Wednesday, 7 August 2013

THE TOWER THAT MARUDHU BUILT-#1


பகுதி 1
மதுரைக் கோபுரங்கள்    "சாந்துப் பொட்டு தளதளங்க சந்தனப்பொட்டு குமுகுமுங்க
மருதக் கோபுரம் தெரியக் கட்டின மருது வாரதப் பாருங்கடீ..."

காளையார் கோயிலைப் பற்றி இப்போதெல்லாம் அதிகம் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. ஏதாவது கொலை கிலை சம்பந்தப்பட் விஷயமாக இருந்தால் பத்திரிக்கையில் வந்து கவனத்தைக் கவரக்கூடும். இல்லையென்றால் அங்கு ஏதாவது மாபெரும் கட்சிப் பேரணி மாநாடு நடக்கவேண்டும்.
அந்த ஊர் மிகவும் புராதனமான ஊர்.
அங்கு காளீஸ்வரர் கோயில் இருக்கிறது. சுந்தரமூர்த்தி நாயனாரால்
பாடப்பட்ட தலம். திருக்கானப்பேர் என்னும் பெயரில் பாண்டிநாட்டின்
பதினான்கு தேவாரத்தலங்களில் அதுவும் ஒன்றாக இருக்கிறது. சங்க
காலத்தில் 'கானப்பேரெயில்' என்ற பெயரில் அது இருந்தது. மிகவும் உயர்ந்த சுவர்களையுடைய கோட்டை இருந்திருக்கிறது. வேங்கைமார்பன் என்னும் தலைவன் அந்தக் கோட்டையில் இருந்தான்.
பிற்காலத்திலும் அது பலம் வாய்ந்த கோட்டையாகவே இருந்திருக்கிறது.
பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையிலிருந்து படையெடுத்த லாங்காபுரத் தண்டநாயகனின் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட இடம்.
சிவகங்கை தனிநாடாக ஆனபோது அதுதான் முக்கிய கோட்டைகளில்
ஒன்றாக இருந்தது. சிவகங்கை மன்னர்களுடைய போர்களில் கடைசியாக நின்று பிடிக்கும் இடமாக விளங்கியது.

காட்டரண், மதிலரண், நீரரண் ஆகியவை பெற்ற கோட்டை.

1873-இல் சிவகங்கையை ஆண்ட மருது சேர்வைக்காரர்களுக்கு
காளையார் கோயிலில் மிகப்பெரிய ராஜகோபுரம் ஒன்றை எழுப்பவேண்டும் என்று ஆவல்.
அந்த கோபுரத்தின் உச்சியில் இருந்துகொண்டு பார்த்தால் மதுரை
மீனாட்சியம்மன் கோயிலின் கோபுரங்கள் தெரியவேண்டும்.
அதே சமயம் அந்தக் கோயிலுக்கு மிகச்சிறந்த தேர் ஒன்றையும்
செய்துவைக்கவேண்டும் எண்ணினார்கள்.

அதே சமயம் அந்தக் கோயிலுக்கு மிகச்சிறந்த தேர் ஒன்றையும்
செய்துவைக்கவேண்டும் எண்ணினார்கள்.
ஆகவே அதற்கான வேலைகளைத் துவக்கினார்கள்.
மிகப் பெரிய தேராகச் செய்யவேண்டியிருந்தது. அதன் அச்சுக்கான
மரங்கள் குறிப்பிட்ட ஜாதி மரமாக இருக்கவேண்டும். குறிப்பிட்ட வயதான முற்றிய மரமாகவும் இருக்கவேண்டும். வைரம் பாய்ந்ததாக இருக்கவேண்டும்.
ஆனால் முடிச்சு விழுந்ததாக இருக்கக்கூடாது. பெரிய மரமாகவும் இருக்க
வேண்டும்.
பல இடங்களில் ஆட்கள் தேடினார்கள்.
மரங்கள் கிடைக்கவேயில்லை.
திருப்பூவணத்தில் ஒரு கிழவனார் வீட்டின் பின்புறத்தில் இரண்டு
மருதமரங்கள் இருந்தன. இருநூறு வயதுக்கும் மேற்பட்டவை. வைரம் பாய்ந்து பிரம்மாண்டமாக இருந்தன.
அந்த இரண்டு மரங்களையும் வெட்டிக்கொண்டு செல்ல மருது
சேர்வைக்காரர்களின் ஆட்கள் வந்தார்கள்.
ஆனால் அந்தக் கிழவனாரும் அவருடைய பேத்தியும் மரத்தைக்
கொடுக்க மறுத்துவிட்டார்கள்.
அமைச்சர்கள் தளவாய்கள் நாட்டார்கள் முதலிய அனைவரும்
கேட்டும் மரத்தைக் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.
கடைசியில் மருது சேர்வைக்காரர்கள் இருவரும் வந்தனர்.
பெரும் பணமும் காணியும் கொடுப்பதாகச் சொன்னார்கள். ஆனாலும்
பாட்டனும் பேத்தியும் மறுத்துவிட்டனர்.
அவர்களிடமும் பிடிவாதத்தைப் பாட்டனும் பேத்தியும் காட்டினார்கள்.
சின்ன மருது தம்முடைய ஆட்களைவிட்டு அவர்கள் இருவரையும் மீறி, மரத்தை வெட்டுமாறு உத்தரவிட்டார்.
கோடாலிகள் மரங்களின்மீது விழப்போகும்போது பாட்டனும் பேத்தியும்
மரங்களின்மீது தங்கள் கழுத்துக்களை வைத்துக்கொண்டனர்.
மருது சேர்வைகள் விதிர்விதிர்த்துப் போயினர்.
அப்போது கிழவனார் சொன்னார்:
"இந்த நாடு எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அமைதியோ
வளமோ இல்லாமல் இருந்தது. அடிக்கடி போர்கள். கண்ட கண்டவர்களெல்லாம் வரி வசூல் செய்து போயினர். இருப்பதையெல்லாம் சுரண்டினர். போதாததற்குக் கொள்ளைக் காரர்கள். எந்த வித தைரியமும் இல்லாமல் பயந்து பயந்து, கஷ்டப்பட்டு உழைத்தும் பலனேயில்லாமல் வாழ்ந்துவந்தோம். என்னுடைய
பாட்டன் காலத்திலும் அப்படித்தான் இருந்ததாக அவர் சொல்லக்
கேட்டிருக்கிறேன்.
ஆனால் நீங்கள் இந்த சின்ன மறவர் சீமையை ஆளவந்த பின்னர்
எப்போதுமே இல்லாத செல்வமும் வளமும் எங்கும் நிலவுகிறது. பயமில்லாமல் இருக்கிறோம். நீதி கிடைக்கிறது. வரிக்கொடுமை இல்லை. நீங்களே உங்கள் சொந்தப் பணத்தை வைத்து கிஸ்தி கட்டுகிறீர்கள். நாங்கள் கவலைகள் இல்லாமல் வாழ்கிறோம். உங்களை நாங்கள் தெய்வங்களாக மதிக்கிறோம். இந்த இரண்டு மருத மரங்களையும் நாங்கள் வெறும் மரங்களாகப் பார்க்கவில்லை. இந்த இரண்டு மருத மரங்களையும் உங்கள் இருவராகவும் பாவித்து வழிபட்டு வருகிறோம். இந்த மரங்களை நாங்கள் எங்கள் உ யிரைக் கொடுத்தும் காப்போம். இவற்றை வெட்டினால் உங்களை வெட்டுவதற்குச் சமம். அவ்வாறு செய்யாதீர்கள். அப்படிச் செய்வதானால் எங்களை வெட்டிவிட்டு அதன்பிறகு மரங்களை வெட்டுங்கள்."

மருதுசேர்வைகளுக்கு மனம் நெகிழ்ந்துபோயிற்று.
பாட்டனையும் பேத்தியையும் தங்களிடமே தங்கியிருக்குமாறு
அழைத்துக்கொண்டு அந்த இரண்டு மரங்களுக்கும் காவல் போட்டுவிட்டுத் திரும்பினர்.
பின்னர் பிரான்மலை/காளாப்பூர் காடுகளில் தேருக்கு உரிய மரங்கள்
கிடைத்துவிட்டன.
தேரின் வேலைகள் தொடங்கின.
தேர் ஸ்தபதி குப்பமுத்தாசாரியின் திறமையான தலைமையிலும்
கைவண்ணத்திலும் தேர் உருவாகியது.

கோபுரம் என்றதும் கோயிலின் கர்ப்பகிருகத்துக்கும் மேலே
இருக்கக்கூடியதையும் சேர்த்தே குறிப்பிடுவதாக் கொள்வார்கள்.
அது அப்படியல்ல.
கர்ப்பகிருகத்துக்கு மேலேயுள்ளது ஸ்ரீவிமானம் எனப்படும்.
கர்ப்பக்கிருகம், கர்ப்பகிருகத்து முன்னால் உள்ள அந்தராளம்,
அதற்கும் முன்னால் உள்ள அர்தமண்டபம் ஆகியவை ஒரு யூனிட்
அமைப்பு எனக்கொள்ளலாம். இவற்றிற்கு வெளியில்தான் பலிபீடம்,
கொடிமரம், வாகனம் முதலியவை இருக்கும்.
இவற்றைச் சுற்றிலும் ஒரு நடை இருக்கும். நடையைச் சுற்றி
ஒரு மதில் இருக்கும். நடையைப் பிரகாரம் என்று சொல்வார்கள்.
இதற்கும் வெளியில் ஒரு நடையை அமைத்து அதற்கும் வெளியில் சுவர்
வைக்கலாம். அது இரண்டாம் பிரகாரம்.
கோயில் அமைப்பு முதலியவற்றைத் தமிழில் எளிமைப்படுத்தி
எழுதிப்போடவேண்டும். அதற்குரிய டையகிராம்களைத் தயார் செய்து
கொள்ளவேண்டும். அதுதான் பெரிய காரியம்.
இப்போது நான் சொல்வது மிகவும் எளிமைப் படுத்தப்பட்ட விஷயம்.
உண்மையிலேயே அவ்வளவு எளிமையான விஷயமில்லை.
ஒவ்வொரு பகுதியும் எந்த நீள அகல கனம் கொண்டிருக்கவேண்டும்
என்பதையும் சாத்திர விதிகள் நிர்ணயித்துவைத்திருக்கின்றன.
கர்ப்பகிருகத்திற்கு நேராக வாயில் இருக்கும்.
இந்த வாயிலுக்கு மேலே ஒரு கோபுரம் இருக்கும். இதுதான்
கோபுரம். கர்ப்பகிருக சமாச்சாரம் விமானம்.
சுற்றுச்சுவரில் நான்கு வாயில்கள் இருந்தால் நான்கு கோபுரங்கள்
இருக்கும். முக்கிய வாயிலுக்கு மேலே இருக்கக்கூடியது மெயின்
கோபுரமாக இருக்கும். மற்றவற்றைவிட உயரமானதாகவும் பெரிதாகவும்
இருக்கும்.
முக்கிய கோபுரத்தை 'ராஜகோபுரம்' என்பார்கள்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பதினான்கு கோபுரங்கள்
உண்டு. அவற்றில் முக்கியமானவை கிழக்கில் உள்ள பராக்கிரம பாண்டியன் வாயில், தெற்கு கோபுரம், வடக்கில் உள்ள மொட்டைக் கோபுரம், மேலக்கோபுரம் ஆகியவை. ஒரு கோபுரம் போல் இன்னொன்று இல்லை.
இருப்பனவற்றில் ஒயில் மிக்கது தெற்குக் கோபுரம்தான். உள்வளைவு
கொடுத்துக்காட்டியிருப்பார்கள். இந்த மாதிரி கட்டுவது சற்றுக் கடினம்.
அதுதான் உயரமானதும்கூட. நூற்று அறுபத்தைந்து அடி உயரம்.
ஐந்து நிலை, ஏழு நிலை, ஒன்பது நிலை என்ற கணக்கில் கோபுரங்கள்
விளங்கும். எல்லாம் அடுக்குகள்தாம்.
கோபுரத்துக்கு அடித்தளம் இருக்கும். அதற்குமேல் கல்லால் ஆன
அடிப்பாகம் இருக்கும். அதற்குமேல் செங்கல்களாலும் காரையாலும் கோபுரம் கட்டப்பட்டிருக்கும். கோபுரத்தில் உள்புறம் கொஞ்சம் கூடாக
விட்டிருப்பார்கள்.
தஞ்சாவூர்ப் பெரிய கோயிலில் ஸ்ரீவிமானம் இருநூற்றுப் பதினாறு அடி
உயரம். அதன் மெயின் வாயிலுக்கு மேலே ஒரு கோபுரம் இருக்கிறது.
இது அவ்வளவு உயரமானதல்ல. இதற்கும் ஒரு பெயர் கொடுத்திருந்தார்.
கேரளாந்தகன் திருவாயில். மதுரையின் கோயிலின் வெளி மதிலுக்குக் கூட பெயர் இருந்தது - கபாலி கடிமதில். இன்னொரு சமயம் இவற்றைப் பற்றி விலாவாரியாக எழுதப் பார்க்கிறேன்.


காளையார்கோயில் ராஜகோபுர வேலையும் தொடங்கியது.
காளையப்ப ஆசாரி என்னும் ஸ்தபதியின் தலைமையில் பெரிய
அளவில் அது நடந்தது.
நல்ல கற்களைப் பல இடங்களிலிருந்தும் கொண்டுவந்தனர்.
அந்த வட்டாரத்தில் ஏற்கனவே பல பெரிய கோயில்கள் இருந்தன.
அவை தொடர்ச்சியான துருக்கர் படையெடுப்பால் அழிக்கப் பட்டு விட்டன.
அவற்றில் சிலவற்றைமட்டும் விஜயநகரத்தினர்/நாயக்க மன்னர்கள் கட்டினர்.
பலவற்றை மீண்டும் கட்டவில்லை.
இந்த வட்டாரத்தில் பார்த்தால் பல அணைக்கட்டுகள், கலிங்குகள்,
கண்மாய்க்கரைகள், கால்வாய்க்கரைகள், கோயில்கள், பொது மன்றங்கள், மேடைகள், மண்டபங்கள் போன்றவற்றைக் கட்டுவதற்கு இந்த இடிபாட்டுக் கற்களைப் பயன்படுத்தியிருப்பது தெரியும்.
புனருத்தாரணம் செய்யப்பட்ட கோயில்களிலும் சிதைவுகளிலிருந்து
எடுக்கப்பட்ட கற்களைக் காணலாம்.
மருதுபாண்டியர்களின் கட்டட/கோயில் நிர்மாணங்களில் காளையார்
கோயில் மட்டுமில்லை. அந்த வட்டாரத்திலிருந்த பல கோயில்களை அவர்கள் செப்பம் செய்து அவற்றில் சிறியதும் பெரியதுமாய்த் திருப்பணிகள் செய்தனர்.
குன்றக்குடி கோயில், திருப்புத்தூர் வைரவர் கோயில் போன்றவை
பெரிய திட்டங்கள்.
ஏற்கனவே இடிபட்டுக் கிடந்த கோயில்களின் கற்களையும் பெரும்
பெரும் தூண்களையும் பயன்படுத்திக்கொண்டனர். திருப்புத்தூருக்கு
(சிவகங்கை மாவட்டம்) அருகில் இருக்கும் சூரைக்குடி, முறையூர் போன்ற இடங்களில் இருந்த பெரும்பெரும் கோயில்கள் மாலிக் கா·பூர்
முதலியவர்களால் அழிக்கப்பட்டவை. அவற்றின் இடிபாடுகளிலிருந்து பெரும் தூண்களை எடுத்துச் சென்றனராம். அவற்றை ஏற்றிக்கொண்டு ஆங்காங்கு செல்ல விசேஷமான வண்டிகள் செய்துவைத்திருந்தனர். அந்த வண்டிகளில் பத்து எருதுகள் பூட்டியிருந்தன. அவற்றின் சக்கரங்கள் தேர்ச்சக்கரங்களைப் போல கனமாகவும் பெரிதாகவும் உறுதியாகவும் இஇருந்தன.

காளையார்கோயிலிலிருந்து 20 கீலோமீட்டர் தொலைவில் உள்ள
திருமலை என்னும் சிறு குன்றிலிருந்து அதற்குக் கற்கள்  கொண்டு வரப்பட்டன என்று சொல்வார்கள்.
ராஜகோபுரத்தைக் கட்டியதுபற்றி சில கதைகள் இஇருக்கின்றன.
அவற்றில் ஒன்று, இஇக்கோயிலுக்குக் கற்களும் செங்கல்லும் கொண்டு
வந்து சேர்த்த விதத்தைப் பற்றியது.

மானாமதுரையில் செங்கற்கள் தயாராகின.
செங்கல் செய்வதற்கு ஏற்ற மிகச்சிறந்த மண் மானாமதுரையில்
இருப்பதாகச் சொல்வார்கள். இஇப்போதும்கூட மானாமதுரை மட்பாண்டங்களுக்கும் செங்கற்களுக்கும் பேர் போன இஇடம். செங்கற்கள் மானாமதுரையிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்று சொல்வார்கள்.
செங்கற்களை எப்படி காளையார் கோயிலுக்குக் கொண்டு சென்றார்கள்?
செங்கற்களைக் கொண்டுசென்றதைப் பற்றியும் ஒரு விந்தையான
செய்தியைக் கூறுவார்கள்.
மானாமதுரையிலிருந்து காளையார்கோயில்வரைக்கும் மக்கள்
வரிசையாக நின்று செங்கல்களை ஒருவர் கை மாற்றி ஒருவர் வாங்கி
வாங்கிக் கொடுத்து அப்படியே கொண்டு சென்றார்களாம்.
இஇது முடியுமா அல்லது figment of imagination என்று சொல்வார்களே, அந்த மாதிரி எதுவுமா?
பார்ப்போமே?
காளையார் கோயிலிலிருந்து மானாமதுரை இஇருக்கும் தூரம்,
செவ்வையாக நேர்ப்பிடியாகப் பிடித்தால்(as the crow flies) 20 கீலோ
மீட்டருக்குள் இஇருக்கும். ஒரு கீலோமீட்டருக்கு ஆயிரம் பேர் நின்று
செங்கல்களைக் கைமாற்றினார்கள் என்று வைத்துக்கொண்டால்,
இஇருபதாயிரம் பேர்கள் அதில் பங்கெடுத்ததாக ஆகும்.
இஇது சாத்தியமானதொரு எண்ணிக்கைதான்.
பாஞ்சாலங்குறிச்சியை மேஜர் பானெர்மேன் கைப்பற்றிய பின்னர்
அதனை இஇடித்துப்போட்டான். கட்டபொம்முவையும் தூக்கிலிட்டான்.
அதன்பின்னர் அவருடைய தம்பி ஊமைத்துரை சிறையிலிருந்து தப்பிவிட்டார்.
தம்முடைய குடிமக்களைத் திரட்டி, இஇரண்டே வாரங்களில் பாஞ்சாலங்
குறிச்சிக் கோட்டையை மீண்டும் கட்டி முடித்தாராம். களிமண்,
கருப்பஞ்சாறு, இஇலவம்பஞ்சு, கடுக்காய்ச்சாறு போன்றவற்றைக் கலந்து
அதனைக் கட்டியதாகச் சொல்வார்கள். பழைய கோட்டையைவிட இஇது
இஇன்னும் உறுதியாக இஇருந்ததாம். அந்தக் கோட்டையைக் கட்டுவதில்
இஇருபதாயிரம் பேர் ஈடுபட்டதாகச் சொல்வார்கள்.

ஒரு தடவை கைமாற்றும்போது ஒரு கூடைச் செங்கல் என்று
வைத்துக்கொள்வோம். ஒரு கூடையில் நான்கு செங்கற்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு நிமிடத்துக்கு சராசரி வேகத்தில் கை பிடித்தாலும் பதினைந்து கூடைகளைக் கடத்தலாம். ஆனால் தொடர்ந்து அப்படியெல்லாம் கஷ்டத்தை நாம் கொடுக்கவேண்டாம். ஒரு நிமிடத்துக்குப் பத்துக் கூடை என்று வைத்துக்கொள்வோம். அதற்குமேல் மெதுவாகச் செய்ய விட்டிருக்க மாட்டார்கள்.
அந்தக் காலத்தில் working hours எத்தனை மணி நேரமாக
இஇருந்திருக்கக்கூடும்? வெய்யிலில் வேலை செய்வது கிடையாது. ஆகவே அதற்கும் கொஞ்சம் கழிவு கொடுக்கலாம். சாப்பிடுவது வெற்றிலை போடுவது போன்றவற்றிற்கும் சிறிது தள்ளுபடி கொடுக்கலாம்.
தோராயமாக ஒரு எட்டு மணி நேரம் வேலை செய்திருப்பார்கள்.
ஒரு நிமிடத்துக்கு 40 செங்கற்கள். ஒரு மணி நேரத்தில் 60 X 40 = 2400
செங்கற்கள். ஒரு நாளைக்கு 8 X 2400 = 19200 செங்கற்கள்.
வண்டி வண்டியாக ஏற்றிக்கொண்டு செல்வதைவிட இது இன்னும்
வேகமாகவும் சிக்கனமாகவும் இருந்திருக்குமா? ஏன் வண்டிகளில்
ஏற்றிச்செல்லவில்லை?
இந்த இடத்தில் ஏதேனும் Psychological reason இருந்திருக்கக்கூடுமா?
Mass Popular Participation. Citizens Involvement.
Human Chain என்று தற்காலத்திலும் லட்சக்கணக்கான ஆட்களைச்
சேர்த்து ஒரு கொள்கையை வலியுறுத்தவோ, கண்டனம் தெரிவிக்கவோ,
ஒரு Show of Force செய்வது நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது.
பழங்கால ஆட்கள் நாமெல்லாம் நினைப்பதுபோல் குறைச்சலான
ஆட்கள் இல்லை. இப்போது நாம் கையாளும் பல விஞ்ஞானபூர்வமான
மனோதத்துவமுறைகளை அவர்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அந்தக் காலத்துச் செங்கற்கள் சிறிதும் பெரிதுமாக மூன்று நான்கு
அளவுகளில் இருந்தன. அவற்றில் சற்றுப் பெரியது, தோராயமாக 30 செண்டிமீட்டர் X 20 செண்டிமீட்டர் இருக்கும். கனம் 6 செண்டிமீட்டர் இஇருக்கும்.
அப்படியானால் ஒரு நாளில் கடத்தப்பட்ட செங்கற்களின் எடை எவ்வளவு?

இஇதுவும் ஒருவகையான Logisticsதான்.

இந்த மாதிரி செய்ததாகக் கூறுகிறார்களே. அது சாத்தியம்தானா?
அதை நாமே கணக்கிட்டு Rationalise செய்து பார்க்கவேண்டும்.
ரேஷனலைஸ் - நேர்ச்சொல் மனதுக்குச் சட்டென்று வரவில்லை. அதற்காக யோசனை செய்துகொண்டிருந்தேனேயாகில் வீடு விட்டுப் போயிரும்.
சிந்தனையின் வேகத்தில் கருத்துக்களும், கருத்துக்களின் வேகத்தில்
வாக்கியங்களும், வாக்கியங்களின் வேகத்தில் கீபோர்டைத் தட்டுவதும்
நடக்கவேண்டும். எங்கேனும் எதற்கேனும் வெட்டுப்பட்டாலோ, தயக்க
மேற்பட்டாலோ போக்கு அறுந்துவிடும். அப்புறம் கட்டுரையாவது $%#@யாவது.
படத்துக்குப் படம் கல்லூரி மாணவனாக வந்து கருணாஸ் சொல்வதுபோல "டப்பாஸே.... டப்பாஸே"தான்.

இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி கட்டுரைகள் எழுதுவதே
ரொம்ப ரொம்பப் பெரிய விஷயம்தான். இதுவும் சிறந்த தமிழ்த் தொண்டுதான்.
காளையார்கோயிலுக்கு அனுப்பப்பட்ட ஒவ்வொரு பத்து
செங்கற்களுக்கு ஒரு செங்கல் வீதம் மானாமதுரையில் போட்டார்களாம்.
அப்படிப் போடப்பட்ட செங்கற்களை வைத்துத்தான் மானாமதுரைக்
கோயிலின் ராஜகோபுரத்தை மருது சேர்வைகள் கட்டினார்கள். அந்த
ஊருக்கும் ஒரு ராஜகோபுரம் இருக்கட்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு
இருந்தது.

இரண்டாம் பகுதி.......


                 $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$