Friday 29 July 2011

ஆன்மாவுக்குக் கோழி சூப்



Chicken Soup for the Soul என்னும் தலைப்பில் வெளியாகும் புத்தகங்கள் தமிழர்களுக்கு எந்த அளவுக்குப் பரிச்சயம் என்பது கேள்விக்குறியே. 


சமீபத்தில் மலேசியாவில் தன் முனைப்புத் தூண்டுதல், முக்கியமான சமய இயக்கம் ஒன்று ஆகியவற்றில் முக்கியமான ஆளாகக் கருதப்படுபவர் ஒருவரைச் சந்திக்கும்போது, இந்தப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன்.  அதற்கு அவர், "Ai don read all that. நான் முழுச் சைவம். Strict vegetarian" என்று அழுத்தமாகச் சொன்னார்.  மலேசியாவில் தமிழியமும் சமயமும் பல்லாண்டுகள் பின்தங்கிச் செல்வதன் காரணஸ்தர்களில் இந்த ஆளும் ஒருவர். அவரிடம் போய்ச் சொல்லியிருக்கக்கூடாதுதான். 

Chicken Soup for the Soul என்பது ஒரு புத்தகத்தின் பெயர். ஏன் அவ்வாறு பெயரைச் சூட்டிருக்கிறார்கள்?

உடல் தளர்ச்சியாகவும் பலவீனமாகவும் ஜீரணம் சரியாக இல்லாமலும் இருப்பவர்களுக்குக் கோழி சூப் கொடுப்பது வழக்கம். செட்டிநாட்டுப் பக்கத்தில் இது சர்வ சாதாரணம்.  மற்றவர்களிடையேயும் இந்த வழக்கம் உண்டு. சீனர்கள் கோழி சூப்பிலேயே பலவிதமான ரிஸிப்பிக்கள் வைத்திருக்கிறார்கள். கோழிக்காலுடன் சில மூலிகைகள், மருந்துச்சரக்குகள் முதலியவற்றைப் போட்டு செய்யும் சூப் ஒன்று இருக்கிறது. மண் சட்டியில்தான் அதை வைத்துக்கொடுப்பார்கள்.

"சூட்டோடு சூடாக சூப்புத்தன்னைச்
சாப்பாட்டு முன்னாலே சாப்பிடவேண்டும்" 

என்று எந்த சித்த வைத்தியப் பாடலும் சொல்லவில்லை.

நான்தான் சும்மா ஒரு பெப்புக்காகச் சொல்லிவைத்தேன். யாப்பு கீப்பு கிராமரெல்லாம் இல்லாமல் இப்படியெல்லாம் சித்தர் பாட்டு இருக்காது. போதாததற்கு இந்த 'பாரப்பா, கேளப்பா, கூறப்பா'வெல்லாம் போட்டு அமர்க்களமாக ஜிகிர்தண்டாவாக விளங்கும். 

Brand's Essence of Chicken என்பது பாட்டன் பூட்டன் காலத்துச்சரக்கு. அதே பச்சைப் பெட்டியில் கறுப்பு பாட்டிலில் கறுப்பு திரவம். இது ஒரு அருமையான டானிக். 

உடல் தளர்ச்சிக்கும் உடல் தெம்புக்கும் ஏற்றது கோழி சூப் என்பதால் தெம்பையும் உற்சாகத்தையும் மோட்டிவேஷனையும் திருப்தியையும் சாந்தியையும் அமைதியையும் ஏற்படுத்தும் உருவகமாகக் கோழி சூப்பை ஏற்றுக்கொண்டார்கள். 

Chicken Soup for the Soul என்று ஆன்மாவுக்குத் தெம்பு கொடுக்கும் டானிக்காக விளங்கும் கதைகளையும் சம்பவங்களையும் கவிதைகளையும் ஜோக்குகளையும் சேகரித்துப் புத்தகமாக ஆக்கியிருக்கிறார்கள்.  'Soul, ஆன்மா' என்பதை சங்கராச்சாரியார், மெய்கண்டார் சொன்னாப்புல எடுத்துக்கக் கூடாது. அது வேற.

இவற்றின் முக்கியமான லட்சணம் இதுதான் - அந்த சம்பவங்கள் கதைகள் எல்லாமே மனதைத் தொடக்கூடியதாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் அமைந்திருக்கும்.  இந்த மாதிரியானதொரு concept-ஐ மனதில்கொண்டு Jack Canfield, Victor Hansen ஆகிய இருவரும் மனதுக்குத் தெம்பையும் உற்சாகத்தையும் ஊக்குவிப்பையும் ஏற்படுத்தும் சம்பவங்கள் கதைகளையெல்லாம் தொகுத்தார்கள்.  அத்தகைய நூற்றியோரு விஷயங்களை ஒரு புத்தகமாக்கினார்கள்.   இதை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு வெளியீட்டாளராகப் போய்ப் பார்த்தார்கள். 
ஒருவரா....இருவரா? 
நூற்றுநான்கு பேர். 
அத்தனை பேரும் நிராகரித்தனர். 
இந்த மாதிரியான விஷயங்களைப் படிப்பதற்கு ஆட்கள் இருக்கமாட்டார்கள் என்று அந்த வெளியீட்டாளர்கள் பரிபூரணமாக நம்பினார்கள்.  

கடைசியில் நூற்று ஐந்தாவதான முயற்சியில் அறிமுகமேயில்லாத ஒரு சிறிய கம்பெனியின் மூலம் வெளியிட்டார்கள். முதன்முதலில் 1993-ஆம் ஆண்டில் புத்தகம் வெளிவந்தது. 

அது ஒரு Run Away Success.
இதை அப்படியே தமிழாக்கம் செய்தால் எதிர்மறையான அர்த்தம் ஏற்படும். 'ஓடிப்போன வெற்றி' என்றா சொல்வது? சொல்லப்படாது.

ஆரம்பத்தில் இதற்கு ஒன்றும் விளம்பரமேயில்லை. சும்மா ஒர்த்தொர்த்தர் அவரவருக்கு வேண்டப்பட்டவர்களிடம் சொல்ல, அவரவர் மற்றவருக்குச் சொல்ல, மற்றவர் இன்னொருவருக்குச் சொல்ல, இன்னொருவர் வேறொருவருக்குச் சொல்ல, 'அண்ணாதுரை ஸிஸ்ட'த்தில் அந்தப் புத்தகத்தின் புகழ் பரவியது. மிக வேகமாகப் புத்தகம் விற்றுத்தீர்ந்தது.  இதன் பரபரப்பான விற்பனையால் பெரிய பெரிய கம்பெனிகள் போட்டி போட்டுக் கொண்டு வந்தனர்.

நூலாசிரியர்கள் அடுத்தடுத்து வெகு வேகமாகக் கதைகளையும் கவிதைகளையும் சம்பவங்களையும் சேகரித்து இதே தலைப்பில் புத்தகங்களாக வெளியிட்டனர். இப்படி ஐந்தாம் ஜார்ஜ், ஆறாம் ஜார்ஜ் கணக்கில் Chicken Soup For The Soul என்னும் தலைப்பிலேயே ஆறு புத்தகங்கள்.  அதன்பின்னர் ஒவ்வொரு குறிப்பிட்ட குழுமங்களுக்காக என்று புத்தகங்கள் போட்டனர். டீன் ஏஜ் பசங்களுக்கு, பெண்களுக்கு, எழுத்தாளர்களுக்கு, வயசாளிகளுக்கு, வேலை செய்பவர்களுக்கு என்று புதுப்புது புத்தகங்கள். 
பழைய புத்தகங்கள் மறு பதிப்புக்களும் கண்டன. 
ஆடீயோ கெஸெட்டுக்கள்வேறு. 

இந்தப் புத்தகங்களின் சுருக்கமாக Chicken Soup for the Soul in a Cup என்ற பெயரில் சிறு நூல்கள் கையடக்கமாக வெளிவந்தன. எங்காவது போகும்போது பாக்கெட்டில் செருகிக் கொண்டோ ஹேண்ட்பேகில் வைத்துக்கொண்டோ செல்லக்கூடியவையாக இருந்தன.  பல்வைத்தியத்துக்காகக் காத்திருப்பதிலிருந்து பஸ் ஸ்டாண்டு, கக்கூஸ் என்று ஆங்காங்கு படிக்கக்கூடியவகையில் அந்தப் பிரதிகள் இருந்தன. 

அப்படியே நூறு புத்தகங்கள் வெளியாகிவிட்டன. இந்த ஆகஸ்ட் மாதம் நூற்று ஓராவது தலைப்பு வெளியாகிறது.  நூற்று ஒரு கட்டுரைகள் கதைகளை வைத்து ஒவ்வொரு புத்தகமும் விளங்கியதால்தான் நூற்றியோராவது புத்தகத்தின் வெளியீட்டை விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

இந்தப் பன்னிரண்டு ஆண்டு காலத்திற்குள் அறுபத்தைந்து மொழிகளில் நூறு சிக்கன் சூப் தலைப்புப் புத்தகங்களின் தொண்ணூறு மில்லியன் பிரதிகள் வெளியாகி உலகெங்கும் விற்பனையாகிவிட்டன.  இவற்றுடன் தொடர்பான தலைப்புகளிலும் துறைகளிலும் வேறு சில புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

The Alladdin Factor என்பது Chicken Soup for the Soul - Living Your Dreams என்னும் புத்தகத்தின் தொடர்பாக விரிவுகளும் விளக்கங்களும் கொண்டது. அகத்தியத்தின் வாலிப வயோதிக அன்பர்கள் விரும்பினால் அந்தப் புத்தகங்களைப் பற்றி எழுதுகிறேன். 
உபயோகமான புத்தகங்கள். 

Wednesday 27 July 2011

பாலிற்கோர் புரட்சி

ஒரு காலத்தில் நான் கலந்து கொள்ளும் கூட்டங்களிலும், என்னுடைய வீட்டிலும் பல  கலந்துரையாடல்கள் நடைபெறும். ஏராளமான கேள்விகள் கேட்கப்படும்.  ஒரு முறை ஒரு கலந்துரையாடலின்போது இந்தக் கேள்வியைக் கேட்டார்கள்.

>அபிஷேகத்துக்கு Milkmaid Tin பாலை பயன்படுத்தலாமா ?

அதற்கு அப்போது நான் சொன்ன பதில் - 

>கறந்த பாலை பயன் படுத்துவது ஒரு சம்பிரதாயம். மாற்றமுடியாத விதி அல்ல. பாக்கட் பாலை பயன்படுத்தலாமா, கொழுப்பு குறைக்கப்பட்ட/நீக்கப்பட்ட பாலை பயன்படுத்தலாமா, ஒட்டகப் பால் பரவாயில்லயா என்பதெல்லாம் விதண்டா வாதம்.  இன்னும் விரிவாகச் சொல்கிறேன். 

இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் நான் மலாயாவின் கீழக்குப் பகுதியில் உள்ள கிலந்தான் என்னும் மாநிலத்தில் வேலை செய்தபோது அங்கிருந்த மூன்றே கோயில்களில் ஒன்றாகிய தும்ப்பாட் மாரியம்மன் கோயிலில் செயற்குழுவில் கொஞ்சகாலம் இருந்தேன்.  அந்தக் கோயிலில் அபிஷேகம் செய்யும்போதெல்லாம் கோத்தாபாருவில் இருந்த சீக்கியன் ஒருவனிடம் பசும்பால் வாங்கி ஊற்றுவது வழக்கம். வேறு வழியில்லை. ஏனெனில் அவனிடம் மட்டுமே பசு மாடுகள் இருந்தன. அவனிடம் இருந்தவையோ மூன்று மாடுகளே. ஆனால் தைப்பூசத்தின்போது நூற்றுக்கணக்கான பால்குடங்களுக்கு அவன் பால் சப்லை செய்வான்.  அவன் என்ன, "கோமாதா எங்கள் குலமாதா" என்று காமதேனுவா வைத்திருக்கிறான்...., உலகத்துக்கே கரந்துகொடுக்க.

சிறிது மாட்டின் பாலுடன் நிறைய மாட்டின் பால் கலப்பான். <மா + டின் + பால் = மாட்டின் பால்> 

இதற்கு ஒரு வழி சொன்னேன். 

பேக்கெட் பால் என்றொரு பால் இருக்கிறது. அட்டை டப்பாக்களில் அதுவரும். இதில் இருப்பது நல்ல பசும்பால். நியூஸீலந்த் பசு.  அதனை அபிஷேகத்துக்குப் பயன்படுத்தலாம் என்று சொன்னேன். அப்போது அதற்குப் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது.  நான் பேசும் பொது நிகழ்ச்சிகளில் இந்தக் கருத்தை வலியுறுத்தினேன்.  "கண்ட கண்ட மாவைக் கலந்து கொடுப்பதையெல்லாம் பால் என்று எடுத்துக்கொண்டு அபிஷேகம் செய்கிறீர்கள். அதைவிட அசல் பசும்பால்; ஆனால் கோத்தாவில்(அட்டை டப்பி) அடைத்தது எவ்வளவோ மேல்", என்றேன்.

அதற்கு ஆட்சேபங்கள் இருந்தன.

"சிங்கு செய்யிறத நாம பாத்துக்கிட்டா இருக்கோம்?"
"நம்ம கண்ணுக்குத் தெரியாம செய்யிறதுல நமக்குப் பங்கில்லை. அதுனால பாவமும் இல்லை" .
"வெள்ளைக்காரப் பசுவாச்சுங்களே? தீட்டு இல்லீங்களா?"
இப்படியெல்லாம் மடத்தனமாக ஆட்சேபம் தெரிவித்தவாறு இருந்தார்கள். 
ஆனால் நாளடைவில் இந்த Cantankerous, recalcitrant ஆசாமிகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு டச் லேடி பேக்கெட் பாலையே பக்தர்கள் கொண்டுவர ஆரம்பித்தனர். குருக்களிடம் விளக்கிச் சொன்னபோது அவரும் ஏற்றுக்கொண்டார்.  கொஞ்சம் கொஞ்சமாகச் செய்ய ஆரம்பித்தார்கள்.  இப்போது மலேசியாவில் எங்கெங்கும் இந்தப் பால்தான் அபிஷேகத்துக்குப்  பயன்படுகிறது.

அதிலேயே susu segar என்றொரு வகையும் கிடைக்கும். Fresh Cow's Milk. இத்தனை நாட்களுக்குள்ளாகப் பயன்படுத்தவேண்டும் என்று லேபுலில் ஒட்டியிருப்பார்கள். அது அசல் பசும்பால். மூன்று நாட்களுக்குட்பட்டது. 

இதெல்லாம் குவாலா ப்ராங் மஜீது சொன்னதுபோல, "மனம் கொண்டது மார்ர்ர்க்கம்". அவ்வளவுதான். <அவர் அப்படித்தான் அழுத்திச்சொல்வார்.>

பகவத் கீதையில் 'பலம், புஷ்பம், பத்ரம், தோயம்' ஆகியவற்றில் எது கிடைக்கிறதோ, அதனை மனப்பூர்வமாக 'எனக்கு' அர்ப்பணம் செய்யச்சொல்லியிருக்கிறார்.  பழம், மலர், இலை, தண்ணீர் ஆகியவை. 

திருமந்திரத்தில், 

'யாவர்க்கும் ஆம் இறைவர்க்கோர் பச்சிலை' என்று சொல்கிறார். 

இப்போது எங்கு பார்த்தாலும் மலேசியாவில் அபிஷேகத்துக்குக்காக டன் கணக்கில் பேக்கெட் பால் பயன்படுத்தப் படுகிறது.  அதற்கெல்லாம் மூலம் நான் 1977-ஆம் ஆண்டு கெலாந்தான் மாநிலத்துத் தும்ப்பாட் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயிலில் ஏற்படுத்திய புரட்சிதான்.

தேவையா.... தேவையில்லையா?

இக்காலத்தில் வெளிவரும் புத்தகங்கள் பலவற்றில் புலவர்கள் எழுதிய பல பாடல்கள் இருப்பதில்லை.

ஏன்?

ஒவ்வாக்கருதுக்கள் என்பது ஒரு காரணம். 

இன்னொன்று இடக்கராகப் பாடப்படும் பாடல்கள். இடக்கர் என்றால் விரசமாக அல்லது விரசத்தை மறைவாக வைத்துப் பாடப்படும் பாடல்கள். 

காளமேகத்தையே எடுத்துக்கொள்வோம். அவர் அந்த அறுபத்துநான்கு தண்டிகைப் புலவர்களுடன் நிகழ்த்திய எமகண்டப் போட்டியின்போது பாடிய அத்தனைப் பாடல்களும் அச்சிடப்படவில்லை.  இப்போது நாம் 'கொச்சை'யாகவும் 'கெட்டவார்த்தை'களாகவும் கருதும் சொற்கள் இருப்பதால்தான்.  இவை மறைந்துவிடும். 

இவற்றை வெளிப்படுத்துவதா இல்லையா? 

அல்லது அப்படியே விட்டுவிடுவோமா?
இளைய தலைமுறையிடம் கேட்கலாம். ஆனால் இணையத்தில் இப்போது பேர் போட்டுக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையின் நோக்குகள் priorities எல்லாமே வேறு. அது நன்கு தெரிகிறது. அவர்களும் இப்போது இணையத்தில் trend-setters. ஆகவே அவர்கள் தங்களின் நோக்குகள் நோக்கங்கள் பார்வைகள் குறிக்கோள்கள் முதலியவற்றின் அடிப்படையில் கருத்துச்சொல்வார்கள். அல்லது ஏதாவது திட்டுவார்கள்:-)

எதற்கு வம்பு:-)

'இதெல்லாம் என்னத்துக்கு?' என்று சுலபமாகச் சொல்லக்கூடியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அப்படிப் பார்த்தால் இணையத்தில் இன்று பேசப்படும் பல விஷயங்கள்தான் என்னத்துக்கு?

உரைவீச்சு, ஹைக்கூ, சிறுகதைகள் எல்லாமே 'என்னத்துக்கு' ஆகிவிடும். சில இதழிகள் போடும் விஷயங்களும் 'என்னத்துக்கு' ஆகிவிடும்.  சில உன்னத குறிக்கோள்களுடன் ஆரம்பித்த சில திட்டங்களும் 'என்னத்துக்கு' ஆகிவிடும். இல்லையா?

நான் அவற்றையெல்லாம் அப்படியெல்லாம் 'என்னத்துக்கு' என்று நினைத்ததேயில்லை.

அதது அவரவருக்கு
அதது அததற்கு
அவரவர் அங்கங்கே

ஆனால் நிசப்தமாக, மௌனமாக இருக்கும் மிகப் பெரிய இளைஞர் கூட்டமும் இணையத்தில் இருக்கிறது.   22 வயதிலிருந்து 28க்குள் இருக்கும் இளைஞர்கள் ஏராளமானோர் இணையத்தில் இருக்கின்றனர்.  எதிர்காலம் அவர்களுடையது. எதிர்காலத்தில் என்னென்னவெல்லாம் இருக்கவேண்டும் என்பது அவர்களின் விருப்பு வெறுப்பைப் பொறுத்தது. 

எங்களைப் பொறுத்தவரைக்கும்.........

நாங்கள் காளமேகப் புலவர் பாடல்கள், கூளப்பநாயக்கன் காதல், விறலிவிடு தூது, பயோதரப் பத்து எல்லாவற்றையும் நன்றாகவே ரசித்தோம். இன்னும் பசுமையாக அவை எங்கள் மனதில் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. இப்போதும் அந்தப் பாடல்கள் ஏற்படுத்தும் கிளுகிளுப்பைச் சொற்களில் அடக்கிவிட முடியாது.

Saturday 16 July 2011

மனமும் மந்திரமும் - #3

பரமந்திர விபேதனம்

"பரமந்த்ர விபேதனம் என்றால் என்ன?" என்று பெருமாள் கேட்டிருந்தார். 

நம்மை வேண்டப்படாத பிறத்தியார் ஏவிவிட்ட மந்திரங்களை உடைக்கும் செயலைத்தான் அவ்வாறு குறிப்பிடுவது.

இப்போதெல்லாம் பிரத்யங்கிரா ஹோமங்கள், சத்ருவினாசன ஹோமம் என்று வகை வகையாக, விரிவாக, அதிகமாகச் செய்கிறார்கள்.  லோக§க்ஷமத்துக்காகவோ 'லோகான் ஸமஸ்த சுகினோ பவ'ந்தாக வேண்டுமென்றோ இந்த மாதிரி ஹோமங்கள் செய்யப்படுவதில்லை.  எங்கு பார்த்தாலும் எப்போதும் இந்த மாதிரியான யாக, ஹோமங்களைச் செய்யும்போது தெரிந்தோ தெரியாமலோ யாருமே பாதிப்படையும் சாத்தியக்கூறுகள் இருக்கத்தான் செய்கின்றன. 
இப்படிப்பட்ட மந்திரக் கட்டுக்களையும் சாடுதலையும் உடைப்பது அகற்றுவது ஆகிய வேலைகளுக்கு இந்த மாதிரியான சாதனங்கள் பயன்படும். 
ஆனால் ஒன்று.
பயன்படுத்திக்கொள்வதற்கும் முறைகள் இருக்கின்றன. 

'பரமந்த்ரவிபேதனம்' என்பதன் விளக்கத்தைச் சுருக்கமாகச் சொல்லியிருந்தேன்.  'பிறத்தியார் பிரயோகம் செய்த மந்திரங்களை' என்பதில்தான் அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது.  சிலர் மந்திர உபதேசம் பெற்று மந்திர ஜபங்கள் செய்து உபாசனை அல்லது பூஜைகளைச் செய்வார்கள். இவை அவர்களுக்கு உரிய மந்திரங்கள். அவர்களுக்குச் சொந்தமாக உள்ள யந்திரங்களிலோ அல்லது விக்கிரகங்களிலோ ஆவாஹணம் செய்துவைத்திருப்பார்கள். அல்லது மானச மந்திரங்களாக மனதுக்குள் வைத்திருப்பார்கள்.

சில பொருள்கள் இருக்கின்றன. அவை எந்தவகையான மந்திரங்களையும் குலைத்துவிடும் ஆற்றல் படைத்தவையாக இருக்கும். அவற்றை வைத்திருந்தாலோ, அல்லது நமக்கே தெரியாமல் யாராவது அவற்றைக் கொண்டுவந்து மறைவாக வைத்தாலோ, ஏற்கனவே செய்து வைத்திருக்கிற ஆவாஹணம், ஏற்றி வைத்த உரு எல்லாம் கலைந்துபோய்விடும். சில கோயில்களில் உள்ள மூலமூர்த்திகளுக்கு சான்னித்தியம் குறைந்துபோகவோ அல்லது அறவே இல்லாமல் போகவோ செய்வதும் உண்டு.
இந்த மாதிரியான பொருள்கள் சகட்டுமேனிக்கு எல்லாவற்றையும் குலைத்துவிடக் கூடியவை. 

அப்படியில்லாமல் பிறன் பிரயோகம் செய்து வைத்த மந்திரங்களை மட்டும் உடைப்பதே பரமந்திரவிபேதனம்.

நமக்கு உரிய மந்திரங்கள் எவ்வகையிலும் பாதிப்பு அடையமாட்டா.

Antibiotic மாதிரி. 


உடலைப் பாதிக்காமல் உடலைப் பாதிக்கும் கிருமிகளை மட்டும் அழிப்பதுபோல.

Saturday 9 July 2011

மனமும் மந்திரமும் -#2



பொதுவாகவே மந்திரங்களில் பலவகையுண்டு. பெண் தேவதைக்குரிய மந்திரம், ஆண் தேவருக்குரிய மந்திரம் என்பது மாத்திரமல்ல.
ஆண் பெண் மந்திரங்கள்கூட உண்டு.
ராஜமந்திரம் என்றவகையுண்டு. 
நரசிம்ம மந்திரம் என்பது ஒரு ராஜமந்திரம். இதையெல்லாம் செய்வதற்கு ஆசாரங்கள் நியமங்களெல்லாம் உண்டு.  ஆசாரம், நியமம் என்றால் நம்ம ஆட்கள் எப்போதுமே மரக்கறி சாப்பிடுவது, குளிப்பது, கால்கை கழுவுவது, பஞ்சகச்சம் வைத்துக்கட்டுவது, இடுப்பில் துண்டு கட்டுவது, கொட்டை, பட்டை அணிதல், சடங்குகளை ஏராளமாக இணைத்துச்செய்வது போன்றவற்றில்தான் கவனத்தையும் செலுத்துகிறார்கள்; அவற்றையே வலியுறுத்துகிறார்கள்.
அவை மட்டும் போதாது.
மனதில் உறுதி, வினைத் திட்பம், தீர்க்கமான கவனம், அலையாத, நிலைத்த மனம், ஒருங்கு சேர்த்து இலக்கில் மட்டுமே செலுத்தப்படும் மனம், தேவையானவற்றை மட்டுமே பார்க்கும் பார்வை.....இப்படி பல விஷயங்கள் உண்டு. 
லயிக்காத மனம் பிரயோசனமில்லை.
விக்கிரகம், படம், யந்திரம், மண்டலம் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. 
மனோலயம் ஏற்படவேண்டும் என்பதற்கும் அவை ஒரு காரணமாக அமையும். மனதை ஈர்ப்பதற்காக. கண்களுக்கும் பார்வைக்கும் இலக்கு, மனதுக்கும் லயிப்பு. 

மனதைப் பற்றி நம் யோகநூல்கள் நிறையவே சொல்லியிருக்கின்றன.  இவை தவிர நேரடியாகக் கற்றலின்மூலமும் தானாகச் செய்யும் பயிற்சிகளின் மூலமும் அனுபவத்தின்மூலமும் மனதின் தன்மைகள், செயல்பாடுகள், இயக்கம், போக்கு முதலியவற்றை அறிந்துகொள்ளமுடியும். 

பல பொருள்களிலும் மனது செல்லும் நிலையை 'க்ஷ¢ப்தம்' என்று சொல்வார்கள்.

இயக்கமின்மை, சோம்பல், லயிப்பின்மை, கவனமின்மை முதலியவைகூடிய நிலையை 'மூடம்' என்து சொல்வார்கள். அர்த்தம் மாறிப்போய் பயன்படுத்தப்படும் சொற்களில் இதுவும் ஒன்று. 
"பலகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் மூடமதே!" என்னும்போது இந்த நிலையில் உள்ள மனதை ஆதிசங்கரர் குறிப்பிடுகிறார்.

மனது சில சமயங்களில் வெளியில் கண்டதனமாகத் திரிந்துவிட்டு, சிற்சில சமயங்களில் உள்முகமாகவும் ஓடி ஒளிந்துகொள்ளும். இந்த நிலையை 'விக்ஷ¢ப்தம்' என்று யோகநூல்கள் கூறும். 

ஒரே இலக்கில் மனதை லயிக்கச்செய்து அதிலேயே நிறுத்திவைத்துக்கொள்வது'ஏகாக்ரம்'.  யோகத்தில் மட்டுமல்லாது மார்ஷியல் போர்முறைகளிலும் 'ஏகாக்ரம்' மிகவும் அவசியமானது. அடுக்கி வைத்திருக்கும் செங்கற்களை கையால் அடித்து உடைக்கும் வீரரை கவனித்துப் பாருங்கள்.  ஒழுங்காகச் செய்யப்படும் மார்ஷியல் போரும் ஒரு யோகம்தானே. 

மனதை முற்றிலுமாக இயக்கமின்றி ஆக்கி, நிறுத்தியோ அல்லது இல்லாமலோ செய்வதை 'நிருத்தம்' என்று யோகநூல் கூறும். 
யோகம் என்றால் என்ன? அதற்கு பதஞ்சலியார் சொன்னது: 
"யோகாஸ் சித்த நிரோத:"
இல்லாமல் செய்வது நிரோதனம். 'நிரோத்' என்னும் பெயரும் இதே வேரைக் கொண்டதுதான். 
மனதை இல்லாமல் செய்வது யோகத்தின் உச்சநிலை.

'சும்மா' என்றொரு தொடரை எழுதியிருந்தேன்.

மாத்ருகா மந்த்ர புஷ்பமாலா, மானச பூஜை, பாவனாமார்க்கம், இப்போதுள்ள Virtual Imaging முதலியவற்றுக்கெல்லாம் மேலே குறிப்பிடப்பட்ட மனநிலைகள் தொடர்புள்ளவை.

மாத்ருகா மந்திரம், மாத்ருகா மந்த்ர புஷ்பமாலா முதலியற்றைப் பற்றியும் எழுதவேண்டும்.

Monday 4 July 2011

வயதா ஒரு தடை?Part 2

ஸாண்டர்ஸின் எழுபதாவது வயதில் யூ.எஸ். கானடா ஆகிய நாடுகளில் மட்டுமே நானூறு விற்பனை நிலையங்கள் இருந்தன.  ஏற்கனவே யூ.எஸ்ஸின் கெண்டக்கி மாநிலத்தின் சமையலைப் பிரபலப்படுத்தியதற்காக அந்த மாநிலத்தின் கவர்னர், ஸாண்டர்ஸைக் கௌரவ கர்னலாக்கி சிறப்பித்திருந்தார்.  இதிலிருந்துதான் கர்னல் ஸண்டர்ஸ் என்ற பெயரும் Chicken Colonel என்ற சிறப்புப் பெயரும் பிரபலமாகின.  அந்த பெயரில் விளங்கிய கர்னலின் வரலாறு ஒரு மாபெரும் வெற்றித் தொடர்கதையாகி விட்டது.

நான்கே ஆண்டுகளில் நான்கு கோடி டாலரை வியாபாரம் எட்டிவிட்டது.  அவர் இறக்கும்வரை கடுமையாக உழைத்தார். காலை 5-00 மணிக்கே எழுந்துவிடுவார். ஒரே நாளில் நான்கு முறை உடை மாற்றுவார். நெளிவான வெந்நிற நரை முடி, சிறிய மீசை, குறுந்தாடி, வெள்ளை நிறத்திலுள்ள முழு ஸ¥ட், கறு நிறத்து போ-ட்டை. மெட்டல் ரிம் போட்ட வட்டவடிவமான கண்ணாடி. இந்த உருவம் இன்றளவுக்கும் உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளில் நிலவுகிறது.

அந்த வயதிலும் அவர் ஆண்டுதோறும் லட்சம் மைலுக்கு மேல் பிரயாணம் செய்தார்.  1968-ஆம் ஆண்டில் தம்முடைய நிறுவனத்தை அவர் இருபது லட்சம் டாலருக்கு விற்றார்.  ஆனாலும் கேஎ·ப்ஸீயின் தொடர்பை அறுத்துக்கொள்ளவில்லை. அதன் மார்க்கெட்டிங்கில் அவர் செயல்பட்டார்.

புதிய உரிமையாளர்கள் அந்த ஓராண்டில் விளம்பரத்துக்கு மட்டுமே எழுபது லட்சம் டாலர் செலவிட்டனர்.  அந்த ஆண்டின் முடிவில் விற்பனை எழுபது கோடியைத் தாண்டியது.

கர்னல் ஸாண்டர்ஸ¤க்குப் பல விருதுகள் கிடைத்தன.  உலகின் இரண்டாம் நம்பர் ஸேலெப்ரிட்டி - உலகிலேயே இரண்டாவது மிகப் பிரபலமான மனிதர் என்ற சிறப்பைப் பெற்றார்.  1977-இல் யூஎஸ் காங்கிரஸ் கமிட்டியில் 'முதுமை அடைவதை'ப் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

தர நிர்ணயத்தைப் பற்றிக் கர்னல் கூறியது: "இந்த உலகின் எந்த மூலையாக இருந்தாலும் சரி, கெண்ட்டக்கிச் சிக்கன், நான் ஆரம்பத்தில் என் கையால் சமைத்ததைப் போன்றே அமையவேண்டும்".

அந்தக் கோழிப் பொரியலின் ரெஸிப்பி இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால்தான் கேஎ·ப்ஸீ அசலைப் போன்றே வேறு சிக்கன்களைச் சமைக்க முடியவில்லை.

கேஎ·ப்ஸீ நிறுவனம் பல கைகள் மாறிவிட்டது.  2006-ஆம் ஆண்டில் மட்டும் நூறு கோடி தட்டுகள் கேஎ·ப்ஸீ சிக்கன் விற்கப் பட்டிருக்கிறது.

உழைப்பைப் பற்றி கர்னல் ஸாண்டர்ஸ் - "உழைப்பு யாரையும் கெடுத்தது கிடையாது. தேய்மானம் அடைந்து கெடுவதை விட, பெரும்பாலோர் துருப்பிடித்தே கெட்டு விடுகிறார்கள். நான் துருப் பிடித்துப் போகவே மாட்டேன்".

தம் அறுபத்தாறாவது வயதில் போண்டியாகி ஓட்டாண்டியாகி, எழுபதாவது வயதில் மீண்டும் எழுந்து நின்ற கர்னல் ஸாண்டர்ஸின் வாழ்க்கை நல்லதோர் எடுத்துக்காட்டு.

ஜோதிடத்தில் ஒன்றைச் சொல்வார்கள்.
அதன் பெயர்.....
'விருத்தாப்பிய யோகம்'.

வயதா ஒரு தடை? Part 1

கீழ்க்கண்ட கட்டுரை முதன்முதலில் என்னால் 1994-இல் எழுதப்பட்டது.

மோட்டிவேஷனல் ஆசாமி ஒருவர் நடத்திய ஓர் இதழில் அதை வெளியிடுவதற்குக் கேட்டார். அதன் பின்னர் இந்தக் கட்டுரை மேலும் சில இதழ்களில் வந்தது. அவரவர்களாகவே எடுத்துப் போட்டுக்கொண்டார்கள்.  சில ஆண்டுகள் கழித்தும்கூட நினைக்கப்பட்டும் பேசப்பட்டும் வருகிற கட்டுரை இது.

வயது ஐம்பதுக்கு மேல் ஆகிவிட்டாலேயே தமிழர்கள் கிழத்தன்மை எய்திவிட்டதாக நம்பிவிடுகிறார்கள். அவர்களின் வாழ்க்கை முறை மாறிவிடுகிறது. அவர்கள் இன்னின்னதைச் செய்யலாம்; இன்னின்னதைச் செய்யக்கூடாது; இன்னின்னதைப் பார்க்கலாம்; இன்னின்னிதைப் பார்க்கக்கூடது; இன்னின்னிதைச் சிந்திக்கலாம்; இன்னின்னதைச் சிந்திக்கக்கூடாது; இப்படி இப்படி நடக்கலாம், இப்படி இப்படி நடக்கக்கூடாது. அதைச் சாப்பிடக்கூடாது. அங்கு போகக்கூடாது. அதை ரசிக்கக் கூடாது....... இப்படியெல்லாம் பலவிதமான மனத்தடைகளை அவர்களின்மீது திணித்து விடுகிறார்கள்.  ஆகையினால் வாழ்க்கையின்மீதுள்ள ரசனையும் பிடிப்பும் குறைந்துவிடுகிறது.  இலட்சியங்களைக்கூட மறந்துவிடுகிறார்கள்.  புதிய லட்சியங்களை ஏற்படுத்திக்கொள்வதில்லை. அதனால் ஒருவகை நிராசையும் விரக்தியும் ஏற்பட்டுவிடும். முதுமையும் நோயும் தளர்ச்சியும் அவர்களுக்கு விரைவாக தோன்றி விடும்.  ஆனால் மேலைநாடுகளில் சற்று வித்தியாசமான போக்கைப் பார்க்கலாம்.

"Life starts after fifty" - ஐம்பது வயதுக்கு மேல்தான் வாழ்க்கையே ஆரம்பிக்கிறது என்று எண்ணுகிறார்கள்.

தன்னம்பிக்கைக்கு இலக்கணமாக விளங்கிய வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கொஞ்சம் விசேஷமானவர். KFC என்ற மூன்றெழுத்து உங்களுக்குப் பரிச்சயமாக இருக்கக்கூடும். கெண்டக்கி ·ப்ரைட் சிக்கன் Kentucky Fried Chicken எனப்படும் பொரித்த கோழியை அந்த மூன்றெழுத்துக்கள் குறிக்கும்.  கேயெ·ப்ஸீ என்பது தனியார் வர்த்தகத்துறையில் வெற்றியைக் குறிக்கும் ஒரு தத்துவம் என்றே கூறலாம். அந்த வெற்றித் தத்துவத்தின் சின்னமாக விளங்குவது ஓர் உருவம்.  அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 

உயரமும் பருமனும் கூடிய வயசாளி; முற்றிலும் நரைத்த நெளிவான தலை மயிர். வெண்மையான மீசையுடன்கூடிய குறுந்தாடி. வெண்ணிற ஆடை. இந்த வெண்வண்ண மயத்துக்கு மாறுபாடாக விளங்கும் ஒரே ஒரு சங்கதி - அவர் அணிந்திருக்கும் கறுப்பு நிற போ-ட்டைதான்(Bow tie).  அந்த உருவம்தான் 'சிக்கன் கர்னல்' என்று குறிப்பிடப்படும் கர்னல் ஹார்லண்ட் ஸாண்டர்ஸ் (Colonel Harland Sanders) கர்னல் ஸாண்டர்ஸைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டிய அவசியம் தமிழர்களுக்கு உண்டு.

யூ.எஸ்ஸின் இண்டியானா மாநிலத்தில் 1890-இல் ஸாண்டர்ஸ் பிறந்தார். ஆறு வயதில் தந்தையை இழந்தார். மூன்று குழந்தைகளில் அவர்தான் மூத்தவர். ஆகவே தன் தாய் வேலைக்குச் சென்றிருந்த சமயத்திலெல்லாம் அவரே சமையல் செய்வது, தம்பி தங்கைகளைப் பார்த்துக் கொள்வது போன்ற பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். எட்டு வயதாகும்போது அந்த நாளைய அமெரிக்காவின் பிரபல உணவு வகைகளைச் சமைக்கும் அளவுக்குத் திறமை பெற்றார்.

அவருடைய தாய் மறுமணம் புரிந்துகொண்டதால், தம்முடைய பன்னிரெண்டாம் வயதில் விவசாயக் கூலியாளாக வேற்றிடம் சென்றார். பிறகு டிராம் வண்டியின் கண்டக்டராக வேலை செய்தார். (டிராம் வண்டி என்பது சாலையில் பதித்து வைக்கப்பட்டிருக்கும் குழிவான தண்டவாளத்தில் ஓடும் வண்டி. மேலே போடப்பட்டிருக்கும் மின்சாரக் கம்பிகளின்மீது பட்டு ஓடும் சிறு சக்கரங்களைக் கொண்ட கம்பங்கள் டிராம் வண்டிக்கு வேண்டிய மின் சக்தியைக்கொடுக்கும். தோற்றத்தில் பஸ் மாதிரி இருக்கும்).

பிறகு கியூபா நாட்டில் ராணுவ வீரராகப் பணி புரிந்தார்.  அப்போதெல்லாம் கியூபாவில் சர்வாதிகாரிகளின் ஆட்சி நடந்துவந்தது. அமெரிக்கர்கள் அந்த நாட்டுப் படையில் சேரமுடிந்தது.  அதைத் தொடர்ந்து முப்பத்தெட்டு ஆண்டுகளின் ரயில்வே ·பயர்மேன், இன்ஷ¥ரன்ஸ் ஏஜெண்ட், கப்பல் ஏஜெண்ட், விளக்கு உற்பத்தியாளர், டயர் வியாபாரி, பெட்ரோல் ஸ்டேஷன் வேலையாள் போன்ற வேலைகளில் இருந்து பார்த்தார்.

அவருக்கு ஒரு நல்ல பழக்கம் இருந்தது. தம்முடைய வாடிக்கையாளர்களுக்காக சிற்றுண்டி தயாரித்துக் கொடுப்பார்.  அவருக்குச் சமையல் வேலை என்பது கைவந்த கலை.  அப்போதுதான் கோழிப் பொரியலைச் செய்ய ஆரம்பித்தார். இதன் ரெஸிப்பி எனப்படும் செய்யும் முறை அவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது.

பொரித்த கோழியைச் சூடாக வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கவேண்டும்.  விரைவாகவும் தயாரிக்கவேண்டும்.  ப்ரெஷர் குக்கரைப் பயன்படுத்தி, எட்டே நிமிடங்களில் ருசி குன்றாமல் பொரித்தார்.  அந்தப் பொரியலுக்கு விசேடமான மாவுக் கலவை யொன்றைப் பயன்படுத்தினார்.  அவருடைய தயாரிப்பைக் 'கெண்டக்கி ·ப்ரைட் சிக்கன்' என்று அழைத்தார்.

தம்முடைய உணவகத்தை ஸாண்டர்ஸ் க·பே என்று அழைத்தார். அது படிப்படியாக வளர்ச்சியுற்று, நூற்றைம்பது நாற்காலிகளையுடைய லட்சக்கணக்கான டாலர் பெறுமானமுள்ள நிறுவனமாக விளங்கியது.  1939-ஆம் ஆண்டில் அவருடைய ஸாண்டர்ஸ் க·பே நெருப்பில் எரிந்துபோயிற்று.  விரைவில் அதை மீண்டும் கட்டி வியாபாரத்தைத் தொடர்ந்தார்.  ஆனால் 1955-ஆம் ஆண்டு, அந்தப் பக்கத்தில் போடப்பட்ட பெருஞ்சாலைகளினால் ஸாண்டர்ஸின் வியாபாரம் வீழ்ச்சியுற்று, ஸாண்டர்ஸ் பெருங்கடனில் மூழ்கினார்.  ஓட்டல் ஏலத்தில் கைவிட்டுப் போயிற்று.
அறுபத்தாறு வயது!
கையில் ஒன்றுமே இல்லை.
சமூக நலன் இலாகாவிலிருந்து உதவித் தொகை பெறலானார்.

சிந்தித்தார்.
சிந்தனையில் கோழி கூவியது.

தம்முடைய பழைய காரில் ப்ரெஷர் குக்கரை வைத்துக்கொண்டு, கோழிப்பொரியல் மசாலாத் தூளையும் எடுத்துக்கொண்டு ஓட்டல் ஓட்டலாகச் சென்றார்.  பெரிய ஓட்டல் நிர்வாகிகளுக்கும் வேலையாட்களுக்கும் கோழிப் பொரியலைச் செய்து கொடுத்தார்.

"இது உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடைய மசாலாத் தூளை உங்களுக்கு விற்கிறேன். கோழியைப் பொரிக்கும் முறையையும் சொல்லித் தருகிறேன். நீங்கள் விற்கும் ஒவ்வொரு கோழிக்கும் நான்கு காசு வீதம் எனக்குக் கொடுத்துவிடுங்கள்", என்றார்.

இவ்வாறு தொடங்கியதுதான் KFC என்னும் Kentucky Fried Chicken.


Saturday 2 July 2011

KFC

என்னுடைய ப்லாகைப் பார்த்த ஓர் அன்பர், "என்ன டாக்டர், எல்லாம் கோழியா எழுதிப் போட்டிருக்கீங்க? KFC ஞாபகமா?" என்றார்.

KFC என்றால் Kentucky Fried Chicken.

'ஆமையும் கோழியும்', 'சூடான கோழி, சுடாத கோழி', 'பிச்சைக்காரக் கோழி' என்று மூன்று ஐட்டங்கள் திரிசூலம் ப்லாகில் இருக்கின்றன அல்லவா? அதான் கேட்டிருக்கிறார். 

இன்னும் ஒன்றும் இருக்கிறது - 'ஆமையும், மீனும், கோழியும்'. அதிலும் கோழி வருகிறது அல்லவா? 

ஒரு காலத்தில் அறவே உரைப்பு சாப்பிடுவதில்லை. வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்த்தேன்.  அடிக்கடி கோலாலும்ப்பூருக்குச் செல்ல வேண்டிவரும்.  அப்போதெல்லாம் Jalan Mesjid India என்னும் இடத்தில் உள்ள Palace Hotel-இல் தங்கியிருப்பேன். அடுத்த வீதியான பத்து ரோடில் கேய்·ப்ஸீ கடை இருந்தது. காலையில் சுட்ட ரொட்டி, மதியம் கேயெ·ப்ஸீ, மாலையில் தேத் தாரிக், இரவில் சப்பாத்தி, ஈக்கான் பாக்கார் என்னும் சுட்ட மீன், பசும்பால்.... இப்படி. வம்பில்லாத ஆகாரவகைகள்.  யாராவது பார்க்க வந்தார்கள் என்றால் சாப்பிடுவதற்கு கேயெ·ப்ஸீக்கே கூட்டிச்சென்று விடுவது. அதுதானே வம்பத்த சாப்பாடு?

இது ஒரு மாயையைத் தோற்றுவித்து விட்டது. 
பிற்காலத்தில்கூட கோலாலும்ப்பூர் செல்லும்போது புதிய அன்பர்கள்/அன்பிகள் கேயெ·ப்ஸீக் கடைக்குக் கூட்டிச்சென்றுவிடுவார்கள்.  அதுவரை எல்லாம் சரிதான். 
எதிர் ஸீட்டில் உட்கார்ந்துகொண்டு பார்த்துக்கொண்டேயிருப்பார்கள். 
கேயெ·ப்ஸீ கோழியை எப்படி நாசுக்காகச் சாப்பிடமுடியும்? அதன் விளம்பரத்திலேயே போட்டிருக்கிறான் - 'Finger Lickin' Good'.
அதுவும் பொரித்த கோழியின் முதுகெலும்புதான் ரொம்பவும் Crispy-யாக நன்றாக இருக்கும். நொறுக்கித் தின்ன வேண்டிய சங்கதி.
முன்னால் பெண்கள் உட்கார்ந்துகொண்டு பார்த்துக்கொண்டேயிருந்தால் எப்படி நொறுக்கிக் கடித்துப் பிய்த்து இழுத்துத் தின்பது?

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், கோலாலும்பூர் ஆட்கள் என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வந்தால், "கொஞ்சம் இருங்க சார்", என்று சொல்லிவிட்டு அரக்கப் பறக்க எங்கோ ஓடிச்சென்றுவிட்டு திரும்புவார்கள்.   
ஒரு மேஜையை எடுத்து என் முன்னால் வைத்துவிட்டு, பையில் இருந்த அட்டைப் பெட்டிகளை எடுத்துவைத்து, பக்குவமாகத் திறந்து, பயபக்தியோடு வைத்து, "சாப்டுங்க சார்", என்பார்கள். 
Kentucky Fried Chicken!!!
சாராயம் வைக்காததுதான் பாக்கி. 
அதற்கெல்லாம் தடையுத்தரவு போட்டாச்சு. 
இப்போதெல்லாம் பிஸ்கட்தான். 

சொல்ல மறந்துவிட்டேன். 

'வயதா ஒரு தடை' என்ற தலைப்பில் கேய்·ப்ஸீயின் தந்தை கர்னல் ஸாண்டர்ஸ் பற்றி ஓர் அருமையான கட்டுரையை எழுதியிருக்கிறேன். மலேசிய இதழ்களிலேயே மூன்று முறை அந்த கட்டுரை வெளிவந்துவிட்டது.