Saturday 31 December 2011

MADURAI/TAMILAGAM-#1

ஐம்பதாண்டுகளுக்கு முன் மதுரை/தமிழகம்


தமிழகத்தில் - குறிப்பாக மதுரையில் நான் கண்டவை பல விஷயங்கள். அவை கவனத்தைப் பெரிதும் ஈர்த்தவை.
அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
தமிழர்களில் பலர் இப்போது விதவிதமான பாக்குத்தூள்களையும் ரெடிமேய்ட் வெற்றிலை-பாக்கு  மிக்ஸையும் பயன்படுத்துகிறார்கள்.
அந்தக் காலத்தில் வாசனைப் பாக்குத்தூள் என்றால் 'அசோகா' பாக்குத் தூள்தான் பிரபலமாகயிருந்தது. அடுத்தபடியாக மதுரையிலிருந்து தயாராகும் சாமுண்டி பாக்குத்தூள்.
புகையிலையில் 'நிஜாம்லேடி' பன்னீர்ப்புகையிலை என்ற பிராண்ட் புகழ் வாய்ந்தது. திருவிழாக்களின்போது நிஜாம்லேடி வேன் ஒன்றில் ஒலி பெருக்கியை வைத்து பாட்டுக்களைப் போட்டு மக்களை அழைத்து, இலவசமாக நிஜாம்லேடிப் புகையிலைப் பொட்டலங்களை வாரி வீசி வழங்குவார்கள்.
வைதவிர பீடாக்கடைகளில் விதவிதமான பீடா கிடைத்தது. மதுரை மேலக்கோபுரத்தெருவில் செண்ட்ரல் சினிமாவுக்கு எதிரில் வெள்ளி, தங்க ரேக்கு வைத்து சுருட்டிய பீடா கிடைக்கும். வெள்ளி ரேக்கு 2-50; தங்க ரேக்கு 25 ரூபாய். 'பான் சுப்பாரி' என்னும் வெற்றிலை பாக்குக் கலவையையும்
தயார்செய்து கொடுப்பார்கள்.
ப்போது அந்த பீடாவெல்லாம் கிடைக்கிறதா என்பது தெரியவில்லை.
ஓர் ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவென்றால் ஒரே கடையில் இருபதுக்கும் மேற்பட்ட பாக்குத்தூள் கலவை வகையறா சமாசாரங்களைக் கண்டதுதான். ஜிகினாத்தாள் பைகளில் அழகழகாகத் தோரணங்களைப் போன்று தொங்கிக்கொண்டிருந்தன. வ்வளவையும் போடுகிறார்களா, என்ன?
அவற்றில் மிக டிமாண்டோடு விற்பனையாகிக்கொண்டிருந்தது 'பான் பராக்' என்னும் ஒரு வகைப் பாக்குத்தூள்தான். வருகிறவர்கள் போகிறவர்களெல்லாம் வெடுக் வெடுக்கென்றும், பச்சக் பச்சக் என்றும் அந்தப் பைகளைப் பிய்த்து எடுத்துக்கொண்டு, காசைக்கொடுத்துவிட்டு, அப்படியே அங்கேயே நின்றவாறு ஆசைதீர பையைக் கிழித்து, உள்ளங்கையில் பான் பராக்கைக் கொட்டி, அண்ணாந்து பார்த்து வாயைத் திறந்து, அதனை வாயில் போட்டு......
அடாடாடாடா! அந்தக் காலத்தில் சீஸர்ஸ் சிகரெட்டுக்குத்தான் விளம்பரப் பலகையில் 'இழுக்க இழுக்க இன்பமடா!' என்று போட்டிருப்பார்கள். அந்த ன்பமெல்லாம் பான் பராக் தரும் இன்பத்திற்கு முன்னால் நிற்காதுபோல.
அதில் ஏதோ போதை தரும் பொருள் கலக்கப்படுவதாகச் சொன்னார்கள்.
ப்படியானால் ஏன் அதனைத் தடை செய்யவில்லை?
ல்·பி என்றொரு ஐஸ்கிரீமிலும் போதைப்பொருள் சேர்க்கப்பட்டதாக முன்பு சொன்னார்கள்.
சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர், மதுரையில் ஒரு பெரிய ஓட்டல் இருந்தது. அது அப்போதே பிரபலமானது. காப்பிக்குப் பேர் போனது. பஸ் ஸ்டாண்டுக்கும் ரயில்வே நிலையத்துக்கும் அருகில் இருந்ததால் ஏதோ ஒரு கேந்திர முக்கியத்துவம் அதற்கு ருந்தது.
காப்பி சாப்பிட நுற்றுக்கணக்கில் கியூ வரிசையில் நிற்பார்கள். முதலில் டோக்கன் வாங்க வேண்டும். அதன் பின்னர் இடம் கிடைத்து அமர்ந்தபின்னர் காப்பியைக் கொண்டுவந்து வைப்பார்கள். மீண்டும் மீண்டும் அந்தக் காப்பியைச் சாப்பிடவேண்டும் என்று தோன்றும். ந்தக் காப்பியில் மிகச் சிறிதளவு அபின் கலந்ததாக அந்தக் காலத்தில் சொல்வார்கள்.
பான் பராக்கில் புகையிலையும் வேறு ஏதோ போதைப் பொருளும் சேர்க்கப்படுவதாகச் சொன்னார்கள். வேறு சில வாசனைப்பொருள்களும் சாயமும் சேர்கின்றனவாம்.
தெல்லாம் உண்மையானால் பான் பராக் மிகவும் ஆபத்தான பொருள் அல்லவா?
ஏன், எப்படி இவ்வளவு எளிதாகக் கிடைக்கிறது? மருத்துவக்கழகம் இதைப்பற்றி ஏதும் கருத்துத் தெரிவிப்பதில்லையா? முதலில் மருத்துவக்கழகம் என்று ஒன்று இருக்கவாவது செய்கிறதா, என்ன?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Wednesday 28 December 2011

LAAVANI, AMMAANAI, DONDANG SAYANG

லாவணி, அம்மானை, டோண்டாங் ஸாயாங்


பழந்தமிழர்களிடையே பாட்டெடுத்து, பாட்டுக்குப் பாட்டெடுத்து, எதிர்ப்பாட்டு பாடி தொடர்ந்து செல்வார்கள். யாராவது தோற்கும்வரையில் அது தொடரும்.
இதை 'லாவணி' என்று சொல்வார்கள்.
இவையெல்லாமே தமிழில் உள்ள தொண்ணூற்றாறு வகை இலக்கிய வகைகளைச் சேர்ந்தவை. 
மலேசியாவில் இவற்றில் ஆற்றல் படைத்த வித்தகர்கள் இருந்தனர். ஆனால் இப்போது சிறுகதை, பு%#திய கவிதை முதலியவை மட்டுமே இலக்கியம் என்ற நிலைமையை ஏற்படுத்திவிட்டார்கள். 
ஆகவே மற்றவை அழிந்துவிட்டன. அவற்றைப் பாடிய புலவர்களும் அட்ரஸ் இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டனர். அந்த மாதிரி ஆக்கிய தமிழ்த் துரோகிகளை அமேரிக்கத் தமிழர்கள், கனேடியத்தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் சில MISFITT தமிழர்கள் சிலர் ஆதரித்து கை கொடுக்கின்றனர். இவர்களும் தமிழ்த்துரோகிகள்தாம். 
விஷயத்துக்கு வருகிறேன்.
அம்மானை என்னும் இலக்கியவகை இவ்வகையினதுதான்.
கிராமிய இசையில் பல ஒயிலாட்டப்பாடல்கள், தெம்மாங்குப் பாடல்கள் இப்படி போட்டி அடிப்படையில் செல்லும்.
மலாய்க்காரர்களிடம் இதேபோல பாட்டிலேயும் கவிதையிலும் போட்டி நடத்தும் வழக்கம் உண்டு. 
கெலாந்தான் மாநிலத்தில் டிக்கிர் பாராட் என்றொரு மரபு இருக்கிறது. 
மலாக்காவில் டோண்டாங்க் ஸாயாங்க் என்ற மரபில் ஓர் ஆண் ஒரு பெண் ஆகிய இருவர்மட்டுமே பங்கு பெறுவர். 
"எதிர்ப்பாட்டு பாடு..இல்லாவிட்டால் நீ ஓடு!" என்ற முறையில்தான் அது அமைந்திருக்கும். 
பாபா கிம் டெக் என்ற பெரியவரும் சிக் ·பாத்திமா என்னும் அம்மையாரும்  பாடுவார்கள். இருவருக்குமே பல் கிடையாது. 
அந்த அம்மாளுக்கு நிற்க முடியாது; ஆகவே நாற்காலியில் அமர்ந்த வண்ணமே பாடுவார்கள். 
        பாபா கிம் டெக்  நையாண்டி கலந்த கேள்வியை நீளமாக ராகம்போட்டு இழுத்துப்பாடுவார். 
சிக் ·பாத்திமா வெற்றிலைப் பெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு "சீரே-பினாங்க்"- வெற்றிலை-பாக்கு போட்டுக்கொண்டிருப்பார். கீழே வெற்றிலைப் பையைப் பார்த்தவண்ணமிருந்தாலும், கவனமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்.
பிறகு அவருடைய முறைவரும்போது பாபா கிம் டெக்குக்கு பதிலையும் சொல்லி, அத்துடன் அது முடிந்துவிடாமல் அதையே கேள்வியாக திருப்பிவிடுவார். சில சமயங்களில் அவருடைய பாட்டில் அடங்கியிருக்கும் விஷமம் பாபா கிம் டெக்கையே கூசவைக்கும். 
அப்புறம் என்ன?
கேட்டுக்கொண்டிருப்பவர்கள்  ஒரேயடியாகக் கூச்சல் போடுவோம்.
இளம் பெண்களெல்லாம் முகம் சிவக்க சிவக்க நெளிந்து கொண்டிருப்பார்கள்.
ஆனால் எழுந்து சென்றுவிடமாட்டார்கள்;-)
இதெல்லாம் நாற்பது ஆண்டுக்கு முந்திய கதை. இப்போது அவர்களெல்லாம் இல்லை. அந்த மரபும் கிடையாது. 


அடித்துவிட்ட பந்தை, கீழே விழ விடாமல் அப்படியே அந்தரத்தில் சஞ்சரிக்கச் செய்வது போலல்லவா சொற்சிலம்பம் ஆடியிருக்கிறார்கள்!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


Tuesday 27 December 2011

OUTRAGING RAGE ITSELF

நன்மை தந்த கோபம்

        படித்துக்கொண்டே வரும்போது ஒரு பாடல் மனதை மிகவும் கவர்ந்தது. 


கன்னிவாடி என்னும் ஒரு ஜமீன் இருந்தது. இருபதாம் நூற்றாண்டு
பிறந்த சமயத்தில் அதன் ஜமீன்தாராக அப்பையசாமி துரைப்பாண்டியன் 
என்பவர் இருந்தார். 
அக்காலத்தில் பல புலவர்களை அவர் ஆதரித்தவர். 
அவருடைய ஆஸ்தானத்தில் சரபம் முத்துசாமிக் கவிராயர் என்பவர் இருந்தார். கவிராயரை ஜமீன்தார் நன்றாகவே வைத்திருந்தார். 
         பல ஜமீன்தார்களைக் கூட்டுவித்து அவர் மத்தியில் 'சரபம்' 
என்னும் பட்டப்பெயர்கூட கொடுத்திருந்தார்.


ஆனாலும் பாருங்கள்.....ஒருமுறை ஜமீனுக்குக் கவியின்மீது கட்டுக் கடங்காத கோபம் ஏற்பட்டது. 


கன்னிவாடி பாளையக்காரர் மிகவும் கோபக்காரர். அதனாலேயே 
ரொம்பப்பேர் பயந்தார்கள். 
ஆனால் நம்ம கவிராயர் சாதாப்பட்ட ஆளோ சோதாப்பட்ட ஆளோ இல்லையே.
ஜமீன்தாரைத் தனியாகப் பார்க்கக்கூட முடியவில்லை.
அத்தனை கோபம்!
ஒருநாள் சில பெரிய மனிதர்களும் அரண்மனை அதிகாரிகளும் 
ஜமீன்தாருடன் இருக்கும்போது சரபக்கவி நேராக அந்த அவைக்குள் 
நுழைந்தார். 
அங்கிருந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.
'என்ன ஆகுமோ' என்று பயந்தவேளையில் ஒருவர் கேட்டார்,
"ராஜா உங்கள்மேல் கோபமாயிருக்கிறார் என்பது தெரியும்தானே? அப்படி 
இருக்கையில் ஏன் இங்கு நீர் வந்தீர்? அதுவும் அழையாமல்?"


சரபம் ஒரு சிறிய சிரிப்பை அலட்சியமாகச் சிந்தினார்.
ஒரு பாடலையே பதிலாகச்சொன்னார்....


விண்ணிற் கம்மிக் குமுறியிடி
வீழ்த்தி வெகுபேர் உயிரையிந்த
மண்ணுக்கிரையாப் பண்ணுமென்று
மழைமேகத்தை வெறுப்பதுண்டோ?
தண்ணிற் பொலியும் தடங்கன்னித்
தலத்தைப் புரக்கும் துரைப்பாண்டி!
எண்ணிப்பார்க்கில் உன் கோபமெல்லாம் 
நமக்கு இனிய யோகமரோ?


'விண்ணில் கம்மி, குமுறி, இடி விழச்செய்து பலருடைய உயிர்களைச் சேதப்படுத்துமே' என்று மழைமேகத்தை யாராவது வெறுப்பது உண்டா? அதற்கப்புறம் அந்த மேகம் உயிர் கொடுக்கும் தண்ணீரையும் வளத்தையும் உணவையும் அல்லவா வழங்கப்போகிறது? அதை யாராவது குற்றம் சொல்லமுடியுமா, என்ன?


அதுபோலத்தான். இப்போது மின்னல் மின்னி, குமுறி, இடி இடித்து, 
கோபத்தை வெளிக்காட்டும் கன்னிவாடிக் காவலா, துரைப்பாண்டீ.....
உன்னுடைய கோபமெல்லாம் எனக்கு இனிய யோகம் இல்லையோ? 


ஜமீன்தாருடைய கோபமெல்லாம் உடனேயே மாறிவிட்டது.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday 22 December 2011

MADURAI AND THE MAHATHMA


மதுரையும் மஹாத்மாவும்



மதுரையின் சிறப்புகள் பலவுண்டு. 
சில சிறப்புகள் கண்புறமாகப் போய்விட்டன. சில, மறக்கப்பட்டுவிட்டன. சிலவற்றை ஆட்கள் கவனிக்கவேயில்லை. 
1921-ஆம் ஆண்டுக்குப் பின்னோக்கிச் செல்வோம். 
தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி வந்த மகாத்மா காந்தி, இந்தியாவுக்காக என்ன எப்படிச் செய்யவேண்டும் என்பதை இன்னும் சரியாக முடிவு செய்யாத நேரம். 
பிரிட்டிஷ்காரர்கள் முதலாம் உலக யுத்தத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்ற காலம். யுத்தத்தில் இந்தியர்கள் பிரிட்டனுக்கு முழுமனதுடன் உதவி செய்தால் சுயாட்சி சம்பந்தமாய் முடிவு செய்வதாகச் சொன்னவர்கள் ஏதும் உருப்படியாகச் செய்யவில்லை. 
அப்போது மகாத்மா இந்தியாவை ரயில்வண்டியில் சென்று பார்க்கலாம் என்று புறப்பட்டார். 
தமிழ்நாட்டை அடைந்தபோது ஏழை விவசாயி இடுப்பில் ஒற்றை ஆடையை முழங்காலுக்கு மேல் கட்டிக்கொண்டு உழுவதைப் பார்த்தார். மற்றவர்களும் அதே மாதிரி இருப்பதையும் கண்டார். 
இந்தக் காட்சி அவருடைய மனதில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. 
மதுரை வந்து சேர்ந்தார். 
21-09-1921.
மதுரையில் மேலமாசி வீதியில் உள்ள 251-A நம்பர் கொண்ட வீட்டில் தங்கியிருந்தார்.
ஏழை இந்தியர்கள் எப்படி உடுத்தியுள்ளனரோ அதே போல் தாமும் உடுத்தப்போவதாக அறிவித்தார். 
அறிவித்தவுடன் தம்முடைய சட்டை போன்றவற்றை நீக்கிவிட்டார். 
இடுப்பில் ஒரு வேட்டியை அணிந்துகொண்டார். 
இந்தக் கோலமே 'மகாத்மா என்றால் இப்படித்தான்; இவர்தான்', என்ற அழியா உருவத்தை அனைவரின் மனத்திலும் ஆழமாகப் பதித்துவிட்டது. 
இந்த ஒற்றை ஆடைக் கோலமே பிற்காலத்தில் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மகாத்மாவை 'Half-naked Fakir' - 'அரைநிர்வாணப் பக்கிரி' என்று குறிப்பிடச்செய்தது.
எல்லாம் ஆரம்பித்தது மதுரை மேலமாசி வீதி வீடு ஒன்றில்தான். 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Wednesday 21 December 2011

STRANGE BUT TRUE-#3

செம்மான் மகள் கணவன்


ஸ்ரீவள்ளி

நான் 1978-இல் கெலாந்தான் என்னும் மாநிலத்தின் பெரிய மருத்துவ மனைக்கு வேலை மாற்றலாகிச் சென்றேன்.
அந்த மாநிலத்தின் தலைநகரமாகிய கோத்தா பாரு என்னும் நகரத்தில் அந்த மருத்துவமனை இருந்தது. அங்கேயே அருகில் ஜாலான் பாயாம் என்னும் இடத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் தங்கியிருந்தேன்.
அங்குதான் மந்திரங்களின் ஆற்றலைப் பற்றிய மிக விரிவான ஆராய்ச்சிகளைச் செய்துவந்தேன்.
அங்கு ஒரு நண்பர். டாக்டர் சிங்கம் என்று பெயர். அவரும் ஹெல்த் துறையில் இருந்துவிட்டு, விலகி சொந்தமாகக் கிலினிக் வைத்துக் கொண்டிருந்தார். அவருடைய பெயர் நீளமானது - சத்தியகுண சிங்கம். யாழ்ப்பாணியர். பின்னே இந்த மாதிரி பெயரை யாராவது கச்சிராயன்பட்டி
அம்பலக்காரரா வைத்திருக்கப் போகிறார்?


அவருடைய நண்பர் ஒருவர் சி.ஐ.டி.பிரிவில் இன்ஸ்பெக்டராக இருந்தார். என்னமோ ஒரு சிங்.
       கோத்தாபாருவின் அருகில்தான் தாய்லந்து எல்லை இருக்கிறது. அப்போது - அதாவது 1980-81=இல் தாய்லந்தில் அச்சடிக்கப்பட ஐம்பது ரீங்கிட் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் வந்தன.
       அவற்றில் ஒன்றைக் கைப்பற்றி அதை அந்த சர்தார்ஜி ஒரு பெரிய கவர்கூட்டிற்குள் போட்டு வைத்திருந்தார். மிக முக்கியமான எவிடென்ஸ்.
காணாமற் போய்விட்டது.
ரொம்பவும் ஸீரியஸான விஷயம்.
அவரும் சிங்கமும் என்னிடம் வந்தார்கள்.
ப்ரஸ்ன தந்த்ரத்தின் மூலம் அது கிடைக்கக்கூடிய பாஸிபிலிட்டீஸை Possibilities அறிந்து கொண்டேன்.
நம் இந்து சமயத்தில் பேரருளாளர்கள் பாடிய சில பாடல்களுக்குப் பெரும் ஆற்றல் உண்டு.
அருணகிரிநாதர் பாடிய பல திருப்புகழ் பாடல்கள், மயில் விருத்தம், சேவல் விருத்தம், வேல் விருத்தம், திருவகுப்புகள், கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி ஆகியவற்றின் பாடல்கள் ஆற்றல் மிக்கவை.
இவற்றில் மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுபவை கந்தர் அனுபூதியின் பாடல்கள்.
அதில் உள்ள 51 பாடல்களுக்கும் யந்திரங்கள், பிரயோகமுறைகள், பூஜாவிதானம், பலன்கள் ஆகியவை விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன.
காணாமற் போன/திருட்டுப் போன பொருள் கிடைப்பதற்கு ஒரு பாடல் இருக்கிறது.


கந்தர் அனுபூதியின் பன்னிரண்டாம் பாடல்:


செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மாபொருளொன்றும் அறிந்திலனே


இந்தப் பாடலுக்கு ஒரு மந்திரப் பிரயோகம் உண்டு. திருட்டுப்போன பொருட்கள் கிடைப்பதற்கு இந்தப் பாடலை உரிய முறைகளுடன் உருப் போடவேண்டும்.
அந்த சிங்கு எங்கே போய் உருப் போடப் போகிறார்?
ஆகவே அவருக்காக நானே உருவேற்றினேன்.


அந்த வாரக் கடைசி. லீவு நாள். ஹாலில் அமர்ந்திருந்தவன் திடீரென்று நிமிர்ந்து பார்த்தேன். ஏதோ நிழலாடியது மாதிரி இருந்தது.
அந்த சிங்கு நின்றிருந்தார்.
நிழல்கூட வரும்போது தெரியும். இந்த சீ ஐ டீ ஆத்மாக்கள் எப்படித்தான் வருவார்களோ?
"அந்தக் கவர் கிடைத்துவிட்டது. ஒரு ஷெல்·புக்கு அடியில் செருகப்பட்டிருந்தது".
"கவனக்குறைவாக நீங்கள் போட்டிருப்பீர்களோ?" என்றேன்.
"போடவில்லை. என்னுடைய மேஜை டிராவரில்தான் வைத்தேன்".
"அந்த ஷெல்·ப் அடியில் நீங்கள் தேடாமல் விட்டிருப்பீர்கள்."
"அந்த ஷெல்·ப் என்னுடைய முதுகுக்குப் பின்னால்தான் இருக்கிறது. மிஸ் பண்ணும் சாத்தியமே இல்லை. அங்கும் தேடிவிட்டேனே. யாரோ செருகி வைத்து விட்டிருக்கின்றனர்", என்றார்.
பொருள் கிடைத்துவிட்டது.


அந்தப் பாடலில்தான் அந்த 'சும்மா இரு' வருகிறது.




$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


Tuesday 20 December 2011

HIDE, HIDING, HIDDEN, GONE

காணோமே..... காணோமே -#1

        கடந்த சில ஆண்டுகளாக டிஸ்கவரி சேனலில் 'புராதன நாகரிகங்கள் நமக்குக் கொடுத்தவை' என்ற தலைப்பிலும் அதேபோன்ற வேறு சில தலைப்புகளிலும் பல விஷயங்களைக் காட்டி வருகின்றனர். 
குறிப்பாக சீனர்கள் மூவாயிரம்/ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் செய்த கண்டுபிடிப்புகளை ரொம்பவும் விலாவாரியாகக் காட்டுகிறார்கள்.
நூல்களில் கண்ட குறிப்புகள், அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த எச்சங்கள் முதலியவற்றை வைத்து பல பழம்பொருட்களை மீட்பு செய்திருக்கிறார்கள். 'புனர்சிருஷ்டி' என்று எழுத நினைத்தேன். ஆனால் இணையத்தில் உள்ள கிரந்த எதிர்ப்பாளர்கள் 'தமிழ்த் துரோகி' என்பார்கள் என்று விட்டுவிட்டேன். 
தமிழர்கள் சம்பந்தப்பட்டவை இதுவரை மிகவும் குறைவே. ஒரு கையில் உள்ள விரல்களால் எண்ணிவிடமுடியும். 
போகர் ஏழாயிரம், அகத்தியர் பன்னீராயிரம் போன்ற நூல்களில் எவ்வளவோ விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. Leibnitz Equation என்பது கடந்த அறுபது ஆண்டுகளில்தான் கொஞ்சம் பிரபலமாகியது. ஆனால் அதெல்லாம் பல காலத்துக்கு முன்னரே நம்ம ஆட்களுக்குத் தெரிந்திருந்தது.
ஆனால் நம்ம விஷயங்களை ஆராய்ந்து அக்காலத்தில் காற்றில் எழும்பும் பலூனை எப்படிச் செய்தார்கள் போன்ற விபரங்களைச் செய்து பார்க்கலாம் அல்லவா?
Weaponology, Martial Arts போன்றவற்றில் உள்ள ஆயுதங்களின் பிரயோகங்களைக்கூட நவீன சாதனங்களின் ("தமிழ்த்துரோகி!...... ஏன்..., 'தற்காலக் கருவிகள்' என்று எழுதுவதுதானே!) மூலமாக தீர்க்கமாக ஆராய்ந்து செய்து காட்டியும் இருக்கிறார்கள். 
அவர்களிடம் உள்ள வர்ம நூல் நன்கு ஆராயப்பட்டுவிட்டது. 
நம்ம வர்மக் கலை நூல் யாருக்குமே தெரியப்படாமல் மறைந்து கிடக்கிறது. 
அதன் பெயரும் ஒன்றிரண்டு விஷயங்களும் சிலருக்கு மேல் எழுந்த வாரியாகத் தெரியலாம்.
'இந்திய'னில் கமலஹாஸனும் 'கில்லி'யில் பிரகாஷ்ராஜும் காட்ட வில்லை யென்றால் அதுவும் தெரிந்திருக்காது.
இன்னும் எழுதவேண்டியிருக்கிறது.....

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


THE SEARCH

தேடல்

        இரண்டு கதைகளை இங்கே போட்டிருக்கிறேன். 
முதல் கதை சீனாவில் வழங்கும் கதை. அங்கு நிலவிய தாஓஇஸம் என்னும் சமயத்தில் காணப் படுவது.
இரண்டாவது கதை இந்தியக் கதை. உபநிஷதத்தில் காணப்படும்.

முதல் கதையைப் படித்துவிட்டு, அடுத்த கதையை அடுத்தாற்போல் உடனே படித்து விடுங்கள்.
ஒற்றுமை தெரியும்.


முதற்கதை -


Taoism என்றொரு சமயம் இருக்கிறது. சீனாவில். லாவோட்ஸ என்பவரால் தோற்றுவிக்கப் பட்டது என்பார்கள். மிகவும் பழமையான சமயம். 

தாஓயியர்களிடையே வழங்கும் ஒரு கதை. 
இதை ஏற்கனவே அகத்தியத்தில் போட்டு, இறுதியில் ஒரு கேள்வியையும் கேட்டிருந்தேன். 
யாருமே இன்றுவரை பதில் சொல்லவில்லை.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


ஒரு சன்னியாசி காட்டில் ஒரு கல்லைக் கண்டெடுத்தார். 
அதை அவருடைய தொங்கு மூட்டையில் வைத்துக்கொண்டு வந்தார். ஓர் ஊரை ஒட்டிய பெரிய மரத்தடியில் இருந்த கல்மேடையில் தம்முடைய மூட்டையை வைத்துக்கொண்டு படுத்திருந்தார். 


அப்போது ஒருவன் வேகமாக ஓடிவந்தான். 


அவன் அந்த சன்னியாசியைக் குலுக்கி எழுப்பி, "எங்கே அந்தக் கல்? அந்த அரிய கல் எங்கே? அதை கொடு" என்றான்.
"என்ன கல்?" என்று சன்னியாசி கேட்டார். 
நேற்று இரவு நிதிக் கடவுள் என் கனவில் வந்தார். அவர் " இந்த ஊருக்கு வெளியில் தங்கியிருக்கும் சன்னியாசியிடம் ஒரு கல் இருக்கும். அது உன்னை மிகப் பெரிய செல்வந்தனாக ஆக்கும்", என்று என்னிடம் சொன்னார், 

    சன்னியாசி தம்முடைய மூட்டைக்குள் குடைந்து அந்தக் கல்லை எடுத்தார். 


"நான் இந்தக் கல்லைத்தான் காட்டில் கண்டெடுத்தேன். விசித்திரமான கல். ஆகவே கையில் எடுத்துக்கொண்டு வந்தேன். இந்தா. உனக்கு வேண்டுமென்றால் எடுத்துக்கொள்," என்று சொல்லிவிட்டு அந்தக் கல்லை அவனிடம் கொடுத்துவிட்டு, கொட்டாவி விட்டுக்கொண்டே மீண்டும் மூட்டையைத் தலைக்கு வைத்துக்கொண்டு படுத்து, மறுபுறம் திரும்பிக் கொண்டு முழங்கால்களை மடக்கிக்கொண்டு, நிம்மதியாகத் தூங்கலானார். 


அந்த மனிதன் தன் கையிலிருந்த கல்லை மிகவும் வியப்புடன் பார்த்தான். 

அவனுடைய உள்ளங்கையை நிரப்பிக்கொண்டு அந்தக் கல் இருந்தது. 
உலகிலேயே மிகப் பெரிய வைரக்கல்!


வீட்டுக்குத் திரும்பினான். 
தூக்கமே வரவில்லை.
இப்படியும் அப்படியுமாகப் புரண்டுகொண்டேயிருந்தான். ஒரே குழப்பம். சிந்தனை. 
        
விடிந்தவுடன் வேகமாக அந்த மரத்தடிக்குச் சென்றான். சன்னியாசி இன்னும் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தார். 


அவரைக் குலுக்கி எழுப்பிச் சொன்னான், 


  "இந்த மகத்தான விலை மதிப்பில்லாத உயர்ந்த வைரத்தை, கூழாங்கல்லை எறிவதுபோல சர்வசாதாரணமாக எறியச் செய்த மிகப்பெரும் அரிய செல்வம் எதையோ நீ வைத்திருக்கிறாய். 
அதை எனக்குத் தா!"
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


இந்தக் கதையைப் போல பிருஹதாரண்யக உபநிஷதத்தில் ஒரு சம்பவத்தைக் காணலாம். 


யக்ஞவல்கியர் என்னும் ரிஷிக்குக் காத்யாயனி என்பவர் மனைவி. இவர் சாதாரணமான பெண்களுக்கு உரிய கடமைகளை மேற்கொண்டு குடும்பத்தை நடத்தினார். 
மைத்ரேயி என்ற இளம்பெண் ஒருநாள் காத்யாயனியிடம் வந்தார்.
யக்ஞவல்கியரோடு உடன் இருந்து ஞானத்தைக் கற்றுக்கொள்ள அனுமதி கேட்டார். 
காத்யாயனியின் அனுமதியின் பேரில் யக்ஞவல்கியருடைய மாணவியாகவும் மனைவியாகவும் உடன் இருந்தார் மைத்ரேயி.
சில காலம் கழித்து யக்ஞவல்கியர் தம் மனைவியரை அழைத்து, தாம் பூரண துறவறம் பூண வேண்டியிருப்பதால் குடும்பத்தை விட்டு விட்டுப் போகப்போவதாகக் கூறினார். 
அதற்கு முன்னதாக தம்முடைய பசுக்கள், சொத்துக்கள் ஆகியவற்றை மனைவியரிடம் கொடுத்தார். 
காத்யாயனியின் பங்குக்குக் கிடைத்தவற்றை அவர் வாங்கிக்கொண்டார்.


ஆனால் மைத்ரேயி அவ்வாறு செய்யவில்லை. 
யக்ஞவல்கியரைக் கேட்டார்.
"ரிஷிகளில் எவ்வளவோ செல்வம் படைத்தவர் நீவிர். இவ்வளவையும் க்ஷணப்பொழுதில் உதறித் தள்ளிவிட்டுப் போகிறீர். அப்படியானால் இவையெல்லாவற்றையும் விட மிகப் பெரிய அரிதான விஷயம் இருக்கிறது. சொல்லுங்கள். உலகில் பரப்பிவைக்கப்பட்ட அனைத்து செல்வங்களும் இறவாத்தன்மையை நல்குமா?" 
யக்ஞவல்கியர், "அவை கொடுக்கமாட்டா. நீ அதிக செல்வம் படைத்தவளாக இருப்பாய். அவ்வளவுதான். அவை அனைத்துமே உனக்கு இறவாத்தன்மையைக் கொடுக்கமாட்டா", என்றார். 
"அப்படியானால் நீவிர் இவற்றையெல்லாம் துச்சமாக மதித்து, விட்டு விட்டு எதை நாடிப்போகிறீரோ, அதை எனக்குக் கொடும்", என்று பிடிவாதமாச் சொல்லிவிட்டு, அவருடன் புறப்பட்டார். 
பின்னர் யக்ஞவல்கியர் மைத்ரேயியிடம் "நீ எப்போதுமே என் அன்புக்கு உரியவள். இப்போது இந்தக் கேள்வியால் இன்னும் எனக்குப் பிரியமானவள் ஆகிவிட்டாய். வா..., இப்படி அமர். நான் உனக்கு அதைச் சொல்கிறேன். அதை நீ கேட்டுக்கொண்டவுடன் அதை நீ தியானம் செய்", என்றார்
பிறகு பிரம்ம ஞானத்தை மைத்ரேயிக்கு யக்ஞவல்கியர் உபதேசம் செய்தார்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


Friday 16 December 2011

QUE SERA SERA

கே ஸெரா ஸெரா.....



பல காலத்துக்கு முன்னால் ஓர் இளைஞர் என்னிடம் கேட்ட சில கேள்விகளுக்கு ஒட்டு மொத்தமாக நான் அளித்த பதில் -
எதிர்காலத்தில் இந்து சமயம் என்னும் பெயரில் தெய்வங்களுடன் பேரம் பேசுதல், கண்மூடித் தனமான மூடநம்பிக்கைகள், ஆர்ப்பட்டமும் ஆரவாரமும் மிகுந்த வழிபாடுகள், மிகப் பெரிய சிலைகள், பெரிய ஹோமங்கள், யாகங்கள், ஏராளமான விதம் விதமான சாமியார்கள், இத்யாதி வகையறாக்கள். ஒவ்வொரு சஞ்சிகையும் எவனாவது ஒரு சாமியார்ப் பயலை - அதாவது ஏதாவது ஒருவகையில் glamourous ஆக இருக்கும் ஆசாமிகளாகப் பார்த்து எடுத்துப்போட்டு ஆதரித்து....... இப்படியே சீரழிந்துகொண்டுபோகும். சாமியார்கள் அரசியல்வாதிகள் கூட்டணிகள் தோன்றும். பணக்காரர்கள், வர்த்தகர்கள் ஆகியோர்களிடம் சாமியார்களின் செல்வாக்கு அதிகரிக்கும். குறிப்பிட்ட சில கோயில்களையும் சில தெய்வங்களையும் சஞ்சிகைகள், டீவீ ஆகியவை மூலம் பிரபலப் படுத்துவார்கள். தவறான நபர்கள் கோயில்களை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுவார்கள். மாலிக் க·பூர் அடித்ததை விட இனிமேல் கோயில்கள் மிக நாசுக்காகக் கொள்ளையடிக்கப் படும். கோயில்கள் சுரண்டல் மையங்களாக மாறி விடும். அர்ச்சகர்கள், பூசாரிகள் ஆகியோர் மக்களிடம் மூட நம்பிக்கைகளை வளர்த்து அதன்மூலம் தாங்கள் பெரும் பணக்காரர்களாக ஆகிவிடுவார்கள். 
எவ்வளவுக்கு மூடத்தனங்கள் அதிகரிக்கின்றனவோ அவ்வளவுக்கு நன்மையென்று எண்ணும் இந்துத்துவா இயக்கங்களும் இருக்கும். பிறமத எதிர்ப்பு ஒன்றையே பிரதானமாக எண்ணும் தன்மையே மேலோங்கியிருக்கும். சாதீயம் தலைவிரித்தாடும். 
உபநிஷத் போன்றவை ஆராய்ச்சிக்குரிய விஷயங்களாக இருக்கும். அதையும் யாராவது வெள்ளைக்காரர்கள் செய்வார்கள். அந்த வெள்ளைக் காரர்கள் செய்யும் ஆராய்ச்சியை நம்ம ஆட்களில் சிலர் மேற்கோள் காண்பிப்பார்கள். உயர்குடிப்பெருமான்கள் சிலர், இதனை 'மெக்காலேத் தனம்' என்று கண்டித்து புதிய வரலாறு புதிய சாத்திரங்களை ரீரைட் செய்து கொண்டிருப்பார்கள். மீடியாக்கள் அவர்களைத் தாங்கிக்கொண்டு நிற்கும். அங்கும் சாதீயம். 
இந்த வெள்ளத்தில் பரமாச்சாரியார், வாரியார் எல்லாருமே வாரிக்கொண்டு செல்லப்பட்டு விடுவார்கள். 
ஆனால் ஒன்று..............


ஆர்வமும் ஈடுபாடும் உணர்வும் ஆழமுமிக்க இளைஞர்களும் இருப்பார்கள்.
அவர்களில் சிலர் இவற்றையெல்லாம் தேடி எடுத்துப் பாதுகாத்து அடுத்தடுத்தடுத்த தலைமுறைகளைச் சேர்ந்த இளைஞர்களுக்குச் சேருமாறு செய்துவிடும் சாத்தியங்கள் கொஞ்சமாவது இருந்தால் நல்லது.  
The Flame will have to go on burning and the Torch will have to be passed from Hand to Hand.
But I doubt it very much.
Our present generation or their descendants do NOT show any promise.
May be, this is the end of the road?



$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday 15 December 2011

KAAVAL DEIVANGGAL

காவல் தெய்வங்கள் -#1

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செரம்பான் என்னும் ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கருப்பண்ண சாமியைப் பற்றி கேட்டார்.
எத்தனை வகையான கருப்பண்ணசாமிகள் இருக்கிறார்கள் என்பது கேள்விகளில் ஒன்று.
பெரியகருப்பர், சின்னக்கருப்பர், முத்துக்கருப்பர், வளைதடிக்கருப்பர், சங்கிலிக்கருப்பர், ஆத்தியடிக் கருப்பர், கோட்டைக் கருப்பர், பதினெட்டாம்படி கருப்பர், கழுவக் கருப்பர், கழுவடிக் கருப்பர், மாசாணக்கருப்பர், நொண்டிக்கருப்பர், ராங்கியம் கருப்பர் என்று வரிசையாக மனதிற்கு வந்த கருப்பர் பெயர்களைச் சொன்னேன்.
கருப்பரைப் பற்றிய நூல்கள், வலைத்தளங்கள் பற்றி கேட்டார்.
அதிகம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
வலையில் கருப்பண்ணசாமி படமே நான் ஜியோஸிட்டீஸில் போட்டுவைத்திருக்கும் படம்தான்.
வேறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. வேறு இருந்தாலும் இருக்கும்.
"கருப்பரின் அடையாளமாக உள்ளது சூலமா?" என்று கேட்டார்.
"கருப்பருக்கு அரிவாள்தான் நட்டுவைப்பார்கள்; அல்லது நிறுத்தி வைப்பார்கள். கருப்பர் அரிவாளை வலக்கையில் ஏந்தியிருப்பார். இடக்கையில் சுக்குமாத்தடி என்னும் ஆயுதம் இருக்கும். இடையில் சூரிக்கத்தி என்பது இருக்கும். வளைதடிக் கருப்பர் வளரியை வைத்திருப்பார்", என்று விளக்கினேன்.
ஆசாமி வெகு ஸீரியஸாகக் கருப்பண்ணசாமியை முறையாக வழிபடப்போவதுபோல் தெரிகிறது.


அதற்கு அடுத்தநாள்......
கோலாலும்ப்பூரிலிருந்து ஓர் அன்பர் வந்திருந்தார். "நின்னது நிக்க" என்பார்கள் அல்லவா? அதுபோல "சிறு தேவதைகள் பற்றி சொல்லுங்கள்", என்றார்.
'சிறு தேவதைகள்' என்று ஒரு காலத்தில் நானும் குறிப்பிட்டவன்தான். 
ஆனால் பின்னர் மாற்றிக்கொண்டேன். 
ரொம்பவும் சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். மலேசியாவில் ரொம்பவும் சுவாரஸ்யமாகக் கேட்கும் ஆட்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
ஆனால் என்ன?
சுவாரஸ்யமான விஷயத்தை சுவாரஸ்யமான முறையில் சொல்லக்கூடிய ஆட்கள்தாம் இல்லை.
அதுவும் சிறுகதை விமரிசனம், புதுக்கவிதை விமரிசனம் என்று உலர்ந்துபோய் வெளிறிப்போய் சோணியாய், சோகை பிடித்தமாதிரி உள்ள உரைகள் மிகவும் அதிகமாகத் திணிக்கப்பட்டு இங்குள்ளவர்கள் வெகுவாகப் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆகையால்தான் சுவாரஸ்யமான விஷயங்களை சுவாரஸ்யமாகச் சொல்லும்போது அவ்வளவு ஆர்வமுடன் கேட்கிறார்கள்.
"அப்படியானால் அந்த தெய்வங்களை எப்படிக் குறிப்பிடுவீர்கள்? கிராம தெய்வமா?" என்று கேட்டார்.
"இங்கு ஏது கிராமம்? 'காவல் தெய்வம்' என்று சொல்லவேண்டியதுதான்".
"கிராமத்தில் உள்ளதை கிராம தெய்வம் என்று சொல்லலாம்தான்".
"ஆனால் மொட்டைக்கோபுர முனியும் ஜடாமுனியும் 'பப்பரபாம்' என்று மதுரைக்கு நடுவேயல்லவா
இருக்கின்றார்கள்? வடக்குக் கோபுர வாசலில் மொட்டைக்கோபுரத்தார் என்றால் கிழக்கு வாசலில்
மதுரைவீர சுவாமி ஜாங்ஜாங்கென்று பொம்மி வெள்ளையம்மாளோடு காட்சி கொடுத்துக்
கொண்டிருக்கிறார். மொகோ.முனி, ஜ.முனி, ம.வீரப்பர்களை எப்படி கிராமத்து ஆசாமிகளாக ஆக்குவது? பக்கா நகரத்தார்கள் அல்லவா இவர்கள்?"
"சரிதான்" என்று ஒத்துக்கொண்டார்.
"இவர்களைப் பார்க்கமுடியுமா?" - இது அடுத்த கேள்வி.
"தாராளமாகப் பார்க்கலாம். பார்க்கமுடியும்."
அந்த அனுபவங்களைக் கேட்டார். விலாவாரியாகச் சொன்னேன்.
பேய்களைப் பற்றியும் அதற்கு முன்னர் கேட்டுக் கொண்டிருந்தார்.
அவர் வருவதற்கு முன்னால் டெலி·போனில் அஷ்டகர்மா பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்.
சொன்ன விபரங்களைக் கேட்டுவிட்டு அதைப் பற்றி ஒரு டாக்குமெண்ட்டரி செய்யலாம் என்று தீர்மானித்தார்.
அஷ்டகர்மா என்றால் என்ன கேட்குமுன் சொல்லிவிடுகிறேன்.....
ஸ்தம்பனம், மோஹனம், ஆகர்ஷணம், மாரணம், பேதனம், வித்வேஷணம், உச்சாடனம், வசியம் ஆகியவை.
மாந்திரீகம்.
மேல்விபரங்களுக்கு அகத்தியர் ஆவணத்திற்குள் பார்க்கவும். ஏராளமாக எழுதிவைத்திருக்கிறேன்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


Sunday 11 December 2011

TIRUPPADI TIRUVILZA

திருமுருகன் திருப்படி திருவிழா


ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா தேவியர் சமேத 
திருத்தணி ஸ்ரீமுருகன் - 

சில ஆண்டுகளுக்கு முன்புவரைக்கும் டிஸெம்பர் மாதம் 31-ஆம் தேதியன்று மாலையில் சுங்கைப் பட்டாணியிலுள்ள ஸ்ரீசுப்பிரமணியர் தேவஸ்தானத்தில் திருப்புகழ் திருப்படி திருவிழா கொண்டாடுவோம்.
இது முதன்முதலில் 1917-ஆம் ஆண்டில் வள்ளிமலை சுவாமிகள் என்னும் திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள் திருத்தணியில் தோற்றுவித்த விழா.
அக்காலத்தில் ஆங்காங்கு இருந்த வெள்ளைக்கார துரைத்தனத்தாரை டிஸெம்பர் மாதம் 31-ஆம் தேதி சென்று கண்டு மரியாதையும் விசுவாசமும் தெரிவித்துவருவது வழக்கம்.
அன்னியர்களைப் போய் இவ்விதம் பார்ப்பதை வள்ளிமலை சுவாமிகள் விரும்பவில்லை.
ஆகவே டிஸெம்பர் மாதம் 31-ஆம் தேதி மாலையில் திருத்தணி மலையில் ஏறிச்சென்று அங்கு இருக்கும் திருமுருகனை  நள்ளிரவில் விசேஷ ஆராதனைகளுடன் தரிசித்துவிட்டு வரும் வழக்கத்தை ஏற்படுத்தினார். திருத்தணி மலையின் மீது ஏறும்போது அங்குள்ள ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு திருப்புகழ்ப் பாடலாகப் பாடி ஒவ்வொரு படிக்கும் தீபாராதனை காட்டியவாறு மெதுவாக ஏறிச்செல்வார்கள்.
அதனால்தான் இந்த விழாவுக்கு திருத்தணி திருப்புகழ் திருப்படித் திருவிழா என்று பெயர்.
சுங்கைப் பட்டாணியிலுள்ள கோயிலில் பதினோரு படிகள் உண்டு. படிக்கொரு திருப்புகழாக பதினோரு பேர் பாடி, தேங்காய் உடைத்து, தீபாராதனை காட்டி வழிபடுவது வழக்கம். அதன் பின்னர் அன்னதானம் நடைபெறும்.
அடுத்த நாள் ஜனவரி 1-ஆம் தேதி சுங்கைப் பட்டாணி சித்தி விநாயகர் கோயிலில் விக்னநாசன விக்னேஸ்வரப் பூஜையை நிகழ்த்துவோம். அன்று மாலையும் அன்னதானம் இருக்கும்.
இதைச் சில ஆண்டுகள் நடத்திவந்தோம்.


திருத்தணித் திருப்புகழ்.


நினைத்த தெத்தனையிற் தவறாமல்
நிலைத்த புத்திதனைப் பிரியாமற்
கனத்த தத்துவமுற் றழியாமல்
கதித்த நித்திய சித் தருள்வாயே


மனித்தர் பத்தர்தமக் கெளியோனே
மதித்த முத்தமிழிற் பெரியோனே
செனித்த புத்திரரிற் சிறியோனே
திருத்தணிப் பதியிற் பெருமாளே


நினைத்தது எத்தனையில் தவறாமல்
நிலைத்த புத்திதனைப் பிரியாமல்
கனத்த தத்துவம் முற்று அழியாமல்
கதித்த நித்திய சித்து அருள்வாயே


மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே
மதித்த முத்தமிழில் பெரியோனே
செனித்த புத்திரரில் சிறியோனே
திருத்தணிப் பதியில் பெருமாளே


அந்தப் பாடலில் 'மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே' என்று குறிப்பிட்டிருப்பதுபோல் பாடலும் மிக எளிமையான எளிதான பாடல்.
காரியசித்திக்காக முருகனை வேண்டி பக்தர்கள் நம்பிக்கையோடு பாடும் பாடல் இது.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Wednesday 7 December 2011

PEPPE! PEPPE!

     
பெப்பே, பெப்பே, பே, பே!!!


        பேயாராய்ச்சி என்னும் துறையில் பெயராராய்ச்சி என்னும் பேராய்ச்சி செய்தபோது, 'பெப் பெப் பெப் பே' என்ற ஒலிக்கோர்வை வந்தது. அது ஒரு       பழைய கதையை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது.
       இந்தக் கதை ஒரு பழம் மரபுவழிக்கதை(Traditional story).அகத்தியத்தில் இந்த மாதிரி மரபுவழிக்கதைகள் செவிவழிக்கதைகள் ஆகியவற்றை அவ்வப்போது சொல்வது உண்டு. அகத்தியப் பழைய ஆவணங்களில் தேடினால் பல ரசமான கதைகள் கிடைக்கும்.


        லோன்நாதன் என்ற பெயர் கொண்டதொரு ஆசாமி ஒரு பெரும் கடனாளியாக  இருந்தான். அக்கடனை எப்படிச் சமாளிப்பது என்றே அவனுக்குப் புரியவில்லை.
        அவனுடைய நெருங்கிய நண்பன் ஒருவன். அவனிடமும் அந்த ஆசாமி கடன் வாங்கியிருந்தான்.
        ஒருநாள், அந்த நண்பனிடம் லோன்நாதன் தன்னுடைய கடன் நிலைமையைச் சொல்லி அழுது, எப்படி மீள்வது என்ற யோசனையைக்
கேட்டான்.
நண்பன் சொன்னான்:
"நான் ஒரு அயனான வழியைச்சொல்லித் தருகிறேன். இதன்மூலம் எல்லாருடைய கடனுக்கும் நீ டேக்காக் கொடுத்துவிடலாம். ஆனால் ஒன்று.
எனக்குத் தரவேண்டியதை மட்டும் நீ தந்துவிடவேண்டும். சரிதானே?"


     லோன்நாதன்: "சரி. உன்னுடையதைக் கொடுத்துவிடுகிறேன். வழியைச் சொல்லு".


நண்பன்: "இன்றிலிருந்து நீ வீட்டிலேயே இருந்து கொண்டு விடு. மழங்க மழங்க முழி. எதையும் கண்டுகொள்ளக்கூடாது. யார் எது கேட்டாலும் 'பே பே; பே பே' என்றே சொல்லவேண்டும்".


      அதன்படி, லோன்நாதன் வீட்டுக்குள் இருந்து கொண்டு வெறித்த பார்வையோடு இருந்தான். யார் வந்து என்ன கேட்டாலும் 'பே பே' என்று
சொன்னான். கடன் தொல்லையால் லோன்நாதனுக்குச் சித்தபிரமை பிடித்து விட்டது என்று கடன்காரர்கள் எல்லாரும் நம்பினர். ஆகவே கடனை இனி வசூலிக்கமுடியாது என்று முடிவுகட்டி, கடனுக்குத் தண்ணி தெளித்துவிட்டனர்.


       சில நாட்கள் கழித்து நண்பன் லோன்நாதனின் வீட்டுக்குச் சென்றான்.
அவனைப் பார்த்து மிகவும் சந்தோஷமாக, "பார்த்தாயா உன்னுடைய கடனெல்லாம் ஒழிந்து போயிற்று." என்றான்.
       லோன்நாதன் ஒன்றும் சொல்லவில்லை. நண்பன் தொடர்ந்து பேசினான்.
       லோன்நாதன் எதற்குமே பதில் சொல்லவில்லை.
       கடைசியில் நண்பன், "என்னப்பா என்னுடைய கடனை இப்போது நீ தீர்த்து விடலாம்தானே?" என்றான்.
        லோன்நாதன் மழங்க மழங்க விழித்தான் தன் முன்னால் எதையும் குறித்துப் பார்க்காமல், வெறித்துப் பார்க்கலானான்.
       லோன்நாதனிடமிருந்து கடைசியாக பதில் வந்தது:



       "பே பே; பே பே!"

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$