Tuesday 13 March 2012

RITUALISTIC PLUCKING OF MULIGAI

மூலிகை பறிக்கும் சடங்கு
சில மருத்துவ நூல்களில் எப்படி குறிப்பிட்ட மூலிகைகளை நிலத்திலிருந்து பிடுங்கவேண்டும் என்று விவரித்திருப்பார்கள். அதில் சில மர்மங்கள் அடங்கியுள்ளன.

உதாரணம் தருகிறேன்.

ஒவ்வொரு மூலிகையையும் இன்ன இன்ன நாட்களில் மட்டும்தான் பிடுங்கலாம் என்ற கடுமையான விதி உண்டு. மூலிகையின் குறிப்பிட்ட பகுதிகளைக்கூட அவற்றிற்குரிய நேரம் காலம் பார்த்துத்தான் பறிக்க முடியும்.
எந்தத் திசையில் ஓடும் வேரைப் பிடுங்கவேண்டும் என்பதில்கூட விதிகள் இருக்கின்றன.
       முதலில் அந்த மூலிகை இருக்கும் இடத்தைத் தேடிப்பிடித்து, அந்த இடத்தைச் சுத்தம் செய்யவேண்டும்.
அடுத்து, கன்னிநூல் காப்புக்கட்டவேண்டும்.
கன்னிநூல்?
புதிதாகத் திரிக்கப்பட்ட நூல்தான் கன்னிநூல்.
காப்புக்குரிய மந்திரங்கள் இருக்கின்றன.
அந்த மந்திரங்களை உச்சாரணம் செய்யவேண்டும்.

அதன்பின்னர் அந்த மூலிகைக்கு சாப விமோசனம் கொடுக்கவேண்டும்.
அந்த மூலிகையை முன் அனுமதியில்லாமல் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக அந்த மூலிகைக்கு ஒரு சாபம் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை மீறி பயன்படுத்தினால், வேண்டாத பலனோ, அல்லது பலனேயில்லாமலோ போகும். சாபவிமோசனத்துக்குரிய சடங்கும் மந்திரங்களும் உண்டு.
அடுத்த கட்டமாக, அந்த மூலிகைக்கு உயிர் கொடுக்கவேண்டும். அதற்கும் சில சடங்குகளும் மந்திரங்களும் உண்டு. அப்போதுதான் அதில் உள்ள வீரிய சத்து வேலை செய்யும். இல்லையெனில் உறங்கிக் கிடக்கும்.
அதற்கும் பின்னரே மூலிகையில் கைவைக்கவேண்டும்.
சுண்டுவிரல்கள் படக்கூடாது. எந்த விரலின் நகமும் படக்கூடாது.
குறிப்பிட்ட திசையை நோக்கித் திரும்பி அமர்ந்துகொண்டு அதனைப் பறிக்கவேண்டும்.
அதனை வீட்டிற்குக் கொண்டுவந்து அதனை வைத்திருந்து மருத்துவ நூலில் சொல்லியபடி செய்யவேண்டும்.

உதாரணத்தை இன்னும் சற்று குறிப்பாகச் சுருக்கிக்கொண்டு போவோம்.

'வெள்ளெருக்கன் வெள்ளெருக்கன்', என்றொரு செடி உண்டு.


'வெள்ளெருக்கன் வெள்ளெருக்கன்' என்பது அதன் பெயர் அல்ல. 'வெள்ளெருக்கன்' என்பது மட்டும்தான் அதன் பெயர். 'வெள்ளெருக்கன் வெள்ளெருக்கன்' என்று இருமுறை கூறியது பேச்சு மரபை ஒட்டிச் சொல்லப் பட்டது.


வெள்ளெருக்கஞ்செடி இருக்கும் இடத்தில் பாம்பு இருக்காது.
வெள்ளெக்கன் வேருக்கு பாம்பு பயப்படும். அது பற்றிய அனுபவம் எனக்கு உண்டு. ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
JayBee's Trishul ப்லாகில் அது பற்றிய கட்டுரையைப் போட்டிருக்கிறேன்.

அந்த வெள்ளெருக்கனுக்குப் பல விசேடங்கள் உண்டு.
ஆகவே வெள்ளெருக்கன் வேருக்கு அதிக கிராக்கி உண்டு.

அந்த பலவிசேடங்களில் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறிப்பிட்ட விசேட பயனுக்காக எப்படி வெள்ளெருக்கனைப் பறிப்பார்கள் என்பதைச் சொல்கிறேன்.
நன்றாக முற்றின வெள்ளெருக்கன் செடியைத் தேட வேண்டும். அந்த இடத்தை நான்கு புறமும் சுத்தம் செய்யவேண்டும். பூச நட்சத்திரம், பௌர்ணமி கூடிய ஞாயிற்றுக்கிழமையன்று கன்னிநூல் காப்புக்கட்டி, குறிப்பிட்ட மந்திரத்தால் சாப நிவர்த்தி செய்து, உயிர் கொடுத்து, தூப தீபம் காட்டி, ஜபம் செய்து செடியைச்சுற்றிலும் மண்ணைப் பறித்து, வேர் அறாமல், ஆணிவேரை மட்டும் எடுத்துக்கொண்டு வரவேண்டும். 
அதன்பின்னர் அடுத்த கட்ட வேலைகளைச் செய்யவேண்டும்.
தோராயமாகப் பார்த்தால் குறைந்தது ஏழாண்டுகளுக்கு ஒருமுறைதான் தனைச் செய்யமுடியும். அந்த astro-combination அப்படி அமைகிறது.
இதே மாதிரியான முறைகள் நைஜீரிய மாந்திரீக மருத்துவர்களிடையேயும் உண்டு. அல்லது மருத்துவ மாந்திரீகர்களா? Shaman, medicine man என்று சொல்வார்கள்.

சுவிஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் அந்த shamanகளின் முறைப்படி ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட வேளையில், ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கிச்செல்லும் ஒரு குறிப்பிட்ட செடியின் வேரைப் பறித்து எடுத்து வந்தார்கள்.
As a control, அதே போன்ற இன்னொரு செடியின் வேரையும் எடுத்து வந்தார்கள். கண்ட்ரோல் செடியின் வேரைப் பறிப்பதற்கு எந்த விதமான சடங்கையோ, விதியையோ அனுசரிக்காமல் random sampling method-ஐப் பயன்படுத்தி எடுத்து வந்தார்கள்.
இரு வேர்களையும் ஆராய்ந்தார்கள்.
அந்த சடங்கு பூர்வமான வேரில் ஒரு குறிப்பிட்ட alkaloid ருந்தது. மற்றதில் இல்லை.
இது சம்பந்தமான டாக்குமெண்டரி படம் ஒன்றை Smithsonian ஆய்வுக்கழகம் இ1980-களில் தயாரித்துள்ளது. என்னுடைய வீடியோ லைப்ரரியில் அந்த டாக்குமெண்டரி இருக்கிறது. Fungus பிடித்திருக்கக் கூடும்.

இது எப்படி என்பது அறியப்பட இயலவில்லை. (Fungus பிடிப்பதைச் சொல்லவில்லை).
வருங்காலத்தில் பஞ்சபூதக் கட்டமைப்பிற்கும் நான்கு பரிமாணங்களுக்கும் அப்பாற்பட்ட நிலைகளில் ஆய்வுகளை இயக்க முடியக் கூடிய சூழல்களை ஏற்படச்செய்ய முடியுமானால், இத்தகைய 
காரணங்களைக் கண்டறியக்கூடும்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$