Saturday 2 July 2011

KFC

என்னுடைய ப்லாகைப் பார்த்த ஓர் அன்பர், "என்ன டாக்டர், எல்லாம் கோழியா எழுதிப் போட்டிருக்கீங்க? KFC ஞாபகமா?" என்றார்.

KFC என்றால் Kentucky Fried Chicken.

'ஆமையும் கோழியும்', 'சூடான கோழி, சுடாத கோழி', 'பிச்சைக்காரக் கோழி' என்று மூன்று ஐட்டங்கள் திரிசூலம் ப்லாகில் இருக்கின்றன அல்லவா? அதான் கேட்டிருக்கிறார். 

இன்னும் ஒன்றும் இருக்கிறது - 'ஆமையும், மீனும், கோழியும்'. அதிலும் கோழி வருகிறது அல்லவா? 

ஒரு காலத்தில் அறவே உரைப்பு சாப்பிடுவதில்லை. வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்த்தேன்.  அடிக்கடி கோலாலும்ப்பூருக்குச் செல்ல வேண்டிவரும்.  அப்போதெல்லாம் Jalan Mesjid India என்னும் இடத்தில் உள்ள Palace Hotel-இல் தங்கியிருப்பேன். அடுத்த வீதியான பத்து ரோடில் கேய்·ப்ஸீ கடை இருந்தது. காலையில் சுட்ட ரொட்டி, மதியம் கேயெ·ப்ஸீ, மாலையில் தேத் தாரிக், இரவில் சப்பாத்தி, ஈக்கான் பாக்கார் என்னும் சுட்ட மீன், பசும்பால்.... இப்படி. வம்பில்லாத ஆகாரவகைகள்.  யாராவது பார்க்க வந்தார்கள் என்றால் சாப்பிடுவதற்கு கேயெ·ப்ஸீக்கே கூட்டிச்சென்று விடுவது. அதுதானே வம்பத்த சாப்பாடு?

இது ஒரு மாயையைத் தோற்றுவித்து விட்டது. 
பிற்காலத்தில்கூட கோலாலும்ப்பூர் செல்லும்போது புதிய அன்பர்கள்/அன்பிகள் கேயெ·ப்ஸீக் கடைக்குக் கூட்டிச்சென்றுவிடுவார்கள்.  அதுவரை எல்லாம் சரிதான். 
எதிர் ஸீட்டில் உட்கார்ந்துகொண்டு பார்த்துக்கொண்டேயிருப்பார்கள். 
கேயெ·ப்ஸீ கோழியை எப்படி நாசுக்காகச் சாப்பிடமுடியும்? அதன் விளம்பரத்திலேயே போட்டிருக்கிறான் - 'Finger Lickin' Good'.
அதுவும் பொரித்த கோழியின் முதுகெலும்புதான் ரொம்பவும் Crispy-யாக நன்றாக இருக்கும். நொறுக்கித் தின்ன வேண்டிய சங்கதி.
முன்னால் பெண்கள் உட்கார்ந்துகொண்டு பார்த்துக்கொண்டேயிருந்தால் எப்படி நொறுக்கிக் கடித்துப் பிய்த்து இழுத்துத் தின்பது?

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், கோலாலும்பூர் ஆட்கள் என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வந்தால், "கொஞ்சம் இருங்க சார்", என்று சொல்லிவிட்டு அரக்கப் பறக்க எங்கோ ஓடிச்சென்றுவிட்டு திரும்புவார்கள்.   
ஒரு மேஜையை எடுத்து என் முன்னால் வைத்துவிட்டு, பையில் இருந்த அட்டைப் பெட்டிகளை எடுத்துவைத்து, பக்குவமாகத் திறந்து, பயபக்தியோடு வைத்து, "சாப்டுங்க சார்", என்பார்கள். 
Kentucky Fried Chicken!!!
சாராயம் வைக்காததுதான் பாக்கி. 
அதற்கெல்லாம் தடையுத்தரவு போட்டாச்சு. 
இப்போதெல்லாம் பிஸ்கட்தான். 

சொல்ல மறந்துவிட்டேன். 

'வயதா ஒரு தடை' என்ற தலைப்பில் கேய்·ப்ஸீயின் தந்தை கர்னல் ஸாண்டர்ஸ் பற்றி ஓர் அருமையான கட்டுரையை எழுதியிருக்கிறேன். மலேசிய இதழ்களிலேயே மூன்று முறை அந்த கட்டுரை வெளிவந்துவிட்டது.