Monday 1 August 2011

பகுத்தறிவும் வலம்புரியும்

Canku Idampuri


Canku Valampuri


சென்ற வாரம் ஓர் அன்பர் தம்மிடம் வலம்புரிச்சங்கு இருப்பதாகச் சொன்னார். அவர் அதை வாங்கிய இடத்தையும் சொன்னார். அந்தக் கடையில் வலம்புரிச் சங்கு என்ற பெயரில் ஏராளமான சங்குகளை விற்கின்றனர். அந்தக் கடையில் மட்டுமல்லாமல் மலேசியாவில் இன்னும் எத்தனையோ கடைகளில் இந்த மாதிரி சங்குகளை விற்கிறார்கள்.

வலம்புரிச்சங்கு என்பது தனியான ஓர் இனமல்ல(Species). பல வகைச் சங்கினங்களிலும் வலம்புரியாக சங்குகள் தோன்றுவதுண்டு. இவற்றை Mutants என்று கூறுவார்கள்.  பல்லாயிரக்கணக்கான சங்குகளில் ஒன்றுதான் வலம்புரியாகத் தோன்றும்.

பூஜைப் பொருள்கள், பாத்திரங்கள், சாமிப் படங்கள், சாமி சிலைகள், மாட்டு மூத்திரம் போன்ற பொருள்களை சாமி சாமான்கள் என்று மலேசியத் தமிழர்கள் குறிப்பிடுகிறார்கள். இவற்றையெல்லாம் விற்கும் கடைகளை 'சாமி சாமான் கடை' என்று அழைக்கிறார்கள்.  மலேசியாவில் ஊருக்கு ஊர் இருக்கும் இந்தக் கடைகளில் மொத்தம் ஆயிரக்கணக்கான வலம்புரிச் சங்குகள் இருக்கும்.  தனிப்பட்ட பக்தர்கள் வீடுகளில் வாங்கி வைக்கப்பட்டிருக்கும் வலம்புரிச் சங்குகள் இன்னும் அநேக ஆயிரங்கள் இருக்கும்.  இந்த ஒரு நாட்டில்மட்டும் ஆயிரக்கணக்கான வலம்புரிகள் என்றால் தமிழ் நாட்டில் இத்தனை லட்சங்கள் இருக்கக்கூடும்?

இவ்வளவுக்கு ஏராளமான வலம்புரிகள் இருப்பது சாத்தியம்தானா?

அப்படியானால் வலம்புரியை ஏன் அரிய பொருளாகக் கருதவேண்டும்?

இதையெல்லாம் யாரும் யோசிப்பதேயில்லை. 

பகுத்தறிவு என்பது அழிந்துகொண்டே வருகிறது என்பதற்கு இதெல்லாம் சான்று.

பகுத்தறிவு தானாக ஒன்றும் அழிந்துகொண்டிருக்கவில்லை.

அதை மலேசியாவில் ஒரு சில கூட்டங்கள் அழித்துக்கொண்டே வருகின்றன. அந்தக் கூட்டங்களின் கைகள் ஓங்கியுள்ளன.  ஆகவே பகுத்தறிவுபூர்வமாக சொல்வது எதுவும் எடுபடமாட்டாது.

மேல்விபரங்களைக் கீழ்க்கண்ட இணைப்பில் உள்ள வலம்புரி கட்டுரைத் தொடரில் படித்துக்கொள்ளவும் - 

        இதே போன்ற கட்டுரைகள் இன்னும் பல வரும். அவற்றைப் படித்துவிட்டு நீங்கள்தான் சிந்தனை செய்து சிந்தனைத் தெளிவு பெறவேண்டும்.