Friday 23 March 2012

THE SIDDHAR IDAIKAADAR AND THE PLANETS

இடைக்காடர் சித்தரும் நவக்கிரகங்களும்

இந்த உலகில் நிகழும் நிகழ்ச்சிகளுக்கும் மனிதனின் விதிக்கும் கிரகங்கள்தாம் காரணம் என்று இந்து மக்கள் நினைக்கிறார்கள். நம்புகிறார்கள். ஆனால் அப்படியும் சொல்லிவிடமுடியாது. அவை indicators. ஆனால் சற்று கூடுதலான ஆற்றல்கள் பெற்ற indicators. சுட்டிகள் அல்லது சுட்டிக் காட்டிகள்.


நம்முடைய வினைகள் - கர்மாக்கள் ஆகிய பிராரத்தம் சஞ்சிதம் ஆகாமியம் ஆகியவற்றைப் பொருத்து அவற்றின் பலன் அமையும். அந்தப் பலனைச் சுட்டிக்காட்டும் வண்ணம் அவை நின்றுகாட்டும்.


பரிகாரங்கள் செய்வதால் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே மாற்றங்களைச் செய்யலாம்.


இரண்டு மூன்று கதைகள் இருக்கின்றன. உங்களின் பொருட்டு சொல்கிறேன்.


இடைக்காடர் என்றொரு சித்தர். அவர் ஜோதிடத்திலும் வல்லவர்.
அவருடைய கணிப்பின்மூலம் பன்னிரண்டாண்டுகள் பஞ்சம் ஏற்படும் என்று கண்டறிந்தார். ஆகவே பால் கொடுக்கும் எருமையொன்றை வைத்துக் கொண்டார். வரகரிசி என்னும் தானியத்தை மாட்டுச்
சாணத்துடன் சேர்த்து, ஆயிரக்கணக்கில் எரு வரட்டி தட்டி, காயவைத்துக்கொண்டார்.
வரகு வைக்கோலையும் வைத்து பிரம்மாண்டமான கூடமொன்றைத் தயாரித்துக்கொண்டார். ஒரு முருங்கை மரத்தையும் வைத்துக்கொண்டார்.


பஞ்சம் வந்தது.
எருமைக்கு வரகு வைக்கோலைப் போட்டார். அது எருமையாதலால் உண்டது. எரு வரட்டியில் உள்ள வரகரிசியை உதிர்த்து அதனைத் தாம் உண்டார். எருமையின் பாலை அருந்திவந்தார். அது தொடர்ந்து பால் கொடுக்கும் வகையில் அதற்கு ஏற்ற மூலிகைகள் - காயவைத்துப் பக்குவம் செய்யப்பட்ட மூலிகைகளைக் கொடுத்துவந்தார்.
முருங்கைக் கீரையையும் பக்குவப்படுத்தி உண்டுவந்தார். முருங்கை மரத்துக்கு எருமையின் சாணமும் கழிவு நீரும் கிடைத்து வந்தன.
ஹாயாக வரகு வைக்கோல் பரணுக்குக்கீழே படுத்துக்கொண்டார்.
இப்படியே சில மாதங்கள் கழிந்தன.


விண்ணில் உள்ள கிரகங்கள் கீழே பார்த்தன.


எங்கும் பஞ்சம்.


ஆனால் இடைக்காடரின் பர்ணசாலையில்மட்டும் வளம் விளங்கியது.


கிரகங்களுக்கு ஆச்சச்சரியம். ஆம். ஆச்சச்சரியம்தான். ஆச்சர்யம் அளவு கடக்கும்போது அது ஆச்சச்சர்யம் ஆகும்.
தில்மூலநாயனாரின் சரடேஸ்வர தீபிகையில் 420-ஆம் சூத்திரத்தில் இதன் இலக்கணத்தைக் காணலாம்.


"யென்னடாயிது...? இந்தப் பாண்டிநாட்டுக்கு வந்த விசித்திரம்! எல்லாப் பாளையக்காரர்களும் பணிந்துவிட்டார்கள்; பசியோடு இருக்கிறார்கள். இவன் ஒருவன் மட்டும் பசியாமலிருப்பது நமக்கென்ன லேபமா? வாருங்கள்... போய்ப் பார்ப்போம். இந்த இடைக்காடனின் கொட்டத்தை யடக்க ஒரு திட்டத்தைப் போடுவோம்", என்று கட்டபொம்மன் படத்தில் மேஜர் பானர்மேன் ஜாவர் சீதாராமன் போல் பேசிக்கொண்டு வந்தார்கள்.


இறங்கிவந்தார்கள்.


"ஆ...ர்ஹ்ஹ்ஹ்ஹ்......யிந்த வரகு வைக்கோல் கோட்டையை வைத்துக்கொண்டா மனக்கோட்டையைக் கட்டினான். யிப்போதே ராகு கேதுவை வைத்து ஒரு வழிபண்ணுகிறோம் பார்!"


இடைக்காடர் அவர்களை வரவேற்றார். அவர்களுக்குரிய மந்திரங்களில் வசிய, சம்மோஹணப் பிரயோகங்களை இணைத்து உச்சாரணை செய்து, அவர்களுக்கு எருமைப் பாலில் வரகரிசியைப் போட்டு கொதிக்கவைத்து சாப்பிடக் கொடுத்தார். அதனைச் சாப்பிட்ட கிரகங்கள் உறக்கத்தில் ஆழ்ந்தனர்.


அப்போது பார்த்து, இடைக்காடர் மிக விரைவாக ஒரு பெரிய இராசிக் கட்டத்தை வரைந்து, அந்தக் கிரகங்களை, இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து எப்படி எங்கெங்கு இருப்பார்களோ அந்த மாதிரியாகக் கட்டங்களில் அடைத்துவைத்து விட்டார்.
அடுத்த வினாடி, மழைமேகங்கள் கூடி மழையைப் பெய்து, நீர் புரண்டு ஓடியது.
பஞ்சமும் நீங்கியது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

THE SURGEON AND YOGA-SIDDHI

சர்ஜனும் யோகாவும்

பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவைப் பிடிக்க ஆரம்பித்த சமயத்திலிருந்தே மேல்நாட்டு மருத்துவம் இந்தியாவுக்கு வந்துவிட்டது.


கிழக்கிந்தியக் கம்பெனியில் மருத்துவர்கள் இருந்தார்கள். அத்துடன் படைப் பிரிவுகளிலும் Army Surgeons என்னும் பதவிகள் இருந்தன.


ஓரளவுக்கு நல்ல சம்பளமாகவும் இருந்திருக்கிறது.


அப்போதெல்லாம் பல போர்களும் சண்டைகளும் நடந்துகொண்டேயிருந்தன. பிரிட்டிஷ் பட்டாளம் கண்ட கண்ட இடங்களுக்கெல்லாம் செல்ல வேண்டியிருந்தது.


இந்தியாவில் அலோப்பதி மருத்துவத்தின் ஆர்ம்பகாலத்தைப் பற்றி நான் ஒரு சிறிய ஆராய்ச்சி செய்ததில் ஒரு விசித்திரமான சர்ஜன் பற்றி தெரியவந்தது.


சர்ஜன் ரெஜினால்ட் என்பது அவருடைய பெயர்.


தாம் இருக்கும் இடத்தைச் சுற்றிலும் இந்தியர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்காக தக்க துணையுடன் வெளியில் சென்று உலாவுவார்.


அப்போது சில யோகியர் நெருப்புமேல் நடப்பது, ஆணிப்படுக்கையில் படுப்பது, மூச்சை அடக்குவது, இதயத்தை நிறுத்துவது போன்றவற்றையெல்லாம் செய்வதைப் பார்த்திருக்கிறார்.


இதைக் கேம்ப்புக்கு வந்து அவர்களுடைய Lounge Pub-இல் சொல்லியிருக்கிறார்.


அதற்கு அவர்கள், "இதெல்லாம் சும்மா கப்ஸா என்பதை நீயும் அறிவாய். நாங்களும் அறிவோம். இதையெல்லாம் நீ நம்புகிறாயா?" என்றார்கள்.
அவர் சொன்னார்: "இல்லை. நானும் நம்பவில்லை. ஆனால் என் கண்களால் நேரில் பார்த்தேன்".


அவர் மற்றவர்கள் போலல்லாமல் ஓய்வு நேரமிருக்கும்போதெல்லாம் யோகியரைத் தேடிச் செல்வார்.


ஒருநாள் பக்கத்து கிராமத்தில் ஒரு யோகியார் தன்னுடைய உயிரை விடப்போகிறார் என்பதை அறிந்து அங்கு சென்றார்.


யோகியார் ஒரு மரத்தடி மேடையின்மீது அமர்ந்துகொண்டார்.
அவர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நேரத்தில் அவர் மூச்சு விடுவதையும் நிறுத்தினார். அவருடைய இதயமும் நின்றது.


அவர் உடற்கூட்டுக்குள் ஒருவரும் இல்லை.


இது ரெஜினால்டுக்கு ஒரு திருப்புமுனையாகப் போயிற்று


யோகியரைத் தேடித்தேடி அங்கும் இங்கும் செல்லலானார், ரெஜினால்ட். அவர்களுடன் பழகுவார்.
திரும்பிவந்து Army Mess-இல், தனியாக உட்கார்ந்துகொண்டு பைப்பை வாயில் கடித்தவாறு எங்கோ பார்த்துக்கொண்டிருப்பார். நடுவில் அடிக்கடி, "ஹ்ம்ம்ம்...." என்று ஓசையெழுப்பியவாறு இருப்பார்.


அரசாங்கம் அவருக்கு ஆறுமாததுக்குக் கட்டாய விடுமுறை கொடுத்து இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தது.
"தாமாகப் பேசிக்கொண்டிருப்பது. நாம் சொல்வதைக் காதில் வாங்காமல் வெறித்த பார்வையோடு எங்கோ பார்த்துக்கொண்டிருப்பது.... இப்படியெல்லாம். ஆறுமாதம் இங்கிலாந்தில் இருந்துவிட்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும்", என்று மற்றவர்களிடம் அவருடைய கமாண்டர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.


யோகியரைப் பற்றிய சர்ஜன் ரெஜினால்டின் ஆராய்ச்சிதான் அந்தத் துறையில் மேற்கத்தியாரின் அறிவியல்பூர்வமான முதல் ஆராய்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Wednesday 14 March 2012

INCREDIBLE SCIENCES AND ABILITIES-#1

அதிசய ஆற்றல்கள்-#1

இதே மாதிரியான பல மடல்களை அகத்தியரிலும் வருங்காலவியலிலும் எழுதியுள்ளேன். 
இன்னும் எழுதப்படவேண்டியவை நிறைய இருக்கின்றன. 
இந்தத் தொடரையும் எழுதித் தொடரலாம் என்று எண்ணுகிறேன்.
இவற்றைத் தொகுத்து நூலாகப் போடலாம்.


படியுங்கள்.....


ஒரு மடலில் பருவநிலை பற்றிய பஞ்சாங்க விதிகள், குறிப்புகள், வராஹமிஹிரரின் ப்ருஹத் ஸம்ஹிதை முதலிய விஷயங்களைப் பற்றி தொட்டு எழுதியிருந்தேன்.
இந்த மாதிரி துறைகளைப் பற்றி எத்தனையோ நூல்கள்; அந்த நூல்களில் எத்தனையோ பாடல்கள்; அந்தப் பாடல்களில் கண்ட எத்தனையோ விதிகள், காம்பினேஷன்கள், குறிப்புகள்.....
இவற்றையெல்லாம் அப்படியே துடைத்து ஒதுக்கித் தள்ளி விட முடிய வில்லை. 
ஏனெனில் அவை உண்மையாகவே வேலை செய்கின்றன. 
ஏன் வேலை செய்கின்றன, எப்படி வேலை செய்கின்றன...? 
இதெல்லாம் அப்பாலுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்.


மதுரையில் தெற்காவணிமூல வீதியில் மதுரை ஆதீனம் இருக்கிறது.         அதன் வாயிலுக்கு அருகில் தரையிலிருந்து ஐந்தடி உயரத்தில் ஒரு சிறிய குறுகிய கடை. அதில் சுத்தமான கோரம்பாய் விரித்து வைத்திருக்கப் பட்டிருக்கும். நல்ல நறுமணம் மிகுந்த ஊதுபத்திகள் எப்போதுமே புகைந்து கொண்டிருக்கும். 
அங்கு ஒரு தரை மேஜை. அங்கு சடாட்சரம் என்று ஒரு ஜோசியர் அமர்ந்துகொண்டு ஜோதிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
அவருக்கு அருகில் எப்போதுமே நான்கைந்து பேர் அமர்ந்திருப்பார்கள். சடாட்சரம் பிறருக்கு ஜோசியம் சொல்வதை இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படி பார்த்துக் கொண்டிருந்தே ஜோதிடத்தைப் பற்றி நன்கு அறிந்து கொண்டுவிடுவார்கள்.
பிறப்புக் குறிப்புகளைக் கொடுத்தால் வெகு வேகமாக மனக் கணக்காகவே எல்லாவற்றையும் போட்டு ராசிச்சக்கரத்தை வரைந்து விடுவார்.
அதில் காணப்படுகின்ற விஷயங்களை அப்படியே ஆய்ந்து, பகுத்து பலன்களைச் சொல்லிவிடுவார். அந்த ஆய்வுகளுக்கும் பகுப்புகளுக்கும் கணிப்புகளுக்கும் சான்றாக அவர் பல பாடல்களைச் சொல்வார். 'கடல்மடை திறந்தன்ன' என்பார்களே, அதுபோலத்தான் அவருடைய பாடல்களும். பீறிட்டுக்கொண்டு வரும். 
அவருக்குப் பதினோராயிரம் பாடல்கள் தெரியும் என்று ஒருமுறை சொன்னார். அவை அவருக்கு மனப்பாடமாக விளங்கின.
பதினோராயிரம் பாடல்கள் என்றால் அவற்றில் ஆயிரக்கணக்கான ஜோதிட விதிகள், காம்பினேஷன்கள், குறிப்புகள் இருந்திருக்கும். 
இந்தப் பாடல்களின் உதவியோடு அவர் துள்ளிதமாகப் பலன் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஓர் ஆள் பதினோராயிரம் பாடல்களை மனப்பாடமாக வைத்திருக்க முடியுமா?
முடியும். 
அப்படிப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். வன்றொண்டர் செட்டியார், பழனி மாம்பழக் கவிச்சிங்க நாவலர் முதலியோர் அப்படிப்பட்டவர்கள்.
இதைப் பற்றியும் அகத்தியரில் எழுதியுள்ளேன்.


அந்தப் பாடல்கள் Input. ஏதோ சில வகைகளில் Computing பண்ணி, ஒன்றுடன் ஒன்றைப் பொருத்தியும் சேர்த்தும் பகுத்தும் ஆய்ந்தும் பலன்களை விரல்நுனிக்குக் கொண்டுவந்தார். 
இன்னும் இருக்கே.....?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Tuesday 13 March 2012

RITUALISTIC PLUCKING OF MULIGAI

மூலிகை பறிக்கும் சடங்கு
சில மருத்துவ நூல்களில் எப்படி குறிப்பிட்ட மூலிகைகளை நிலத்திலிருந்து பிடுங்கவேண்டும் என்று விவரித்திருப்பார்கள். அதில் சில மர்மங்கள் அடங்கியுள்ளன.

உதாரணம் தருகிறேன்.

ஒவ்வொரு மூலிகையையும் இன்ன இன்ன நாட்களில் மட்டும்தான் பிடுங்கலாம் என்ற கடுமையான விதி உண்டு. மூலிகையின் குறிப்பிட்ட பகுதிகளைக்கூட அவற்றிற்குரிய நேரம் காலம் பார்த்துத்தான் பறிக்க முடியும்.
எந்தத் திசையில் ஓடும் வேரைப் பிடுங்கவேண்டும் என்பதில்கூட விதிகள் இருக்கின்றன.
       முதலில் அந்த மூலிகை இருக்கும் இடத்தைத் தேடிப்பிடித்து, அந்த இடத்தைச் சுத்தம் செய்யவேண்டும்.
அடுத்து, கன்னிநூல் காப்புக்கட்டவேண்டும்.
கன்னிநூல்?
புதிதாகத் திரிக்கப்பட்ட நூல்தான் கன்னிநூல்.
காப்புக்குரிய மந்திரங்கள் இருக்கின்றன.
அந்த மந்திரங்களை உச்சாரணம் செய்யவேண்டும்.

அதன்பின்னர் அந்த மூலிகைக்கு சாப விமோசனம் கொடுக்கவேண்டும்.
அந்த மூலிகையை முன் அனுமதியில்லாமல் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக அந்த மூலிகைக்கு ஒரு சாபம் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை மீறி பயன்படுத்தினால், வேண்டாத பலனோ, அல்லது பலனேயில்லாமலோ போகும். சாபவிமோசனத்துக்குரிய சடங்கும் மந்திரங்களும் உண்டு.
அடுத்த கட்டமாக, அந்த மூலிகைக்கு உயிர் கொடுக்கவேண்டும். அதற்கும் சில சடங்குகளும் மந்திரங்களும் உண்டு. அப்போதுதான் அதில் உள்ள வீரிய சத்து வேலை செய்யும். இல்லையெனில் உறங்கிக் கிடக்கும்.
அதற்கும் பின்னரே மூலிகையில் கைவைக்கவேண்டும்.
சுண்டுவிரல்கள் படக்கூடாது. எந்த விரலின் நகமும் படக்கூடாது.
குறிப்பிட்ட திசையை நோக்கித் திரும்பி அமர்ந்துகொண்டு அதனைப் பறிக்கவேண்டும்.
அதனை வீட்டிற்குக் கொண்டுவந்து அதனை வைத்திருந்து மருத்துவ நூலில் சொல்லியபடி செய்யவேண்டும்.

உதாரணத்தை இன்னும் சற்று குறிப்பாகச் சுருக்கிக்கொண்டு போவோம்.

'வெள்ளெருக்கன் வெள்ளெருக்கன்', என்றொரு செடி உண்டு.


'வெள்ளெருக்கன் வெள்ளெருக்கன்' என்பது அதன் பெயர் அல்ல. 'வெள்ளெருக்கன்' என்பது மட்டும்தான் அதன் பெயர். 'வெள்ளெருக்கன் வெள்ளெருக்கன்' என்று இருமுறை கூறியது பேச்சு மரபை ஒட்டிச் சொல்லப் பட்டது.


வெள்ளெருக்கஞ்செடி இருக்கும் இடத்தில் பாம்பு இருக்காது.
வெள்ளெக்கன் வேருக்கு பாம்பு பயப்படும். அது பற்றிய அனுபவம் எனக்கு உண்டு. ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
JayBee's Trishul ப்லாகில் அது பற்றிய கட்டுரையைப் போட்டிருக்கிறேன்.

அந்த வெள்ளெருக்கனுக்குப் பல விசேடங்கள் உண்டு.
ஆகவே வெள்ளெருக்கன் வேருக்கு அதிக கிராக்கி உண்டு.

அந்த பலவிசேடங்களில் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறிப்பிட்ட விசேட பயனுக்காக எப்படி வெள்ளெருக்கனைப் பறிப்பார்கள் என்பதைச் சொல்கிறேன்.
நன்றாக முற்றின வெள்ளெருக்கன் செடியைத் தேட வேண்டும். அந்த இடத்தை நான்கு புறமும் சுத்தம் செய்யவேண்டும். பூச நட்சத்திரம், பௌர்ணமி கூடிய ஞாயிற்றுக்கிழமையன்று கன்னிநூல் காப்புக்கட்டி, குறிப்பிட்ட மந்திரத்தால் சாப நிவர்த்தி செய்து, உயிர் கொடுத்து, தூப தீபம் காட்டி, ஜபம் செய்து செடியைச்சுற்றிலும் மண்ணைப் பறித்து, வேர் அறாமல், ஆணிவேரை மட்டும் எடுத்துக்கொண்டு வரவேண்டும். 
அதன்பின்னர் அடுத்த கட்ட வேலைகளைச் செய்யவேண்டும்.
தோராயமாகப் பார்த்தால் குறைந்தது ஏழாண்டுகளுக்கு ஒருமுறைதான் தனைச் செய்யமுடியும். அந்த astro-combination அப்படி அமைகிறது.
இதே மாதிரியான முறைகள் நைஜீரிய மாந்திரீக மருத்துவர்களிடையேயும் உண்டு. அல்லது மருத்துவ மாந்திரீகர்களா? Shaman, medicine man என்று சொல்வார்கள்.

சுவிஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் அந்த shamanகளின் முறைப்படி ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட வேளையில், ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கிச்செல்லும் ஒரு குறிப்பிட்ட செடியின் வேரைப் பறித்து எடுத்து வந்தார்கள்.
As a control, அதே போன்ற இன்னொரு செடியின் வேரையும் எடுத்து வந்தார்கள். கண்ட்ரோல் செடியின் வேரைப் பறிப்பதற்கு எந்த விதமான சடங்கையோ, விதியையோ அனுசரிக்காமல் random sampling method-ஐப் பயன்படுத்தி எடுத்து வந்தார்கள்.
இரு வேர்களையும் ஆராய்ந்தார்கள்.
அந்த சடங்கு பூர்வமான வேரில் ஒரு குறிப்பிட்ட alkaloid ருந்தது. மற்றதில் இல்லை.
இது சம்பந்தமான டாக்குமெண்டரி படம் ஒன்றை Smithsonian ஆய்வுக்கழகம் இ1980-களில் தயாரித்துள்ளது. என்னுடைய வீடியோ லைப்ரரியில் அந்த டாக்குமெண்டரி இருக்கிறது. Fungus பிடித்திருக்கக் கூடும்.

இது எப்படி என்பது அறியப்பட இயலவில்லை. (Fungus பிடிப்பதைச் சொல்லவில்லை).
வருங்காலத்தில் பஞ்சபூதக் கட்டமைப்பிற்கும் நான்கு பரிமாணங்களுக்கும் அப்பாற்பட்ட நிலைகளில் ஆய்வுகளை இயக்க முடியக் கூடிய சூழல்களை ஏற்படச்செய்ய முடியுமானால், இத்தகைய 
காரணங்களைக் கண்டறியக்கூடும்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Monday 12 March 2012

THE SAINT OF AJMIR



ஆஜ்மீரின் சித்தர் ஹஸ்ரத் க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி


ஆஜ்மீர் என்னும் ஊர் வடநாட்டில் இருக்கிறது. அங்கு ஹஸ்ரத் க்வாஜா முய்னுதீன் சிஷ்டி என்னும் பீர் - சித்தர், ஞானியின் தர்க்கா இருக்கிறது. இந்திய துணைக்கண்டத்திலும் தென்கிழக்காசியாவிலும் உள்ள முஸ்லிம் ஸ¥·பி மார்க்கத்தில்ன் முக்கிய பிரிவுகளில் ஒன்றான சிஷ்டியா மார்க்கத்தின் கர்த்தா. 

அவர் பாரசீகத்தில் பிறந்தவர். இளவயதில் அவருக்கு ஒரு ஞானி அருள் செய்தார். அப்போது அவருக்குப் பேரானந்தமும் ஞானத்தேடலும் ஏற்பட்டது. தன்னுடைய உடமைகளையெல்லாம் ஏழைகளுக்குத் தானம் செய்துவிட்டு உலகப் பற்றுக்கள் அனைத்தையும் வெட்டிவிட்டார்.  ஊர் ஊராகச்சென்றார். ஒரு மஹாஞானியை குருவாக அடைந்தார். 

அந்த மகாகுருவிடம் அவர்கூடவே இருபது ஆண்டுகள் இருந்து 
பணிவிடைகள் செய்து கற்கவேண்டியவற்றையெல்லாம் கற்றார். அதன் 
பிறகு அவர் மெக்காவுக்கும் மெடினாவுக்கும் தம் குருவால் அழைத்துச்
செல்லப்பட்டார். அங்கு இருக்கும்போது நபிகள் நாயகம் (சல்) அவர்களால் இந்தியாவுக்குச்சென்று மார்க்கத்தை மக்களிடையே பரப்புமாறு ஆணையிடப் பெற்றார். 

அராபியாவிலிருந்து இன்றைய பாரசீகம், ஆ·ப்கானிஸ்தான், உஸ்பெக் நாடுகள் வழியாக இந்தியாவுக்கு வந்தார். வரும் வழியில் அவருக்குப் பல சீடர்கள். பல அற்புதங்களையும் அவர் செய்து நோய்களைத் தீர்த்தார். ராஜஸ்தான் என்று இன்று அழைக்கப்படும் ரஜபுதனாவில் தங்கினார். கிபி 1190-ஆம் ஆண்டில் அவர் ஆஜ்மீருக்கு வந்தடைந்தார். அப்போது அவருக்கு 53 வயது. 
அவர் வந்த சமயத்தில் ஆஜ்மீரை பிரிதிவிராஜ் மன்னர் ஆண்டு கொண்டிருந்தார். 

அவர் தங்கியிருந்த இடத்திற்கே வந்து ஆயிரக்கணக்கானவர்கள் தரிசித்துச் சென்றனர். பிரிதிவிராஜ் மன்னரின் ராஜகுருகூட அவருடைய சீடராகினார். 
விரைவில் கோரி முஹம்மது இந்தியாவின் மீது இருமுறை படை
யெடுத்து பிரிதிவிராஜை வென்றான். அவனும்கூட சிஷ்டி மகானை வந்து
பார்த்தான். 

அவருடைய பிரதான சீடர்கள் பல இடங்களுக்கும் சென்று மார்க்கத்தைப் பரப்பினர்.
தம்முடைய 97-ஆம் வயதில் 1236-ஆம் ஆண்டில் முஹம்மது பின் 
துக்லக்கின் ஆட்சியின்போது சமாதியடைந்தார்.
மொகலாயப் பேரரசர் அக்பர் முய்னுதீன் சிஷ்டியின்மீது ஆழமான பக்தியைச் செலுத்தியவர். ஆஜ்மீரில் அந்த தர்காவை நன்கு விரித்துக் கட்டினார்.
சிஷ்டி மகானின் சமாதியிருக்கும் தர்காவை தர்கா ஷரீ·ப் என்று 
அழைப்பார்கள். 

நான் கோத்தா பாரு என்னும் ஊரிலிருக்கும்போது அவருடைய 
அடியார்களில் ஒருவரைச் சந்தித்தேன். பின்னர் அலோர்ஸ்டார் என்னும் 
ஊரில் டாக்டர் ஷா என்னும் நண்பரைப் பெற்றேன். இளமையிலேயே ஞானம் படைத்தவர், டாக்டர் ஷா. 
எப்போதும் தலையில் முஸ்லிம் குல்லாய் இருக்கும். நுனித்தாடையில் 
மட்டும் தாடி வைத்திருப்பார். நெற்றியில் நமாஸ் செய்த வடு.
பார்க்கும்போது ஏதோ ஒரு இஸ்லாமிய Extremist என்று ஹிந்துக்களும் 
சீனர்களும் நினைக்கும்வண்ணம் அவர் இருப்பார். நானும் மருத்துவ மனைக்குத் தலைமைப் பொறுப்பில் இருக்கும்போது நெற்றியில் திருநீறு 
குங்குமத்துடன்தான் செல்வேன். வீட்டில் இருக்கும் போது மற்ற மதத்தினர், 
இனத்தினர் அலுவல் காரணமாக எந்த நேரத்திலும் வந்து சந்திப்பதுண்டு. 
வீட்டில் எப்போதுமே எட்டு முழ வேட்டிதான். திருநீறு இன்னும் பெரிதாகவோ அல்லது பட்டையாகவோ இருக்கும். எப்போதும் பெரிய குங்குமப் பொட்டு. 
பிற இனத்தவர்களின் கண்களுக்கு என்னைப் பார்க்கும்போது நான் ஒரு ஹிந்து extremist-ஆகத்தான் தோன்றியிருப்பேன். 
ஆனால் நானும் சரி, டாக்டர் ஷாவும் சரி - மனித நேயத்துக்கும், ஆன்ம நேயத்துக்கும், ஈகைக்கும், இரக்கத்திற்கும் உதாரண புருஷர்களாக 
என்றுமே விளங்கிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் extremist-கள் அல்லர்.
டாக்டர் ஷா நவம்பர் மாதங்களில் ஆஜ்மீருச் சென்று சிஷ்டியின் 
தர்காவுக்குப் போய், அங்கு அந்த தர்காவிலேயே சில நாட்கள் தங்கியிருந்து 
தியானம், நமாஸ் முதலியவற்றைச் செய்துவிட்டு வருவார். சிஷ்டியின் 
போதனைகளில் அவர் நமாஸை மிகவும் அழுத்தமாக வலியுறுத்தி யிருக்கிறார். 
அந்த தர்காவின் சுவர்களில் பலவகையான ஆயுதங்கள் இருந்தனவாம். 
சில தீவிரமான பக்தர்கள் அந்த ஆயுதங்களை எடுத்துத் தங்களின் உடலின் 
பல பாகங்களை வெட்டிக்கொள்வார்களாம். ஆனால் காயம் ஏதும் ஏற்பட
மாட்டாது. ரத்தமும் வருவதில்லை. 
இந்த மாதிரியான ஒரு சித்தி அவர்களிடம் ஏற்படுவது உண்டு. 
அதனை இல்மு கபால் Ilmu Kebal என்றுகுறிப்பிடுவார்கள். 
இதிலேயே இன்னும் சிலவகைகள் உண்டு. அவை பயிற்சிகளாலும் 
மந்திர ஆற்றல்களாலும் வருபவை. ராகஜாதி, ஹதீரான், கோடாம் ஹ¥லூ பாலாங் சக்தி போன்றவை. இவையெல்லாம் பாதுகாப்புக்காகவும் மார்ஷியல் கலைகளிலும் பயன்படுத்தப்படுபவை.
உடலை எப்படி கத்தி வெட்டாமலும் ஈட்டி குத்தாமலும் இருக்கிறது?

இல்மு கபாலை நம்முடைய பரிபாஷையில் வஜ்ரதேகம் என்று 
குறிப்பிடுவோம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Wednesday 7 March 2012

SIMPLE BUT UNDERSTANDABLE

எளிமையும் புரிதலும்

இந்த மடல் பரிமாற்றம் தமிழ் டாட் நெட்டில் 1999-ஆம் ஆண்டின் அக்டோபரில் நடைபெற்றது. 
மணி எம் மணிவண்ணன், டாக்டர் இண்டி ராம், நான் ஆகொயோர் பங்கு பெற்ற மடலாடல். அதாவது உரையாடல் போல மடலாடல்.
அப்போது மணிவண்ணன் காலி·போர்னியாவில் ·ப்ரெமாண்ட் என்னும் ஊரில் இருந்தார். இப்போது சென்னைவாசம். 
இண்டி ராம் தமிழக ஆசாமி. பெயர் ராம் ரவீந்தர். தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜில் படித்தவர். யூஎஸ்ஸில் இண்டியானா மாநிலத்தின் இண்டியானாப்பாலிஸ் நகரில் மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றினார். தமிழ் ஆர்வமுள்ளவர். தமிழர்களிடையே பல சீர்திருத்தங்களைக் காண வேண்டும் என்ற வேட்கை மிகுந்தவர். இப்போது எங்கு எப்படி இருக்கிறார் என்பது தெரியாது. 
இண்டியானாவில் இருந்ததாலும் அப்போது இண்டியானா ஜோன்ஸ் படங்கள் பிரபலமாக இருந்ததாலும் இவருக்கும் இண்டி ராம் என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது.
மடலாடலைப் படியுங்கள்.....


At 11:54 AM 10/14/99 -0500, Nanivannan wrote:
 இது ஒரு முதல் முயற்சி. எளிய தமிழில்,
அதே நேரத்தில் பாமரர்களுக்கும் புரியும் தமிழில் எழுத முயற்சித்துள்ளேன்.
அவையோரின் திருத்தங்களை வரவேற்கிறேன்.


அன்புடன்,


மணி மு. மணிவண்ணன்.


டாக்டர் இண்டி ராம் எழுதுகிறார் - 


அன்புள்ள மணிக்கு,
எளிய . அதே சமயத்தில் "பாமரர்களுக்கும் புரியும்" . இதில் முரண்பாடுள்ளமாதிரி இருக்கிறதே.
 எளிய தமிழ் தானே பாமரர்களுக்குபுரியக்கூடிய தமிழும்? 
இண்டி ராம்


நான் எழுதுகிறேன் - 


அன்பர்களே/டாக்டர் ராம்,


டாக்டர் ராம் தவறாக நினைத்துக்கொள்ளவில்லையானால் ஒரு கருத்தைக் கூறுகிறேன்.
எளிமையான தமிழில் எழுதுவற்கும்பாமரர்களுக்கும் புரியும்படி எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு.
சொல்லப்படும் விஷயத்தின் தன்மை, விஷயத்தை விளக்குவதற்கு நாம் கையாளுகின்ற முறைகள், பயன்படுத்தும் உதாரணங்கள், சொல்லும் மேற்கோள்கள் ஆகியவையும்,நாம் கைக்கொள்ளுகின்ற எழுத்து நடையும் (Style) மிக முக்கிய அங்கம்வகிக்கின்றன. பேச்சுக்கும் இது பொருந்துகிறது. 
எவ்வளவு எளிமையான சொற்களைப் பயன்படுத்தினாலும், அதைச் சொல்லுகிற விதத்தில் சொல்லவில்லையானால் பாமரர்களுக்கு அது புரியாதுபோய்விடும்.
கூலிம் என்ற ஊரில் "சாணிலும் உளன்; ஓர்தன்மை அணுவினைச் சதகூறிட்ட கோணிலு¢ம் உளன்", என்ற கம்பராமாயணப் பாடலுக்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தேன். 
அப்போது "அணு" என்பது என்ன; எவ்வளவு சிறியது என்பதை சில உதாரணங்களுடன் விளக்கினேன்.
அதில் ஓர் உதாரணம்: "ஒரு ஆப்பிளை எடுத்துக்கொள்ளுங்கள். அதைப் பாதியாக வெட்டுங்கள். அந்தப் பாதியை பாதியாக வெட்டுங்கள். அதில் வரும் பாதியை மீண்டும் சமபாதியாக வெட்டுங்கள். இப்படியே கூறு போட்டு வெட்டிக்கொண்டே போகவேண்டும். நீங்கள் தொண்ணூற்று ஏழாவது வெட்டு வெட்டியபின்னர், அதற்குமேல் வெட்ட முடியாதபடிக்கு ஆப்பிள்துணுக்கு நுண்ணியதாக விளங்கும்.அந்த மூலக்கூறு அளவுதான் "அணு" என்பது".
மேலே செந்தமிழில் எழுதியிருப்பது உங்களுக்காக. ஆனால் அன்று, அங்கு, நான் அவர்களுக்கு, இதை சொல்வழக்கில் உள்ள தமிழில்தான் சொன்னேன். இன்னும் விலாவாரியாகத்தான் சொன்னேன்.
சில மாதங்கள் கழித்து, புக்கிட் மெர்த்தாஜம் என்னும் ஊரில் "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி" பாடலை விளக்கும்போது கூட்டத்தினரைப் பார்த்து, "உங்களில்யாருக்காவது "அணு" என்றால் என்ன என்பது தெரியுமா?" என்று கேட்டேன்.
அப்போது பாரிட் புந்தார் என்னும் ஊரைச் சேர்ந்த ஓர் ஆள் எழுந்தான். அந்த வட்டாரத்தில் என்னுடைய கூட்டம் எங்கு நடந்தாலும் வந்துவிடும் ஆசாமி. டக்கென்று பதில் சொன்னான்.
"ஒரு ஆப்பில எடுத்து,தொண்ணூத்தேளு தடவை வெட்டுனா அணு கெடைக்குங்க."
மட்டையைத் தூக்கிப் பிடிக்கும் முன்னரேயே விக்கட்டின் மூன்று கட்டைகளும் எகிறிப் பறந்தது போன்ற உணர்ச்சி. உள்வாங்கிய மூச்சை வெளியில் விட சற்று நேரமாகியது.
பாமரர்களுக்கும் விளங்கும் முறையில்சொல்வது ஒரு கலை.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அதை நன்கு வளர்த்துக்கொண்டேன். 
இப்போது ரப்பர் தோட்டங்கள் போன்றஇடங்களில் பேசுவது நன்றாகக் கைவந்து விட்டது.
இந்தக் கலையில் வல்லவர் காமராசர்.பெரிய திட்டங்களைப் பற்றி யெல்லாம் அவர் கிராமத்தார்களிடம் விளக்கிச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அவருடைய தமிழும்எளிமை; சொல்லும் விதமும் எளிமை. கிராமத்தினரும் எளிதில் புரிந்துகொண்டனர்.ஒரு முறை ஜெயேந்திர சரஸ்வதிகள் பிரான்மலையில் செய்த உபன்னியாசத்தையும் கேட்டிருக்கிறேன். வால்மீகி வரலாற்றைச் சொல்லி பல விஷயங்களை விளக்கிக் கொண்டிருந்தார். அங்கு ஏராளமான கிராமத்து மக்கள் கூடியிருந்தனர். அவர்களுக்குப் புரிந்தவகையில் சொன்னது பெரிய விஷயம்தான்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Tuesday 6 March 2012

KARUPPANNASAMY AND OTHERS

கருப்பண்ணசாமியும் காவல்தெய்வங்களும்


சில நாட்களுக்கு முன்னர் செரம்பான் என்னும் ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கருப்பண்ண சாமியைப் பற்றி கேட்டார்.
எத்தனை வகையான கருப்பண்ணசாமிகள் இருக்கிறார்கள் என்பது கேள்விகளில் 
ஒன்று.
பெரியகருப்பர், சின்னக்கருப்பர், முத்துக்கருப்பர், வளைதடிக்கருப்பர், சங்கிலிக்கருப்பர், 
ஆத்தியடிக் கருப்பர், கோட்டைக் கருப்பர், பதினெட்டாம்படிக் கருப்பர், கழுவக் கருப்பர், 
கழுவடிக் கருப்பர், மாசாணக் கருப்பர், நொண்டிக்கருப்பர், ராங்கியம் கருப்பர் என்று வரிசையாக 
மனதிற்கு வந்த கருப்பர் பெயர்களைச் சொன்னேன்.
கருப்பரைப் பற்றிய நூல்கள், வலைத்தளங்கள் பற்றி கேட்டார்.
அதிகம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
வலையில் கருப்பண்ணசாமி படமே நான் ஜியோஸிட்டீஸில் போட்டுவைத்திருக்கும் படம்தான். வேறேதும் இருப்பதாகத் தெரிய வில்லை. வேறு இருந்தாலும் இருக்கும்.

"கருப்பரின் அடையாளமாக உள்ளது சூலமா?" என்று கேட்டார்.
"கருப்பருக்கு அரிவாள்தான் நட்டுவைப்பார்கள்; அல்லது நிறுத்திவைப்பார்கள். கருப்பர் 
அரிவாளை வலக்கையில் ஏந்தியிருப்பார். இடக்கையில் சுக்குமாத்தடி என்னும் ஆயுதம் இருக்கும். இடையில் சூரிக்கத்தி என்பது இருக்கும். வளைதடிக் கருப்பர் வளரியை வைத்திருப்பார்", என்று 
விளக்கினேன்.
ஆசாமி வெகு ஸீரியஸாகக் கருப்பண்ணசாமியை முறையாக வழிபடவேண்டும் என்று 
நினைத்துக் கேட்டாரா என்பது தெரியாது. 

அதற்கு அடுத்தநாள்......
கோலாலும்ப்பூரிலிருந்து ஓர் அன்பர் வந்திருந்தார். "நின்னது நிக்க" என்பார்கள் அல்லவா? அதுபோல "சிறு தேவதைகள் பற்றி சொல்லுங்கள்", என்றார்.
'சிறு தேவதைகள்' என்று ஒரு காலத்தில் நானும் குறிப்பிட்டவன்தான். 
ஆனால் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை நேரில் பார்த்தபிறகு அப்படி யெல்லாம் சொல்வதில்லை.
"அன்றிலிருந்து 'சிறுதெய்வங்கள்' என்று சொல்வதில்லை" என்று சொன்னேன்.
ரொம்பவும் சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். 
மலேசியாவில் ரொம்பவும் சுவாரஸ்யமாகக் கேட்கும் ஆட்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
ஆனால் என்ன?
சுவாரஸ்யமான விஷயத்தை சுவாரஸ்யமான முறையில் சொல்லக் கூடிய ஆட்கள்தாம் இல்லை.
அதுவும் சிறுகதை விமரிசனம், நாவல் விமரிசனம், புதுக்கவிதை விமரிசனம் என்று உலர்ந்து 
போய், வெளிறிப் போய், சோணியாய், சோகை பிடித்தமாதிரி உள்ள உரைகள், கட்டுரைகள் மிகவும் அதிகமாகத் திணிக்கப்பட்டு இங்குள்ளவர்கள் வெகுவாகப் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆகையால்தான் சுவாரஸ்யமான விஷயங்களை சுவாரஸ்யமாகச் சொல்லும்போது அவ்வளவு ஆர்வமுடன் கேட்கிறார்கள்.
"அப்படியானால் அந்த தெய்வங்களை எப்படிக் குறிப்பிடுவீர்கள்? கிராம தெய்வமா?" என்று கேட்டார்.
"இங்கு ஏது கிராமம்? 'காவல் தெய்வம்' என்று சொல்ல வேண்டியதுதான்".
"கிராமத்தில் உள்ளதை 'கிராம தெய்வம்' என்று சொல்லலாம்தான்".
"ஆனால் மொட்டைக் கோபுர முனியும் ஜடாமுனியும் 'பப்பரபாம்' என்று மதுரைக்கு 
நடுவேயல்லவா இருக்கின்றார்கள்? வடக்குக் கோபுர வாசலில் மொட்டைக் கோபுரத்தார் 
என்றால் கிழக்கு வாசலில் மதுரைவீர சுவாமி ஜாங்ஜாங் என்று பொம்மி வெள்ளையம்மாளோடு காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவர்களை எப்படி கிராமத்து தேவதைகளாக ஆக்குவது? பக்கா 
நகரத்தார்கள் அல்லவா இவர்கள்?"
"சரிதான்" என்று ஒத்துக்கொண்டார்.
"இவர்களைப் பார்க்கமுடியுமா?" - இது அடுத்த கேள்வி.
"தாராளமாகப் பார்க்கலாம். பார்க்கமுடியும்."
அந்த அனுபவங்களைக் கேட்டார். விலாவாரியாகச் சொன்னேன்.
பேய்களைப் பற்றியும் அதற்கு முன்னர் கேட்டுக் கொண்டிருந்தார்.
அவர் வருவதற்கு முன்னால் டெலி·போனில் அஷ்டகர்மா பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்.
சொன்ன விபரங்களைக் கேட்டுவிட்டு அதைப் பற்றி ஒரு டாக்குமெண்ட்டரி செய்யலாம் என்று 
தீர்மானித்தார்.
அஷ்டகர்மா என்றால் என்ன கேட்குமுன் சொல்லிவிடுகிறேன்.....
ஸ்தம்பனம், மோஹனம், ஆகர்ஷணம், மாரணம், பேதனம், வித்வேஷணம், உச்சாடனம், 
வசியம் ஆகியவை.
மாந்திரீகம்.
மேல்விபரங்களுக்கு அகத்தியர் ஆவணத்திற்குள் பார்க்கவும். ஏராளமாக எழுதி
வைத்திருக்கிறேன்.


==============================

VIVASTHAI


விவஸ்தையும் அவஸ்தையும்

ரொம்ப நாளைக்கு முன்னால், கோலாலும்ப்பூர் அன்பர் ஒருவர், "நீங்கள் எப்படி இவ்வளவு எழுதுகிறீர்கள்?", என்று கேட்டார். 

"நான் எங்கே இப்போதெல்லாம் எழுதுகிறேன்? காம்ப்பியூட்டர் கீயையல்லவா தட்டுகிறேன்", என்று சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை. ஏடாகூடமாக எடுத்துக்கொள்வார்கள்.

ரொம்ப நாளைக்கு முன்னால், மலேசியாவில் நான் ஒரு பிரதிவாதி பயங்கரனாக உலா வந்து கொண்டிருந்த சமயம். 
ஜோகூர் என்னும் மாநிலத்தில் மலேசிய இந்து சங்கத்தைப் பலப்படுத்திக் கொண்டிருந்த சமயம். 
அப்போது கோத்தாத்திங்கி என்னும் ஊரில் இருந்தேன். அங்கு என்னுடைய வீட்டிலேயே சிலருக்கு மிக ஆழமாக இந்து சமயத்தைப் பற்றிச் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தேன். 
மேடையில் சமயச்சொற்பொழிவு ஆற்றுவதும் ஒரு முக்கிய பயிற்சி.

ஒருநாள் Big Bang Theory-யை நம்முடைய 'ஸ்பந்தம்' என்னும் தத்துவத்துடன் ஒப்பிட்டுச் சொல்லிக்கொண்டிருந்தேன்.
அதைப் பற்றி சில கேள்விகளை ஒருவர் கேட்டார். அவர் இந்து சங்கத்தில் முக்கியமான புள்ளி.
"நான் சொன்னேன், "நான் அதை விவரித்துச் சொல்லிவிட முடியும். ஆனால் உங்களால் அதைப் புரிந்துகொள்ளமுடியுமா?"
அவர் மெதுவாகத் தலையை ஆட்டிக்கொண்டார்.

சில மாதங்கள் கழித்து அவர் இன்னோர் இடத்தில் இதே சமாச்சாரத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அப்போது ஒருவர் அவரிடம் இன்னும் விளக்கம் கேட்டிருக்கிறார். 
அதற்கு அவர் சொன்னார், "நான் விளக்கமாகச் சொல்லிவிடுவேன். உங்களுக்குப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இருக்கிறதா?"
ஒரே அறை. 
கேள்வி கேட்ட ஆளுக்கு அத்தனை ஆவேசம். 
கெட்ட வார்த்தைகளில் வாயாறத் திட்டிவிட்டுச் சென்றாராம்.
'விவஸ்தை' என்றொரு சொல் இருக்கிறது அல்லவா?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$