப்போது பட்டத்திலிருக்கும் நாயக்கர், தான் ஏற்றிருக்கும் பிரதிநிதித்துவத்திற்கு அடையாளமாக அம்மனிடம் செங்கோலை வாங்குவது வழக்கம். 

மதுரையே தொடர்ந்து ஐந்து நாயக்கர்களின் தலைநகராக இருந்தது. ஆறாவதாக ஆண்ட முத்துவீரப்பநாயக்கர் மதுரைநாட்டிற்கு கோல்கொண்டா, பீஜாப்பூர், மைசூர், தஞ்சை ஆகிய அரசுகளால் ஏற்பட்ட மிரட்டலைச் சமாளிக்கும் பொருட்டு தலைநகரை திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார்.

ஏழாவதாக பட்டத்துக்கு வந்த திருமலைநாயக்கர், முதலில் திருச்சியில்தான் வசித்தார். திருமலைநாயக்கருக்கு முன்னாலும் அறுவர் நாயக்கர்; பின்னாலும் அறுவர் நாயக்கர். ஆனால் "நாயக்கர் வம்சம்" என்றாலேயே நினைவுக்கு வருகிறவர் திருமலை நாயக்கர்தான்.  கம்பராமாயணத்தில் குகன் ராமனைப் பார்த்துச் சொல்கிறானாமே, " நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் உன் புகழ் ஆக்கிக்கொண்டாய்". 

ஏழாண்டுகள் திருச்சியில் வாழ்ந்தார். ஏழாம் ஆண்டு , மண்டைச்சளி என்னும் நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். 
அக்காலத்து மருத்துவமுறைகளோ பயனும் அளிக்கவில்லை. ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில் எல்லாம் நேர்ந்து கொண்டும், ஒன்றும் ஆகவில்லை. 1634 A.D. ஆண்டின் பட்டாபிஷேகத் திருவிழாவின்போது மரபுப்படி செங்கோல் வாங்குவதற்காக, தன்னுடைய கடுமையான நோயையும் தாங்கிக்கொண்டு மதுரைக்குப் புறப்பட்டார்.  நோய் கடுமையாகியதால், மதுரைக்கு நேரே செல்லாமல் திண்டுக்கல்லில் தங்கினார். 

அன்று இஇரவு, நாயக்கரின் கனவில், சொக்கன் வழக்கம்போல "எல்லாம் வல்ல சித்தர்" வடிவில் தோன்றி, " திருமலை! பாண்டிப்பதியே பழம்பதி. அங்கேயே நிலையாகத் தங்கிவிடு. மீனாட்சி சுந்தரேசுவரருக்கு வழிபாடுகள் செய்து, திருவிழாக்கள் நடத்து. உன்னுடைய நோய் நீங்கும்.  இந்த திருநீற்றை வாயில் போட்டு, உடலிலும் தடவு" என்று கட்டளையிட்டார்.  காலை எழுந்தவுடன் அவருடைய பரிவாரங்களிடம் சொல்லி, மதுரையிலேயே தங்கி, ஐந்து லட்சம் பொன்னுக்கு திருப்பணியும் திருவாபரணமும் பண்ணிவைப்பதாக சத்தியம் பண்ணினார்.  பிறகு அவர் பல்விளக்கி, முகம்கழுவி, மூக்கைச் சிந்தியபோது மண்டைச்சளி கொத்தாகக் கழன்று விழுந்தது.  சொக்கநாதப்பெருமானின் பேரருளாலேயே தம்முடைய நோய் பரிபூரணமாகத்  தீர்ந்தது என்று நாயக்கர் மனமாற நம்பினார்.  பிறகு நேராக மதுரைக்குச் சென்று, கோயிலை அடைந்து சொக்கனையும் அங்கையற்கண்ணியையும் வழிபட்டார்.

இதுதான் Prelude............