Wednesday, 31 August 2011

OBJECTS OF ABHISHEKAM


அபிஷேகப் பொருட்கள்


தமிழில் சதக நூல்கள் என்ற வகை உண்டு. 
நூறு பாடல்களுடன் காப்புப் பாடல் ஒன்றும் கொண்ட நூல்கள். 
இவற்றில் உலகியல், வாழ்வியல் யதார்த்தவாதக் கருத்துக்கள் கொண்ட பாடல்கள் இருக்கும். பல பாடல்கள் உள்ளத்தை உருக்கும். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழுத்தி அந்த தெய்வத்திடம் சரண் அடைவது போல் பாடல்களை அமைத்திருப்பார்கள். 
சதக நூல்களில் மிகவும் பிரபலமானது குமரேச சதகம்.  
சதகநூல்களில் அறப்பளீசுர சதகம், குமரேச சதகம், தண்டலையார் சதகம் ஆகியவை பிரபலமானவை. 
அண்ணாமலையார் சதகம் என்றொரு நூலும் இருக்கிறது. இது அவ்வளவு 
பிரபலமானதல்ல. 


உலக நடப்பு, வாழ்வியல், யதார்த்தம், லௌகீகம், நீதி, தர்மம் ஆகியவற்றைப் பற்றி பெரும்பாலும் பேசும். 
ஆனாலும் தண்டலையார் சதகம் சற்று வித்தியாசமானவற்றைப் பேசும். 
தொண்டைமண்டல சதகம் தொண்டை மண்டலத்தைப் பற்றி பேசும். 

அபிஷேகத்தை எதெதைக் கொண்டு செய்யலாம் என்பதை அண்ணாமலையார் சதகத்தின் ஒரு பாடல் சொல்லுகிறது.


சுத்தஜலம் அபிடேகம், நல்லெண்ணெய், அரிசி, மா
தூள் மஞ்சள், நெல்லி, முள்ளி,
தூபஞ்சகவியமோடு ஆவின் நெய், பால் தயிர்,
சுவையான பஞ்சாமிருதம்,
உத்த பலா மா, கதலி மாதுளையும் எலுமிச்சை,
ஓங்கு தமரத்தை நாரத்தை
ஒண்கனிச்சுளை, குளஞ்சி, தேன், திரட்டுப்பால்,
உயர் கருப்பஞ்சாற்றுடன்
மெத்தும் இளநீர், அன்னம், வில்வநீர், தபனநீர், 
மிளிர்பொன், இரத்நோதகம்,
மென்பசுங்கர்ப்பூர நற்பன்னீர், சந்தனம்,
விளங்கு தாராபிடேகம்
அத்தநிற் கித்தகைய அபிடேக மதுபுரிந்
தருள்பெறு சைந்தராயர்
அண்ணாவினில் துதிசெய் உண்ணாமுலைக்குரிய 
அணணாமலைத் தேவனே


எளிமையான பாடல். பொருள்கூற அவசியமில்லை. 
இதை மட்டும் சொல்லலாம்.


'மிளிர்பொன்' - இதனை ஸ்வர்ணாபிஷேகம் என்று சொல்வார்கள். 
கனகாபிஷேகம் என்றும் சொல்லப்படும். சிறு பொன் நாணயங்களாகச் செய்துகொண்டு அவற்றை வைத்து அபிஷேகம் செய்வார்கள். காசுகளில் தாமரை முத்திரை இடப்பட்டிருக்கும். சங்கு சக்கரம் பொறிப்பதும் உண்டு. 
'பொற்பூ' என்றொன்று உண்டு. பொன்னாலேயே மலர்களைச் செய்து அவற்றால் அபிஷேகம் செய்வார்கள். இதனை ஸ்வர்ணபுஷ்பம் என்றும் அபிஷேகத்தை 'ஸ்வர்ணபுஷ்பாபிஷேகம்' அல்லது ஸ்வர்ணாபிஷேகம்  என்றும் சொல்வார்கள். 
பெரிய மனிதர்களைப் பார்க்கும்போது அவர்களுக்கு உரிய மரியாதை செய்யும்போது தாம்பூலம், பழம், மஞ்சள் போன்றவற்றுடன் பொன்னால் ஆகிய பூவையும் வைத்துக் கொடுக்கவேண்டும். 
பொற்பூ வைக்கமுடியாதபோது அதன் இடத்தில் மலர் வைப்பார்கள்.
'பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது' என்பது ஒரு பழஞ்சொல் வழக்கு. 

இந்த ஸ்வர்ணபுஷ்பம் வழங்குவது தென்கிழக்காசியாவிலும் இருந்தது. 
பண்டைய மலாயாவில் உள்ள சில பகுதிகள் தாய்லந்து பேரரசின் கீழ் இருந்தன. மலாயாவிலிருந்து ஆண்டு தோறும் அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையேனும் அன்பளிப்புகள், கப்பம் போன்றவற்றைத் தாய்லந்து மன்னருக்கு அனுப்பிவைக்கவேண்டும். இதனை பூஙஆ  மாஸ் Bungah Mas அல்லது Bungah Emas  என்பார்கள். பல சந்தர்ப்பங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட பொற்பூக்கள் கொண்ட சிறிய மரத்தைப் போலவே பொன்னால் செய்து அனுப்பிவைப்பார்கள்.
      

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday, 19 August 2011

நவரத்தினக் கற்கள்

என்னிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன - நவரத்தினக் கற்களைப் பற்றியும் நவரத்தினக் கல் மோதிரத்தையும் பற்றியது.

நவரத்தினங்கள் எவை? தமிழ், ஆங்கிலத்தில் எப்படி அழைக்கப்படுகின்றன?

கீழே கொடுத்துள்ளேன்:

1.முத்து - pearl
2.மரகதம் - emerald
3.கோமேதகம் - sardonyx
4.மாணிக்கம் - ruby
5.வைடூரியம் - cat's eye
6.வைரம் - diamond
7.பவளம் - coral
8.புஷ்பராகம் - topaz
9.நீலம் - blue sapphire

புஷ்பராகத்தை Yellow saphire என்றும் சொல்வார்கள். புஷ்பராகத்தில் கனக புஷ்பராகம், ரோஸ் புஷ்பராகம் என்றெல்லாம் வகைகள் உண்டு.

சாதாரணமாக நவரத்தின மோதிரத்துக்குரிய கற்கள் மிகச் சிறியவையாக இருக்கும்.

பொதுவாக நவமணி கற்களில் குற்றங்கள் இருக்கக்கூடாது என்பார்கள். அப்படி இருந்தால் ஏதாவது கெடுதலைச் செய்துவிடும் என்பது ஒரு மணிநூல் விதி.
இந்தப் பொடிப் பொடிக் கற்களை வாங்கும்போது யார் அவற்றையெல்லாம் பொறுமையுடன் ஒவ்வொரு கல்லாகப் பரிசோதித்துப் பார்த்து வாங்குகிறார்கள்?
கடைக்காரரே பொறுமை இழந்து விரட்டிவிடுவார்.
சில கற்களைக் கண்டு ரொம்பவும் பயப்படுவார்கள். நீலம் இதில் முதன்மை வகிக்கும். அடுத்தபடியாக வைரம்.
ஹோப், ஆர்லா·ப் போன்ற வைரங்களைப் பற்றி சரித்திரமே இருக்கிறது.  குறையே இல்லாத நவமணிக் கற்களை வைத்து மோதிரத்தைக் கட்டுகிறார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம்.  அந்த மோதிரத்தின் ஆற்றல் எப்படியிருக்கும்?

அந்தந்த மணிக்குரிய கிரகத்தின் கெட்ட பலன்களை அந்தந்த மணிக்கல் நீக்கிவிடும் என்று நம்புகிறார்கள்.
ஆனால் சில விஷயங்களை யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை.  ஒரு மணிக் கல் ஏற்படுத்தக்கூடிய பலனை இன்னொரு மணிக் கல் மாற்றி அமைக்கமாட்டாதா? Mutual cancellation of effects என்பது ஏற்படமாட்டாதா?
இந்த மாதிரியெல்லாம் யோசிக்கவே மாட்டார்கள்.
பேசாமல் ஒரு காரியத்தை உருப்படியாகச் செய்யலாம்.......

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

வந்த வினையும் உடனே நீங்கிவிட்டதல்லவா?

சமய ஒற்றுமை

ஒரு காலத்தில் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் சைவர்களுக்கும் இடையே தீராப்பகை நிலவி வந்தது.   ஸ்ரீவைஷ்ணவர்கள் என்போர் விஷ்ணுவை முழுமுதல் தெய்வமாக வழிபடுபவர்கள்.  ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஷண்மதங்கள் எனப்படும் ஆறு சமயங்களில் சைவம், வைஷ்ணவம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம்,  சௌரம் ஆகியவை இருக்கும். இந்த வரிசையில் வரும் வைஷ்ணவம் வேறு. ஸ்ரீவைஷ்ணவர்கள் கடைபிடிக்கும் சமயம் வேறு.

ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கள் சமயத்தில் மிக ஆழமான பற்றுக்கொண்டவர்கள். அவர்கள் இருக்கும் வீதியில், சிவன் கோயில் உற்சவ மூர்த்தி உலா வந்தால் வீட்டின் முன் கதவைப் பூட்டி வைத்துக்கொள்வார்கள்.  மெய்கண்ட வாத சித்தாந்த சைவர்களும் இதே மாதிரிப் பட்டவர்கள்தாம். விஷ்ணுவை அறவே பிடிக்காது. ஆதிசங்கரரின் அறுசமய வரிசையில் உள்ள சைவம் இவர்களின் சைவத்திலிருந்து வேறுபட்டது.  'விஷ்ணு', 'நாராயண' என்ற பெயர்கள்கூட காதில் விழக்கூடாது என்று நினைப்பார்கள். அப்படி அந்தப் பெயர்கள் சொல்லப்பட்டால், காதுகளைப் பொத்திக்கொண்டு உரக்க, "சிவ சிவ, சிவ சிவ" என்று கத்துவார்கள்.

சிவனுடைய கணங்களில் பூத கணங்கள் உண்டு. அந்த பூத கணங்களின் கூட்டமொன்றின் தலைமைப் பூதன் ஒருவன் இருந்தான்.  அவனுக்கு சிவன் பெயரைத் தவிர வேறேதும் கேட்கக்கூடாது.
இந்த இடத்தில் 'சிவநாமம்' என்று எழுதவில்லை. அப்புறம் "சிவன் எப்போ நாமம் போட்டுண்டுட்டார்?"  என்று யாராவது கேட்கக்கூடும் அல்லவா?  ஆகையால்தான் 'சிவன் பெயர்'.

அந்த பூதத் தலைவன் தன் காதுகளில் பெரிய கண்டா மணிகளைத் தொங்கவிட்டிருந்தான்.  யாராவது 'நாராயணா' என்று சொன்னால், உடனேயே தலையை வெகு வேகமாக ஆட்டி, அந்த கண்டா மணிகளை ஒலிக்கச் செய்வான். அத்துடன், "சிவ சிவ சிவ சிவ" என்று உரக்கச் சொல்வான்.  அதனாலேயே அந்த பூதனுக்குக் 'கண்டாகர்ணன்' என்று பெயர் ஏற்பட்டது. 'கண்டா = மணி; கர்ணம் = காது.
இந்த சைவ வைஷ்ணவ பரஸ்பர வெறுப்பைப் பற்றி பல கதைகள் நிலவி வந்தன. 
அவற்றில் ஒன்று............

திருச்சியின் ஒரு பகுதி ஸ்ரீரங்கம். அது ஸ்ரீவைஷ்ணவர்களின் தலைமைக் கோயில். சைவர்களுக்குச் சிதம்பரம் எப்படியோ அதே மாதிரி ஸ்ரீரங்கம் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு.  திருச்சியின் அருகாமையில் உள்ள ஊர் திருவானைக்கா. அங்கு சிவனுடைய பஞ்சபூத §க்ஷத்திரங்களில் ஒன்றாகிய ஜம்புகேஸ்வரம் இருக்கிறது. அங்கு அகிலாண்டேஸ்சரி சமேத ஜம்புகேஸ்வரர் இருக்கிறார்.  ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்ததொரு வைஷ்ணவர். அவர் திருவானைக்கா ஜம்புகேஸ்வரம் கோயிலின் சுவற்றோரத்தில் மலஜலம் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  இதற்காகவே காலையில் மெனக்கெட்டு ஸ்ரீரங்கத்திலிருந்து ஆற்றைக் கடந்து நடந்தே திருவானைக்காவுக்குச் செல்வார். 

ஒருநாள் சுவற்றின் கீழே குத்தவைத்து அமர்ந்து மலஜலம் கழிக்கும்போது, அந்தச் சுவற்றின்மீது வந்து உட்கார்ந்த காகம் ஒன்று, சுவற்றின் உச்சியிலிருந்த செங்கலொன்றைத் தற்செயலாகத் தள்ளிவிட்டது. அது அவருடைய மண்டையின்மீது விழுந்து ரத்தக்காயம் ஏற்பட்டது.  மேலே நிமிர்ந்து பார்க்கும்போது, அந்தக் காகம் அங்கு இருப்பதையும் செங்கல் ஒன்று உதிர்ந்து விழுந்திருப்பதையும் கண்டார்.  உடனே காகத்தைப் பார்த்து, "ஏ ஸ்ரீவைஷ்ணவப் பெருங்காக்கையே! இதே மாதிரி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செங்கல்லாகக் கீழே தள்ளி இந்தச் சுவற்றை இடித்துத் தள்ளு!" என்று சொல்லிப் பாராட்டினாராம். 

சில ஆண்டுகளுக்கு முன்னர் ட்ஸ¤னாமியால் வேளாங்கண்ணி மாதாக்கோயில் இடிந்து விழுந்து, நாற்பது பேருக்குமேல் இறந்துபோன செய்தி கேட்டு ஒருவர் மிகவும் சந்தோஷப்பட்டு ரொம்பவும் மகிழ்ச்சியாக இணையத்தில் எழுதியிருந்தார். அவர் ஒரு பிராம்மணர். 

அதைப் படித்ததும் எனக்கு இந்தக் கதைதான் ஞாபகம் வந்தது. 

Sunday, 7 August 2011

பணக்கார அரசர்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகத்திலேயே பணக்காரராக ப்ரூனீ சுல்த்தான் கருதப்பட்டார். முதலில் ப்ரூனீ என்பது எங்கு இருக்கிறது என்று சொல்லிவிடுகிறேன்.  போர்னியோ என்னும் தீவு ஒன்று தென்கிழக்காசியாவில் உண்டு.  மிகவும் பெரிய தீவு. உலகிலேயே மூன்றாவது பெரியது.  ஏழு லட்சத்து முப்பதைந்தாயிரம் சதுர கீலோமீட்டர் பரப்புள்ளது. அதாவது தமிழ்நாட்டைப் போல நான்கு மடங்கு பெரியது. 

அந்தத் தீவு மிகவும் வளமானது. பதினோராயிரம் வகையான பூச்செடிகள் இருக்கின்றன. பதினாறு ஏக்கரே உள்ள ஒரு சிறிய வட்டாரத்துக்குள் மட்டும் எழுநூறு வெவ்வேறு ஜாதி மரங்கள் உள்ளன. பையோடைவர்ஸிட்டி என்பார்கள். 

இந்த தீவின் வடக்கில் சாபா என்னும் மாநிலமும் வடமேற்கே சராவாக் என்னும் மாநிலமும் உள்ளன. இவை மலேசியாவைச் சேர்ந்தவை.  இவற்றிற்கும் தெற்கிலும் கிழக்கிலும் உள்ள பகுதியைக் கலிமாந்த்தான் என்பார்கள். அது இந்தோனீசியாவைச் சேர்ந்தது.  இவை மூன்றுக்கும் இடுக்கில் ஒரு சிறிய நாடு.  ஐயாயிரம் சதுர கீலோமீட்டர் மட்டுமே பரப்புள்ள சிறு நாடு. 
சிவகங்கை அளவு உள்ளது. 
அது ஒரு முடியரசு.   
போல்க்கியா என்னும் மன்னர் பரம்பரை ஆட்சியில் உள்ளது.  ஹஸானால் போல்க்கியா என்பவர் அதன் சுல்த்தான்.  ஒரு காலத்தில் அவர்தான் உலகத்திலேயே பெரிய பணக்காரராக இருந்தார். 

Hassanal Bolkiah


உலகின் பல நாடுகள் குடியாட்சிக்கு வந்துவிட்டாலும்கூட இன்னும் சில நாடுகள் அரசர்களால் ஆளப்பட்டுதான் வருகின்றன.  அவற்றின் அரசர்/அரசிகளில் சிலர் உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இருக்கின்றனர்.  அத்தகைய அரசர்களில் முதன்மை வகிப்பவர் தாய்லந்தின் பூமிபோல் அடுல்யடேஜ்.  இந்தப் பெயர் சமஸ்கிருத மூலத்தைக் கொண்டது.
பூமிபால் அதுல்யதேஜ் -  பூமியைப் பரிபாலித்துக் காக்கும் மாசற்ற தூய்மையான தேஜஸ் உடையவர் என்று பொருள்.  மூவாயிரம் கோடி டாலர் அவருடைய மதிப்பு. 

Thai King


இவருக்கு அடுத்த ஸ்தானத்தில்தான் சுல்த்தான் போல்க்கியா விளங்குகிறார்.   
இரண்டாயிரம் கோடி டாலர்.
ஏராளமாகப் பணம் வைத்திருப்பார்கள் என்று நம்மைப் போன்றவர்களால் நம்பப்படும் அராப் நாட்டுக் கொள்ளையர்கள் இவர்களுக்கும் அடுத்தபடியாகத்தான் இருக்கிறார்கள்.  சௌடி ரௌடி, டுபாய் டுபாக்கூர் போன்றவர்கள் எல்லாம் அப்புறம்தான்.  ஒரு காலத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நிலவிய காலத்தில் ஐந்தாம் ஜார்ஜ் மிகவும் பணக்காரராக விளங்கினார். 

George V


இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் ராணி எலிஸபெத் முதன்மைப் பணக்காரர்களில் ஒருவராக இருந்தார். அவருடைய பாட்டனார் ஐந்தாம் ஜார்ஜின் ஸ்டாம்புக் கலெக்ஷனே பலகோடி டாலர் பெருமானமுள்ளது. இன்னும் அரிய பொக்கிஷங்கள் அவரிடம் உண்டு. 

இவர்கள் எல்லாருக்கும் முன்னால் - எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் பெரிய பணக்காரராக இருந்தவர் இந்தியாவின் ஹைதராபாத் நிஸாம் மன்னர்.  இவருடைய சொத்தின் மதிப்பு சரியாகக் கணக்கிடப்படக்கூட முடியாத அளவுக்கு அவ்வளவு அதிகமாக இருந்தது. 

Nizam of Hyderabad


இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் உலகின் பெரிய பணக்காரராக ஆகாகான் விளங்கினார். முஸ்லிம்களில் இஸ்மாய்லியா என்னும் பிரிவினர் இருக்கிறார்கள். அவர்களின்  தலைமை குருவாக விளங்குபவர் ஆகாகான்.  இஸ்மாய்லியாக்கள் இந்திய, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள மிக மிகச் சிறுபான்மையினர். 
ஆனால்.....
பெரும் பணக்காரர்கள். 
இப்போது இருக்கும் ஆகாகானின் பாட்டனாராகிய மூன்றாம் ஆகா கான் நூறு கீலோவுக்கும் அதிகமான எடையுள்ளவராக இருந்தார். ரொம்ப காலம் உயிருடன் இருந்தார்.   அவருக்கு ஐம்பதாம் வயதில் நடந்த பொன்விழாவின்போது எடைக்கு எடை பொன் கொடுத்தார்கள். அறுபதாம் வயதில் வைர விழாவின்போது எடைக்கு எடை வைரங்களைக் கொடுத்தார்கள். எழுபதாம் வயதில் எடைக்கு எடை ப்லாட்டினம் கொடுத்தார்கள். அது தங்கத்தைவிட விலை மதிப்பு மிகுந்தது.

Agha Khan III


இப்போது உள்ள ஆகாகானிடம் எண்பது கோடிதான் இருக்கிறது. உலகப் பணக்காரர்கள் வரிசையில் மிகவும் கீழே போய்விட்டார். இவரைவிட மு.க அழகிரி இன்னும் பெரிய பணக்காரர். 
மனோ பாலா சொல்லிக் கொடுத்ததுபோல, "எப்படி இருந்தவன்.... இப்பிடி ஆயிட்டன்.....!" என்ற கதைதான்.

Monday, 1 August 2011

பகுத்தறிவும் வலம்புரியும்

Canku Idampuri


Canku Valampuri


சென்ற வாரம் ஓர் அன்பர் தம்மிடம் வலம்புரிச்சங்கு இருப்பதாகச் சொன்னார். அவர் அதை வாங்கிய இடத்தையும் சொன்னார். அந்தக் கடையில் வலம்புரிச் சங்கு என்ற பெயரில் ஏராளமான சங்குகளை விற்கின்றனர். அந்தக் கடையில் மட்டுமல்லாமல் மலேசியாவில் இன்னும் எத்தனையோ கடைகளில் இந்த மாதிரி சங்குகளை விற்கிறார்கள்.

வலம்புரிச்சங்கு என்பது தனியான ஓர் இனமல்ல(Species). பல வகைச் சங்கினங்களிலும் வலம்புரியாக சங்குகள் தோன்றுவதுண்டு. இவற்றை Mutants என்று கூறுவார்கள்.  பல்லாயிரக்கணக்கான சங்குகளில் ஒன்றுதான் வலம்புரியாகத் தோன்றும்.

பூஜைப் பொருள்கள், பாத்திரங்கள், சாமிப் படங்கள், சாமி சிலைகள், மாட்டு மூத்திரம் போன்ற பொருள்களை சாமி சாமான்கள் என்று மலேசியத் தமிழர்கள் குறிப்பிடுகிறார்கள். இவற்றையெல்லாம் விற்கும் கடைகளை 'சாமி சாமான் கடை' என்று அழைக்கிறார்கள்.  மலேசியாவில் ஊருக்கு ஊர் இருக்கும் இந்தக் கடைகளில் மொத்தம் ஆயிரக்கணக்கான வலம்புரிச் சங்குகள் இருக்கும்.  தனிப்பட்ட பக்தர்கள் வீடுகளில் வாங்கி வைக்கப்பட்டிருக்கும் வலம்புரிச் சங்குகள் இன்னும் அநேக ஆயிரங்கள் இருக்கும்.  இந்த ஒரு நாட்டில்மட்டும் ஆயிரக்கணக்கான வலம்புரிகள் என்றால் தமிழ் நாட்டில் இத்தனை லட்சங்கள் இருக்கக்கூடும்?

இவ்வளவுக்கு ஏராளமான வலம்புரிகள் இருப்பது சாத்தியம்தானா?

அப்படியானால் வலம்புரியை ஏன் அரிய பொருளாகக் கருதவேண்டும்?

இதையெல்லாம் யாரும் யோசிப்பதேயில்லை. 

பகுத்தறிவு என்பது அழிந்துகொண்டே வருகிறது என்பதற்கு இதெல்லாம் சான்று.

பகுத்தறிவு தானாக ஒன்றும் அழிந்துகொண்டிருக்கவில்லை.

அதை மலேசியாவில் ஒரு சில கூட்டங்கள் அழித்துக்கொண்டே வருகின்றன. அந்தக் கூட்டங்களின் கைகள் ஓங்கியுள்ளன.  ஆகவே பகுத்தறிவுபூர்வமாக சொல்வது எதுவும் எடுபடமாட்டாது.

மேல்விபரங்களைக் கீழ்க்கண்ட இணைப்பில் உள்ள வலம்புரி கட்டுரைத் தொடரில் படித்துக்கொள்ளவும் - 

        இதே போன்ற கட்டுரைகள் இன்னும் பல வரும். அவற்றைப் படித்துவிட்டு நீங்கள்தான் சிந்தனை செய்து சிந்தனைத் தெளிவு பெறவேண்டும்.