Monday, 31 December 2012

THIRUKKOLILI THIRUPADHIGAM

    திருக்கோளிலி திருப்பதிகம் கோள்களால், ஜாதகத்தில் ஏற்படும்
கோளாறுகளைப் போக்குவதற்காகப் படிக்கப்படவேண்டிய பதிகம் என்பது ஐதீகம்.
    ஆனால் அந்தப் பதிகத்தைப் பார்த்தால் ஜாதகக் கோளாறுகளுக்காக மட்டுமே படிக்கவேண்டியதாக இருப்பதுபோல் தோன்றவில்லை.
    அந்த பெயரே 'கோளிலி' என்று இருக்கிறது - 'கோள் இலி'.
    கோள் என்பது கேடு, தீயது, இடையூறு, இடர் முதலியவற்றையும்
குறிக்கும். கோள் என்றால் கிரகம் மட்டுமில்லையே.
    இப்போது அந்தப் பதிகத்தைப் பார்ப்போம்.
    பின்னர் அதன் பொருளைச் சற்று உற்றுக் கவனிப்போம்.
    ஆனால் ஒன்று......
    இந்தப் பதிகம் வேண்டுகோள் திருப்பதிகங்கள் என்னும் விசேஷப்
பிரிவுக்குள் இடம் பெறுகிறது.
    வல்லபமானது; ஆற்றலுடையது; சக்தி வாய்ந்தது; பலன் கொடுக்க வல்லது.

திருக்கோளிலி திருப்பதிகம்
பழந்தக்க ராகம்
1-ஆம் திருமுறை
திருஞானசம்பந்தர்
திருச்சிற்றம்பலம்

நாளாயபோகாமே நஞ்சணியும் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளைகிளைக்கும் கேடுபடா திறம் அருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே  

ஆடரவத் தழகாமை அணிகேழல் கொம்பார்த்த
தோடரவத் தொரு காதன் துணை மலர் நற்சேவடிக்கே
பாடரவத் திசை பயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்
கோடரவம் தீர்க்கும் அவன் கோளிலியெம் பெருமானே

நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்
டொன்றிவழி பாடுசெயல் உற்றவன் தன் ஓங்குயிர்மேல்
கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான்
கொன்றை மலர் பொன் திகழும் கோளிலியெம் பெருமானே

வந்தமணலால் இலிங்கம் மண்ணியின் கட்பாலாட்டும்
சிந்தை செய்வோன் தன்கருமந் தேர்ந்து சிதைப்பான் வருமத்
தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளி
கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே

வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலும் நற்பூசனையால்
நஞ்சமுது செய்தருளும் நம்பி எனவே நினையும்
பஞ்சவரில் பார்த்தனுக்கு பாசுபதம் ஈந்துகந்தான்
கொஞ்சு கிளி மஞ்சுணவுங் கோளிலியெம் பெருமானே

தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை
ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும்
நாவியல்சீர் நமிநந்தி அடிகளுக்கு நல்கும் அவன்
கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே

கல்நவிலு மால்வரையான் கார்திகழு மாமிடற்றான்
சொல்நவிலும் மாமறையான் தோத்திரம்செய் வாயிலுளான்
மின்நவிலும் செஞ்சடையான் வெண்பொடியான் அங்கையினில்
கொன்னவிலும் சூலத்தான் கோளிலியெம் பெருமானே

அந்தரத்தில் தேரூரும் அரக்கன் மலை அன்றெடுப்பச்
சுந்தரத்தன் திருவிரலால் ஊன்ற அவன் உடல் நெரிந்து
மந்திரத்த மறை பாட வாளவனுக் கீந்தானும்
கொந்தரத்த மதிசென்னிக் கோளிலியெம் பெருமானே

நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத்
தாணு எனையாளுடையான் தன்னடியார்க் கன்புடைமை
பாணன் இசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்
கோணல் இளம் பிறை சென்னிக் கோளிலியெம் பெருமானே

தடுக்கமரும் சமணரோடு தர்க்க சாத்திரத்தவர் சொல்
இடுக்கண் வரும் மொழி கேளாதீசனையே ஏத்துமின்கள்
நடுக்கமிலா அமருலகந் நண்ணலுமாம் அண்ணல் கழல்
கொடுக்ககிலா வரம் கொடுக்கும் கோளிலியெம் பெருமானே

நம்பனை நல் அடியார்கள் நாமுடைமா டென்றிருக்கும்
கொம்பனையாள் பாகனெழிற் கோளியெம் பெருமானை
வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்தமிழ்கொண்
டின்பமர வல்லார்க ளெய்துவர்கள் ஈசனையே

திருச்சிற்றம்பலம்


    $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Monday, 24 December 2012

PERIYAR - A THEIST'S PERSPECTIVE


 PERIYAR  - A  THEIST'S PERSPECTIVE

பெரியார் ஓர் ஆத்திகனின் பார்வை


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Tuesday, 11 December 2012

SRI DEVI MAHATHMYAM

                  SRI DEVI MAHATHMYAM
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Saturday, 10 November 2012

FESTIVAL FOR THIRU
திருவுக்கு உரிய திருநாள்


சாக்தஸ்ரீ டாக்டர் எஸ்.ஜெயபாரதி

1991-ஆம் ஆண்டு மயில் தீபாவளி இதழில் தீபாவளியைப் பற்றி எழுதச்
சொல்லியிருந்தார்கள். அப்போது எழுதிய கட்டுரையில் தீபாவளிக்கும் சமண சமயத்துக்கும் இடையே இருந்த தொடர்பைப் பற்றி எழுதி யிருந்தேன்.

நரகாசுரனைச் சத்தியபாமா வதம் புரிந்ததை தீபாவளியாகக் கொண்டாடுவதாகத் தமிழர்கள் நம்புகிறார்கள். இதற்கு¡¢ய கதை 'காளிகா புராணம் என்னும்  உபபுராணத்தில் உபகதையாகக் காணப்படுகிறது.
கிருஷ்ணன் சத்தியபாமா சம்பந்தப்பட்ட விழாவாகத் தீபாவளி முழுக்க முழுக்க இருந்ததால் இது வைணவ விழாவாகக் கருதப்பட்டிருக்கும். ராமநவமி, கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி போன்ற விஷ்ணுவுக்குரிய திருநாட்களைப் போன்றுதான் தீபாவளியும் ஒரு வைஷ்ணவ அசுர சம்ஹாரக் கொண்டாட்டத்  திருநாளாகக் கருதப் பட்டிருக்கும். விஷ்ணு சம்பந்தப்பட்ட மற்ற திருநாட்களைக் கொண்டாட அறவே விரும்பாத தீவிர சைவர்கள் தீபாவளியையும் ஒதுக்கி
யிருப்பார்கள் அல்லவா? ஆனால் சைவர்களும் தீபாவளியைக்
கொண்டாடுகிறார்கள்.
ஆகவே நரகாசுரன் கதை ஒரு சிறுபான்மையினரால் சொல்லப்பட்டுவந்த கட்டுக்கதை

நவராத்திரியைத் தவிர்த்து இந்தியர்கள் அனைவராலுமே மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருநாள் தீபாவளிதான். வடநாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையைத் தென்னகத்தில் கொண்டாடுவதில்லை. தமிழகத்தின் பொங்கல் மஹாராஷ்டிராவில் கொண்டாடப்படுவதில்லை. கேரளத்தின் ஓணம் மற்ற இடங்களில் கிடையாது. ஆனால் தீபாவளி எல்லா பிரதேசங்களிலும் எல்லா இன ஹிந்துக்களாலும் கொண்டாடப் படுகிறது. சமண மதத்தைச் சேர்ந்தவர்களும் கொண்டாடுவார்கள். ஆனால் அதற்கு உரிய காரணம்தான் வேறு.
    ஒவ்வொர் இடத்தில் ஒவ்வொரு காரணத்தைக் கூறிக்கொள்கிறார்கள்.

    மகாலட்சுமி பாற்கடலில் தோன்றியதை நினைவுறும் வண்ணம் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் வசிப்பவர்கள் கொண்டாடுகிறார்கள்.
    அதாவது மஹாலட்சுமியின் பிறந்த நாளாகக் கொண்டாடுகிறார்கள்.
    இன்னும் சில இடங்களில் ஸ்ரீராமர் காட்டிலிருந்து திரும்பி வந்த நாளாகக் கொண்டாடுகிறார்கள்.

    ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒவ்வோர் இடத்தில் மஹாலட்சுமி
அவதரிப்பாள்.
    அடாடா, மன்வந்தரம் என்றால் என்ன என்று சொல்லாமல் விட்டு
விடலாமா, என்ன?
    நாம் இருக்கும் கால கட்டத்தைக் கலியுகம் என்று அழைப்பார்கள். கலியுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகளைக் கொண்டது. இதற்கு முன் மூன்று வேறு யுகங்கள் இருந்தன. கிருதம், திருதம், துவாபரம் என்ற மூன்று யுகங்கள் . இவை நான்கினையும் சேர்த்துச் சதுர்யுகம் என்று கூறுவார்கள்.
    மொத்தம் 43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள் ஒரு சதுர்யுகத்தில் இருக்கும். இந்தச் சதுர்யுகங்கள் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்துத் தோன்றிக் கொண்டேயிருக்கும்.

    இவ்வாறு 72 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்தரம். 31 கோடி
10 லட்சத்து 40 ஆயிரம் ஆண்டுகள் இருக்கும்.

    இவ்வாறு 14 மன்வந்திரங்கள் தோன்றி மறைந்தால் அது ஒரு கல்ப
காலமாகும். மனித ஆண்டுகள் 4354560000. இது பிரம்மாவுக்கு ஒரு பகல். இதன் பின் ஒரு கல்ப காலத்துக்கு - இன்னொரு 4354560000 ஆண்டுகளுக்கு ஒரு மகா பிரளய காலம் நிலவும். இது பிரம்மாவின் இரவு. இவை இரண்டும் சேர்ந்தால் பிரம்மாவுக்கு ஒரு நாள்.
    அதாவது 8709120000 மனித ஆண்டுகள்.
    இவ்வாறு நூறாண்டுகள் - அதாவது 360000 நாட்கள் கொண்டதே
பிரம்மாவின் ஆயுள். (கால்குலேட்டர் வைத்திருக்கிறீர்களா? அப்படி யானால் நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்)
    3135283200000000 மனித ஆண்டுகள்.

    நாம் தற்சமயம் வாழ்ந்து கொண்டிருக்கும் மன்வந்தரத்தை வைவஸ்வத மன்வந்திரம் என்றழைப்பார்கள். விவஸ்வான் என்னும் பெயர் கொண்ட
சூரியதேவனின் மகனாகிய வைவஸ்வதன் என்னும் மனுவின் வழித்
தோன்றல்கள்தான் இந்த மன்வந்தரத்தில் மனித இனமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களாகிய நாம். ஆம், சூரியனிலிருந்து தோன்றியவர்கள்தாம்  நாம். அப்படித்தானே விஞ்ஞான ஆராய்ச்சியும் கூடக் கூறுகிறது?
    சூரியனின் பன்னிரண்டு அம்சத்தினர் இருக்கின்றனர். துவாதச ஆதித்யர் என்று குறிப்பிடப்படுவார்கள்.
    அதில் ஒருவர்தான் விவஸ்வான்.


    இதற்கு முன்னுள்ள மன்வந்தரங்களில் தாமரை, வில்வம், பூமி போன்ற இடங்களில் மகாலட்சுமி தோன்றினாள். இந்த மன்வந்தரத்தில் - வைவஸ்வத மன்வந்தரத்தில் பாற்கடலில் தோன்றினாள்.

    தூர்வாசர் என்னும் கோபக்கார முனிவர் இருந்தார். அவர் பெருந்தவம் செய்து பெற்ற ஒரு மாலையை தேவர்களின் அதிபதியாகிய தேவேந்திரனிடம் கொடுக்க வந்தார். அப்போது தேவேந்திரன் தன்னுடைய தெய்வீக யானையின் மீது அமர்ந்து வந்து கொண்டிருந்தான். தூர்வாசர் நீட்டிய மாலையை, அவன்  யானையை விட்டு கீழே இறங்கி, ரிஷியின் காலில் விழுந்து வணங்கி, அதன் பின்னர் பௌவ்யமாக வாங்கியிருக்கவேண்டும். ஆனால் அவன் யானையின்
மீதிருந்த வாக்கில் தன்னுடைய வஜ்ராயுதத்தை நீட்டி, அதன் மூலம் மாலையை இழுத்து வாங்கிக்கொண்டான். அந்த மாலையை மிகவும் அலட்சியமாக யானையின் தலையின் மீது வைத்தான். அந்த யானை அந்த மாலையைத் தன் தலையிலிருந்து எடுத்துத் தரையில் வீசி அதை மிதித்து நாசப்படுத்தி விட்டது.
    இதனால் பெருங்கோபம் கொண்ட தூர்வாசர் தேவேந்திரனுக்குச் செருக்கைக் கொடுத்த செல்வங்கள் அழியுமாறும் அவனிடமிருந்து ஸ்ரீலட்சுமி நீங்குமாறும் சாபமிட்டார். தூர்வாசருடைய சாபத்தினால் தேவேந்திரனிடமிருந்து லட்சுமி நீங்கினாள்.
    அதனால் அவனுடைய செல்வமும் மற்றவர்களின் செல்வமும் அறவே மறைந்தன.
    ஆகவே உலகெங்கும்  சிறப்புக் குன்றியது.
    மீண்டும் லட்சுமியைத் தோன்றச் செய்ய தேவர்கள் ஆலோசித்தனர்.
பாற்கடலில்தான் ஸ்ரீதேவி தோன்றுவாள் என்பதைக் கண்டறிந்த தேவர்கள் பாற்கடலைக் கடைந்தனர். தங்களுடன் அசுரர்களையும் சேர்த்துக்கொண்டனர்.
    மந்திர மலை என்பதனை மத்தாகவும் வாசுகி என்னும் மகா நாகத்தைக்
கயிறாகவும் வைத்துக் கடைந்தனர். அஷ்டநாகம் என்னும் குழுவைச்
சேர்ந்தது வாசுகி. அஷ்டகுல பர்வதம் என்னும் மலைக் குழுவைச் சேர்ந்தது மந்திரமலை.
    வாசுகியின் உடலின் தலைப்பாதியை அசுரர்கள் பிடித்துக்கொண்டனர்.
மறு பகுதியை தேவர்கள் பிடித்துக்கொண்டனர்.
    டக்-ஆ·ப்-வார் என்னும் இழுவைப்போட்டியில் அன்கோர் மேன் Anchor-Man என்னும் பலசாலியான ஆட்கள் கயிற்றின் இருமுனைகளிலும் இருப்பார்கள்.
    வாசுகி விஷயத்திலும் அப்படித்தான்.
    தலைப் பகுதியில் அசுரர்களுக்குத் துணையாக கார்த்தவீர்ய அர்ஜுனன் என்னும் அரசன் இருந்தான். அவனுக்கு ஆயிரம் கைகள். மஹாவிஷ்ணுவின் சக்கராயுதத்தின் அம்சமாகப் பிறந்தவன். பரசுராமரால் கொல்லப்பட்டவன்.  ராவணனை வென்ற இருவரில் ஒருவன்.

<picture K arjuna>

    வால் பகுதியின் நுனியில் வானர குலத்தின் அரசனாகிய வாலி இருந்தான். தேவேந்திரனின் மகன். ராமரால் கொல்லப்பட்டவன். ராவணனை வென்ற இருவரில் இன்னொருவன்.

<vali>


    கனத்தால் மலை கடலில் அமுங்கியது. ஆமை வடிவெடுத்து மஹா விஷ்ணு கீழிருந்து மலையை முதுகால்  தாங்கி நிலைநிறுத்தினார்.

<picture-kurmam>

    கடலிலிருந்து முதலில் தோன்றியது ஆலகால விஷம். அதனை சிவன்
விழுங்கித் தொண்டையில் அடக்கி அழகாகத் திருநீலகண்டனாக விளங்கினார்.

    அதன் பின்னர் ஜேஷ்டை என்னும் மூத்த தேவி தோன்றினாள். இவளுக்குப் பின்னால் ஸ்ரீதேவி எனப்படும் ஆதிலட்சுமி தோன்றினாள். அதன் பிறகு உச்சைசிரவஸ் என்னும் குதிரை, அமிர்தம், ஐராவதம் என்னும் தெய்வீக யானை, காமதேனு என்னும் பசு, கற்பக விருட்சம், சிந்தாமணி போன்றவை தன்வந்திரியுடன் தோன்றின.
<pictures-gajalakshmi >    ஆதிலட்சுமி விஷ்ணுவை அடைந்தாள். அவள் அஷ்டலட்சுமியாகவும்
காட்சிதந்து பலவகையான செல்வங்களை உலகிற்கு வழங்கினாள்.
    இதை முன்னிட்டு தீபத்தை ஏற்றி வைத்து லட்சுமியின் வருகையைக்
கொண்டாடினார்கள்.

    தீபாவளிக்கு முன்னால் உள்ள மூன்று நாட்களுக்குப் பாதாள
லோகத்திலிருந்து பூமிக்கு வருகை புரியும் அரக்கர்களும் தீய சக்திகளும்
மஹாபலி எனும் அசுர அரசனின் தலைமையில் பூமியில் ஆதிக்கம் செலுத்த முனைவார்கள். அப்போது லட்சுமியின் மூத்த சகோதரியாகிய
ஜேஷ்டாதேவியின் ஆதிக்கமும் தோன்றும். அவர்களை லட்சுமியின்
துணையோடு தீபங்களின் உதவியால் இருளகற்றி வாணங்கள், பட்டாசு, வெடிகள் முதலியவைகளைக் கொளுத்தி அந்த தீயசக்திகளை விரட்டி
அடிப்பார்கள். அலட்சுமியாகிய மூத்த தேவியின் ஆதிக்கமும் அகன்று விடும்.

    மஹாபலியை மீண்டும் பாதாள லோகத்திற்கு அனுப்பிய பின் மகிழ்ச்சியாக இருந்து கொண்டாடுவார்;கள். சூரியன் உதயமாவதற்கு முன்னர் பிறைச் சந்திரன் தோன்றும் வேளையில் பூமியில் உள்ள நீர்நிலைகளில் கங்காதேவி ஆவாஹனம் ஆவாள். அதே சமயத்தில் நல்லெண்ணெயில் மஹாலட்சுமியின் அம்சங்கள் தோன்றும். ஆகையால் அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்வார்கள்.

    ஒரிஸா போன்ற இடங்களில் உள்ளவர்கள் வீட்டிற்கு வெளியில் சேர்த்து வைத்திருக்கும் மாட்டுச் சாணக் குவியலை வணங்குவார்கள். வயலுக்கு எருவாகப் பயன்படுத்தப்படுத்தும் மாட்டுச் சாண எருக் குவியல், சேறு சகதி போன்றவற்றில் லட்சுமி வாசம் செய்வதாக அக்கால மக்கள் நம்பினார்கள். இக்கருத்து வேதகாலத்திலேயே இருந்தது - லட்சுமியின் மானஸ புத்திரராகிய கர்தமர் என்னும் பிரஜாபதி சகதியில்தான் லட்சுமியின் நிழலில் தோன்றியதாகக் காணப்படுகிறது.

'கர்தமேன ப்ரஜாபூரா மயி சம்பவ கர்தம' என்ற ஸ்ரீசூக்தத்தின் வாசகத்தால் இதை அறியலாம்.
    லட்சுமி உறையும் இடங்களில் தாமரையும் ஒன்று. லட்சுமிக்கேகூட 'கமலா', 'பத்மா' என்றெல்லாம் தாமரையைக் குறிக்கக் கூடிய பெயர்கள்
உண்டு. தாமரையும் சகதியில்தானே தோன்றுகின்றது?

    வண்டல், சேறு, சகதி, எருக்குவியல் போன்றவை விவசாயத்தின்
ஆதாரமான விஷயங்கள். 'சோழநாடு சோறுடைத்து' என்று ஒளவையார்
பாடியதற்கு அடிப்படையாக அமைந்ததே காவிரியின் நீர்வளமும் அது
கொண்டு வந்து சேர்க்கும் சகதியும்தானே?

    ஸ்ரீசூக்தம் என்பது ஸ்ரீதேவிக்கு¡¢ய சிறந்த மந்திரநூல். அதர்வ வேதத்திலும் ரிக் வேதத்திலும் காணப்படுகிறது. 15 ஸ்லோகங்களைக் கொண்டது. ஆற்றல் மிகப் படைத்தது. அதன் பெயரைச் சொல்லியே பெரும் பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கின்றனர். அவ்வளவு ஆற்றல் படைத்தது!

    தீபாவளியை விவசாயிகளைவிட வணிகர்களே மிகவும் செலவழித்து மிக மிக விமரிசையாகக் கொண்டாடினர். சமுதாயத்தில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கால்தான் தீபாவளிப் பண்டிகை இவ்வளவு பிரபலத்தை அடைந்துள்ளது.

    மூதேவியின் தாக்கத்தைப் போக்கி ஸ்ரீதேவியின் செல்வாக்கைப் பெறுவதற்காக திருவின் திருநாளாகிய தீபாவளியின்போது நல்லதைச்
சிந்தித்து நல்லதைச் செய்து திருவை வணங்கி வரவேற்போம்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Wednesday, 24 October 2012

SRI DEVI STHUTHI-#1
                    ஸ்ரீதேவீ ஸ்துதி-#1

    'துர்க்கா சப்தசதி' என்னும் 'தேவி மாஹாத்ம்யம் மந்திர சரித நூலில்
காணப்படும் தேவி துதியின் தமிழாக்கம்.
    மஹிஷாசுர வதைக்குப் பின்னர் தேவர்களும் ரிஷிகளும் தேவியைப் புகழ்ந்து துதிக்கிறார்கள்.
    இது துதி வடிவாக, தேவியை நேரடியாக வழுத்துவதுபோல்
அமைந்திருக்கிறது.
    பிரார்த்தனை வடிவிலும் இது இருக்கிறது.
    துர்கா சப்தஸ்லோகி என்னும் ஏழுமந்திர நூலில் வரும்

துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிம் அசேஷ ஜந்தோ:
ஸ்வஸ்த; ஸ்ம்ருதாம் மதிமதீவ சுபாம் ததாஸி
தாரித்ரிய து·க்க பயஹாரிணி கா தவதன்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த்ர சித்தா

என்னும் சுலோகமும் இதில் காணப்படுவதுதான். தேவீ மாஹாத்ம்யத்தில் நான்கு சந்தர்ப்பங்களில் தேவர்கள் தேவியைத் துதிப்பார்கள்.
    அவற்றில் இது ஒன்று:
        இதையே பிரார்த்தனையாகப் படித்து வழிபாடு செய்யலாம்.
    அம்பிகையின் முன்னால் இருந்து அவளிடம் நேரில் பேசி, வழுத்துவது,
பிரார்த்திப்பது போல் அமைந்த துதி.

$$$$$$$$$$$$$$$

    தேவி தன் சக்தியால் இந்த பிரபஞ்சம் முழுவதையும் வியாபித்து
விளங்குகிறாள். எல்லா தேவதேவியரின் சக்தியும் அவளுடைய வடிவிலேயே ஒன்று கூடுகின்றது. அவள் எல்லா தேவர்கள், மகரிஷிகளால் பூஜை செய்யப் படுகிறாள். அந்த அம்பிகையை நாங்கள் பக்தியுடன் வணங்குகிறோம்.
எல்லா நன்மைகளையும் அவள் நமக்கு வழங்கி அருளவேண்டும்.

    அவளுடைய பெருமையையும் சிறப்பையும் பலத்தையும் மகாவிஷ்ணுவாலும், பிரம்மாவாலும் சிவனாலும்கூட வர்ணிக்க முடியாது. அந்தச் சண்டிகா தேவி அசுபத்தினால் ஏற்படும் அச்சத்தைப் போக்கி எல்லா உலகங்களையும் பாதுகாத்துக் காப்பாற்றி ஆள்வதற்கு திருவுள்ளம் கொள்ளவேண்டும்.

    புண்ணியம் செய்தவர்களின் இருப்பிடங்களில் அவள் லட்சுமியாக
வசிக்கிறாள். பாவம் செய்தவர்களின் வீடுகளில் அவள் அலட்சுமியாக இருக்கிறாள். சுத்தமான அறிவுடையவர்களுடைய உள்ளத்தில் அவள் புத்தியாகவும் நல்லவர்களிடம் சிரத்தையாகவும் நல்லகுடியினரிடம் கூச்சமாகவும் அவள் விளங்குகிறாள். ஓ தேவீ! நீயே அவள். உன்னை நாங்கள் வணங்குகிறோம். நீ அகில உலகத்தையும் காப்பாற்றவேண்டும்.

    ஓ தேவீ! நினைப்பிலும் அடங்கமாட்டாத உன்னுடைய வடிவு; அசுரர்களை அழிக்கக்கூடிய அளவில் அடங்காத வீரியம்; தேவாசுரப் போரில் நிகழ்ந்த உன்னுடைய அற்புதச் செயல்கள்; இவற்றையெல்லாம் எப்படி வர்ணிப்பது?

    எல்லா புவனங்களுக்கும் காரணையாக விளங்குபவள் நீயே. சத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய மூவகைக் குணங்களின் வடிவியாக நீ இருந்தாலும்கூட அவற்றின் தாக்கங்கள் இல்லாதவள் நீ. விஷ்ணு, சிவன் முதலியோருக்கும்கூட நீ எட்டாதவளாக இருக்கிறாய். எல்லாருக்குமே நீதான் புகலிடம். இந்த அனைத்து புவனங்களும் உன்னுடைய ஓர் அம்சத்திலிருந்துதான் தோன்றியவை. நீயே முதல்வி; மாறுபாடில்லாதவள்; உயர்ந்தவள்; இவை அனைத்துமாக விளங்கும்
ப்ரக்ருதி.

    ஓ தேவீ! எல்லா யாகங்களிலும் தேவர்களை மகிழ்விப்பது 'ஸ்வாஹா'
என்னும் மந்திர உச்சாரணம். அந்த 'ஸ்வாஹா" வடிவினளாக நீ இருக்கிறாய்.
பிதுர்களுக்கு ஏற்படும் திருப்திக்கும் நீயே காரணையாக இருக்கிறாய்.
ஆகையால் உன்னை மக்கள் 'ஸ்வதா' என்ற மந்திரத்தால் உச்சரித்து
வழிபடுகிறார்கள்.

    ஓ தேவீ! நீயே பகவதி. முத்திக்கு வித்தாக விளங்கும் பரவித்தையும்
மகாவிரதமும் நீயே. பஞ்சேந்திரியங்களை அடக்கியவர்கள், தத்துவங்களின் சாரத்தை உணர்ந்து வசமாக்கிக்கொண்டவர்கள், முக்தியில் நாட்டமுள்ளவர்கள், மாசுக்கள் அறவே அற்றவர்கள்; இத்தன்மைகள் படைத்த முனிவர்களால் நீ உபாசிக்கப்படுகிறாய். அவர்களால் நாடப்படுகின்றாய்.

    ஓசை, ஒலியின் வடிவமாக இருப்பாள் நீ. பரிசுத்தமான ரிக், யஜுர் வேதங்களுக்கும், இனிமையான பதங்களுடன் பாடப்படும் அழகிய
சாமவேதத்திற்கும் நீயே இருப்பிடம். வேதத்ரயம் என்னும் மூன்று வேதங்களாகவும் இருப்பவள் நீ. புவனங்களை காத்து வளர்க்கும் உயிராக இருப்பவள் நீ. அனைத்து உலகங்களின் துன்பங்களைப் போக்குபவள் நீ.

    ஓ தேவீ! சாஸ்திரங்கள் அனைத்தின் சாரத்தையும் உணர்ந்துகொள்ளும்
புத்தியாக நீயே இருக்கிறாய்.  பிறவி என்பது கடப்பதற்கரிய கடல். பற்றற்ற நிலை என்பது அந்தக் கடலைக் கடக்க உதவும் படகு. அந்தப் படகாகிய துர்க்காதேவி நீ. விஷ்ணுவின் நெஞ்சத்தில் குடியிருக்கும் ஸ்ரீ என்னும் லட்சுமியும் நீயே. சந்திரனை தலையில் அணிந்திருக்கும் சிவனைப் பிரியாமல் உறையும் கௌரியும் நீயே.

    பரிசுத்தமான புன்முறுவலுடனும் பூரண சந்திரனைப் போன்றும் மாசு மறுவற்ற பொன் போலும் பிரகாசமாகக் காணப்படுவது உன் திருமுகம். அதனால் கவரப்படாமல் கோபாவேசத்தால் பார்வை மறைக்கப்பட்ட மஹிஷாசுரன் உன்னைத் தாக்குவதற்கு முற்பட்டது வியப்பிலும் வியப்பு!

    அவனால் கோபமூட்டப்பட்ட உன்னுடைய முகம் சிவந்த உதய சந்திரன்
போலும் கோபத்தால் நெரிக்கப்பட்ட உன்னுடைய புருவத்தால் கடுமையாகத் தோன்றியது உன் முகம். அத்தகைய உன்னுடைய முகத்தைக் கண்ட மாத்திரத்திலேயே மஹிஷாசுரன் தன்னுடைய உயிரைவிடாததும் விந்தையே.
கோபம்கொண்ட யமனைக் கண்ட யாரும் உயிரோடு இருக்கமுடியுமா?

    ஓ தேவீ! நீ அருள்புரியவேண்டும். உன்னை மீறக்கூடியவர்கள் யாருமே இல்லை. நீ கோபம்கொள்ளும்போது உலகங்களின் நன்மைக்காக அசுரர்களை உடனேயே அழிக்கிறாய். மஹிஷாசுரனுடைய மாபெரும் படை நிர்மூலமாகியதே அதற்கு சான்று.

    உயர்ந்த சிறப்பான நலன்களைத் தரும் நீ யாரிடமெல்லாம் அன்பாக
இருக்கிறாயோ அவர்களெல்லாம் சமுதாயத்தில் சிறப்புகள் அடைகின்றனர். செல்வத்துக்கும் புகழுக்கும் அவர்களே உரியவர்களாக இருக்கிறார்கள். தர்மத்தின் வழியில் நிற்கக்கூடிய அவர்களின் சுற்றமும் கொடிவழியும் குறைவடைவதில்லை.  செல்வத்துடன் மனைவி மக்கள் ஏவலாட்கள் நிறைந்து விளங்க செல்வந்தர்களாக வாழ்வார்கள்.

    ஓ தேவீ! உன்னுடைய அருளால் நல்ல வாழ்வினை அடைந்தவன்
சமுதாயத்துக்கு ஆதரவாக இருந்துகொண்டு தர்மகாரியங்களைத் தடையின்றி செய்கின்றான். சொர்க்கலோகத்தை முடிவில் அடைகின்றான். ஆகையால் நீயே அனைத்து உலகங்களிலும் பயன்களைத் தருபவளாக விளங்குகிறாள்.

    கடப்பதற்கரிய கஷ்டத்தின் நடுவே நினைக்கப்பட்டால் நீ எல்லா உயிர்களின் அச்சத்தையும் போக்கடிக்கிறாய். இன்பமாக இருக்கும்போது நினைக்கபட்டால் நலமிகு மதியைத் தருகிறாய். வறுமையையும், துக்கத்தையும் பயத்தையும் அழிப்பவள் நீ. எல்லாருக்கும் எப்போதும் உதவுகிற உருகும் நெஞ்சம் படைத்தவர்கள் உன்னைத்தவிர வேறு யார்?

$$$$$$$$$$$$$$$$$$$

துர்கா சப்தஸ்லோகி என்னும் ஏழுமந்திர நூலில் வரும்

துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிம் அசேஷ ஜந்தோ:
ஸ்வஸ்த; ஸ்ம்ருதாம் மதிமதீவ சுபாம் ததாஸி
தாரித்ரிய து·க்க பயஹாரிணி கா தவதன்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த்ர சித்தா

என்னும் சுலோகம் இதுதான்.

$$$$$$$$$$$$$$$$$$$$

    ஓ தேவீ! கொடியோர்கள் கொல்லப்பட்டால் உலகம் இன்பத்தை அடைகிறது. "நரகத்தில் எப்போதும் விழுந்து உழன்று கிடக்கக்கூடிய அளவுக்குப் பாவங்களை இவர்கள் செய்தாலும் செய்யட்டும். அதனால் அவர்கள் என்னால் போரில் கொல்லப்பட்டு அதன்மூலம் சொர்க்க லோகத்துக்கு அவர்கள் செல்லட்டும்" என்று நிச்சயமாக எண்ணித்தான் 

நீ கெட்ட எதிரிகளைக் கொல்கிறாய் போலும். அது உன் கருணை.

    ஓ தேவீ! உன்னுடைய லேசான பார்வை மட்டுமே அசுரர்களைச் சாம்பலாக்கி விடும். இருப்பினும்கூட நீ கெட்ட எதிரிகளின்மீது ஆயுதப்பிரயோகம் செய்கிறாய். "அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும். என்னுடைய ஆயுதங்களால் புனிதமாகி நல்ல உலகங்களுக்குச் செல்லட்டும்", என்பதுதான் உன்னுடைய நற்கருணையுடன் கூடிய நோக்கம்.

    உன்னுடைய வாளிலிருந்து மின்னல்போன்ற ஒளிக் கதிர்கள் வீசுகின்றன. அவற்றின் பிரகாசத்தாலும் உன்னுடைய திரிசூலத்தின் முனையிலிருந்து பெருக்கெடுக்கும் ஒளிவெள்ளத்தாலும் அசுரர்களின் கண்கள் அவிந்துபோக வில்லையென்றால் அதற்குக் காரணம், குளிர்ந்த கிரணங்கள் கொண்ட பூரண சந்திரனைப் போன்ற உன்னுடைய அழகிய திருமுகத்தைக் காணப்பெறும் பேறு பெற்றதால்தான்.

    ஓ தேவீ! தீயவர்களின் போக்கை அடக்கிவைப்பதுதான் உன்னுடைய
இயல்பு. உன்னுடைய அழகோ உவமைக்கும் ஒப்புக்கும் அப்பாற்பட்டது.
பிறரால் சிந்தித்துப் பார்ப்பதற்கும் அரியது. தேவர்களின் வலிமையையும்
வீரத்தையும் அடக்கியவர்களை உன்னுடைய வீரியத்தால் அழித்துவிட்டாய்.
இதன்மூலம் எதிரிகளிடமும் நீ காட்டும் உன்னுடைய மறக்கருணை அறை கூவப்பட்டிருக்கிறது.

    உன்னுடைய பராக்கிரமத்துக்கு எதைத்தான் உவமிக்கமுடியும்!
உன்னுடைய வடிவழகு அடியார்களை வசீகரிப்பதாக இருந்தாலும் எதிரிகளின் உள்ளத்தில் பயத்தை மூட்டும் இந்த மாதிரி பேரழகு எங்கு உண்டு. சித்தத்தில் கருணையும் அருளும், போரில் கடுமையும் கண்டிப்பும் இந்த மூவுலகங்களிலும் உன்னிடம் மட்டுமே  காணப்படுவது.

    சத்துரு சம்மாரத்தால் அனைத்து உலகங்களும் உன்னால் காப்பாற்றப் பட்டன. போர்களத்தில் அந்த சத்துருக்கள் உன்னால் கொல்லப்பட்டு வானுலுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மதம் பிடித்த தேவ விரோதிகளிடமிருந்த எங்களுடைய அச்சம் தீர்ந்தது.
உனக்கு நமஸ்காரம்.

    ஓ தேவீ! சூலத்தால் எங்களைக் கா. ஓ அம்பிகே! வாளாலும் எங்களைக்
காவாய். மணி ஓசையாலும் காவாய். வில்லின் நாண் ஒலியாலும் காவாய்.

    ஓ சண்டிகாதேவீ! கிழக்கிலும் காப்பாற்று. மேற்கிலும் காப்பாற்று.
ஓ ஈஸ்வரீ! உன்னுடைய சூலத்தைச் சுழற்றி தெற்கிலும் வடக்கிலும் அவ்வாறே காப்பாற்று.

    இம்மூன்று உலகங்களிலும் விளங்கும் உன்னுடைய அழகிய
திருவுருவங்களாலும் வர்ணிப்புக்கும் அடங்காத கோர வடிவங்கள் என்னவெல்லாம் உண்டோ அவற்றாலும் இந்த மூவுலகங்களையும் எங்களையும் காப்பாற்றி அருள்வாய்.

    ஓ அம்பிகே! உன்னுடைய இளந்தளிர்கள் போன்ற கரங்களால்
ஏந்தப்பட்டிருக்கும் வாள், சூலம், கதை போன்ற ஆயுதங்கள் எவை எவையோ அவை அனைத்தாலும் எல்லாத் திக்குகளிலும் எங்களைக் காப்பாற்றி அருளவேண்டும்.

   
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday, 12 October 2012

PARAMAGURU

                            பரமகுரு

    குரு வழிபாட்டைப் பற்றி எழுதியிருந்தேன்.
    அது பற்றி எழுதிய பழைய மடலொன்று அகப்பட்டது.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>   
    அம்பிகை வழிபாட்டில் குருவைத் தேடுவோர்க்கு குருவாக அமபிகையே வருவதாகச் சொல்லப்படும்.
    தட்சிணாமுர்த்திரூபிணீ
    தீக்ஷ¢தா   
    அஞ்ஜானத்வாந்ததீபிகா
என்று அம்பிகை வழுத்தப்படுகிறாள்.

    திருமூலர் தம்முடைய குருவாக சிவனைத்தான் கொண்டிருந்தார். நந்தி என்று குறிப்பிடுவார்.
    தட்சிணாமுர்த்தியையும் குருவாகக் கொள்பவர்கள் இருக்கின்றனர்.
    தட்சிணாமுர்த்தியின் அம்சமாக ஆதிசங்கரரைக் கொள்வார்கள். ஆகவே அவரை ஜகத்குரு என்றும் அழைக்கிறார்கள்.
    சிவகுருவாகிய முருகனை  'மகாதேசிகன்' என்றும் 'சிவஞான உபதேசிகன்' என்றும் சொல்லப்படுவதும் உண்டு. முருகனையே 'மகாகுரு' என்றும் கொள்ளும் சம்பிரதாயமும் உண்டு.    
    கீதை உபதேசித்த கிருஷ்ணரை தேசிகன் என்று குறிப்பிடுவதும் உண்டு.
    அப்பேற்பட்ட பெரும் ஆளே மெச்சத்தகு பொருள் முருகன்.

'பத்துத் தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி
மத்தைப்போருதொரு    பட்டப்பகல் வட்டத்திகிரியில் இரவாக
பத்தர்க்கிரதத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித்தருள்வதும் ஒருநாளே!

    அருணகிரிநாதரின் கடைசி ஞானத்திரட்டு கந்தர் அனுபூதி. அனுபூதி என்னும்போது அது தமக்குள் தாமே ரமித்துப் பெற்ற அரிய மெய்ஞான அனுபவம்.
    அவர் லயித்து லயித்துப்படுகிறார்........   

"நாதா குமரா நம"வென்று அரனார்
"ஓதாய்" என ஓதியது எப்பொருள்தான்?
வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
பாதா! குறமின் பத சேகரனே!

கரவாகிய கல்வியுளார் கடைசென்
றிரவாவகை மெய்ப்பொருள் ஈகுவையோ
குரவா குமரா குலிசாயுத குஞ்
சரவா சிவயோக தயாபரனே

கருதா மறவா நெறி காண எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்?
வரதா முருகா மயில்வாகனனே
விரதா சுரசூர விபாடணனே!

அமரும்பதி கேள் அகமாம் என இப்
பிமரம் கெட மெய்ப்போருள் பேசியவா!
குமரன் கிரிராசகுமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே

குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைத் தனி வேல் ஐ நிகழ்த்திடலும்
செறுவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவற்று அறியாமையும் அற்றதுவே!

செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்ததுதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றதலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே?

அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா!
விரிதாரண விக்ரமவேள் இமையோர்
புரிதாரக நாக புரந்தரனே!

யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததானால்
பூமேல் மயல்போய் அற மெய்ப்புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே!

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
"சும்மா இரு! சொல்லற!" என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!

"முருகன், குமரன், குகன்" என்றுமொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்?
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குரு புங்கவ, எண்குண பஞ்சரனே!

"முருகன் தனிவேல் முனி நம் குரு"என்று
அருள்கொண்டறியார் அறியும் தரமோ!
உருவன்று அருவன்று உளதன்று இலதன்று
இருளன்று ஒளியன்று என நின்றதுவே!

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

    யார் பரம குரு?
    :-)


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday, 11 October 2012

THE HEN, THE FISH, THE TORTOISE

    கோழி, மீன், ஆமை

 அருள்பாலித்தல் குறித்து எடுத்துக்காட்டுக்களாகக் காட்டி யுள்ளவற்றை தீட்சைக்கும் உவமைப்படுத்துவார்கள்.
    தீட்சையில் மூவகையுண்டு.
    ஸ்பரிச தீட்சை, நேத்திர தீட்சை, மானச தீட்சை என்பன அவை.
    ஸ்பரிச தீட்சையில், குரு தன்னுடைய கையாலோ, காலாலோ,
அணைப்பினாலோ சீடனுக்கு தீட்சை கொடுப்பார்.
    இதற்குக் கோழியை உவமித்தல் உண்டு. கோழி தன்னுடைய முட்டையின் மீது தன் உடல் படும் வண்ணம் அமர்ந்திருந்து அடை காக்கும். அதுபோலவே சீடனின் மெய்தீண்டி, குரு தீட்சையைக் கொடுக்கிறார்.

    நேத்திர தீட்சை என்பதில், குரு தன்னுடைய பார்வையாலேயே சீடனுக்கு தீட்சை கொடுப்பார்.
    மீன், முட்டையிட்டபின்னர், அந்த முட்டைகளுக்கு மேலாக முன்னும்
பின்னும் நீந்தியவண்ணமிருக்கும். அதனுடைய தலை சற்றுக்கீழ் நோக்கி
இருக்கும் வண்ணம் அது நீந்தும். அதனுடைய பார்வையை அவ்வாறு
முட்டைகளின்மீது ஓட்டுமாம். கண்களாலேயே மீன், தன் முட்டைகளை
அடைகாப்பதாகக் கொள்வார்கள்.

    மூன்றாவது வகை தீட்சையில் எங்கோ இருக்கும் சீடனுக்கு மனதாலேயே மானசீகமாக குரு தீட்சை கொடுத்துவிடுவார். இதனை 'மானச தீட்சை' என்பார்கள்.
    இதற்கு ஆமையை உவமையாகக் கொள்வர்.
    ஆமை தன்னுடைய முட்டைகளை எங்கோயிருக்கும் கடற்கரையில்
இட்டுவிட்டு, அதுபாட்டுக்கு எங்கோ கண்காணாது பலநூறு மைல்களுக்கு
அப்பால் சென்றுவிடும். ஆனால் அதன் மனமெல்லாம் தன் முட்டைகளின் மீதே இருக்குமாம். அவ்வாறு ஆமை தன் மனதாலேயே தன்னுடைய முட்டைகளை அடைகாக்கும் என்று சொல்வார்கள்.

    அது சரி.
    'மானச சஞ்சரரே'- கேட்டிருக்கிறீர்களா?

    அதில் வருகிறதே 'பரமஹம்ஸமுக சந்த்ர சகோரே'....
    அதிலும் நீங்கள் சொன்ன கருத்து இன்னும் நுட்பமாக வரும்.
    அதுவும் ஒருவகை தீட்சைதான்.$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Tuesday, 7 August 2012

ETTU VATTAGAI, ETC


அஞ்சூரு, எட்டு வட்டகை, பதினெட்டுப்பட்டி

தமிழர்களிடையே ஊர், நாடு, பட்டி, கிராமம், புறம், மங்கலம் ,
பாடி, குடி, போன்ற சொற்கள் மக்கள் இருக்கும் குடியிருப்புகளைக் குறிக்கும் சொற்கள். அவற்றைக் குழுமங்களாகத் தொகுத்து வைத்திருப்பார்கள். வரி, உறவுமுறை, குடிமான ஒப்பந்தங்கள் போன்ற அடிப்படையில் அந்தக் குடியிருப்புகள் இணைக்கப்பட்டு தொகுக்கப் பட்டிருக்கும். 'இரட்டபாடி ஏழாயிரம்' என்ற பிரதேசம் ஒன்றை ராஜராஜசோழர் படையெடுத்துக் கைப்பற்றியதாக வரலாறு சொல்லும். 'ஏழாயிரம்' என்பது அத்தனை tax-units ஆக விளங்கியிருக்கும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட குடியினர் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கிராமங்களை இணைத்துக்கொண்டு வசித்துவருவார்கள். உதாரணமாக மேலூ¡ர் கள்ளர்கள், தங்களுக்கு உரியனவாக பதினெட்டு நாடுகளைச் சொல்வார்கள். நாட்டுக் கோட்டை நகரத்தார், ஒன்பது கோயில்கள் - தொண்ணூற்றாறு ஊர்களைச் சொல்வார்கள்.

பண்டைக்காலத்தில் பதினெண்விஷயத்தார், அஞ்சுவண்ணத்தார், 
ஆயிரத்தைந்நூற்றுவர் என்றெல்லாம் பல கூழுமங்களும் கூட்டத்தினரும் இருந்தனர்.
பிரான்மலையார்கள் தங்கள் ஊரும் இன்னும் நான்கு ஊர்களும் சேர்ந்து ஒரு கூட்டணியை அமைத்துள்ளார்கள். இதனை 'அஞ்சூரு பஞ்சாயத்து' என்று சொல்வார்கள். 'இந்தமாதிரி ஒரு அநியாயத்த இந்த அஞ்சூருலயும் பாக்கமுடியுமா?' என்று அங்கலாய்ப்பது ஒரு வழக்கம்.
பழங்காலத்தில் தேசம் என்பதை மண்டலங்களாகப் பிரித்திருந்தார்கள் மண்டலங்களை வளநாடுகளாகவும், நாடுகளாகவும் பிரித்தார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட ஊர்களைக் கொண்டது நாடு. 
இப்போது நாம் குறிப்பிடும் ஊர் போன்றத்தல்ல பழங்காலத்து ஊர். 
அதற்கு உட்கிடையாகப் பல சிற்றூர்களும் கிராமங்களும் பட்டிகளும் 
குரிச்சிகளும் சேரிகளும் இருக்கும். 
இதுபோலவே சிங்கம்புணரியும் ஒரு கூட்டணி வைத்திருக்கிறது. 
'அஞ்சுமங்கலம்' அல்லது 'அஞ்சலநாடு' என்று பெயர். ஒவ்வொரு மங்கலத்துக்கும் பத்துப் பதினைந்து ஊர்களும் கிராமங்களும் பட்டிகளும் உட்பட்டு இருக்கும். அவ்வாறு ஐந்து மங்கலங்கள் இருக்கின்றன . கண்ணமங்கலம், சீர்சேர்ந்தமங்கலம், சதுர்வேதமங்கலம், வேளமங்கலம், (இன்னும் ஒரு மங்கலம் மறந்துவிட்டது) என்று அவற்றுக்குப் பெயர். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பஞ்சாயத்து 
விளங்கும். இதனை 'நாட்டுப் பஞ்சாயத்து' என்பார்கள். ஐந்து மங்கலங்களுக்கும் சேர்த்து ஒரு மெயினான நாட்டுப் பஞ்சாயத்து விளங்கும். நாட்டுத் தலைமைத்துவத்தில்  'நாட்டு ஆண்மைக் காரர்கள்' விளங்குவார்கள். ஏதாவது பொது இடங்களில் அவர்கள்தாம் தலைப்பாகைக் கட்டிக்கொள்வார்கள். தனக்கே இல்லாத அதிகாரத்தை யாராவது எடுத்துக்கொண்டுவிட்டால், 'எவண்டா ஒனக்குத் தலப்பா கட்டியூட்டான்? பெரிசா வந்து விசாரணை பண்ண வந்துட்டான்!' என்று சொல்கிறார்கள் அல்லவா? 
ஒரு ஊருக்கு மட்டும் உள்ளதை 'ஊர்ப் பஞ்சாயத்து' என்பார்கள். 
உறவின்முறையினிடையே உள்ளதை 'உறவுமுறைப் பஞ்சாயத்து' என்பார்கள்.
இந்த மாதிரி உள்ளதுதான் அந்த 'பதினெட்டுப்பட்டி', 'எட்டுவட்டகை',
'பதினெட்டுப்பாளையம்' எல்லாம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday, 26 July 2012

SUN TZUசீனத்துப் போரியல் மேதை

ஸுன் ட்ஸூ


ஸுன் ட்ஸூவின் நூலின் முதல் அத்தியாயத்திலேயே ஒரு சம்பவம் கூறப்பட்டிருக்கும்.

ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர், சீனாவில் பல நாடுகள் இருந்தன. அவற்றின் மன்னர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டேயிருந்தனர். அந்த நாடுகளில் ஒன்று வூ என்னும் நாடு. அதன் அண்டை நாடாகிய ச்சூ அதை விட பெரியது. பெரும் படையைக் கொண்டது. வூ படையைவிட பன்மடங்கு பெரியது.  அந்த நாட்டிடமிருந்து தன் நாட்டைப் பாதுகாத்துக்கொள்ளத் தக்கதொரு நல்ல படையைப் பெருக்கிக்கொள்ள வூ மன்னன் விரும்பினான்.

அக்காலத்தின் போரியல் மேதையாக ஸுன் ட்ஸூ விளங்கினார். அவர் போர்க்கலை THE ART OF WAR என்னும் நூலை எழுதியுள்ளார். அந்த நூல் தற்காலத்தில் வாணிபம், நிர்வாகம், போரியல் போன்ற பல துறைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
வூ நாட்டு மன்னனை ஸுன் ட்ஸூ சென்று சந்தித்தார்.

"தளபதிக்குத் திறமையிருந்தால் எந்த மாதிரியான மனிதர்களுக்கும்
போர்ப்பயிற்சி கொடுத்துவிடமுடியும்",  என்று ஸுன் ட்ஸூ கூறினார். அந்த சித்தாந்தத்தை விளக்க ஆரம்பித்தார். "நான் உம்முடைய நூலைப் படித்துவிட்டேன். இந்தப் பெண்களுக்குக்கூட உம்முடைய முறைகளின்படி போர்ப்பயிற்சி கொடுக்கமுடியுமா, பாரும்" என்று மன்னன் உத்தரவிட்டான். தன்னுடைய அந்தப்புரத்து சிங்காரிகளுக்குப் போர்ப்பயிற்சி சொல்லிக் கொடுக்கச் சொல்லி சவால்விட்டான்.

அதனை ஏற்றுக்கொண்ட ஸுன் ட்ஸூ மன்னனிடம் சன்னத்துப் பெற்றார்.

படையின் தலைமைத்துவத்தையும் முழுப்பொறுப்பையும் பெற்றுக்கொள்ளும் சடங்கு - சன்னத்துப் பெறுதல். தளபதிக்கு மன்னன் தன் கையால் பரிவட்டம் கட்டி வெற்றிலை பாக்கு கொடுப்பான்.
சில மரபுகளில் தண்டம் ஒன்றை மன்னனிடமிருந்து பெறுவார்கள். 'தண்டு எடுத்தல்' என்ற வழக்கம் அது.

சீனர்களிடமும் இந்த சன்னத்துப் பெறும் மரபு இருந்தது.
மன்னனிடமிருந்து வாள் பெறுவார்கள். அந்த வாளைப் பெற்றபின்னர்
தளபதி இடும் உத்தரவை யாரும் மீறவே முடியாது. மன்னவனும் அதனை
மாற்றமுடியாது. 
ஸுன் ட்ஸூ மன்னனின் வாளைக் கேட்டு வாங்கிக்கொண்டார்.

பின்னர் அந்தப்புர சிங்காரிகள் வந்தனர்.

நூற்று எண்பது பெண்கள் கொண்ட அந்தப்புர அழகிகள் கூட்டம் ஒன்று வந்து சேர்ந்தது. அந்தக் கூட்டத்தை இரண்டு பகுதிகளாக ஸுன் ட்ஸூ பிரித்தார்.
அவர்களுக்குத் தலைமையாக மன்னனின் மிகவும் விருப்பமான மிக அழகிய மிக இளமையான வைப்பாட்டிகள்(favourite concubines) இருவரை நியமித்தார்.

பயிற்சி தொடங்கியது.
ஸுன் ட்ஸூ அவர்களை வலது பக்கமாகத் திரும்பச்சொன்னார்
அந்த வைப்பாட்டிகள் சிரித்து, கேலி செய்துகொண்டு விளையாடிக்
கொண்டு சரசமாடிக்கொண்டிருந்தனர். மற்ற சிங்காரிகளும் அவ்வாறு
விளையாடினர்.

ஸுன் ட்ஸூ அவர்களை அழைத்து ஒழுங்காகப் பயிற்சி செய்யச்சொன்னார்.
மீண்டும் வலது பக்கம் திருமச்சொன்னார்.
அவர்கள் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர்.
மற்றவர்களும் அதே மாதிரிதான்.

இரண்டாம் முறை ஸுன் ட்ஸூ அவர்களிடம் இன்னும் நயமாகவும் விரிவாகவும் சொன்னார். சில கவாத்துகளைத் தாமே செய்து காட்டினார்.
பலிக்கவில்லை. வைப்பாட்டிகளும் சிங்காரிகளும் மாறவில்லை.

மூன்றாம் முறை முதலிலிருந்து எல்லா கவாத்தையும் முறையாகச்
செய்து காட்டி, முடிவில் எச்சரிக்கையும் விடுத்தார்.
அப்போதும் அவர்கள் திருந்தவில்லை.

உடனே அங்கிருந்த வீரர்களை அழைத்து அந்த இரண்டு  வைப்பாட்டிகளையும் அத்தனை பேர் முன்னிலையிலும் தலையை வெட்டிவிடச்சொன்னார்.

மன்னன் முதலில் விளையாட்டாக நினைத்தான்.
மற்றவர்களும் அப்படியே.

ஆனல் ஸுன் ட்ஸூ வீரர்களிடம் தாம் இட்ட கட்டளையை நிறைவேற்றும் வண்ணம் ஆணையிட்டார்.

மன்னன் வெகுண்டெழுந்து அந்த ஆணையை மாற்றி உத்தரவிட்டான்.

ஸுன் த்ஸூ தம்மிடம் இருந்தார் வாளைத் தூக்கிக் காண்பித்து,
"மன்னவனே! இது உம்முடைய வாள். உம் அதிகாரம் நீதி, வீரம், உறுதி,
வன்மை முதலிய அனைத்திற்கும் இந்த வாள் நிலையாக உள்ளது. அதை நீர் என்னிடம் கொடுத்துவிட்டீர். அத்துடன் அனைத்து அதிகாரத்தையும் என்னிடம் கொடுத்துவிட்டீர்.
அதன்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். என் ஆணையில் யார் குறுக்கே
வந்தாலும் - நீரே ஆயினும் சரி - இந்த வாளுக்கு இரையாக்கிவிடுவேன்",
என்றார்.

வெலவெலத்துப் போனார்கள், அனைவரும்.

மன்னன் உட்பட பலர் முன்னிலையிலும் அந்த இரு வைப்பாட்டிகளையும் சிரச்சேதம் செய்தனர்.

புதிய தலைவிகளை ஸுன் ட்ஸூ நியமித்து, பயிற்சியைத் தொடர்ந்தார்.

சில மணி நேரம் சென்று மன்னனை அழைத்து, மேற்பார்க்கச் சொன்னார்.

தன்னுடைய மிக விருப்பமான, மிக அழகிய, மிக இளமையான இரண்டு வைப்பாடிகளை இழந்திருந்த மன்னன் சொன்னான்,
"இப்போது எனக்கு எதையும் மேற்பார்வையிட மூட் இல்லை."

ஸுன் ட்ஸூவின் முதல் மூன்று விதிகள்:

1. நாம் சொல்லவந்ததை நாம் சரியாகச் சொல்லியிருக்க மாட்டோம்.
ஆகவே நாம் சொல்லவந்ததை மீண்டும் விரிவாகச் சொல்ல வேண்டும்.

2. நாம் சொல்ல வந்த விஷயம் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கலாம். ஆகவே தை மறு பரிசீலனைசெய்து மீண்டும் சொல்லவேண்டும்.

3. சொல்லப்பட்டவர்கள் சற்று தெளிவில்லாதவர்களாக இருக்கலாம்
அவர்கள் பொருட்டு மீண்டும் சொல்லிக்கொடுக்கலாம்.

4. நான்காம் தடவை.......XXX 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday, 12 July 2012

UNEXPECTED CHALLENGEஎதிர்பாரா எதிர்ப்பு

கட்டபொம்முவின் மூதாதையரில் ஒருவர் வேட்டைக்குச் சென்றிருந்த 
இடத்தில் அவருடைய வேட்டை நாய்கள் ஒரு முயலைத் துரத்தினவாம். 
ஓரிடத்திற்கு வந்த பின்னர், அந்த சிறு முயல் திரும்பிப் பாய்ந்து வேட்டை 
நாய்களை எதிர்த்ததாம். இதைப் பார்த்த அந்த ஆதி கட்டபொம்மு அந்த 
இடத்தில் கோட்டை ஒன்றைக் கட்டினாராம். அப்படித்தான் பாஞ்சாலங்குரிச்சிக் கோட்டை ஏற்பட்டது என்பார்கள். 
இதே மாதிரியான கதை ஒன்று மலாயா வரலாற்றிலும் இருக்கிறது.
பரமேஸ்வரா என்பவர் சுமாத்ராவின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் அங்கிருந்து ஓடி வந்து சிங்கப்பூர் மன்னரிடம் அடைக்கலம் புகுந்தார். 
சிங்கப்பூர் மன்னரைக் கொன்றுவிட்டு தாமே மன்னராகினார். சிங்கப்பூர் மன்னரின் பங்காளியாகிய லங்க்காசோக்கா நாட்டு மன்னர் ஒரு கடற்படையைச் சித்தப்படுத்திக்கொண்டு சிங்கப்பூர் நோக்கி வந்தார். 
பரமேஸ்வரா சிங்கப்பூரை விட்டு ஓடினார். மூவார் என்னும் இடத்தில் தம்முடைய கூட்டத்தினர், படையினருடன் தங்கினார். 
ஆனால் அந்த இடம் பாதுகாப்பாக இல்லாததால் வேற்றிடம் தேடிப் போனார். 
ஓரிடத்தில் அவருடைய ஏழு வேட்டைநாய்கள் ஒரு ஸாங்காச்சில் என்னும் குறுமானை விரட்டின. ஒரு நெல்லி மரத்தின் அடியில் வந்ததும் அந்த குறுமான் 
திடீரென்று திரும்பி ஏழு வேட்டை நாய்களையும் எதிர்த்து விரட்டியது. 
அதைப் பார்த்த பரமேஸ்வரா அங்கேயே ஒரு கோட்டையைக் கட்டிக்கொண்டு தம் ராஜதானியை உருவாக்கிக் கொண்டார். நெல்லிமரத்தின் அடியில் நடந்த சம்பவத்தால் அந்த கோட்டைக்கும் நெல்லி மரத்தின் பெயராகிய 'மலாக்கா' என்னும் பெயரை இட்டார்.


ஓர் உண்மைச்சம்பவம்.......


பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஒரு டாக்டர் இருந்தார். 


பெயர் டேவிட் லிவிங்ஸ்டன். 
அவர் சமயத் தொண்டு ஆற்றவேண்டும் என்று எண்ணியதால் ஒரு 
மிஷனரியாக சங்கல்பம் மேற்கொண்டு, ஆப்·ரிக்காவின் காடுகளுக்குள் 
சென்றுவிட்டார். 
ஆ·ப்ரிக்கக் காடுகளின் மத்தியப் பகுதிக்குள் - நடுக்காட்டுக்குள் 
சென்று அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்றவேண்டும் என்பது அவரது 
நோக்கம். அத்துடன் நைல் நதி எங்கு உற்பத்தி ஆகிறது என்பதையும் 
கண்டறியவேண்டும் என்று எண்ணியிருந்தார். அவர் காட்டுக்குள் மறைந்தது மறைந்ததேதான்.


ரொம்பநாட்கள் ஆகிவிட்டன. 
அவர் என்ன ஆனார் என்பதே தெரியாமலிருந்தது. 
இங்கிலாந்தில் அவரைத் தேடிச் செல்ல யாரையாவது அனுப்பவேண்டும் 
என்று முடிவாயிற்று. 
ஹென்ரி ஸ்டான்லி என்பவர் ஒரு பத்திரிக்கையாளர். நியூயார்க் 
ஹெரால்ட் பத்திரிக்கையில் விசேஷ நிருபரக இருந்தார். 
லிவிங்ஸ்டோனைத் தேடுவதற்கு ஸ்டான்லியை நியூயார்க் ஹெரால்ட் 
பத்திரிக்கை அனுப்பியது.
அவர் தற்கால தான்ஸேனியா நாட்டுக்குச் சென்று அங்கிருந்து 
தங்கன்யீக்கா ஏரியை நோக்கிச் சென்றார். காட்டுக்குள்தான். 
ஏனெனில் அந்த வட்டாரத்தில்தான் லிவிங்ஸ்டன் கடைசியாகக் 
காணப்பட்டதாகத் தகவல். 
அங்கிருந்து அப்படியே காங்கோ காடுகளுக்குள் நுழைந்துவிட்டார்.
ஆங்காங்கிருந்த காட்டுவாசிகளிடம் விசாரித்துக்கொண்டே 
சென்றார்.
கடைசியில் ஒரு சிறிய குக்கிராமத்தில் ஒரு குடிசையில் லிவிங்ஸ்டன் 
இருப்பதாகத் தகவல் கிடைத்தது. 


அந்த குக்கிராமத்துக்குச் சென்றார்.


குடிசைக்கு அருகில் ஸ்டான்லி வந்ததும் லிவிங்ஸ்டன் வெளியில் 
வந்தார்.


அவரைப் பார்த்ததும் ஸ்டான்லி தன் வலக்கையை நீட்டி, "டாக்டர் 
லிவிலிங்ஸ்டன் என்று நினைக்கிறேன்?"(Dr. Livingstone, I presume?") 


அவருடைய கையைப் பிடித்தவாறு, "ஆம், ஆம்' நீங்கள் வந்தது 
குறித்து கடவுளுக்கு நன்றி"(Yes. Yes. Thank God you have come.")


மிகவும் நோயால் நலிவுற்றிருந்தார். சரியான ஆகாரமும் கிடையாது. 


போதாததற்கு ஒரு சிங்கம் அவரைத் தாக்கித் தோள்பட்டையைக் 
கௌவியதில் அவருடைய ஒரு கை செயலற்றுத் தொங்கிப்போயிருந்தது.


கொஞ்ச காலம் லிவிங்ஸ்டனுடன் ஸ்டான்லி இருந்தார். 


இருவரும் ஒரு நாள் ஓரிடத்தில் காற்று வாங்கியவாறு அமர்ந்திருந்தபோது இரண்டு மூன்று சிங்கங்கள் அங்கு வந்து விட்டன. அவை மிகவும் அருகில் வந்து இவர்களின்மீது பாயப்போகும்போது லிவிங்ஸ்டோன் தன் கையில் இருந்த வாக்கிங் ஸ்டிக்கை ஒரே கையால் ஓங்கிச் சுழற்றியவாறு பெரும் கூச்சலிட்டவாறு 
சிங்கங்களை நோக்கி ஓடினார். 
அந்த சிங்கங்கள் நிதானித்தன. 
பின்னர் எல்லாமே தலை தெரிக்க ஓடிவிட்டன. 


அவை எதிர்பார்த்திருக்க முடியாதல்லவா. தன்னுடைய இயற்கையான உணவுப்பொருள் தன்னையே விரட்டுகிறதே. 
அதான் ஓடிவிட்டன. 


அதேபோல்தான். 


சிறுமுயல் தங்களை எதிர்த்து நிற்பதை எதிர்பாராத வேட்டைநாய்கள் 
ஓடியிருக்கின்றன. 
சாங்காஞ்ச்சில் கதையும் அதே மாதிரிதான்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Tuesday, 15 May 2012

PON VANDU

பொன்வண்டு

பொன்வண்டு இருக்கிறதே....
 அதைப் பார்த்திருப்பீர்கள்.
 சிறு வயதில் அதன் காலில் நூலைக்கட்டி விளையாடியிருப்பீர்கள். கருநீலப்பின்னணியில் அதன் பல வண்ண ஜாலங்கள் அதன் மேல் படும் ஒளியில் மாறி மாறி மினுக்கிடுவதைப் பார்த்திருப்பீர்கள். அதனை ஒரு டப்பியில் போட்டு மூடிவைத்து அழகு பார்த்திருப்பீர்கள். அதன் உணவுக்காக சில இலைகளையும் கிள்ளிப் போட்டிருப்பீர்கள்.
.
 அந்தப் பொன் வண்டு இருக்கிறதே....
 அதனை விஞ்ஞான அடிப்படையில் பார்த்தால் அது நியாயமாகப் பறக்கமுடியாது. குட்டை கட்டையான சிறகுகள். சிறகுக்கே சம்பந்தமில்லாத குண்டான கனமான உடல். போதாததற்கு அந்தச் சின்னஞ்சிறு சிறகுகளின்மீது கவசத்தைப் போன்ற மூடிகள்.
 ஒரு T-67 போர் டாங்க்(battle tank) சிறிய மெல்லிய இறக்கைகளைக்கொண்டு பறக்குமா?
 அதுபோலத்தான்.

 ஆனால் பாருங்கள்....
 அந்தப் பொன்வண்டுக்கு இந்த ஏரோ டைனமிக்ஸ் விவகாரங்களெல்லாம் புரியாது.
 திருக்குறளில் வருகிறதே அந்த 'அமரகத்தே ஆற்றறுக்கும் கல்லாமா'..... அதைப்போலவேதான்...
 படித்ததில்லை.
 ஏதும் விஷேச டிரேய்னிங்க் எடுத்ததில்லை.
 ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரிடம் அது கேட்டுத் தெரிந்துகொண்டதுமில்லை.
 'விஞ்ஞானபூர்வமாகவோ அதிகாரபூர்வமாகவோ அது பறக்கமுடியாது; ஆகவே பறக்கக்கூடாது' என்று  அறியாது. பூரணமாக நம்பப்படவேண்டிய official final versionஐ யாரிடமும் அது கேட்டுத் தெரிந்து
கொள்ளவுமில்லை. அதையெல்லாம் அவசியமாக அது கருதியதும் கிடையாது.

 முட்டாள் பொன்வண்டு.
 இதெல்லாம் தெரியாது.

 ஆகவேதான் அது பறக்கிறது.
 அது பறப்பதைக் கேளுங்கள்......
  அற்புதமான இசை


http://www.youtube.com/watch?v=6QV1RGMLUKE

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday, 11 May 2012

SHAH ABBAS! SHAH ABBAS!! SHAH ABBAS!!!

 சபாஷ்.... ஷா அப்பாஸ்!!!
 சபாஷ் என்னும் சொல் பாரசீக மூலத்தைக்கொண்டது.
 அதன் கதை.......
 பாரசீகம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே முக்கியமான அரசாக விளங்கியது.
ஈராயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அது ஒரு பேரரசாக வளர்ந்தது. பாரதத்தின் வடமேற்குப் பகுதிகள், ஆ·ப்கானிஸ்தான், மத்திய ஆசியப்ப்குதிகள், பாரசீகம், ஈராக், சீரியா, ஜார்டான், பாலஸ்தீனம், எகிப்து, துருக்கி ஆகிய தற்காலப்பிரதேசங்கள் அடங்கிய மாபெரும் சாம்ராஜ்யமாக பரந்துவிரிந்து கிடந்தது.  அதன் பேரரசன் ஸெர்ஸே, கிரேக்கநாட்டின்மீது படையெடுத்து, கிட்டத் தட்ட வென்றவன். ஐரோப்பாவின் பகுதிகளைப் பழங் காலத்தில் வென்ற மிகச்சில ஆசியர்களில் பெர்சியர்களும் அடங்குவர்.
 ஆனல் கிபி 600களில் அந்தப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. அதன்பின்னர் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்குப் பாரசீகம் வலுவிழந்து, 'ஏதோ இருக்கிறது' என்று சொல்லும் அளவிற்கே இருந்தது.
 பதினைந்தாம் நூற்றாண்டில் இஸ்மாயில் என்னும் மன்னன் பாரசீகத்தை ஒருங்குபடுத்த நினைத்தான். ஆனால் அவனுக்குப் பின்னர் வந்த அவனுடைய மக்கள் சரியாக இல்லாததால் துருக்கர் போன்றவர்கள் மீண்டும் நாட்டைத் துண்டாடினர்.
 இஸ்மாயிலினுடைய பேரனாகிய அப்பாஸ் மிஸ்ரா என்பவர் மட்டும் ஒளித்துவைத்து வளர்க்கப் பட்டிருந்தார். அடிக்கடி அவரைக் கொல்ல முயற்சிகள் நடந்தவண்ணமிருந்தன. ஆனால் தப்பிவிட்டார். அவருடைய தாயையும் தந்தையையும் கொலை செய்து விட்டனர்.
 அவருக்கு பதினாறே வயதாகும்போது அவன் புரட்சி செய்தார். எப்படியோ பல போராட்டங்களுக்குப் பின்னர் அப்பாஸ் மிஸ்ரா, பாரசீகத்தின் முதல் பேரரசராக ஷா அப்பாஸ் - Shah Abbas - என்னும் பெயரில் முடிசூட்டிக் கொண்டார்.
 ஆட்சிக்கு வந்தது முதலில் அங்கு வலுவாக இருந்த அனைவரையும் ஒழித்துக்கட்டினார்.  இது சில ஆண்டுகளுக்கு நடந்தது. இருப்பினும் தாம் ஆட்சியில் நீடிப்பது குறித்து ஷா அப்பாஸ¤க்கு ஒரு பயம் இருந்துகொண்டேயிருந்தது. ஆகவே சோதிடர்களைக் கொண்டு கணிக்கச்செய்தார். பிறந்தது முதல் பல அபாயங்களைச் சந்தித்தே பழக்கப்பட்டிருந்த அப்பாஸ¤க்கு எப்போதுமே ஒரு சந்தேகம் கலந்த பயம் இருந்தே வந்தது. சனி செவ்வாய் ஆகியவற்றின் சஞ்சார நிலை சரியில்லை என்று சோதிடர்கள் கூறிவிட்டனர்.  எத்தனை ட்களுக்கு இதுமாதிரி என்று அறிந்து கொண்ட பின்னர், அப்பாஸ் பதவியைவிட்டு இறங்கினார். 'முர்த்தாத்' எனப்படும் அபசாரத்தைப் புரிந்த ஓர் ஆளை அரியணையின் அமர்த்திவைத்தார். பக்காவாகப் பாதுகாப்போடு இதைச் செய்தார். மூன்று நாட்கள் அப்படியே வைத்திருந்துவிட்டு, நான்காம் நாள் அந்த ஆளைக் கொன்றுவிட்டார். கிரக சஞ்சாரம் எல்லாம் சரியாகிவிட்டதறிந்து அரியணையில் மீண்டும் ஏறினார்.


 அவனுடைய ஆட்சியில் பாரசீகம் மீண்டும் பழைய உன்னத நிலையை அடைந்தது.
 பேரறிஞராக விளங்கிய அவர், பாரசீகத்தின் பல துறைகளிலும் பல சீர்திருத்தங்களைச் செய்தார். யாராலும் வெல்லபடவே முடியாத பெருவீரர் என்று பெயர் பெற்றார். மிக வலுவான அதி நவீனமான எண்ணிக்கையில் அதிகமுள்ள படை. அந்தப் படை வீரர்களால் மிகவும் அன்பாக உயிரினும் மேலாக நேசிக்கப்ப்பட்டார். அப்பாஸைப் பார்க்கும் போதும் படை செல்லும்போதும் 'ஷா அப்பாஸ்' என்று முழக்கமிட்டுக் கொண்டே செல்வார்கள். பழங்காலத்தில் 'ஹெயில் ஸீஸர்', பின்னால் 'ஹைல் ஹிட்லர்' என்று கோஷம் போட்டு வாழ்த்து வணக்கம், சல்யூட் போடுவதுபோல அவர்கள் 'ஷா அப்பாஸ்' என்று முழக்கமிட்டனர். Gladiator படத்தில் பார்த்திருப்பீர்களே, கூட்டங்கள் படைத் தலைவனின் பெயரைச் சொல்லி முழக்கமிடுமிடுமே, "மேக்ஸிமஸ்...மேக்ஸிமஸ்...மேக்ஸிமஸ்...."
 தனக்கென்று ஒரு மிகப் பெரிய மிக அழகிய தலைநகரை உருவாக்கினார். அக்காலத்தில் உலகின் மிக அழகிய நகரங்களில் அது தலைமை பெற்று விளங்கியது. அதில் ஒரு பெரிய திடல். அதற்கு மைதான்'  என்று பெயர். அங்கு பலவிதமான வீர விளையாட்டுகள் நடைபெறும். அந்த விளையாட்டுக்களின் போது பாராட்டுமுகமாக, 'ஷா அப்பாஸ்.....ஷா அப்பாஸ்....ஷா அப்பாஸ்' என்று முழக்க மிட்டனர்.  அது ஒரு பாராட்டுச்சொல்லாக மாறி மருவி வந்துவிட்டது. முகலாயர்களுக்குப் பாரசீகத்துடன்
நெருங்கிய தொடர்பு உண்டு. ஜஹாங்கீரின் மனைவி நூர்ஜஹான் பாரசீகப் பெண்தான். பாரசீகர்களின்
தாக்கம் நிறைய ஏற்பட்டது. அவர்களின் மூலம்
'ஷா அப்பாஸ்' இந்தியாவுக்கும் வந்துவிட்டது.
நாளடைவில் அது ஷாபாஸ், ஷாபாஷ், சபாஷ், சவாசு என்றெல்லாம் மருவிவிட்டது.
 மலாய்மொழியிலும் அது 'ஷாபாஸ்' என்றே வழங்குகிறது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sunday, 6 May 2012

TAXING TAXATIONவரி, வட்டி, கிஸ்தி........

அர்த்தசாஸ்திரம் என்றதும் கௌடில்யர் எனப்படும் சாணக்கியர் எழுதிய நூல்தான் நினைவுக்கு வரும்.

 உள்ளபடிக்கு அதுமட்டுமேதான் நினைவுக்கு வரும்.
 தர்ம,காமார்த்தமோக்ஷம் எனப்படுபவை நால்வகைப் படும். இவற்றைத் தமிழில் அறம் பொருள் இன்பம் வீடு என்று சொல்வோம்.
 இவற்றில் அர்த்தம் என்னும் துறையாகிய பொருள்நூல்தான் அர்த்தசாஸ்திரம்.
 கௌடில்யரின் அர்த்தம் நூல் தவிர இன்னும் பல நூல்கள் இருந்தன. சுக்கிரநீதி, நாரதீய நீதி,
பார்ஹஸ்பத்ய நீதி, பராசர நீதி என்று சில நூல்கள் இன்றும் இருக்கின்றன. அவற்றில் சில பகுதிகள் அழிந்தும் விட்டிருக்கின்றன.
 ஜாதீய அடிப்படையில் அமைந்த இந்த நூல்கள் பிராம்மணர்களுக்குச் சார்பாக ஓரவஞ்சகமாக எழுதப் பட்டிருந்தன. கடந்த பல நூற்றாண்டுகளாக இந்த நூல்களின் அடிப்படையில்தான் சமுதாயத்தின் சட்ட திட்டங்கள் நீதி முதலியவை அமைந்திருந்தன.
 விஜயநகரப் பேரரசின் விவசாயிகள் கொடுக்கவேண்டிய வரிகள் முதலியவற்றின் விகிதம் காணப்படுகிறது. இது பராசரநீதியின் அடிப்படையில் உள்ளது.
 ஒரு குட்டி என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பளவு. அதில் முப்பது மூட்டைகள் நெல் விளையும் என்பது ஒரு தோராயமான கணக்கு.
 அந்தக் காலத்தில் நிலங்கள் யாருக்காவது சொந்தமாகத்தான் இருந்தன. மொத்த அறுவடையில் நிலச் சொந்தக்காரருக்கு கால் பங்கு. அதில் விவசாயம் செய்தவருக்கு அரைப் பங்கு. அரசாங்கத்துக்கு ஆறில் ஒரு பங்கு. கோயில்களுக்கு முப்பதில் ஒன்று. பிராம்மணர்களுக்கு இருபதில் ஒன்று என்ற
விகிதத்தில் மகசூல் பிரிக்கப்பட்டது.
 அரசாங்கம் பல சமயங்களில் மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் கொண்டுவிடும். போட்டி அரசாங்கம் இருந்தால் ஆளுக்கு மூன்றில் ஒரு பங்கு என்று எடுத்துக்கொள்வார்கள்.
 பல சமயங்களில் பாதிக்குப் பாதியை அரசு எடுத்துக்கொள்ளும்.
 பல சமயங்கள் படையெடுப்புகள் அடுத்தடுத்து நடக்கும் அப்போதெல்லாம் இடங்கள் வெகுவேகமாகக் கைமாறும். அந்த மாதிரி சமயங்களில் வருகிறவன் போகிறவனெல்லாம் ஆளாளுக்குப் பறித்துக்கொண்டு செல்வார்கள்.
 இவை போக மகமை என்று ஒன்றும் இருந்தது.
 புலவர்கள், ஆசிரியர்கள், வண்ணார், நாவிதர், புரோகிதர், சோதிடர், வைத்தியர், மருத்துவச்சி, பாடிக்காவல், கொத்தவால், தலையாரி, கணக்கன் போன்றவர்களுக்கு நிலத்தின் அளவுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நிலத்துக்காரரும் கொடுப்பார்கள். இதனை 'அளந்துபோடுதல்' என்றும் சொல்வார்கள். குறிப்பிட்ட எண்ணிகையுள்ள படிகள் கொள்ளக்கூடிய ஓலைக் கொட்டான்கள், 'பொட்டி'கள் இருக்கும். அவைதான் கணக்கு.
 விஜயநகரப்பேரரசின் விவசாயவரி வருமானம் மட்டுமே ஓராண்டுக்கு எண்பத்தோரு கோடி வராகன் பெறுமானமாக இருந்தது. வராஹன் என்பது ஒரு பொன் நாணயம். கிட்டத்தட்ட இப்போதைய கணக்குக்கு அரைப் பவுன் எடை இருக்கும்.
 Militaristic அமைப்பாகப் பேரரசை ஆக்கும்போது அதைப் பல பகுதிகளாகப் பிரித்து பல நாயக்கர்கள், பாளையக்காரர்களின் மேற்பார்வையில் விட்டிருந்தார்கள்.
 அவர்கள் மட்டுமே அறுபது லட்சம் வராகன் செலுத்தி யிருக்கிறார்கள். அது பேரரசின் மகசூலில் பாதியின் மதிப்பு. அவர்கள் எடுத்துக்கொண்டது, அவர்களின் படைகளின் செலவு ஆகியவை போக மீதியைத்தான் அவர்கள் பேரரசின் கஜானாவுக்கு அனுப்பியுள்ளார்கள்.
 தலைக்கோட்டைப் போருக்குப்பின்னர் பேரரசின் பரப்பளவு குறைந்துவிட்டது. ராய்ச்சூர் தோவாப் போன்ற வளமிக்க பிரதேசங்கள் கைமாறிப்போயின.
 சதாசிவராயர் என்பவர் கிருஷ்ணதேவராயருடைய தம்பி மகன். அவருடைய காலத்தில் பேரரசின் வருமானம் பன்னிரண்டு கோடியாகக் குறைந்துவிட்டது.
 அறுவடையின் பங்கை அரசு நெல்லாகவோ காசாகவோ வாங்கிக்கொண்டது. நெல்லாயம், காசாயம் என்று சொல்வார்கள்.  புதுக்கோட்டைப் பகுதியில் இருந்த வரிவிதிப்பு:
கார்காலத்துக் குறுவை - மூன்றில் ஒரு பகுதி
எள், கேப்பை, கொள், பாசிப்பயிறு, மொச்சை முதலியவை - கால் பகுதி
வரகு, சாமை, கம்பு முதலியவை - ஆறில் ஒரு பங்கு
 இவை போக இன்னும் பலவிதமான வரிகள் நிலங்களின் பேரில் விதிக்கப்பட்டிருந்தன.
 விவசாயிகளுக்கு என்னத்தை எஞ்சியிருக்கப்போகிறது?&&&&&&&&&&&&&&&&&&&&&&

Wednesday, 2 May 2012

KRISHNADEVARAYA-#1


கிருஷ்ணதேவராயரின் உடற்பயிற்சி


 இந்திய வரலாற்றில் மாலிக் கா·பூர் என்னும் படைத்தளபதி மிக முக்கியமானவர். இந்திய வரலாறே அவரால் முக்கிய திருப்பங்களை அடைந்தது.
 அலாவுத்தீன் கில்ஜி என்பவன் டில்லி சுல்த்தானாக இருந்தபோது அவனுடைய நம்பிக்கைக்குப்
பாத்திரமான அடிமையாகவும் தலைமைத் தளபதியாகவும் விளங்கியவன்.
 வட இந்தியாவின் பல இடங்களை அவன் கைப்பறினான். பின்னர் தென்னிந்தியா முழுவதையும் பிடித்துக்கொண்டான்.
 அவனுக்குப் பின்னர் தென்னிந்தியாவில் இருந்த நான்கு பேரரசுகளும் அழிந்தன.
 ஆனால் 1336-இல் விஜயநகரம் என்னும் புதிய அரசு தோற்றுவிக்கப்பட்டது.
 அதே சமயம் அதற்கு வடக்கே பாமனி என்னும் பெயரில் ஒரு சுல்த்தானேட்டும் ஏற்பட்டது.
 விஜயநகரம் இக்காரணத்தால் வடக்கே பரவ முடியாமல் தெற்கே பரவியது.
 கிருஷ்ணா நதியிலிருந்து தெற்கேயுள்ள அனைத்துப் பிரதேசங்களும் விஜயநகரின் ஆட்சிக்குக்
கீழ் வந்தன.
 விஜய நகரப் பேரரசை ஆண்டவர்களில் மிகவும்  புகழ் வாய்ந்தவர் கிருஷ்ண தேவ ராயர்(1509 - 1529). அப்போது ஒரிஸ்ஸா, கலிங்கம் வரையில் அவர் கைப்பற்றிக்கொண்டார்.
 அவரே ஒரு பெரும்புலவர். இசைப் போரறிஞர். போரியல் வல்லுனர். சிறந்த நிர்வாகி. அவர் அரசவையில் அஷ்ட திக் கஜங்கள் என்ற பெயரில் புலவர்களும் சாஸ்திர மேதைகளும் இருந்தனர்.


 டோமிங்கோ பயிஸ் என்பவர் போர்த்துகீசியப் போராளி. விஜயநகரின் பேரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்தவர். அவருடன் பழகியவர்.
 கிருஷ்ணதேவராயரைப் பற்றி நிறையக் குறிப்புகள் எழுதிவைத்திருக்கிறார். அதில் ராயருடைய
தோற்றம், பழக்கவழக்கங்கள், மனைவிமார் முதலிய விஷயங்களைப் பற்றி விலாவாரியாக எழுதியுள்ளார்.
 போர்த்துகீசிய மூலத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ராபர்ட் செவெல் தமது 'Forgotten Empire' என்னும் நூலில் போட்டிருக்கிறார். இந்த நூலைப்பற்றி பிறகு எழுதுகிறேன்.
 இப்போது கிருஷ்ணதேவராயரைப் பற்றி டோமிங்கோ பயிஸ் எழுதிய குறிப்புகளில் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தமிழில் மாற்றியிருக்கிறேன்.....
 "இந்த மன்னர் நடுத்தர உயரத்தைக்கொண்டவர். கொஞ்சம் பருமனானவர். மன்னர்களிலேயே
மிகவும் அதிகம் அச்சத்தை உண்டாக்குபவர் இவர்தான். மன்னர் என்ற  லட்சணத்தை பரிபூரணமாகப்
பெற்றவர் இவர். மகிழ்ச்சியும் குதூகலமும் நகைச்சுவை உணர்ச்சியும் மிக்கவர்.
 வெளிநாட்டுக்காரர்களை மதிப்புடன் நடத்துபவர். அவர்களுக்கு ஏற்ற கௌரரவத்தைத் தவறாமல் கொடுப்பவர். அவர்களைப்பற்றி அக்கறையுடன் விசாரித்துக்கொள்வார். நீதிமிகுந்த பெருமன்னர்.
ஆனால் திடீர் திடீரென்று கடுங்கோபம் வந்துவிடும்.....
 தினமும் விடிவதற்கு முன்னரேயே எழுந்துவிடுவார். உடனேயே முக்கால் பைண்ட் (400 மில்லி)
நல்லெண்ணெயைக் குடிப்பார். அத்துடன் நல்லெண்ணையை உடல்முழுதும் தேய்த்துக்கொள்வார்.
 இடுப்பில் ஒரு சிறிய துணியை இறுக்கிக்கட்டிக்கொள்வார்(லங்கோடு). பெரும் பெரும் கனமான குண்டுகளைக் கைகளில் தூக்கிப் பயிற்சி செய்வார். அதன்பின்னர் வாள்பயிற்சி செய்வார். அவர் உட்கொண்ட  எண்ணெயெல்லாம் வியர்வையாக வெளிவரும்வரையில் அவர் இவ்வாறு உடற்பயிற்சி செய்வார்.
 அடுத்தபடியாக ஒரு மல்யுத்த வீரருடன் மல்லுக்கட்டுவார். அதன்பின், ஒரு குதிரையில் ஏறி மிக வேகமாக சவாரி செய்வார். இதையெல்லாம் அவர் விடிவதற்கு முன்னரேயே செய்துவிடுவார். பின்னர் அவர் குளியலுக்குச் செல்வார். அதனை ஒரு பிராமணர் செய்வார்(ராஜாபிஷேகம்). அது முடிந்ததும்
கோயிலுக்குச் சென்று நித்திய சடங்குகளில் கலந்துகொள்வார்.
 அங்கிருந்து ஒரு மண்டபத்துக்குச் செல்வார். தம்முடைய மந்திரி பிரதானிகளுடனும்
அதிகாரிகளுடனும் இங்கு அவர் தம்முடைய அரசுக்கடமைகளை நிறைவேற்றுவார்.

----------------------------------------------------------------------------------------------------

Saturday, 28 April 2012

TE UNSEEN ILUPPAI OIL


காணா நோக்கா இலுப்பை மலேசியாவின் அஸ்ட்ரோ டீவீயில் ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளில் மிகப் பெரும்பாலனவை
தமிழ்நாட்டிலிருந்து பெறப்படுபவை.
 அவற்றில் உள்ளவற்றில் பெரும்பான்மையானவை மலேசியாவுக்குச் சம்பந்தமும் அறவே இல்லாதவை. மலேசியத் தமிழர்களுக்கு ஆகக்கூடியவையுமல்ல. பயனில்லாதவை.
 அடிக்கடி சமையல், ஹெல்த் சமையல், சித்தமருத்துவக் குறிப்புகள் போன்றவற்றைப் போடுவார்கள்.
 அவற்றில் பெரும்பான்மையானவை மலேசியத் தமிழர்களுக்கு Practical-ஆக இராதவை.
 "இலுப்பை எண்ணெயை சமையலில் சேர்த்துக் கொள்வது நல்லது", என்று ஒரு முறை
சொன்னார்கள்.  இலுப்பை எண்ணெயைச் சுத்தம் செய்து, சாப்பிடக்கூடியவகையில் பக்குவம் செய்து அதைச் சமையலில் சேர்க்கச் சொன்னார்கள்.


 முதலில் இந்தக் கால மலேசியத் தமிழர்களுக்கு இலுப்பை என்றால் என்ன என்பதே தெரியாது.
 இங்கு அதைப் போன்ற பழம் ஒன்று அரிதாகக் கிடைக்கிறது. சிறியதாக இருக்கும். தென்வடல்
நெடுஞ்சாலையின்மீதுள்ள பேராக் ஆற்றுப் பாலத்தின் அருகில் உள்ள பழ அங்காடிகளில் கிடைக்கும்.
 இலுப்பை என்ற பெயரால் அறியப்படுவதில்லை.
 'சிக்கு' என்பார்கள்.
 பலருக்கு அந்தப் பழம்கூட பரிச்சயமில்லை.


 முன்பெல்லாம் - நாற்பது ஐம்பது வருஷங்களுக்கு முன்பு - மதுரை மருத்துவக் கல்லூரியில் சில
பாட்டுக்களைப் பாடுவோம். மெடிக்கல் காலேஜ் பஸ்ஸில் போகும்போது பாடிக்கொண்டு அட்டகாசமாகப் போவதுண்டு. அந்த பஸ்ஸே அட்டகாசமாகத்தான் இருக்கும். கருநீல வர்ணம். முன் பக்கத்தின் மேல் புறத்தில் பெயருக்குப் பதில் மண்டை ஓடு இரண்டு குறுக்கு எலும்புகளுடன் இருக்கும் படம் இருக்கும். இதை Skull And Cross Bones என்பார்கள். Pirates Of The Caribbean படத்தில் பார்த்திருப்பீர்கள்.
அந்தச் சின்னத்தைத் தாங்கிய கொடியை Jolly Roger என்பார்கள். அந்த பஸ்ஸைப் பிடிக்காத மதுரை
நகரவாசிகள் அதை 'மண்டெ ஓட்டுப் பஸ்ஸ¤" என்பார்கள்.
 அந்த பஸ்ஸில் போகும்போது - குறிப்பாக மதுரை டவுனுக்குள் போகும்போது - இந்த அட்டகாசப் பாட்டுக்கள் முழங்க நகரப் பிரவேசம், நகர்வலம் வருவோம்.
 அந்த அட்டகாசப் பாட்டுக்களில் ஒன்றில் இந்த அடிகள் வரும்......
"சின்ன மாமீ, சின்ன மாமீ - சிக்குப் பழம் தா
சிக்குப் பழம் இல்லாட்டி - உன்
சின்ன மகளத் தா....."
 சின்ன மாமியையும் அவளுடைய சின்ன மகளையும் பார்த்திருப்பார்கள். ஆனால் சிக்குப் பழத்தைப் பார்த்திருக்கமாட்டார்கள்.
 சிக்குப் பழமே சிக்கவில்லை. சிக்கெனப் பிடிக்க முடியாது.
 அப்புறம் இலுப்பைக்கு எங்கே போவது.
 இலுப்பையின் பழுத்த பழத்திலிருந்து முற்றிய கொட்டைகளை எடுத்து, அவற்றிலிருந்து எண்ணெய் எடுத்து......, அவற்றை பேரறிஞர் அண்ணா சொன்ன மாதிரி 'இலுப்பையை வளர்ப்போம். கொட்டையைப்
பிரிப்போம். எண்ணெயை எடுப்போம். சீசாவில் அடைப்போம். இத்தாலிக்கு விற்போம்".... இவ்வாறெல்லாம் சொல்லமுடியாது.
 'என்னத்த' கன்னையா சொன்னாப்புல, "என்னத்த இலுப்பய, என்னத்தப் புடுங்கி, என்னத்த கொட்டய, என்னத்தப் பிதுக்கி, என்னத்த எண்ணெய, என்னத்த எடுத்து......."
 "வரூஊஊஊம்.... ஆனாஆஆஆ வராது...."
 இந்த எண்ணெய் மலேசியத் தமிழர்கள் கடையில் கிடைப்பதானால் அட்சயத் திருதியை தங்கத்தின் விலையாக இருக்கும். தங்கமாவது நகைக் கடையில் கிடைக்கும்.
 இந்த கண்காணாத, கிடைக்காத இலுப்பை எண்ணெயைச் சுத்தீகரம் செய்து சமையல் செய்து
சாப்பிடுவது என்பது நடக்கிற காரியமா?
 அதற்குப் பதில் ஓமேகா-3, ஓமேகா-6 எண்ணெய்கள் கொண்ட மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடலாமே.
 அதைவிட கோஎன்ஸைம் க்யூட்டென்10 - CoEnzyme Q10 சாப்பிடலாம். இளமை திரும்பும்.
இருதயத்துக்கு நல்லது. சுறுசுறுப்பாக இருக்கும்.
 "ர்ர்ர்ர்ருக்க்கும்மணியே... பற, பற, பற" என்று பாடிக்கொண்டு சுறுசுறுப்பாக இருக்கலாம். 


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sunday, 8 April 2012

FOR FORGETFULNESS

மறதிக்கு......

"மறதி ஏற்படுவதைத் தவிர்க்க என்னமும் இருக்கிறதா?" என்று ஓர் அன்பர் கேட்டார்.
அவர் சொன்னவற்றை வைத்துப் பார்க்கும்போது, அவருக்கு Transient Amnesia என்னும் வகை மறதி நிலை ஏற்படுவதுபோல் தெரிந்தது.
என்ன செய்யலாம்?
ப்ராணாயாமமும் சில வகைத் தியானப் பயிற்சிகளும் உதவும்.
ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் ஞாபகசக்தியை மேம்படுத்துவதற்காக தலைகீழாக நின்று சிரசாசனம் செய்தது உண்டு.
வேறு சில யோக ஆசனங்களும் உதவக்கூடும். 
சாப்பாட்டில் மீனும் வெண்டைக்காயும் சேர்த்துக்கொள்வது நல்லது. 
நான் சொல்வது அசல் மீன். 
வல்லாரை என்னும் கீரை இருக்கிறது. அதில் வாலரின் என்னும் சத்து உள்ளது. அது மூளையின் சில பகுதிகளில் உள்ள ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.
வல்லாரையை வேருடன் ஜூஸ் செய்து பச்சையாகச் சாப்பிடுவது மலேசிய சீனர்களிடையே வழக்கம்.
வல்லாரை மாத்திரையாகக்கூட கிடைக்கிறது.
ஜின்கோ பிலோபா என்னும் மரத்தில் இலைகளிலிருந்து செய்யப்படும் மாத்திரைகளும் இருக்கின்றன. 
ஜின்கோவும் மூளையின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். 
ஜின்கோ மாத்திரைகள் ஹெர்பல் மருந்துகள் என்னும் பிரிவின்கீழ் கிடைக்கும். 
ஜின்கோ பிலோபா, வல்லாரை ஆகிய மாத்திரைகளும் அண்ட்டி-ஆக்ஸிடண்ட் வகையைச் சேர்ந்த மாத்திரைகளையும் சேர்த்து தினசரி சாப்பிடலாம். 
அண்ட்டி-ஆக்ஸிடண்ட் என்றால் சித்திக்கு விபத்து என்று நினைத்து விடுவார்கள். 
Anti-Oxidant என்னும் வகை மாத்திரைகள். 
ஓமெகா எண்ணெய்வகைகள், மீனின் கல்லீரல் எண்ணெய் போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை. 
லைப்பிட் என்னும் கொழுப்பில் கெட்ட கொழுப்பு இருக்கிறது. இந்த அண்டி-
ஆக்ஸிடண்ட்கள் கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
ப்லாக் எழுதும் பலருக்கு இருக்கும் கெட்ட கொழுப்பை எந்த அண்டி ஆக்ஸிடெண்டும் குறைக்காது. 
அவர்களுக்கு வாழ்க்கையே பாடம் புகட்டவேண்டும்.
ஜின்கோ-பிலோபா, வல்லாரை, ஓமெகா எண்ணெய் ஆகிய மாத்திரைகளைச் சாப்பிட்டுக்கொண்டு பிராணாயாமம், சில ஆசனங்கள், சில தெய்வங்களின் பீஜ மந்திரங்களை ஜபம் செய்தல் முதலியவற்றைச் நடப்பிலேயே செய்துவருவது நல்ல பலனைத் தரும். 


'சில தெய்வங்களின் பீஜ மந்திரங்களை ஜபம் செய்தல்' என்பது குறித்த கேள்வி.
"எந்த தெய்வங்களின் எந்த பீஜங்கள்?" என்று ஒருமுறை கேட்கப்பட்டது.


சரஸ்வதியின் அம்சமாக விளங்கும் சில தேவதைகள் உண்டு. அவர்களின் பீஜங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும். கல்விக்கும் உதவும். ஆராய்ச்சிக்கும் உதவும். கவிதா சாமர்த்தியத்தையும் ஏற்படுத்தும்.
ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும் மூலிகைகளில் ஒன்றாக வல்லாரைக் கீரையைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
வல்லாரைக்கு சமஸ்கிருதத்தில் 'ப்ராஹ்மி' என்று பெயர். 
ப்ராஹ்மி என்பது சரஸ்வதியின் பெயர்களில் ஒன்று. 
வல்லாரை என்பது சரஸ்வதியின் மூலிகையாகக் கருதப்படுவது. 
பிரம்மபத்ரம் எனப்படும் பிரம்மாவின் மூலிகையும் ஒன்று இருக்கிறது. 
வல்லாரையால் ஞாபகசக்தியும் வளரும்; அறிவாற்றலும் வளரும்........ மயிரும் வளரும். 
'ப்ராஹ்மி ஹேர் ஆயில்' என்று கேள்விப்பட்டதில்லையா?


ஹிமாலயா கம்பெனியிலோ இம்காப்ஸிலோ வல்லாரை மாத்திரைகள் கிடைக்கும். 
ஜின்கோ பிலோபா மாத்திரைகளில் மிகவும் விலை மலிவானது இந்தியாவில் தயாரிக்கப்படும் மாத்திரைதான். ஆனால் நல்ல தரம் வாய்ந்தது.


ஞாபக சக்தியையும் சிந்தனையையும் ஊக்குவிப்பதற்கு பிரம்மபத்ரத்தை ஏதாவது வகையில் பயன்படுத்துவார்கள்.
அல்லது க·பீனா தேவியின் பேரருளை நாடுவார்கள்.
க·பீனா தேவி என்பவள் கா·பி போன்ற பானங்களின் அதிதேவதை. ரோம் பேரரசின் தேவதைகளில் ஒருத்தி.
பீஜ மந்திரங்களை அவரவர் இருக்கும் இடங்களில் உள்ள தக்கவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். 
இதெல்லாம் உபதேசமாக வாங்கிக்கொள்ளவேண்டிய சங்கதி.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday, 23 March 2012

THE SIDDHAR IDAIKAADAR AND THE PLANETS

இடைக்காடர் சித்தரும் நவக்கிரகங்களும்

இந்த உலகில் நிகழும் நிகழ்ச்சிகளுக்கும் மனிதனின் விதிக்கும் கிரகங்கள்தாம் காரணம் என்று இந்து மக்கள் நினைக்கிறார்கள். நம்புகிறார்கள். ஆனால் அப்படியும் சொல்லிவிடமுடியாது. அவை indicators. ஆனால் சற்று கூடுதலான ஆற்றல்கள் பெற்ற indicators. சுட்டிகள் அல்லது சுட்டிக் காட்டிகள்.


நம்முடைய வினைகள் - கர்மாக்கள் ஆகிய பிராரத்தம் சஞ்சிதம் ஆகாமியம் ஆகியவற்றைப் பொருத்து அவற்றின் பலன் அமையும். அந்தப் பலனைச் சுட்டிக்காட்டும் வண்ணம் அவை நின்றுகாட்டும்.


பரிகாரங்கள் செய்வதால் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே மாற்றங்களைச் செய்யலாம்.


இரண்டு மூன்று கதைகள் இருக்கின்றன. உங்களின் பொருட்டு சொல்கிறேன்.


இடைக்காடர் என்றொரு சித்தர். அவர் ஜோதிடத்திலும் வல்லவர்.
அவருடைய கணிப்பின்மூலம் பன்னிரண்டாண்டுகள் பஞ்சம் ஏற்படும் என்று கண்டறிந்தார். ஆகவே பால் கொடுக்கும் எருமையொன்றை வைத்துக் கொண்டார். வரகரிசி என்னும் தானியத்தை மாட்டுச்
சாணத்துடன் சேர்த்து, ஆயிரக்கணக்கில் எரு வரட்டி தட்டி, காயவைத்துக்கொண்டார்.
வரகு வைக்கோலையும் வைத்து பிரம்மாண்டமான கூடமொன்றைத் தயாரித்துக்கொண்டார். ஒரு முருங்கை மரத்தையும் வைத்துக்கொண்டார்.


பஞ்சம் வந்தது.
எருமைக்கு வரகு வைக்கோலைப் போட்டார். அது எருமையாதலால் உண்டது. எரு வரட்டியில் உள்ள வரகரிசியை உதிர்த்து அதனைத் தாம் உண்டார். எருமையின் பாலை அருந்திவந்தார். அது தொடர்ந்து பால் கொடுக்கும் வகையில் அதற்கு ஏற்ற மூலிகைகள் - காயவைத்துப் பக்குவம் செய்யப்பட்ட மூலிகைகளைக் கொடுத்துவந்தார்.
முருங்கைக் கீரையையும் பக்குவப்படுத்தி உண்டுவந்தார். முருங்கை மரத்துக்கு எருமையின் சாணமும் கழிவு நீரும் கிடைத்து வந்தன.
ஹாயாக வரகு வைக்கோல் பரணுக்குக்கீழே படுத்துக்கொண்டார்.
இப்படியே சில மாதங்கள் கழிந்தன.


விண்ணில் உள்ள கிரகங்கள் கீழே பார்த்தன.


எங்கும் பஞ்சம்.


ஆனால் இடைக்காடரின் பர்ணசாலையில்மட்டும் வளம் விளங்கியது.


கிரகங்களுக்கு ஆச்சச்சரியம். ஆம். ஆச்சச்சரியம்தான். ஆச்சர்யம் அளவு கடக்கும்போது அது ஆச்சச்சர்யம் ஆகும்.
தில்மூலநாயனாரின் சரடேஸ்வர தீபிகையில் 420-ஆம் சூத்திரத்தில் இதன் இலக்கணத்தைக் காணலாம்.


"யென்னடாயிது...? இந்தப் பாண்டிநாட்டுக்கு வந்த விசித்திரம்! எல்லாப் பாளையக்காரர்களும் பணிந்துவிட்டார்கள்; பசியோடு இருக்கிறார்கள். இவன் ஒருவன் மட்டும் பசியாமலிருப்பது நமக்கென்ன லேபமா? வாருங்கள்... போய்ப் பார்ப்போம். இந்த இடைக்காடனின் கொட்டத்தை யடக்க ஒரு திட்டத்தைப் போடுவோம்", என்று கட்டபொம்மன் படத்தில் மேஜர் பானர்மேன் ஜாவர் சீதாராமன் போல் பேசிக்கொண்டு வந்தார்கள்.


இறங்கிவந்தார்கள்.


"ஆ...ர்ஹ்ஹ்ஹ்ஹ்......யிந்த வரகு வைக்கோல் கோட்டையை வைத்துக்கொண்டா மனக்கோட்டையைக் கட்டினான். யிப்போதே ராகு கேதுவை வைத்து ஒரு வழிபண்ணுகிறோம் பார்!"


இடைக்காடர் அவர்களை வரவேற்றார். அவர்களுக்குரிய மந்திரங்களில் வசிய, சம்மோஹணப் பிரயோகங்களை இணைத்து உச்சாரணை செய்து, அவர்களுக்கு எருமைப் பாலில் வரகரிசியைப் போட்டு கொதிக்கவைத்து சாப்பிடக் கொடுத்தார். அதனைச் சாப்பிட்ட கிரகங்கள் உறக்கத்தில் ஆழ்ந்தனர்.


அப்போது பார்த்து, இடைக்காடர் மிக விரைவாக ஒரு பெரிய இராசிக் கட்டத்தை வரைந்து, அந்தக் கிரகங்களை, இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து எப்படி எங்கெங்கு இருப்பார்களோ அந்த மாதிரியாகக் கட்டங்களில் அடைத்துவைத்து விட்டார்.
அடுத்த வினாடி, மழைமேகங்கள் கூடி மழையைப் பெய்து, நீர் புரண்டு ஓடியது.
பஞ்சமும் நீங்கியது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

THE SURGEON AND YOGA-SIDDHI

சர்ஜனும் யோகாவும்

பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவைப் பிடிக்க ஆரம்பித்த சமயத்திலிருந்தே மேல்நாட்டு மருத்துவம் இந்தியாவுக்கு வந்துவிட்டது.


கிழக்கிந்தியக் கம்பெனியில் மருத்துவர்கள் இருந்தார்கள். அத்துடன் படைப் பிரிவுகளிலும் Army Surgeons என்னும் பதவிகள் இருந்தன.


ஓரளவுக்கு நல்ல சம்பளமாகவும் இருந்திருக்கிறது.


அப்போதெல்லாம் பல போர்களும் சண்டைகளும் நடந்துகொண்டேயிருந்தன. பிரிட்டிஷ் பட்டாளம் கண்ட கண்ட இடங்களுக்கெல்லாம் செல்ல வேண்டியிருந்தது.


இந்தியாவில் அலோப்பதி மருத்துவத்தின் ஆர்ம்பகாலத்தைப் பற்றி நான் ஒரு சிறிய ஆராய்ச்சி செய்ததில் ஒரு விசித்திரமான சர்ஜன் பற்றி தெரியவந்தது.


சர்ஜன் ரெஜினால்ட் என்பது அவருடைய பெயர்.


தாம் இருக்கும் இடத்தைச் சுற்றிலும் இந்தியர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்காக தக்க துணையுடன் வெளியில் சென்று உலாவுவார்.


அப்போது சில யோகியர் நெருப்புமேல் நடப்பது, ஆணிப்படுக்கையில் படுப்பது, மூச்சை அடக்குவது, இதயத்தை நிறுத்துவது போன்றவற்றையெல்லாம் செய்வதைப் பார்த்திருக்கிறார்.


இதைக் கேம்ப்புக்கு வந்து அவர்களுடைய Lounge Pub-இல் சொல்லியிருக்கிறார்.


அதற்கு அவர்கள், "இதெல்லாம் சும்மா கப்ஸா என்பதை நீயும் அறிவாய். நாங்களும் அறிவோம். இதையெல்லாம் நீ நம்புகிறாயா?" என்றார்கள்.
அவர் சொன்னார்: "இல்லை. நானும் நம்பவில்லை. ஆனால் என் கண்களால் நேரில் பார்த்தேன்".


அவர் மற்றவர்கள் போலல்லாமல் ஓய்வு நேரமிருக்கும்போதெல்லாம் யோகியரைத் தேடிச் செல்வார்.


ஒருநாள் பக்கத்து கிராமத்தில் ஒரு யோகியார் தன்னுடைய உயிரை விடப்போகிறார் என்பதை அறிந்து அங்கு சென்றார்.


யோகியார் ஒரு மரத்தடி மேடையின்மீது அமர்ந்துகொண்டார்.
அவர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நேரத்தில் அவர் மூச்சு விடுவதையும் நிறுத்தினார். அவருடைய இதயமும் நின்றது.


அவர் உடற்கூட்டுக்குள் ஒருவரும் இல்லை.


இது ரெஜினால்டுக்கு ஒரு திருப்புமுனையாகப் போயிற்று


யோகியரைத் தேடித்தேடி அங்கும் இங்கும் செல்லலானார், ரெஜினால்ட். அவர்களுடன் பழகுவார்.
திரும்பிவந்து Army Mess-இல், தனியாக உட்கார்ந்துகொண்டு பைப்பை வாயில் கடித்தவாறு எங்கோ பார்த்துக்கொண்டிருப்பார். நடுவில் அடிக்கடி, "ஹ்ம்ம்ம்...." என்று ஓசையெழுப்பியவாறு இருப்பார்.


அரசாங்கம் அவருக்கு ஆறுமாததுக்குக் கட்டாய விடுமுறை கொடுத்து இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தது.
"தாமாகப் பேசிக்கொண்டிருப்பது. நாம் சொல்வதைக் காதில் வாங்காமல் வெறித்த பார்வையோடு எங்கோ பார்த்துக்கொண்டிருப்பது.... இப்படியெல்லாம். ஆறுமாதம் இங்கிலாந்தில் இருந்துவிட்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும்", என்று மற்றவர்களிடம் அவருடைய கமாண்டர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.


யோகியரைப் பற்றிய சர்ஜன் ரெஜினால்டின் ஆராய்ச்சிதான் அந்தத் துறையில் மேற்கத்தியாரின் அறிவியல்பூர்வமான முதல் ஆராய்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Wednesday, 14 March 2012

INCREDIBLE SCIENCES AND ABILITIES-#1

அதிசய ஆற்றல்கள்-#1

இதே மாதிரியான பல மடல்களை அகத்தியரிலும் வருங்காலவியலிலும் எழுதியுள்ளேன். 
இன்னும் எழுதப்படவேண்டியவை நிறைய இருக்கின்றன. 
இந்தத் தொடரையும் எழுதித் தொடரலாம் என்று எண்ணுகிறேன்.
இவற்றைத் தொகுத்து நூலாகப் போடலாம்.


படியுங்கள்.....


ஒரு மடலில் பருவநிலை பற்றிய பஞ்சாங்க விதிகள், குறிப்புகள், வராஹமிஹிரரின் ப்ருஹத் ஸம்ஹிதை முதலிய விஷயங்களைப் பற்றி தொட்டு எழுதியிருந்தேன்.
இந்த மாதிரி துறைகளைப் பற்றி எத்தனையோ நூல்கள்; அந்த நூல்களில் எத்தனையோ பாடல்கள்; அந்தப் பாடல்களில் கண்ட எத்தனையோ விதிகள், காம்பினேஷன்கள், குறிப்புகள்.....
இவற்றையெல்லாம் அப்படியே துடைத்து ஒதுக்கித் தள்ளி விட முடிய வில்லை. 
ஏனெனில் அவை உண்மையாகவே வேலை செய்கின்றன. 
ஏன் வேலை செய்கின்றன, எப்படி வேலை செய்கின்றன...? 
இதெல்லாம் அப்பாலுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்.


மதுரையில் தெற்காவணிமூல வீதியில் மதுரை ஆதீனம் இருக்கிறது.         அதன் வாயிலுக்கு அருகில் தரையிலிருந்து ஐந்தடி உயரத்தில் ஒரு சிறிய குறுகிய கடை. அதில் சுத்தமான கோரம்பாய் விரித்து வைத்திருக்கப் பட்டிருக்கும். நல்ல நறுமணம் மிகுந்த ஊதுபத்திகள் எப்போதுமே புகைந்து கொண்டிருக்கும். 
அங்கு ஒரு தரை மேஜை. அங்கு சடாட்சரம் என்று ஒரு ஜோசியர் அமர்ந்துகொண்டு ஜோதிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
அவருக்கு அருகில் எப்போதுமே நான்கைந்து பேர் அமர்ந்திருப்பார்கள். சடாட்சரம் பிறருக்கு ஜோசியம் சொல்வதை இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படி பார்த்துக் கொண்டிருந்தே ஜோதிடத்தைப் பற்றி நன்கு அறிந்து கொண்டுவிடுவார்கள்.
பிறப்புக் குறிப்புகளைக் கொடுத்தால் வெகு வேகமாக மனக் கணக்காகவே எல்லாவற்றையும் போட்டு ராசிச்சக்கரத்தை வரைந்து விடுவார்.
அதில் காணப்படுகின்ற விஷயங்களை அப்படியே ஆய்ந்து, பகுத்து பலன்களைச் சொல்லிவிடுவார். அந்த ஆய்வுகளுக்கும் பகுப்புகளுக்கும் கணிப்புகளுக்கும் சான்றாக அவர் பல பாடல்களைச் சொல்வார். 'கடல்மடை திறந்தன்ன' என்பார்களே, அதுபோலத்தான் அவருடைய பாடல்களும். பீறிட்டுக்கொண்டு வரும். 
அவருக்குப் பதினோராயிரம் பாடல்கள் தெரியும் என்று ஒருமுறை சொன்னார். அவை அவருக்கு மனப்பாடமாக விளங்கின.
பதினோராயிரம் பாடல்கள் என்றால் அவற்றில் ஆயிரக்கணக்கான ஜோதிட விதிகள், காம்பினேஷன்கள், குறிப்புகள் இருந்திருக்கும். 
இந்தப் பாடல்களின் உதவியோடு அவர் துள்ளிதமாகப் பலன் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஓர் ஆள் பதினோராயிரம் பாடல்களை மனப்பாடமாக வைத்திருக்க முடியுமா?
முடியும். 
அப்படிப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். வன்றொண்டர் செட்டியார், பழனி மாம்பழக் கவிச்சிங்க நாவலர் முதலியோர் அப்படிப்பட்டவர்கள்.
இதைப் பற்றியும் அகத்தியரில் எழுதியுள்ளேன்.


அந்தப் பாடல்கள் Input. ஏதோ சில வகைகளில் Computing பண்ணி, ஒன்றுடன் ஒன்றைப் பொருத்தியும் சேர்த்தும் பகுத்தும் ஆய்ந்தும் பலன்களை விரல்நுனிக்குக் கொண்டுவந்தார். 
இன்னும் இருக்கே.....?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$