Wednesday, 2 May 2012

KRISHNADEVARAYA-#1


கிருஷ்ணதேவராயரின் உடற்பயிற்சி


 இந்திய வரலாற்றில் மாலிக் கா·பூர் என்னும் படைத்தளபதி மிக முக்கியமானவர். இந்திய வரலாறே அவரால் முக்கிய திருப்பங்களை அடைந்தது.
 அலாவுத்தீன் கில்ஜி என்பவன் டில்லி சுல்த்தானாக இருந்தபோது அவனுடைய நம்பிக்கைக்குப்
பாத்திரமான அடிமையாகவும் தலைமைத் தளபதியாகவும் விளங்கியவன்.
 வட இந்தியாவின் பல இடங்களை அவன் கைப்பறினான். பின்னர் தென்னிந்தியா முழுவதையும் பிடித்துக்கொண்டான்.
 அவனுக்குப் பின்னர் தென்னிந்தியாவில் இருந்த நான்கு பேரரசுகளும் அழிந்தன.
 ஆனால் 1336-இல் விஜயநகரம் என்னும் புதிய அரசு தோற்றுவிக்கப்பட்டது.
 அதே சமயம் அதற்கு வடக்கே பாமனி என்னும் பெயரில் ஒரு சுல்த்தானேட்டும் ஏற்பட்டது.
 விஜயநகரம் இக்காரணத்தால் வடக்கே பரவ முடியாமல் தெற்கே பரவியது.
 கிருஷ்ணா நதியிலிருந்து தெற்கேயுள்ள அனைத்துப் பிரதேசங்களும் விஜயநகரின் ஆட்சிக்குக்
கீழ் வந்தன.
 விஜய நகரப் பேரரசை ஆண்டவர்களில் மிகவும்  புகழ் வாய்ந்தவர் கிருஷ்ண தேவ ராயர்(1509 - 1529). அப்போது ஒரிஸ்ஸா, கலிங்கம் வரையில் அவர் கைப்பற்றிக்கொண்டார்.
 அவரே ஒரு பெரும்புலவர். இசைப் போரறிஞர். போரியல் வல்லுனர். சிறந்த நிர்வாகி. அவர் அரசவையில் அஷ்ட திக் கஜங்கள் என்ற பெயரில் புலவர்களும் சாஸ்திர மேதைகளும் இருந்தனர்.


 டோமிங்கோ பயிஸ் என்பவர் போர்த்துகீசியப் போராளி. விஜயநகரின் பேரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்தவர். அவருடன் பழகியவர்.
 கிருஷ்ணதேவராயரைப் பற்றி நிறையக் குறிப்புகள் எழுதிவைத்திருக்கிறார். அதில் ராயருடைய
தோற்றம், பழக்கவழக்கங்கள், மனைவிமார் முதலிய விஷயங்களைப் பற்றி விலாவாரியாக எழுதியுள்ளார்.
 போர்த்துகீசிய மூலத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ராபர்ட் செவெல் தமது 'Forgotten Empire' என்னும் நூலில் போட்டிருக்கிறார். இந்த நூலைப்பற்றி பிறகு எழுதுகிறேன்.
 இப்போது கிருஷ்ணதேவராயரைப் பற்றி டோமிங்கோ பயிஸ் எழுதிய குறிப்புகளில் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தமிழில் மாற்றியிருக்கிறேன்.....
 "இந்த மன்னர் நடுத்தர உயரத்தைக்கொண்டவர். கொஞ்சம் பருமனானவர். மன்னர்களிலேயே
மிகவும் அதிகம் அச்சத்தை உண்டாக்குபவர் இவர்தான். மன்னர் என்ற  லட்சணத்தை பரிபூரணமாகப்
பெற்றவர் இவர். மகிழ்ச்சியும் குதூகலமும் நகைச்சுவை உணர்ச்சியும் மிக்கவர்.
 வெளிநாட்டுக்காரர்களை மதிப்புடன் நடத்துபவர். அவர்களுக்கு ஏற்ற கௌரரவத்தைத் தவறாமல் கொடுப்பவர். அவர்களைப்பற்றி அக்கறையுடன் விசாரித்துக்கொள்வார். நீதிமிகுந்த பெருமன்னர்.
ஆனால் திடீர் திடீரென்று கடுங்கோபம் வந்துவிடும்.....
 தினமும் விடிவதற்கு முன்னரேயே எழுந்துவிடுவார். உடனேயே முக்கால் பைண்ட் (400 மில்லி)
நல்லெண்ணெயைக் குடிப்பார். அத்துடன் நல்லெண்ணையை உடல்முழுதும் தேய்த்துக்கொள்வார்.
 இடுப்பில் ஒரு சிறிய துணியை இறுக்கிக்கட்டிக்கொள்வார்(லங்கோடு). பெரும் பெரும் கனமான குண்டுகளைக் கைகளில் தூக்கிப் பயிற்சி செய்வார். அதன்பின்னர் வாள்பயிற்சி செய்வார். அவர் உட்கொண்ட  எண்ணெயெல்லாம் வியர்வையாக வெளிவரும்வரையில் அவர் இவ்வாறு உடற்பயிற்சி செய்வார்.
 அடுத்தபடியாக ஒரு மல்யுத்த வீரருடன் மல்லுக்கட்டுவார். அதன்பின், ஒரு குதிரையில் ஏறி மிக வேகமாக சவாரி செய்வார். இதையெல்லாம் அவர் விடிவதற்கு முன்னரேயே செய்துவிடுவார். பின்னர் அவர் குளியலுக்குச் செல்வார். அதனை ஒரு பிராமணர் செய்வார்(ராஜாபிஷேகம்). அது முடிந்ததும்
கோயிலுக்குச் சென்று நித்திய சடங்குகளில் கலந்துகொள்வார்.
 அங்கிருந்து ஒரு மண்டபத்துக்குச் செல்வார். தம்முடைய மந்திரி பிரதானிகளுடனும்
அதிகாரிகளுடனும் இங்கு அவர் தம்முடைய அரசுக்கடமைகளை நிறைவேற்றுவார்.

----------------------------------------------------------------------------------------------------