Thursday 8 September 2011

TIGER! TIGER!!


புலியும் கிலியும்




முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர் காடு மலைப் பகுதியில் வேலை பார்த்ததாக அவ்வப்போது சொல்லியிருக்கிறேன்.


புலியின் கர்ஜனையை அவ்வப்போது அங்கு கேட்டிருக்கிறேன். 

நான் அங்கு செல்வதற்கு முன்னால் குவாலா ப்ராங் என்னும் அந்த சிற்றூர் வேறு மாதிரியாக இருந்திருக்கிறது. வீடுகள் எல்லாமே மரத்தூண்களின்மேல் கட்டப்பட்டிருக்கும். இந்த மரத்தூண்கள் ஆளுயரத்துக்கு மேலாக இருக்கும். 

இரவுகளில் பல சமயங்களில் புலிகள் ஊருக்குள் வரும். அந்த உயரமான வீடுகளின் அடியில் படுத்திருக்கும். அப்போது அங்குள்ள நாய்கள் பூனைகள் கோழிகள் எல்லாமே மிகவும் நிசப்தமாக இருக்கும்.   நாய்களோ பூனைகளோ இருக்கும் இடத்திற்கு அருகில் புலி வந்தால் அவை அப்படியே ஸ்தம்பித்துப்போய் இருக்கும்.  புலி அப்படியே கடித்துத் தின்றுவிட்டுப் போகும்.   பக்கத்தில் வேறு ஏதாவது நாயோ பூனையோ இருந்தால் அதுவும் ஸ்தம்பித்துப்போய் இருக்கும்.   எவையுமே ஓடிப்போக இடமிருந்தாலும் ஓட மாட்டா. 

பாயப்போகும் புலி தன்னுடைய விழிகளைத் தான் குறிபார்த்திருக்கும் ஆளை விழித்துப் பார்த்து பற்களைக் காட்டி உறுமும். ஓடுவதற்கும் முடியாத செயலற்ர நிலை ஏற்படும்.

'புலியடிக்கும் முன்னர் கிலி அடிக்கும்' என்று நம்ம ஆட்கள் சொல்வார்கள். 
அந்த 'கிலி' என்பது Panic Situation என்பதால் ஏற்படும் Fear Paralysis என்பது.   கால் கைகள் விரைத்துப்போய் கூச்சலிடவும் முடியாத ஸ்தம்பன நிலை அது.   மூளையில் அமிக்டாலா என்னும் ஒரு பட்டாணி அளவு உள்ள இடத்தில் இதன் மூலம் இருக்கிறது.   மூளை நரம்புகள் - அதாவது மூளையிலிருந்து நேரடியாகப் பிறக்கும் நரம்புகள் பன்னிரண்டு உள்ளன. இவற்றை Cranial Nerves என்று சொல்வோம்.   மற்ற நரம்புகள் முதுகுத்தண்டினுள் இருக்கும் பெரும்நரம்பிலிருந்து வரக்கூடியவை.   க்ரேனியல் நரம்புகளில் ஒன்று வேகஸ் எனப்படும்.   இது இருதயத்துடன் தொடர்பு கொண்டது.   வேகஸ் நரம்பில் இம்ப்பல்ஸ் எனப்படும் உணர்வு அதிர்வுகள் மிக வேகமாகச் சென்றால் இருதயத் துடிப்பைப் பாதிக்கும்.   இன்னும் அதிகமாகினால் இருதயம் நின்றுவிடும். Cardiac Arrest என்னும் நிலை ஏற்படும்.   அதீத பயம் ஏற்படும்போது வேகஸ் ஸ்ட்டிம்யுலேஷன் ஏற்பட்டு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு விடும்.   இதுவும் கிலியடிப்பது என்பதுதான்.

பேயைத் திடீரென்று பார்க்க நேரிடும்போது இதே மாதிரியான Fear ParalysisCardiac Arrest என்பவை ஏற்படக்கூடும்.  VooDoo Death என்பதுவும் பயத்தால் ஏற்படுவதுதான். யாராவது மந்திரவாதி ஏதாவது மந்திரக்கோல் மாதிரிப்பட்ட கோலையோ எலும்பையோ காட்டினாலோ, சுடுகாட்டுச் சாம்பலை ஊதிவிட்டாலோ, அந்த பயம் ஆள்மனதுக்குள் அழுத்தமாகப் பதிந்து, வியாதிகளின் கூறுகளைத் தோற்றுவிக்கும். மருத்துவத்துக்கும் கட்டுப்படாமல் மரணத்தை ஏற்படுத்தும். பல சமயங்களில் உடனடியாக இருதயத்தையும் நிறுத்திவிடும்.   அதீத பயத்தின் கூறுகள், தன்மைகளை ரொம்ப ரொம்ப ரொம்ப எளிமைப்படுத்திச் சொல்லியிருக்கிறேன்.  

பயத்திலேயே இன்னும் வெளிப்படையான பலவகைகள் உண்டு.   பேயே இல்லாமல், 'சந்திரமுகி வடிவேலு' போல "மாப்பூ..... வச்சுட்டாண்டா ஆப்பூ.." என்று அலறியவாறு ஸ்தம்பித்து நிற்கும் நிலையும் Fear/Panic Paralysisதான்.   ஆனால் உள் ஆழத்தில் அவை எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைதாம்...



$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$