Sunday, 30 October 2011

SAKUNA SASTRA-#1

சகுன சாஸ்திரம் -#1

சகுன சாஸ்திரம் என்னும் நுட்பக்கலை ஒன்று உண்டு. அவற்றில் ஒரு துறை, பறவைகள் கத்துவது, குறுக்கேயோ அல்லது முன்னாலோ எதிராகவோ போவது போன்றவற்றை வைத்து நல்லது அல்லது கெட்டதை வகுத்துச்சொல்ல வழிகாட்டுகிறது.
செம்போத்து, ஆந்தை, கோட்டான், காகம் , கருடன் போன்ற சில பறவைகள் இந்தத் துறையில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
இடமிருந்து வலம் செல்லல், வலமிருந்து இடம் செல்லல் என்ற கணிப்பு இருக்கிறது. அதுவும்கூட நேரத்துக்கு நேரம் மாறும்.


சகுன நூல் ஒன்றிலிருந்து இரண்டு பாடல்களை மாதிரிக்குப் போடுகிறேன்:


வலமாகச் சென்றால் சுப சகுனம் -


பசுவொடு புலியும் யானை பரிமளப் புனுகுப் பூனை
முசலொடு கோழி கள்ளிக் காக்கையும் மந்தி நாரை
விரையென நம்பும் புள்ளி மான் சுபமாது கொக்கு
நிஜமிது வலமாய் வந்தால் நினைத்தது ஜெயமாம் கண்டாய்


இடமாகச் சென்றால் சுப சகுனம் -


காட்டில் வாழ் எருமை பன்றி கரடியும் குரங்கு மூஞ்சு
றோட்டமாம் நாயும் பூனை உடும்பொடு கீரிப்பிள்ளை
ஆட்டினற் கிடாவிமட்டை அரியவரெவரானாலும்
வாட்டமா மிடது பக்கம் வந்திடில் மிகவும் நன்றாம்


நரியின் முகத்தில் விழிப்பது அதிர்ஷ்டமானது என்று நம்பப்படுகிறது.
செட்டிநாட்டில் ஒருவீட்டில் - பிரம்மாண்டமான வீடு அது - அங்கு ஒரு கூண்டில் ஒரு சிறிய நரியை அடைத்து வைத்திருந்தார்கள்.
இரவில் அது ஊளையிட்டிருக்குமே?
ஒருவேளை அதற்கு ஏதாவது பங், போஸ்க்கா என்று என்னத்தையாவது போட்டுக்கொடுத்திருப்பார்களா?


ஒரே வீட்டில் கருங்குரங்கு, கறுப்புப்பூனை, கருநாய் ஆகியவை இருப்பது குபேர சம்பத்தைத் தரும் என்று நம்பப்பட்டது. முறையூர் என்னும் ஊர். அங்கு ஒரு பெரிய வீடு. ஆனால் இடிந்துபோய்ப் பாழடைந்திருந்தது. அந்த வீட்டின் உரிமையாளராகிய செட்டியார், அந்த மூன்று மிருகங்களையும்
வைத்திருந்தாராம்.


அவர் காலத்திலும் அந்த மிருகங்கள் இருந்த காலத்திலும் நன்றாக இருந்திருக்கும்போலும்.
சகுனநூல் என்பது அறுபத்து நான்கு கலைகளில் ஒன்று.
        நிமித்த சாஸ்திரம் என்பதும் இதே வகைதான். ஒரே கலைதான் என்றுகூடச் சொல்வார்கள்.
நிமித்தசாஸ்திர வல்லுநர்களை 'நிமித்திகர்' என்று குறிப்பிடுவார்கள்.
ஒவ்வொரு நாழிகைக்கும் பலன் சொல்வதுகூட அரசவையில் இருந்த நிமித்திகர்களுக்கு வேலையாக இருந்தது.
நாழிகைக் கணக்கர் என்றொரு அலுவலர் பிரிவினர்கூட இருந்தனர்.
இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற அலுவலர்கள் பிற்காலத்தில் இல்லாமலேயே போய்விட்டனர்.
அந்த சாஸ்திரமும்கூட தேய்ந்து, கிட்டத்தட்ட மறைந்துவிட்டது.
ஆனாலும் இன்னும்கூட பல்லி சொல்லும் பலன், காகம் கரையும் பலன், பல்லி விழும் பலன் போன்றவை இருக்கத்தான் செய்கின்றன.
இன்னும் சில விபரங்கள் இருக்கின்றன. அவற்றையும் விளக்கலாம்.
இந்த மாதிரியான விஷயங்களை முன்பெல்லாம் எழுதுவதுண்டு.
ரொம்பவும் விரிவாக எழுதிவிட்டால், நான் எழுதியவற்றை எடுத்து வைத்துக் கொண்டு, அந்த சாஸ்திரத்தைத் தாம் கற்றுவைத்திருப்பதாகச் சொல்லி, பணம் பண்ணுபவர்கள் மலேசியாவில் இருக்கிறார்கள்.
அதனாலேயே எழுதுவதற்குத் தயக்கமாக இருக்கிறது


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday, 27 October 2011

KAIYELZUTHTHU MARAIYUM NERAM


கையெழுத்து மறையும் நேரம்


தமிழர்களின் வழக்கில் பல சொற்களும் சொற்றொடர்களும் இருந்தன. தற்காலத்தில் அவை மறைந்துபோய்விட்டன. 
தூரத்தைக் குறிக்கும் சொற்களில் கூப்பீடு தூரம், காலத்தைக் குறிப்பதில் 'கையெழுத்து மறையும் நேரம் ஆகியவை அப்படிப்பட்டவை.
சிறு பொழுது என்பன மணி நேரம், நிமிஷம், விநாடி, நாடி, கணம், இமைப்பொழுது, ஜாமம், முகூர்த்தம், நாழிகை, போன்றவை. 
இவை போக இன்னும் சில சொல்வழக்குகளும் உண்டு. பெரும்புலர் காலை, உஷத், விடியல் போன்றவை.
இவற்றில் ஒன்று 'கையெழுத்து மறையும் நேரம்' என்பது. 
இது சற்று நுணுக்கமானது.  
வெளிச்சம் மங்கி, ஆனால் இன்னும் இருட்டாக ஆகாமல், ஆனால் twilight-ஐ விட இன்னும் கொஞ்சம் வெளிச்சம் உள்ளது, அந்த நேரம். 
அதைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால் அது எப்படியிருக்கும், அந்த நேரம் எப்போது என்பது தெரிந்ததில்லை. 
ஒருநாள் அதையும் கண்டுபிடித்தேன். 
கோத்தா பாரு என்னும் ஊர், மலேசியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள நகரம். 
அந்த ஊரில் 1978 முதல் 1981 வரை இருந்தேன்.
அங்கு ஐஸேயா என்னும் பெரியவர் இருந்தார். நல்ல நண்பர். நிறைய உதவியிருக்கிறார். அப்போதே அவருக்கு எண்பது வயது. கண்ணாடி போடவில்லை. எங்கும் பழைய ஹெர்க்குலெஸ் சைக்கிளில்தான் செல்வார். ஓர் இங்க்லிஷ் தொப்பியும் ஒரு பைப்பும் அவருடைய ட்ரேட் மார்க்.
ஒருநாள் மாலை, என் வீட்டுக்கு வந்திருந்தவர், தம் வீடு திரும்ப, வாசலைவிட்டு இறங்கிச் சொல்லிக்கொண்டார். 
"இருங்க மிஸ்டர் ஐஸேயா. இன்னும் கொஞ்ச நேரம். அப்புறம் போகலாமே. இன்னம் 
நேரமிருக்கே", என்றேன். 
அவர் தன்னுடைய உள்ளங்கையை விரித்துக் கண்களைச் சுருக்கிப்பார்த்தார். (சுமார் ஒரு முழதூரத்தில் கையை விரித்துப் பிடித்தார்)
"இல்ல, டாக்டர். சத்த நேரத்துல ரொம்ப இருட்டீரும். இப்பவே போயிட்டாத்தான் நல்லது", என்று தமக்கே உரிய கறகறப்பான குரலில் சொன்னார்.
கைரேகை, கையெழுத்து மங்கலாகத் தெரியும் நேரம் அது. இப்படியும் ஒரு கணிப்பு.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday, 13 October 2011

CHINESE MEDICINE AND PEKING MAN-#2


சீன மருத்துவமும் பீக்கிங் மனிதனும் -#2


கரப்பான் பூச்சியின் மேலோட்டை நீக்கிவிட்டு உள்சதையைப் பக்குவம் செய்து மருந்தாகச் சாப்பிடுவார்கள். புதிதாகப் பிறந்த குழந்தையின் மூத்திரமும் மருந்தாகப் பயன்படும்.
கடலில் Sea-Horse என்னும் பிராணி உண்டு. அதையும் கருவாடாக ஆக்கி மருந்தாகப் பயன்படுத்துவார்கள். தவளையின் உடலிலிருந்து குடல் முதலியவற்றை எடுத்துவிட்டு, பாடம் பண்ணி சருகுபோல் தொங்க வைத்திருப்பார்கள். அதுவும் மருந்துப்பொருள்தான். பாம்பின் பித்தப்பை, புலியின் பித்தப்பை, குரங்கின் பீஜங்கள் முதலியவை எல்லாம் பயனில் இருக்கின்றன.
மருந்துக் கடைகளில் மனிதப்பற்களைப் போன்ற தோற்றமுள்ள பற்களைப் பொடி செய்து மருந்தாக விற்பது வழக்கம். அதை Dragon's Teeth என்று குறிப்பிட்டார்கள்.

சீனர்கள் Dragon's Teeth என்று அவர்களால் அழைக்கப்படும் பற்களை மருந்தாகப் பயன்
படுத்தினார்கள்.
அவை உண்மையிலேயே Fossilised Teeth - மிகப்புராதனமான மனிதர்களின் பற்கள்.
இந்தப் பற்கள் சீனாவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிடைத்தன. அந்த இடத்துக்குப் பெயரே Dragon Bone Hill என்பதுதான். 1920 - 1930களில் Davidson Blake என்னும் கனேடிய ஆராய்ச்சியாளர் தற்செயலாக பீக்கிங்கில் ஒரு மருந்துக்கடையில் புராதன எலும்புகளையும் பற்களையும் நுணுக்கித் தூளாக்கி மருந்துகள் தயாரிப்பதைப் பார்த்திருக்கிறார். அந்த மருந்துக்கடையில் தேடியதில் ஒரே ஒரு கடைவாய்ப் பல் மட்டுமே கிடைத்தது. அது எங்கிருந்து கிடைத்தது என்ற விபரத்தைத் தெரிந்துகொண்டு அந்த இடத்துக்குப்போய் அகழ்வாராய்ச்சி செய்தார்.
ஆனால் அந்த Prehistoric Site-இல் எத்தனையோ நூற்றாண்டுகளாகப் புராதன எலும்புகள் எடுக்கப்பட்டுவிட்டன. ஆகவே ப்லேக்குக்குக் சிரமப்பட்டு கிடைத்ததெல்லாம் ஒரு சில எலும்புகளே. அவற்றை வைத்து ஆராயும்போது அதுகாறும் அறியப்படாதிருந்த ஒரு புராதன மனித இனத்தைச் சேர்ந்த ஒரு மனிதனின் எலும்புகள் என்று தெரியவந்தது.
அந்த மனித இனத்துக்கு Sinanthoropus Pekinensis என்று பெயரிட்டார்கள். Peking Man என்று சுருக்கமாக அழைத்தார்கள்.
1936-க்கு மேல் ஜப்பானின் ஆக்கிரமிப்பு சீனாவின் மீது ஏற்பட்டது.
1941-இல் பீக்கிங் மனிதனின் எலும்புகளை ஒரு மரப்பெட்டியில் போட்டு மூடியை ஆணியடித்துப் பக்காவாகச் செய்து அமெரிக்காவுக்கு எடுத்துச்செல்ல முயன்றார்கள். அதை எடுத்துச் சென்ற அமெரிக்க மெரைன்ஸ் வீரர்கள் ஜப்பானியரிடம் பிடிபட்டுவிட்டனர்.
ஜப்பானியர் அந்த பெட்டியைக் கைப்பற்றிப் பார்த்ததில் ஏதோ பழைய எலும்புத்துண்டுகள் இருப்பதைக் கண்டு அந்தப் பெட்டியை ஒரு வீதி ஓரத்தில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.
அதன்பின்னர் பீக்கிங் மனிதனின் அந்த எலும்புகள் என்ன ஆயின என்பது தெரியவில்லை.
ஒரு புராதன மனித இனத்தைப் பற்றிய மேல்நிலை ஆராய்ச்சிகளும் இல்லாமற்போயின.


அந்த எலும்புகளின் ப்லாஸ்ட்டர் பிரதிகளை வைத்துத்தான் ஆய்வெல்லாம் நடக்கிறது.
இந்த ஆதி மனிதனின் விபரத்தை ஜூலியன் ஹக்ஸ்லி என்னும் ஆராய்ச்சியாளர் எழுதிய புத்தகம் ஒன்றிலிருந்து படித்தேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய புத்தகம்.
இந்த ஜூலியன் ஹக்ஸ்லி பெரிய பாரம்பரியத்தை உடையவர். அவருடைய பாட்டனாராகிய தாமஸ் ஹென்ரி ஹக்ஸ்லிதான் பரிணாம வளர்ச்சியைக் கண்டுபிடித்த சார்லஸ் டார்வினின் பிரதம சீடர்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$chinese medicine and peking man-#1

சீன மருத்துவமும் பீக்கிங் மனிதனும் - #1சீனர்களின் மருத்துவ சாஸ்திரம் மிகவும் புராதனமானது.
பல காலமாக மேற்கத்திய மருத்துவத்தில் சீன மருந்துகள் பயன்படுத்தப்பட்டன.
மாஹ¤வாங் என்றொரு மூலிகை வேர். அதில் எ·பெட்ரின் என்றொரு மூலப்பொருள் உண்டு.
அது தீராத இருமல், தெகை, ஆஸ்த்துமா போன்ற நோய்களுக்குக் கைகண்ட மருந்தாக இருந்தது.
சமீபகாலம் வரைக்கும் அது பயனில் இருந்தது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ·பென்ஸெடில் என்னும் இருமல் மருந்தில் சேர்க்கப் பட்டிருந்தது.
·பென்ஸெடில் என்பது இருமலை உடனேயே கேட்கும்.
அதில் எ·பெட்ரின், ப்ரோமெதஸீன், கோடீன் ஆகிய மூன்று மூலப் பொருள்கள் சேர்க்கப் பட்டிருக்கும்.
கோடீன் வலியைக் கண்டிக்கும். அது மார்·பின், ஹெராயீன் போன்றவற்றின் தோஸ்த். ஓப்பியாய்ட் என்னும் குரூப்பைச் சேர்ந்தது. உடலிலேயே வலி எதிர்ப்பு சக்தி உண்டு. உடலில் சுரக்கும்
எண்டார்·பின் என்னும் ரசாயனங்கள் வலியைத் தெரியாமல் செய்யும்.  எண்டார்·பின் செய்யும் வேலையைக் கோடீன் செய்யும். வலியும் வலியின் காரணிகளும் இருக்கும். கோடீன் அந்த வலியை உணரமுடியாமல் செய்யும். ஆகவே வலி இல்லாததுபோல் தோன்றும்.
வயிற்றுப் போக்கையும்கூட கண்டிக்கும்.
தமிழ் நாட்டில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கோடோப்பைரின் என்னும் காய்ச்சல், தலைவலி
மாத்திரை இருந்தது. ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் அது விற்பனை ஆகிக்கொண்டிருந்தது. அதில் கோடீன் தான் முக்கியப் பொருள், ·பெனாஸெட்டின், அப்புறம் ஏதோ ஒரு பைரின் என்னும் இன்னொரு பொருளும் சேர்ந்தது.
மூளையில் இருமலுக்கென்று ஒரு ஸ்தானம் உள்ளது. கோடீன் அந்த இருமல் மையத்திற்குச் சென்று அதை மட்டுப்படுத்தும். ஆகவே இருமல் குறையும்.
ப்ரோமெதஸீன் என்பது அண்ட்டி ஹிஸ்டாமினிக் என்னும் வகையைச் சேர்ந்தது. அலர்ஜி, தடுமன் போன்றவற்றைக் கேட்கும்.
எ·பெட்ரின் இருமல், மூச்சுத்திணறல் போன்றவற்றிற்கு. சளியையும் வெளியேற்றும்.


காடு மலைப் பகுதியில் நான் வேலை செய்யும்போது எங்களுக்கு ஒரு Golden Rule இருந்தது.
"Treat three C's with three P's".
Three C's - Cough, Cold, Cattarh - அதாவது தடுமன், இருமல், ஜலதோஷம்.
Three P's - Paracetamol, Phensedyl, Phenargan.
அந்த மாதிரி அத்துவானக் காட்டில் உள்ள குக்கிராமவாசிகள் இவற்றையே கைகண்ட மருந்தாக நினைத்தார்கள்.
இப்படிப்பட்ட கைகண்ட மருந்து வழக்கில் இல்லாமல் தடை செய்யப்பட்டது.
·பென்ஸெடிலில் உள்ள மூன்றில் இரண்டு மூலங்கள் ஒருவிதமான கிறக்கத்தைக் கொடுக்கும். எ·பெட்ரின் படபடப்பு, முதலியவற்றை ஏற்படுத்தும்.
சுருங்கச் சொல்லின், ஒரு கிக்கோ கிக்கைக் கொடுக்கும்.
மருத்துவமனை ஊழியர்கள் அடிக்கடி ·பார்மஸி/டிஸ்பென்ஸரிக்குள் சென்று இரண்டு பெக்
·பென்ஸடில் அடித்துவிட்டு வருவார்கள்.
நாளடைவில் அதுவே ஓர் அடிக்ஷனை ஏற்படுத்தியது.
ஆகவே ·பென்ஸெடிலை ·பார்மக்கோப்பியாவிலிருந்து நீக்கிவிட்டார்கள்.
இந்த மாதிரி சீன மருந்துகள் மேற்கத்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டன.
சீன மருத்துவம் ஒரு தினுசானது.
நம்ம ஆட்கள் அருவெறுப்புப் படும் சமாச்சாரங்கள் அங்கே மருந்தாகப் பயன்பட்டன.


GO TO PART #2

Saturday, 1 October 2011

KANNAAR KADAL SUULZ
திராவிட வேதம்
கண்ணார் கடல்சூழ்

திருவேங்கடம் 3

கண்ணார் கடல்சூ ழலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரஞ்செல உய்த்தாய்
விண்ணோர்  தொழும்வேங் கடமா மலைமேய
அண்ணா அடியேன் இடரைக் களையாயே!


இலங்கைப் பதிக்கன் றிறையாய அரக்கர்
குலங்கெட் டவர்மாளக் கொடிப்புள் திரித்தாய்
விலங்கல் குடுமித் திருவேங் கடம்மேய
அலங்கல் துளப முடியாய்! அருளாயே!


நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு 
ஏரா லம்இளம் தளிர்மேல் துயிலெந்தாய்
சீரார் திருவேங் கடமா மலைமேய
ஆரா அமுதே! அடியேற் கருளாயே!


உண்டாய் உறிமேல் நறுநெய் அமுதாக
கொண்டாய்-குறளாய் நிலம் ஈரடியாலே
விண்தோய் சிகரத் திருவேங் கடம்மேய
அண்டா! அடியே னுக்கருள் புரியாயே!


தூணாய் அதனூ டரியாய் வந்துதோன்றி
பேணா  அவுணன் உடலம் பிளந்திட்டாய்!
சேணார் திருவேங் கடமா மலைமேய
கோள்நா கணையாய்! குறிக்கொள் எனைநீயே!

மன்னா இம்மனி சப்பிற வியைநீக்கி
தன்னாக்கித் தன்னின் அருள்செய் யும் தலைவன்
மின்னார் முகில்சேர் திருவேங்கடம்மேய 
என்னானை என்னப்பன் என்நெஞ்சி லுளானே


மானேய் மடநோக்கி திறத்தெதிர் வந்த
ஆனேழ் விடைசெற்ற அணிவரைத் தோளா
தேனே திருவேங் கடமா மலைமேய
கோனே என்மனம் குடிகொண் டிருந்தாயே!


சேயன், அணியன் என சிந் தையுள்நின்ற
மாயன் மணிவா ளொளிவெண் தரளங்கள்
வேய்விண் டுதிர்வேங் கடமா மலைமேய
ஆயன் அடியல்லது மற்றறியேனே!


வந்தாய்; என்மனம் புகுந்தாய்; மன்னிநின்றாய்
நந்தாத கொழுஞ் சுடரே! எங்கள் நம்பீ
சிந்தா மணியே! திருவேங் கடமேய
எந்தாய் இனியா னுன்னைஎன்றும் விடேனே!


வில்லார் மலிவேங் கடமா மலைமேய
மல்லார் திரள்தோள் மணிவண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்னமாலை
வல்லார்  அவர்வா னவரா குவர்தாமே!


திருமங்கையாழ்வார்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

PURATTASI SANI KILZAMAI
  

புரட்டாசி சனிக்கிழமை. 

ஒரு பழமையான மரபு அன்று அனுட்டிக்கப்படும். தீவிர சைவர்களைத் தவிர மற்றவர்கள் அஇன்று விரதம் இருந்து, திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவார்கள். 

என் மனைவி தன் இளமையில் இதனை மரபுபூர்வமாகக் கடைபிடித்து வந்ததாகவும், நடுவில் விடுபட்டுவிட்டதாகவும், வெறும் சைவ உணவுடன் இப்போது நின்றுவிடுவதாகவும் சொன்னார்கள்.
எனக்கு சற்று ஆச்சரியம். ஏனெனில் நாங்களெல்லாருமே தீவிர பைரவ சம்பிரதாய சைவ மரபைச் சேர்ந்தவர்கள். ஆனால் வைணவத்தை வெறுத்தது கிடையாது. 
என் மனைவியின் பாட்டியோ தீவிர சைவர். உணவுகூட மரக்கறி உணவுதான். மடி ஆசாரம் எல்லாம் பார்த்தவர்கள். மருத்துவமனைக்குச் சென்றுவந்தால்கூட குளிக்கவேண்டும். சாமி வரும்.
அவர்களிடம்தான் என் மனைவி வளர்ந்தவர்கள்.
மனைவி விளக்கினார்கள். பத்து வயதுவரை, ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும், நெற்றியில்  நாமம் போட்டுக்கொண்டு, கையில் ஒரு செம்பு ஒன்றை ஏந்திய வண்ணம் வீடுவீடாகச் சென்று, வீட்டுக்கு முன்னால் நிற்பார்கள். வீட்டுக்காரர்கள் செம்பில் அரிசி கொஞ்சம் போடுவார்கள். செம்பு நிறைந்தவுடன் வீடு திரும்புவார்கள். அந்த அரிசியைச் சமைத்து ஏழைகளுக்கு உணவாகப் படைப்பார்கள். அல்லது கோயிலில் கொடுப்பார்கள்.
எனக்கே வியப்பாக இருந்தது.
இதையெல்லாம் "நம்ம ஆட்களும்" செய்திருக்கிறார்களா என்ன! 


எது எப்படியிருந்தால் என்ன.
அந்த வழக்கத்தின் அடிப்படையாக அமைந்திருக்கிறதே - காருண்யம், தர்மம், இரக்கம் - அதுவல்லவா மிகப் பெரியது!
தானே உஞ்சவிருத்தி செய்து, அதனையும் தானே உண்டுவிடாமல், அதனை ஏழைகளுக்குக் கொடுப்பது என்பது பெரிய விஷயம்தானே?


ஆதிசங்கரர் தன்னுடைய ஐந்தாவது வயதில் ஒரு குறிப்பிட்ட மரபின்படி உஞ்சவிருத்தி செய்யப் போனார்.
அன்று ஏகாதசி. அன்று ஒரு பரம ஏழையின் வீட்டின் முன்னால் நின்று "பவதி பிக்ஷ¡ந்தேஹி" என்று குரல் கொடுத்தார். அவ்வாறு மூன்றே முறைதான் குரல் கொடுக்கலாம். அதற்குள் ஏதேனும் பிட்சை கிடைக்க வில்லை யென்றால் இடத்தைக் காலி பண்ணி விட வேண்டியதுதான்.
அன்று வயிறும் காலி.
அந்த ஏழையின் மனைவி வீட்டில் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தாள். ஒன்றுமே கிடைக்கவில்லை.
ஏகாதசி விரதம் முடிந்து, உண்ணாநோன்பை முறிப்பதற்காக வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக் கனி இருந்தது. அதுஇ இல்லையெனில் நோன்பை முடிக்கமுடியாது. மரபும் கெட்டும்விடும்.
தர்மமா, நோன்பு மரபா?
டக்கென்று நெல்லிக்கனியை எடுத்துப்போய், சங்கரரின் பிட்சைப் பாத்திரத்தில் போட்டாள்.
அந்த கருணையைப் பார்த்த சங்கரர் உள்ளத்தில் கழிவிரக்கம் பீரிட்டு, பெருகி ஓடி, அது பொன்மகளின்மீது அழகிய துதியாக உருவெடுத்தது. 
அந்த கனகதாரா தோத்திரத்தின் 21ஆம் பாடலின் போது பொன் நெல்லிக்கனிகளாக மழை பெய்தது.


புரட்டாசி சனிக்கிழமை இவ்வாறு செம்பில் அரிசியை உஞ்சவிருத்தியில் வாங்கி சமைத்துப் போடுவதற்குப் பெயர் "கோபாலம் எடுத்தல்" என்பார்கள்.
திருப்பதி வெங்கடாசலபதிக்கு என்று நல்ல தோத்திரம், மந்திரம் தருமாறு மனைவியார் கேட்டார்கள்.
"பிரபந்தத்திலிருந்தே பாடல் ஒன்றைத் தருகிறேன். அதுவே மந்திரம் தோத்திரம் எல்லாமே  ஆகும்." என்று சொல்லி அதனைப் படி எடுத்துக் கொடுத்து, "இது திராவிடவேதம். இதனையே ஓது", என்று கையில் கொடுத்தேன்.
அருமையாக பாயசம் வைத்து படைத்து, திராவிட வேதத்தை ஓதி, வேங்கடவனையும் அலர்மேலுத் தாயாரையும் வழிபட்டார்கள். வேங்கடவனையும் தாயாரையும் ஒருசேர நானும் வணங்கிவிட்டு வந்து அந்தப் பாயசத்தை சாப்பிட்டேன்.


அந்தப் பதிகத்தைத்தான் அடுத்த ப்லாகில் பார்க்கலாம்.
ஏதாவது தர்மத்தைச் செய்துவிட்டு, வேங்கடநாதனையும் தாயாரையும் வணங்கி, ஏற்ற நைவேத்தியம் வைத்து அந்தத் திருப்பதிகத்தைப் படித்து வழிபடலாமல்லவா?
யாராவது செய்வீர்கள்.


என்னடாயிது வழக்கத்துக்கு மாறாக நவராத்திரி சமயத்தில் அம்பாளையும் விட்டுவிட்டு சிவனையும் விட்டுவிட்டு வேங்கடவனைப்போய்......?
இப்படியும் நினைக்கத்தோன்றுகிறது அல்லவா?


:-)
"அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே" - அப்பர் வாக்கு.
எல்லாமே பொன்னரங்கம்தானே.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$