Thursday, 9 June 2011

வெற்றிகரமான சுவாமிஜீ

தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு ஒரு காலத்தில் மிக அதிகமாக சாமியார்கள் வரப் போக இருந்தனர்.   அவர்களில் சிலர் மகிமை வாய்ந்தவர்கள். பலர் அப்படியில்லை. போகப் போக தமிழகச் சாமியார்களின் வருகை குறைந்துபோயிற்று. ஆனாலும் இப்போதும் வருகிறார்கள்.

சாமியார்களிலும் பலவகையான தட்டுக்கள் உண்டு.  சில கணிப்புகளை, அளவுகோல்களை மக்கள் வைத்திருக்கிறார்கள்.  சாமியார்' என்றால் 'பரவாயில்லை' என்ற மதிப்பு. 'ஆண்டி' என்றால் ஒன்றையணா ஆள். 'பரதேசி' என்றால் இன்னும் படுகேவலம்.  உயர்மட்ட சாமியார்களைத் 'தம்பிரான்', 'சன்னிதானம்' என்றெல்லாம் அழைப்பார்கள்.  இவர்களில் மிக மிக உயர்வான ஸ்தானம் 'ஸ்வாமீஜீ' என்று குறிப்பிடப்படுகிறவர்களுக்கு.  'சுவாமிஜி' என்று குறிப்பிடப்படுகிறவர் அடுத்த நிலை.  "'சாமி' என்ன பண்ணிக்கிட்டிருக்காரு?" என்ற கேள்விக்குரியவர் இன்னும் கீழே.  "சாமி என்ன பண்ணிக்கிட்டிருக்கு", என்றால் இன்னும் கீழே.

இதில் 'ஸ்வாமீஜீ'க்கு ஹைக்லாஸ் சீசர்கள் இருப்பார்கள். சீசைகளும் அதிகம். சில ஸ்வாமீஜீக்களுக்குப் பசையுள்ள சீசர்களும் பச்சுப் பச்சென்ற சீசைகளும் அதிகமிருப்பார்கள்.  இந்த மாதிரிப்பட்ட 'ஸ்வாமீஜீ'யின் பெயரைச் சொல்லவும் கூடாது.  "அயோ......ஸீ-லா திஸ் ·பெல்லோ! ஹீ இஸ் சொல்லுறான் த ஸ்வாமீஜீ'ஸ் பேரூ-லா! ஹவ் கேன்! ஹவ் கேன்!", என்று விடலை சீசர்களின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும்.  சுவாமிஜி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்தார். அவ்வப்போது வரப்போக இருந்தார்.  நாளடைவில் அவருக்கு ஏராளமான சீடர்கள்.

அவர் நல்லவர். பலருக்கு அவரால் மிகச் சிரமமான சமயங்களில் நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆரம்பகாலங்களில் அவர் தியானம், மந்திர ஜபம் போன்றவற்றையே எல்லாருக்கும் உபதேசித்தார். நம்பிக்கையை ஊட்டிவிட்டார். "நல்லதையே நினைத்து நல்லதையே பேசி நல்லதையே செய்யவேண்டும்" என்பார். ரொம்பவும் பாஸிட்டிவாக அவருடைய உபன்யாசங்கள் இருக்கும். சிவராஜயோகம் கற்றவர்.  அவருடைய சீடர்கள் அவருடைய சொந்த ஊரில் ஓர் அருமையான ஆசிரமம் கட்டுவிக்க ஏற்பாடு செய்தனர். ஏனெனில் அவர் வசித்தது ஒரு சுமாரான வீடு. நூற்றுக்கணக்கில் மலேசிய சீடர்களும் அபிமானிகளும் அங்கு செல்லும்போது சிரமமாக இருந்தது. 

ஆசிரமம் கட்ட ஆரம்பித்து சில காலத்துக்கெல்லாம் கட்டடவேலை தடங்கலாகிவிட்டது. பணத்தட்டுப்பாடு. 
சுவாமிஜி சோர்ந்துவிடவில்லை. பொறுமையாகக் காத்திருந்தார்.  ஒருநாள் திடீரென்று வீட்டில் அமர்ந்திருந்தவர் எழுந்தார். வெளியில் சென்றார். அங்கு மணல் குவியலில் விளையாடிக் கொண்டிருந்த சில சிறுவர்களை அழைத்துவந்தார்.  அவர்களுக்கு முறைப்படி மந்திரோபதேசம் செய்வித்தார்.  குபேர மந்திரம்.  ஆசிரமம் கட்டுமிடத்தில் ஒரே இடத்தில் இருக்கச்செய்து அனைவரையும் ஆளுக்குப் பத்தாயிரம் ஆவர்த்தி மந்திர உச்சாரணம் செய்யச்சொன்னார். சுவாமிஜியின் மேற்பார்வையில் அவர்களும் செய்தனர். சிலநாட்களில் மந்திர உச்சாரணம் பூர்த்தியாகிற்று.  நாற்பதெட்டு மணி நேரத்தில் மலேசியாவிலிருந்து பெரும் தொகை கிடைத்தது.  மளமளவென்று ஆசிரம வேலைகள் முடிந்தன. ஏர்கண்டிஷன் முதற்கொண்டு மலேசிய சீடர்கள் வைத்துக்கொடுத்தனர். அவருடன் அடிக்கடி டெலி·போனில் பேசவேண்டும்; அவரும் அடிக்கடி பேசவேண்டும் என்பதற்காக அவருக்கென்று டெலி·போன் வசதிகளைச் செய்து, அவருடைய டெலி·போன் பில்லையும் மலேசிய சீடர்களே கட்டலாயினர். 

அவருடைய நன்னம்பிக்கை; தன்னம்பிக்கை.  மந்திரமும் வேலைசெய்தது. 

காரியசித்தியும் ஏற்பட்டது.

உண்மைச் சம்பவம்.