Wednesday, 29 June 2011

பிச்சைக்காரக் கோழி

'சூடான கோழி சுடாத கோழி' என்னும் மடலை ருசித்து ரசித்துப் படித்தவர்களுக்காக ஒரு ஸ்பெஷல் கோழியைப் பற்றி எழுதுகிறேன்.

இதன் பெயர் 'பிச்சைக்காரக் கோழி'.

மங்கிக் கசங்கிக் கந்தல் கந்தலான சிறகுகளோடு, அழுக்குப் பிடித்த கோழியொன்று தன் கழுத்தில் ஒரு தகர டப்பாவைக் கட்டிக்கொண்டு "கொக்கொக், க்ராக் க்ராக், கொரக்கோக்கோக்" என்று அதன் பாஷையில் "அம்மா தாயே" என்று கூவிக்கொண்டு திரிவது போன்ற காட்சி நம்ம ஆட்களில் சிலருக்குத் தோன்றியிருக்கும்.
இதெல்லாம் பழைய காலத்தில் ரோட் ரன்னர் ஷோ, வூடீ வூட்பெக்கர் போன்ற படங்களைப் பால்யத்தில் பார்த்த தாக்கமாக இருக்கும். அறுபது வருஷங்கள் கழித்து இப்படியாப்பட்ட உருவகங்கள் அதனால் தோன்றும்.
வயசுக் கோளாறு.

ஹாங்காங் என்றொரு நகரம் இருக்கிறது.
இணையத்தில் உள்ள சில தமிழ்ப்பற்றாளர்கள் இதை 'ஆங்காங்கு' என்று எழுதுவதுண்டு.
ஆங்கு அதாவது ஆங்காங்கில் ·பிலிப் என்றொரு டாக்டர் இருந்தார். தமிழ் இணையத்தின் மூலம் பழக்கமானவர். அவரை இப்படித்தான்...... "பிலிப்பு ஆங்காங்கு" என்று எழுதுவார்கள்.

சீனாவை ஒரு காலத்தில் சக்கரவர்த்திகள் ஆண்ட காலத்தில் பிரிட்டிஷ்காரர்கள் தொண்ணூற்றொன்பது ஆண்டு காலத்துக்கு ஆங்காங்குவை லீஸ¤க்கு எடுத்திருந்தார்கள்.

சக்கரவர்த்திகள் எல்லாம் மெழுகுவர்த்தியாகவும் தீவர்த்தியாகவும் எரிந்து அணைந்து போனபின்னர் வார் லார்டுகள் ஆட்சி, க்வோமிண்டாங் ஆட்சி, சிவப்பர்கள் ஆட்சி போன்றவை சீனாவில் நடந்த போதெல்லாம்கூட பிரிட்டிஷார் கையில் அது இருந்தது. ஜப்பானியர்கள் சில காலம் ஆண்டதுதவிர மற்றபடிக்கு அது பிரிட்டிஷ்காரர்கள் கையில்தான் இருந்தது.  அவர்களும் அதைச் 'சிக்கெனப் பிடித்தேன்' என்றவாறு ஆண்டு அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் ஹாங்காங்கில் சீனப் பிச்சைக்காரர்கள் இருந்தார்கள்.

சிவப்புக் கடலின் ஓரத்தில் ஒரு பூர்ஷ்வா பட்டினம். பிச்சைக்காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள். வெறும் வெள்ளை அல்லது சுத்தமான வேட்டியின் சுத்தமோ வெண்மையோ சும்மா எடுபடமாட்டாது. அதில் புள்ளிகள், அழுக்குத் திட்டு முதலியவை இருந்தால்தான் அதன் சுத்தம்/வெண்மை பளிச்சென்று தெரியும்.  அதுபோலவே ஏழை பாழைகள் ஏராளமாக இருந்தால்தான் இந்த பூர்ஷ்வாக்களின் தனித்துவம் நன்கு எடுபடும். "எல்லாருக்கும் எல்லாம் பொதுவாகணும்; அப்புறம் ஏழைகளைக் கதைகளில்தான் பாக்கணும்" என்று பட்டுக்கோட்டையாரோ நாமக்கல்லாரோ ஒருகாலத்தில் பாடிவைத்த மாதிரி இருந்தால் என்ன ஆவது? மடு இருந்தால்தானே மலைக்குப் பெருமை.
இல்லீங்களா தொரைமாருங்களே?
எப்பவுமே இரண்டாம் மூன்றாம் நான்காம் தரங்கள் இருந்தால்தான் ஒண்ணான் நம்பருக்குப் பெருமை. ஒண்ணான் நம்பர் ஒண்ணான் நம்பராக இருக்கத் தகுதியில்லையென்றாலும் பரவாயில்லை. மற்றதுஹளையெல்லாம் ரெண்டாம், மூணாம், நாலாந்தரத்துக்குத் தள்ளிவிட்டால் போச்சு!
இதுதான் உலகநியதி.
உலக நீதியல்ல.

ஹாங்காங்கில் உள்ள பிச்சைக்காரர்கள் கொஞ்சம் இந்நோவேட்டிவாக உள்ளவர்கள். Necessity is the Mother of Invention என்பார்கள் அல்லவா?  பிச்சைக்காரர்களில் கொஞ்சம் எண்ட்டர்ப்ரைஸிங்காக இருந்தவர்கள் ஹாங்காங் மாநகரின் ஓரப்பகுதிகளுக்குச் சென்று அங்குள்ளவர்கள் வளர்க்கும் கோழிகளைத் திருடி விடுவார்கள்  கோழியை அடித்துச் சிறகு இறகு எல்லாவற்றையும் பிடுங்கிவிடுவார்கள்.  கோழியின் குடல் வகையறாக்களை துவாரங்களின் வழியாக நீக்கிவிடுவார்கள்.  எங்காவது எப்படியாவது உருளைக்கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, உப்பு, கீரை போன்றவற்றைத் தேடிக்கொண்டுவிடுவார்கள்.

இதையெல்லாம் கோழியின் உள்ளுக்குள் செலுத்துவார்கள்.  அதன்பின்னர் களிமண்ணை எடுத்து, கோழியின் மீது பூசி, அதை முழுக்க முழுக்க அப்பி, மூடிவிடுவார்கள்.  நெருப்பை மூட்டிவிடுவார்கள்.  நன்றாக எரியவிட்டு, அதற்குள் களிமண்ணால் பூசப்பட்ட கோழியைப் போடுவார்கள்.  அவ்வப்போது பிரட்டிவிடுவார்கள். சில மணி நேரங்கள் கழித்து கோழியை மூடியிருக்கும் களிமண், ஓடாக மாறியிருக்கும்.  அந்தச் சமயத்தில் அதை எடுத்துவிடுவார்கள்.  கல்லால் அடித்து, களிமண் ஓட்டை உடைப்பார்கள்.  சுத்தமாக நீக்கிய பின்னர், கோழியை எடுத்துக் கொள்வார்கள்.  கோழி பக்குவமாகச் சமைக்கப்பட்டிருக்கும்.

இந்தக் கோழிக்குப் பெயர்.....
Beggar's Chicken.
அதைத்தான் பிச்சைக்காரக் கோழி என்று மொழியைப் பெயர்த்திருந்தேன்.

சில மிகப் பெரிய ஹோட்டல்களில் இந்த அயிட்டம் ரொம்ப விசேஷமான ஸ்பெஷியலிட்டியாக விளங்குவதாகச் சொல்வார்கள்.

Sunday, 26 June 2011

சூடான கோழி, சுடாத கோழி

சிலநாட்களுக்கு முன்னர் பஸாருக்குச்(மார்க்கெட்டுக்கு) சென்று கோழி வாங்கவேண்டியிருந்தது.  கோழி விற்கும் இடத்திற்குச் சென்றேன்.

'தவ்க்கே ஆயாம்' எனப்படும் கோழி வியாபாரியிடம் சென்று சுத்தம் செய்யப்பட்ட முழுக் கோழியாகக் கேட்டேன்.  குனிந்து மும்முரமாகக் கோழியைக் கூறு போட்டுக்கொண்டிருந்த தவ்க்கே கேட்டான்:
"லூ மாவ் ஆயாம் பானாய்க்கா, தாராப் பானாய் பூஞ்யாக்கா?" ("Lu mahu ayam panas-kah tidak panas-punya-kah?")  "உனக்குச் சுடும் கோழி வேண்டுமா, குளிர்ந்த கோழி வேண்டுமா?"
"யென்னாடாது, ஔவையாரிடம் முருகன் 'சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?', என்று கேட்டதுபோலக் கேட்கிறானே? கோழியைச் சுட்டே, அதாவது வாட்டிக் கீட்டிக்கொடுக்கிறானோ, என்னம்மோ?", என்று கொஞ்சம் அசந்து போய்த் தயங்கி நின்றேன்.

அந்தப் பஸாரிலெல்லாம் கொஞ்சம்கூட தயங்கவோ தேங்கவோ கூடாது. பேரம் பேசுவதாவது....? அதெல்லாம் முடியாது.  பழைய காலத்தில் மதுரை எர்ஸ்க்கின் பெரியாஸ்பத்திரி டிஸ்ப்பென்ஸரியில் மாதிரி, "தோ பாரு.... நாளுக்கு மூணு, வேளக்யி ஒண்ணு... வாயில போட்டுத் தண்ணி... ஒதுங்கு, ஒதுங்கு....." என்ற மாதிரிதான்.  "ஜரகண்டி ஜரகண்டி" என்று அந்த ஆயம்காரத் தவ்க்கே கூவாததுதான் பாக்கி.  "வந்தியா, பாத்தியா, வெல கேட்டியா, வாங்குனியா.... போய்க்கிட்டே இரு" என்பதுகோட்பாடு.

ஜூலியஸ் ஸீஸரே வந்தாலும்கூட "Veni, Vidi, Vici" (I come, I see, I conquer) என்று அவர் சொன்னதை மாற்றி "Veni, vidi, emi"(I come, I see, I buy") என்று சொல்லிக்கொண்டு கோழியை வாங்கிக்கொண்டே ஒதுங்கிப் போய்விடவேண்டியதுதான்.
அவ்வளவு அவசரம், நெருக்கடி, கெடுபிடி.

"ஆப்பா பேஸா?"("Apa Beza?" - "என்ன பேதம்? (வித்தியாசம்)" என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டேன்.
"னீ பானாய்ப் பூஞ்யா பாலூப் போத்தோங் பூஞ்யா-லோ" (Ini panas-punya bahru potong-punya-loh) என்று அடித்தொண்டையில் சத்தம் போட்டுச் சொன்னான்.  அப்போதைக்கு அப்போது உயிருள்ள கோழியை அறுத்து, உரித்துச் சுத்தம் செய்து கொடுக்கும்போது அத்தகைய கோழியின் உடல் சூடு இன்னும் இருக்கும்.
கொஞ்ச நேரம் ஆனபிறகு குளிர்ந்துவிடும்.

அதான் 'சூடான கோழி, குளிர்ந்த கோழி'யின் ரகசியம்.

Thursday, 23 June 2011

ஆமையும் கோழியும்

நான் வேலை செய்த இடங்களில் கிலந்தான் என்னும் ஸ்டேட்டும் ஒன்று. 1977 கடைசியில் அங்கு சென்றேன். அந்த ஸ்டேட்டின் தலைநகரம் கோத்தா பாரு எனப்படுவது. 1977-இல் தும்ப்பாட் என்னும் இடத்திற்கு முதல் சுகாதார அதிகாரியாகச் சென்றேன். அங்கு பெரிய வீடுகள் அப்போது கிடையாது. மிகவும் பின் தங்கிப்போன இடம்.  'கம்ப்போங்' என்பது கிராமத்தைக் குறிக்கும் சொல். மலாய்க்காரர்கள் வசிக்கும் கிராமங்களில் வீடுகள் பலகைகளால் ஆனவை. தரையில் மரத்தூண்கள் ஊன்றப்பட்டு அதன்மேல் கட்டப்படிருக்கும். தரையிலிருந்து படிக்கட்டில் ஏறி வீட்டுக்குள் செல்லவேண்டும். ஐந்து அல்லது ஆறடி உயரத்தில் வீடு இருக்கும்.

இந்த மாதிரி வீட்டில்தான் தும்ப்பாட்டில் வசித்தேன். 

அதுவும் ஆற்றங்கரையின்மேலுள்ள வீடு. முதலைகள், ராட்சத உடும்புகள், பாம்புகள் போன்றவற்றிடமிருந்து பாதுகாப்புக்காக தரையிலிருந்து ஏழெட்டு அடி உயரத்துக்கு மேலே வீடு இருந்தது. 

கிலந்தான் ஸ்டேட்டில் தமிழர்கள் உண்டு. அவர்களுக்கென வெகு சில கோயில்கள் இருந்தன. அவற்றில் ஒன்று தும்ப்பாட்டில் இருக்கும் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில்.  ஒரு காலத்தில் ட·ப் டிவலப்மெண்ட் கார்ப்பரேஷன் என்னும் நிறுவனம் கிலந்தானிலுள்ள காடுகளை அழித்து அங்கு ஏராளமாக ரப்பர் எஸ்டேட்டுகளை ஏற்படுத்தியது. அந்தக் கம்பெனிக்காகவே பிரத்தியேகமாக ரயில்பாதை போட்டார்கள். அந்த ரயில்பாதையின் கடைசி ஸ்டேஷன் தும்ப்பாட்தான். ஒரு காலத்தில் ரயில்வேயில் தமிழர்கள் ஏராளமானோர் வேலை பார்த்தனர். ஆகவே தும்ப்பாட்டில் தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர். அவர்கள் அந்த முத்துமாரியம்மன் கோயிலைக் கட்டிக்கொண்டனர். ஆனால் பின்னால் குடிபெயர்ந்துபோய்விட்டனர். ஆறேழு குடும்பங்கள். அவ்வளவுதான். 

கோத்தாபாரு ஆட்கள் அந்தக் கோயிலை நடத்திவந்தனர். கோத்தாபாரு நகரத்தில் அப்போதெல்லாம் கோயில் கிடையாது. ஆகவே தும்பாட்டுக்குத்தான் அத்தனை பேரும் வருவார்கள். 

கோத்தாபாரு நகரத்தில் நல்ல நிலையில் இருந்தவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து குடியேறிய தமிழர்கள். ஆகவே கோயில் பெருமளவுக்கு அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. 

அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதைக் கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களுக்கென்று பழமொழிகள், மொழிவழக்குகள், பேச்சுமுறை, உச்சரிப்பு.....இத்யாதி.  அலாதியாக இருக்கும். சிகரெட் பிடிப்பதைக்கூட அவர்கள் சுத்தத் தமிழில் சொல்வார்கள்.  வித்தியாசமாக இருக்கும். 

நவரெட்னம் (அதென்னவோ அவர்களெல்லாம் 'ரத்தினம்' என்பதை 'ரெட்னம்' என்றுதான் உச்சரித்தார்கள்) என்பவர் நிறைய பழமொழிகள், கதைகள் சொல்வார். முப்பதாண்டுகளுக்கு முன்பே அவர் எழுபதை ஒட்டிய வயதுடையவராக இருந்தார். 
அவர் ஒருமுறை சிங்கம் என்பவரிடம் சொல்லிக்கொண்டிருந்த கதையை அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தேன். 

"இந்த ஆமெ இருக்கு கண்டியோ......அது ஆயிரம் முட்டைகளப் போட்டுப்போட்டு அதுபாட்டுக்கு மூச்சுப்பேச்சில்லாமெ போய்க்கொண்டேயிருக்கும். இந்த கோஓஓஒழி....அது ஒட்ரே ஒட்ரு முட்டைய போட்டுப் போட்டு ஊரெல்லாங்கூட்டி வச்சு 'கொக்கொக்கோ....கொக்கொக்கோ' எண்டு கூவி அழைக்குமா....பாத்தியோ!"

யதார்த்தம். 

Tuesday, 21 June 2011

யுத்த நீதிமகாபாரதத்தில் ராஜநீதிப் பகுதிகள் ஏராளமாக இருக்கின்றன.
யுத்த சாத்திரம் யுத்த நீதி ஆகியவையும் நிறையாக் காணப்படும். 

ஓரிடத்தில் சொல்லப்பட்டிருந்தது கவனத்தை ஈர்த்தது. 
போரின்போது தற்காப்பு நிலைக்கு மன்னன் தள்ளப்படும்போது, அவன் உடனடியாக தன்னுடைய முக்கியமான கோட்டைக்குள் புகுந்துகொள்ளவேண்டும்.

காடுகளிலும் வெளிகளிலும் மேய்ந்துகொண்டிருக்கும் ஆடு மாடுகளைப்  பாதைகளுக்கும் சாலைகளுக்கும் ஓட்டிவந்துவிடவேண்டும்.
  தன்னுடைய நாட்டைப் பாழ்படுத்திவிடவேண்டும்.

கிராமத்து மக்களையெல்லாம் நகரங்களுக்குக் குடிபெயர வைக்கவேண்டும்.  செல்வந்தர்கள் அனைவரையும் பாதுகாப்புப்படைகள் நிலையாக இருக்கும் கோட்டை நகரங்களுக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.  எந்தப் பொருள்க¨ளையெல்லாம் அப்புறப்படுத்த முடியாதோ அவற்றையெல்லாம் எரித்து விடவேண்டும்.  புல்பூண்டு, பாலங்கள் முதலியவையும் நெருப்புக்கு இரையாகப்பட வேண்டும். நீர் வழிகள் முதலியவை அழிக்கப்படவேண்டும்.  குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளிலிருந்து நீர் வெளியேற்றப்
படவேண்டும். அவ்வாறு நீரை வெளியேற்றமுடியாத நீர்நிலைகளில் விஷத்தைக் கலக்கவேண்டும்.  கோட்டைக்கு அருகில் இருக்கும் அனைத்து காடுகளும் அழிக்கப்படவேண்டும். பெரிய மரங்களின் கிளைகள் வெட்டிவிடப்படவேண்டும்.  ஆனால் கோயில்களைச் சேர்ந்த எந்த மரத்தையும் வெட்டக்கூடாது.
கோட்டைகளில் பார்வைக்கூண்டுகளும் தகவல் சாதனங்களும் நிறுவப்படவேண்டும்.  கோட்டையைச் சுற்றியுள்ள அகழிகளில் கூரிய ஈட்டிகள் மறைவாக நடப்பட்டு, முதலைகளும் ஏராளமாக விடப்படவேண்டும்.  கோட்டையிலிருந்து வெளியில் செல்வதற்கு ரகசிய பாதைகளும் சுரங்கங்களும்
இருக்கவேண்டும்.

எரிபொருள் நிறைய சேமித்துவைக்கப்படவேண்டும்.  பழைய கிணறுகள் தூரெடுக்கப்பட்டு, புதிய கிணறுகளும் வெட்டப்படவேண்டும்.  எல்லா நெருப்புகளையும் அணைத்துவிடவேண்டும். யாகசாலைகளில் உள்ள நெருப்பு மட்டுமே எரியவேண்டும்.  பகலில் நெருப்பு எரிப்பவர்கள் கடும் தண்டனைக்கு ஆளாவார்கள் என்று முரசு அறிவிக்கவேண்டும்.  வண்டிக்காரர்கள், பிச்சைக்காரர்கள், பைத்தியங்கள், அலிகள், நாட்டியக்காரர்கள் ஊரைவிட்டு வெளியேற்றப்படவேண்டும். ஏனெனில் அவர்களில் ஒற்றர்கள் இருக்கக்கூடும்.  தன்னுடைய ஒற்றர்களை சாலைகளிலும் வழிபாட்டுத்தலங்களிலும் மக்கள் கூடும்
ஊர்களிலும் திரியச் செய்யவேண்டும்.  ஆயுதசாலைகள், கவச அறைகள், யானை குதிரை லாயங்கள் முதலியவற்றுக்கு யாரும் அனுமதிக்கப்படக்கூடாது.  எண்ணெய், கொழுப்பு, தேன், வெண்ணெய், மருந்துகள், புல், விஷம் தோய்ந்த அம்புகள், எரிபொருள் முதலியவை நிறைய சேகரிக்கப்பட்டு சேமித்துவைக்கப்படவேண்டும்.
................................

மேலே உள்ள விஷயத்தை நோக்கும்போது பல விஷயங்கள் புலப்படுகின்றன.  அவற்றில் ஒன்று:

'Scorched Earth Policy' என்று இன்று நாம் குறிப்பிடும் உத்தி அன்றும் கடைபிடிக்கப் பட்டிருக்கிறது.
விளைநிலங்களையும் நீர் நிலைகளையும் பாழ்செய்து, பாலங்களைத் தகர்த்து சாலைகளையும் முக்கிய கட்டடங்களையும் உடைத்து, உணவுப்பண்டங்களை அழித்தல் போன்றவை அதில் அடங்கும்.

இரண்டாம் உலகயுத்தத்தில் ரஷ்யாவில் ஜெர்மன்காரர்கள் தோற்றதற்கு ரஷ்யர்கள் கடைபிடித்த Scorched Earth Policy-யும் ஒரு முக்கிய காரணம்.


Friday, 17 June 2011

ஸர்ப்பவஸ்யம்

'ஸர்ப்பவஸ்யம்' எனப்படும் துறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் இருப்பதாகக் காணப்படுகிறது.  பாம்பு மந்திரத்துக்குக் கட்டுப்படுகிறது. நாகத்தைக் கட்டும் மந்திரங்கள் உண்டு.  தமிழ்ப்படங்களிலும் தெலுங்குப்படங்களிலும் பார்க்கலாம். நாகதேவதையையோ அல்லது நாககன்னிகையையோ கட்டுப்படுத்துவார்கள். 

விச்சாதாரி நாகம் என்ற ஒன்றையும் காட்டுவார்கள். வித்யாதர நாகம் என்பதைத்தான் அப்படிச் சொல்கிறார்கள்.  யந்திரங்கள், அவை அடங்கிய தாயத்துக்கள் முதலியவையும் பயன்படுகின்றன. 

சில மூலிகைகளுக்கு சக்தியுண்டு.  வெள்ளெருக்குக்குப் பாம்பு பயப்படுகிறது.   
அதை நான் நேரே பார்த்திருக்கிறேன். 
வீட்டுக்குள் நுழைந்துவிட்ட கருநாகம் ஒன்றை விரட்ட, பூஜையில் இருந்த வெள்ளெருக்கு வேர்ப் பிள்ளையார் உதவினார்.  அகத்திய ஆவணத்தில் ஒரு பழைய மடலில் இந்த விபரம் இருக்கிறது. 

மலாயாவின் காடுகளில் ஒரு வகைப் பிரம்பு விளைகிறது. அதன் வேர்ப்பகுதி பாம்பின் தலைபோல் இருக்கும். பிரம்பு வளைந்து நெளிந்து இருக்கும்.  அது இருக்கும் இடத்தில் பாம்பு வராது என்பார்கள். பேயையும் விரட்டும் என்பார்கள். அந்தத் தடியிலேயே ஆண்தடியும் பெண்தடியும் உண்டு என்கிறார்கள்.  பாம்புப் பிடாரர்கள் சில மூலிகைகளைப் பாம்புக்கு நேரே பிடிப்பதைப் பார்த்திருக்கிறேன். 

மனதின் ஆற்றலாலும் பாம்பை வசப்படுத்தலாமாம்.

மலேசியாவில் Cobra King என்ற பட்டத்தை வைத்திருக்கிறவர் ஒருவர் இருக்கிறார். இன்னொருவரும் இருந்தார். எல்லாரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.  நல்ல பாம்பு, விரியன் பாம்பு முதலியவற்றை வசியப்படுத்தி அவற்றுடன் விளையாடிக் காட்டுவார்.  நூற்றுக்கணக்கான விஷப் பாம்புகளுடன் பலநாட்கள் ஒரே கண்ணாடிக் கூண்டில் வசித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர். 

அவரிடம் ஒருமுறை கேட்டேன்.  அவர் தம்முடைய மன ஆற்றலால் பாம்புகளை வசியப்படுத்துவதாகச் சொன்னார். "அது என்ன ஹிப்னட்டிஸமா, அல்லது மெஸ்மரிஸமா?" என்று கேட்டதற்கு, "You can call what you want, Sir", என்று சிரித்துக்கொண்டே சொன்னார். ஆமோதிக்கவுமில்லை; மறுக்கவுமில்லை. 

தரையில் கிடக்கும் பாம்பை உசுப்பிவிடுகிறார்.  அது தலையைத் தூக்கி ஆடுகிறது. நல்லபாம்பாக இருந்தால் படமெடுத்து ஆடுகிறது.  அதன் லெவலுக்குக் கீழே தரையில் கைகளையும் கால்களையும் பரப்பி ஊன்றிக்கொண்டு, தரைக்கு மேல் கொஞ்ச உயரத்திலேயே படுத்த மாதிரியாக, ஆனால் தரையில் உடல் படாமல் அப்படியே இங்கும் அங்குமாய் லேசாக அசைகிறார். ஆனால் பார்வை மட்டும் பாம்பின் கண்களின்மேல். பார்வையையை மட்டும் திருப்புவதேயில்லை. அதன் பின் ஒரு கையை மட்டும் தூக்கி, பாம்பின் தலைக்கு நேரே பக்கவாட்டில் மிக மெதுவாக அசைக்கிறார். பாம்பு மிக லேசாக தலையை பக்கவாட்டில் அசைக்கிறது. அப்புறம் அவரும் அசையாமல் இருக்கிறார்.  பாம்பும் அசையாமல் இருக்கிறது. பிறகு அந்தக் கையைப் பாம்பின் தலைக்கு மேலே மெதுவாகக் கொண்டு செல்கிறார்.  பாம்பின் தலை மண்டையின் பின்புறத்தில், கழுத்துக்கு மேற்புறமாக நடுவிரலால்  தொட்டு தடவுகிறார். அது அசையாமல் இருக்கிறது. அதன்பின் அதை அப்படியே எடுக்கிறார்.  அதுபாட்டுக்கு வளைந்து நெளிந்து அவர் கையில் இருக்கிறது. சீறவில்லை.  அதை அப்படியே கிட்டத்தில் கொண்டுவந்து அதன் வாயில் முத்தமிடுகிறார்.

இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும்போது பார்வையை மட்டும் அசைக்கவில்லை. கண்களைச் சிமிட்டவும் இல்லை. Intense Look என்பார்களே அதுமாதிரியான ஒரு தீட்சண்யமான பார்வை.  பார்த்துக்கொண்டிருப்பவர்களே ஆடாது அசையாது லயித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
ஹிப்னட்டிஸமா, மெஸ்மரிஸமா......
அல்லது வர்மமா? 
எல்லாம் கலந்த மாதிரி இருக்கிறது.

பின்னணியில் ஏதும் மந்திரம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. திருக் குர்ஆனில் பாம்பைக் கட்டுப்படுத்தும் சில ஆயத்துக்கள் இருக்கின்றன என்று சொன்னார். 

ஈப்போ என்னும் ஊரில்தான் அவர் இருந்தார்.  அவருடன் தொடர்பு கொண்டு, படம் வாங்கி ஸ்கேன் செய்து போடுகிறேன்.  பாம்பு வசியத்தைப் பற்றி அவரிடம் இன்னும் விபரமாகக் கேட்டு, அவர் சொன்னால் எழுதுகிறேன்.  பாம்புப் பிடாரர்களிடம் கேட்டால் நிறைய விபரம் கிடைக்கும். 

Wednesday, 15 June 2011

வெள்ளெருக்கு விநாயகரும் கரும்பாம்பும்

1984-ஆம் ஆண்டு இறுதியில் மலாயாவின் வடமேற்கு மூலையில் இருக்கும் பெர்லிஸ் Perlis மாநிலத்தின் தலைநகர் கங்கார் Kangar என்னும் ஊரிலிருக்கும் மாநில மருத்துவமனயின் இயக்குனராக மாற்றலாகிப் போனேன். 
       
பெர்லிஸ் என்னும் இடம் பாம்புகளுக்குப் பேர் போனது. நான் இருந்த குவார்ட்டர்ஸைச் சுற்றிலும் பாம்புப்புற்றுகள்தாம். புல்தரையில் சில துவாரங்கள் இருக்கும். அவற்றிலும் பாம்புகள் இருக்கும்.  குவார்ட்டஸ¤க்குள் பாம்புகள் வந்துவிடுவதுண்டு.  பாம்புகள் நிறைய இருந்ததால் அங்கு பாம்புப் பண்ணை ஒன்றை அரசு வைத்திருந்தது. அங்கு பாம்பு விஷத்தை எடுப்பார்கள்.பாம்பு விஷத்தை வெகு சிறிய அளவில் குதிரைகளுக்குச் செலுத்தி, அவற்றின் ரத்தத்தை முறிய வைத்து பெறப்படும் ஸீரம் என்னும் நிணத்திலிருந்து 'அண்ட்டி வீனம்' என்னும் நஞ்சு முறிவு மருந்தைத் தயாரிப்பார்கள்.  பல மாதிரி பாம்புகள். நல்ல பாம்பு, கரும்பாம்பு, விரியன் என்று நச்சுப்பாம்புகள் விதம் விதமாக இருந்தன.

ஒருமுறை மாலையில் சமையலறையில் என் மனைவி வேலையாக இருந்தபோது, திடீரென்று என் மகளின் அலறல் சப்தம் கேட்டது.  பார்த்தால் என் மனைவியின் குதிகாலுக்கு மிக அருகில் ஒரு கரும்பாம்பு படமெடுத்துக் கொண்டு இருந்தது. அது என் மனைவியைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அப்போது மனைவி நிற்கவும் அதுவும் நின்றுவிட்டது.. நின்ற வாக்கில் படமெடுத்துக்கொண்டிருந்தது.

நான் அந்தப் பாம்பை அடிக்க முயன்றேன். ஆனால் அது சமையலறை குட்டி அலமாரிகளுக்கு அடியில் போய் நின்றுகொண்டது.  பயங்கரமாகச் சீறியது. இங்கும் அங்குமாகப் பாய்ந்தது.

அப்போதுதான் திடீரென்று ஞாபகம் வந்தது. 

என்னிடம் வெள்ளெருக்கு வேரால் செய்யப்பட்ட விநாயகர் சிலையொன்று இருக்கிறது. அது எனக்கு மேதை டாக்டர் ஜெயச்சந்திரனால் பூஜைக்காகக் கொடுக்கப்பட்டது. அதற்கு முன்னர் அவர் பல ஆண்டுகளாக அதற்குப் பூஜை செய்துகொண்டிருந்தார். நானும் அதைப் பூஜை செய்துவந்தேன்/வருகிறேன்.  அசல் வெள்ளெருக்கு வேர். நியமப்படி பார்த்து, காப்புக்கட்டி, மந்திரித்து, கிரமமாக எடுக்கப்பட்ட வேர்.  வெள்ளெருக்கு வேர் பாம்புக்கு ஆகாது என்று சொல்லி யிருக்கிறார்கள்.

ஆகவே ஓடிப்போய் பூஜையறையிலிருந்து வெள்ளெருக்கு விநாயகரை எடுத்து வந்துபாம்புக்கும் எங்களுக்கும் இடையே வெகு வேகமாக வைத்துவிட்டு ஒதுங்கினேன்.

ஒரு பயங்கர சீறலுடன் பாம்பு துள்ளிப் பாய்ந்து வேகமாக ஒதுங்கியது. அங்கேயிருந்த சாக்கடைக் குழாய்க்குள் நுழைந்துகொண்டது.

நான் உடனேயே பாம்புப் பண்ணைக்கு டெலி·போன் செய்தேன்.
அங்கிருந்து இரண்டு பேர் வந்தார்கள்.

கொதிக்கும் தண்ணீரை சாக்கடைத் துவாரத்திற்குள் ஊற்றச் சொன்னார்கள். அவ்வாறே ஊற்றினேன். பாம்பு அலறியடித்துக்கொண்டு வெளிச் சாக்கடைக்கு வந்துவிட்டது.  அவ்வளவுதான். நீண்ட கைப்பிடியுள்ள வளைந்த ஸ்ட்டீல் கம்பியால் பாம்பின் கழுத்தை அழுத்தி அமுக்கிக் கொண்டு தலையை ஒட்டிய கழுத்துப் பகுதியைக் கையால் அழுத்திப் பிடித்துத் தூக்கினார்கள்.

"Come Doctor. Catch." என்றவாறு என் கையில் கொடுத்தார்கள். 
பிடித்ததும் உடனேயே கையைச் சுற்றிக் கொண்டது. ரொம்பவும் இறுக்கமான சுற்றுகள். முறுக்கிக் கொண்டுவிட்டது.

பாம்பை அப்போதுதான் உற்றுப்பார்த்தேன். பளபளப்பான கருப்பு நிறம். வழுவழுப்பாக இருந்தது. ஆனால் ஒன்று. மீன் கவுச்சி அடித்தது.

 பாவமாக இருந்தது. கொதிக்கும் தண்ணீரையல்லவா ஊற்றி விட்டேன். நம்மால் பிடிபட்டுவிட்டது. இனிமேல் அது கண்ணாடிக் கூண்டுக்குள் அல்லவா இருக்கவேண்டும். அதன் சுதந்திரமும் பறி போய்விட்டதே.  ஆகவே தமிழில் மெதுவாக அதனிடம் பேசி மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

"டொக்டோர் சக்காப் ஆப்ப கெப்பாட ஊலார்னீ?" - "இந்தப் பாம்பிடம் டாக்டர் என்ன பேசினீர்கள்?" என்று பாம்பாளர்கள் கேட்டனர்.
"சும மிந்த்தா மா·ப் ஆஜ" - "சும்மா மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். அவ்வளவுதான்."
சிரித்துக்கொண்டார்கள்.

மிகவும் பிரயாசைப்பட்டு அந்த முறுக்கைப் பிரித்துக்கொண்டு, பாம்பைத் திருப்பிக் கொடுத்தேன்.  பாம்பை ஒரு சாக்குப்பையில் போட்டுக்கொண்டு திரும்பிச்சென்றார்கள்.

கரும்பாம்பு என்பதை King Cobra என்று சொல்வார்கள். பாம்புகளில் மிகக் கடுமையான விஷம் வாய்ந்தது அது.

அது வெள்ளெருக்கு வேர் பிள்ளையாருக்குப் பயந்து ஒதுங்கி ஓடி மறைந்ததைக் நேருக்கு நேர் கண்ணால் கண்டு அறிந்துகொண்டோம்.

Tuesday, 14 June 2011

நாயாக, நாய்களின் தலைவனாக நாயகன்


அரதத்த சிவாச்சாரியார் என்பவர்  மிகப் பெரிய சிவஞானி. சிவ பக்தியில் எந்நேரமும் திளைப்பவர்.  அனைத்து தத்துவ சாஸ்திரங்களும் அறிந்தவர்.  வேத ஆகமங்களிலும் மற்ற சாஸ்திரங்களிலும் அரத்தத்தர் விற்பன்னராக விளங்கியவர். அவர் சொல்லே பிரமாணமாக அக்காலத்தில் விளங்கியது. 

அவர் அங்கு ஆண்ட மன்னனுக்கு ராஜகுருவாகவும் இருந்தவர்.  அவர் சிவாச்சாரியாராக இருந்தாலும்கூட அவரை கஞ்சனூராழ்வார் என்று குறிப்பிட்டனர். கஞ்சனூர் என்பது அவருடைய சொந்த ஊர்.

தினமும் சில சிவாலயங்களுக்குசென்று சிவதரிசனம் செய்வதுடன்  சிவபூஜையும் தவறாமல் செய்வார்.  அவருடைய சிவபூஜை மிகவும் உயர்நிலையில் உள்ளது.   பஞ்சமூர்த்தபூஜை என்ற பூஜை அது. 

சிவனுக்கு ஐந்து முகங்கள் கூறப்படும். தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம், ஈசான்யம், அகோரம் ஆகியவை.  ஐந்து தீர்த்தப் பாத்திரங்களில் உரிய தீர்த்தம் வைத்து அவற்றில் பஞ்சமூர்த்திகளையும் ஆவாகனம் செய்து ஜபம் செய்து ஸ்ரீ£ருத்ரம் நமகசமக பாராயணமெல்லாம் செய்து வழிபடுவார். அந்தத் தீர்த்தங்களைக் கொண்டுதான் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார்.

ஒருநாள் ஐந்து பாத்திரங்களிலும் தீர்த்தம் வைத்து ஆவாஹனம் செய்து கண்களை மூடி ஜபத்தியானம் செய்துகொண்டிருந்தார். 
அந்தச் சமயத்தில் ஒரு நாய் அங்கு ஓடிவந்தது. 
அதற்கு அதிகமான தாகம். 
ஆகவே அந்தப் பாத்திரத்திலிருந்த தீர்த்தத்தை நக்கிக் குடித்துவிட்டது. 
ஜபம் முடிந்ததும் நான்கு பாத்திரத் தீர்த்தத்துடன் நாய் எச்சில் வைத்த ஐந்தாம் பாத்திரத்துத் தீர்த்தத்தையும் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்துவிட்டார். 
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வேதவித்களுக்கு அக்காரியம் மிகவும் ஒவ்வாத செயலாகவும் அபசாரமாகவும் பட்டது. 
இது அப்படியே ஊரெங்கும் பரவிவிட்டது. 
ஆகவே ஆசாரசீலர்கள் சிலர் அரதத்தரைச் சந்தித்து அவருடைய செயல்குறித்துக் கேட்கவந்தனர். 

அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் செயல்கள் எல்லாம் பெரும் கண்டனத்துக்கும் தண்டனைக்கும் உரியவையாகக் கருதப்பட்டன. ஜாதிப் பிரஷ்ட்டிரம் என்னும் கடுமையான தண்டனை அவற்றில் ஒன்று. ஜாதியை விட்டு ஒதுக்கிவைப்பார்கள். அந்த ஜாதியைச் சேர்ந்தவராகக் கூறிக் கொள்ளவும் முடியாது.சோறு தண்ணி கூட கொடுக்கவும் மாட்டார்கள். மற்றவர்களைக் கொடுக்க விடவும் மாட்டார்கள். உயர்குடியினர் அனைவருமே ஒதுக்கிவிடுவார்கள். ஊருக்குள் வரவும் முடியாது. 

அந்தக் காலத்தில் எந்தக் குடியினராகவும் இருந்தாலும் கட்டாயமாக ஜாதி ஏதாவது ஒன்றைச் சார்ந்தவர்களாக மக்கள் இருக்கவேண்டும். ஜாதியற்றவர்களாக இருக்கக்கூடாது. 

அந்த ஆசார வெறியர்கள் வந்த காரணத்தைத் தாமாகவே அறிந்துகொண்ட அரதத்தர் அவர்களுக்கு விளக்கம் கொடுத்தார். 

"வேதத்ரயம் எனப்படும் மூன்று வேதங்களிலும் சிறந்ததாகக் கருதப்படுவது யஜுர்வேதம்". 
"யஜுர்வேதத்தின் நடுநாயகமாக இருப்பது ஸ்ரீருத்ரம். 
சிவரூபமாகவே உள்ளது ஸ்ரீருத்ரம். அதில் 'சுவப்ய:  சுவபதிப்யஸ்ச' என்று காணப்படுகிறது. 
'நாயாகவும் நாய்க்குத் தலைவனாகவும் இருப்பவன்' என்று அர்த்தம். அபிஷேகத்துக்குரிய தீர்த்தத்தை நக்கிய அந்த நாயை நான் அப்போது சிவனாகவேதான் கருதினேன்.  அப்போது நான் மனதில் ஸ்ரீருத்ரம் சொல்லிக்கொண்டிருந்தேன்.  நான் சொல்லும் ஸ்ரீருத்ரம் சொல்லளவில்தானா அல்லது மனத்தளவிலுமா என்று சிவனே சோதனை செய்கிறான் என்றே நம்பினேன்".

அவருடைய விளக்கத்தைக் கேட்டு அனைவரும் சமாதானம் அடைந்தனர். அதன் பின்னர் அந்த ஊர்களில் உள்ளவர்கள் தங்களின் மேலில் நாய் உரசிவிட்டால் அதனை அனாசாரமாக நினைப்பதில்லை. 

வடுகா, பைரவா, சட்டநாதா! 

Monday, 13 June 2011

மஹாத்மாவும் மதுரையும்

மதுரையின் சிறப்புகள் பலவுண்டு.

சில சிறப்புகள் கண்புறமாகப் போய்விட்டன. சில, மறக்கப்பட்டுவிட்டன. சிலவற்றை ஆட்கள் கவனிக்கவேயில்லை. 

1921-ஆம் ஆண்டுக்குப் பின்னோக்கிச் செல்வோம். 

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி வந்த மகாத்மா காந்தி, இந்தியாவுக்காக என்ன எப்படிச் செய்யவேண்டும் என்பதை இன்னும் சரியாக முடிவு செய்யாத நேரம். 

பிரிட்டிஷ்காரர்கள் முதலாம் உலக யுத்தத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்ற காலம். யுத்தத்தில் இந்தியர்கள் பிரிட்டனுக்கு முழுமனதுடன் உதவி செய்தால் சுயாட்சி சம்பந்தமாய் முடிவு செய்வதாகச் சொன்னவர்கள் ஏதும் உருப்படியாகச் செய்யவில்லை. 

அப்போது மகாத்மா இந்தியாவை ரயில்வண்டியில் சென்று பார்க்கலாம் என்று புறப்பட்டார்.  தமிழ்நாட்டை அடைந்தபோது ஏழை விவசாயி இடுப்பில் ஒற்றை ஆடையை முழங்காலுக்கு மேல் கட்டிக்கொண்டு உழுவதைப் பார்த்தார். மற்றவர்களும் அதே மாதிரி இருப்பதையும் கண்டார்.  இந்தக் காட்சி அவருடைய மனதில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. 

மதுரை வந்து சேர்ந்தார். 

21-09-1921.

மதுரையில் மேலமாசி வீதியில் உள்ள 251-A நம்பர் கொண்ட வீட்டில் தங்கியிருந்தார்.  ஏழை இந்தியர்கள் எப்படி உடுத்தியுள்ளனரோ அதே போல் தாமும் உடுத்தப்போவதாக அறிவித்தார்.  அறிவித்தவுடன் தம்முடைய சட்டை போன்றவற்றை நீக்கிவிட்டார்.  இடுப்பில் ஒரு வேட்டியை அணிந்துகொண்டார்.  இந்தக் கோலமே 'மகாத்மா என்றால் இப்படித்தான்; இவர்தான்', என்ற அழியா உருவத்தை அனைவரின் மனத்திலும் ஆழமாகப் பதித்துவிட்டது.  இந்த ஒற்றை ஆடைக் கோலமே பிற்காலத்தில் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மகாத்மாவை 'Half-naked Fakir' - 'அரைநிர்வாணப் பக்கிரி' என்று குறிப்பிடச்செய்தது.  எல்லாம் ஆரம்பித்தது மதுரை மேலமாசி வீதி வீடு ஒன்றில்தான். 

Friday, 10 June 2011

இருதலைத் தீ

சிவவாக்கியர் என்னும் சித்தரைப் பற்றி தெரியவில்லையென்றாலும் அவர் பாடிய ஒரு பாடல் ரொம்பவும் பரிச்சயமாக இருக்கும். 

நட்டகல்லைத் தெய்வமென்றே நாலுபுட்பம் சாற்றியே
சுற்றிவந்து மொனமொனன்னு சொல்லும் மந்திரம் ஏதடா
 நட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்
 சுட்டசட்டி சட்டுவம் கறிசுவையை அறியுமோ

இதுதான் அந்தப் பாடல்.

:-)
இதை வைத்து சிவவாக்கியர் நாத்திகர் என்றும் பொதுவாக சித்தர்களே நாத்திகர்கள்தாம் என்ற கருத்தும் பரவி விளங்குகிறது.  இது பரவ பெரிதும் முயன்றவர்கள் வைதீக பிராம்மணர்கள்.

சிவவாக்கியர் ஐந்நூறு பாடல்கள் பாடியிருக்கிறார்.  பல சுவடிகளை ஆராய்ந்து பார்த்ததில், மொத்தம் ஐந்நூற்றுப் பதினோரு பாடல்கள் தேறுகின்றன.  ஆனால் ஒரு சில சுவடிகளின்படி அவருடைய பெயரால் ஆயிரம் பாடல்கள் வழங்குகின்றன.  அந்த ஆயிரம் பாடல்களின் பார்த்தால் சிவவாக்கியர் சைவரா, வைஷ்ணவரா, அல்லது முஸ்லிமா என்ற சந்தேகம் ஏற்படும்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். 

அவருடைய ஒரு பாடல் இருக்கிறது - 

சிவாயவசி என்னவும் செபிக்க இச்சகம்  எலாம் 
சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம்
சிவாயவசி என்னவும் செபிக்கவானம் ஆளலாம் 
சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே

'சிவாயவசி' என்பதும் பஞ்சாட்சரத்தின் மாறல்களின் நிரலில் வரும் ஒரு மந்திரம்.  அதை 'இருதலைத்தீ' என்கிறார் சிவவாக்கியர்.  அந்த மந்திரம் அக்கினியாக விளங்குவது. குண்டலினி என்பதுவும் அக்கினிதானே.

மூலாதாரத்தில் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே 
என்று ஔவையாருடைய விநாயகர் அகவல் கூறுகிறது அல்லவா.

சிவாயவசி என்னும் மந்திரத்திற்கு இருதலைகள் உண்டு. முன்னும் பின்னுமாக இருதலைகள்
அந்த 'சி' என்னும் அட்சரம்தான் 'தலை' எனப்படுவது. 
திருமூலர் இதை 'நாயோட்டும் மந்திரம்' என்பார்.
அகத்தியரில் இருமுறை இந்த நாயோட்டும் மந்திரத்தை ஓட்டிப் பார்த்தாயிற்று.

ஆகம சங்கேத மொழியில் இந்த மந்திரத்தை 'இருதலை மாணிக்கம்' என்று குறிப்பிடுவார்கள்.

ஏலம் விட்ட குருவி -#2

ராதாக்கிருஷ்ணன் குருவிக் கதையின் இரண்டாவது பகுதியைக் கேட்டார்.......
எழுதிட்டாப்போச்சு......
பெரிய கம்பசூத்திரமா என்ன?

ஏலத்தில் எடுத்த அபூர்வ பேசும் மைனாக் குருவியைக் கூண்டில் அடைத்துக்கொண்டு பத்திரமாகப் பெருசு வீட்டிற்குக் கொண்டு சென்றது.  ஐயாயிரம் ரூபாய்க் குருவியாயிற்றே!  அட்டேயப்பா! இப்பேற்பட்ட குருவியைக் காட்டி ஊராங்க்ய, ஒறவுமொறெ, எட்டு வட்டகெ, பதுனெட்டுப் பட்டியெல்லாம் காட்டவேண்டும் என்று பெருசு நினைத்தது.  முதலில் ஆத்தாக் கிழவியை அசர வைக்கவேண்டும் என்று அந்த மைனாக் குருவியைக் கூண்டோடு ஆத்தாக் கிழவி இருக்கும் வீட்டுக்கு அனுப்பிவைத்தது.  இரண்டு நாட்கள் ஒன்றும் சத்தத்தையே காணோம். 

"நாமளே போயிப் பாத்துப்பிட்டு வந்துருவோம். வாரபோது கையோட மைனாக் குருவியக் கொண்டாந்துர்வோம்", என்று பெருசு நினைத்தது. உடன் காரியத்தில் இறங்கியது. 

புதுச்சேரி முதல்வர் என்னார் மாதிரி பொதபொதவென்று தொப்பான் தொப்பான் முக்காக்கைச் சட்டையைப் போட்டுக்கொண்டு, அவர் மாதிரியே நெற்றியில் துண்ணூறு பூசி, அவர் மாதிரியே உச்சந் தலையில் துண்ணூறைக் கொட்டிக்கொண்டு புறப்பட்டது.  ஆத்தாக்காரி வீட்டு வாசல் திண்ணையில். நல்லாக் காலைப் பப்பரபாம் என்று நீட்டி வைத்துக்கொண்டு, பாக்கு உரலில் வெற்றிலையைப் போட்டு இடித்துக்கொண்டிருந்தது. 

"என்னடாப்பா, இந்தப் பக்கமா....? ஙோத்தா உசுரோட இருக்காளான்னு பாத்துப்புட்டுப் போகோணும்னுட்டு வந்தியா? அதுனாலதான இன்னம் இந்த ஊருக்கோடித் தோப்புத்தொரவ கைநாட்டுப் போட்டுக் குடுக்காம இருக்கேன்.... நாம்பொத்த புள்ள கொணம் எனக்குத்தானே தெரியும்?"  


"அட கெழவீ! ஒனக்குக் கூறுகெட்டுப் போச்சு. கொஞ்சங்கூட வெதரணயே இல்ல.  நானு ஒரு குருவிய குடுத்தூட்டனே, அதப் பத்தி வெசாரிப்பம்னுட்டுல்ல வந்தேன். பாத்தியா....
எப்புடி நம்ம குருவி?" 

"உக்கூம்...... பெர்ரீய்ய குருவி.... ஊருல நாட்டுல இல்லாத குருவியாக்கும். எல்லாம் எலும்புங்கிலும்புமா சதெப் பத்தே இல்லாம தொத்தலா இருந்துச்சு. கொஞ்சா நஞ்சங் கறியும் நாறுநாறா இருந்துச்சு. இஞ்ச கெடய்க்காத காடயா கவுதாரியா..... அனுப்பிப்புட்டான்  பேரீய்ய்ய மைனாக் குர்ர்ருவீ......?"

Thursday, 9 June 2011

வெற்றிகரமான சுவாமிஜீ

தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு ஒரு காலத்தில் மிக அதிகமாக சாமியார்கள் வரப் போக இருந்தனர்.   அவர்களில் சிலர் மகிமை வாய்ந்தவர்கள். பலர் அப்படியில்லை. போகப் போக தமிழகச் சாமியார்களின் வருகை குறைந்துபோயிற்று. ஆனாலும் இப்போதும் வருகிறார்கள்.

சாமியார்களிலும் பலவகையான தட்டுக்கள் உண்டு.  சில கணிப்புகளை, அளவுகோல்களை மக்கள் வைத்திருக்கிறார்கள்.  சாமியார்' என்றால் 'பரவாயில்லை' என்ற மதிப்பு. 'ஆண்டி' என்றால் ஒன்றையணா ஆள். 'பரதேசி' என்றால் இன்னும் படுகேவலம்.  உயர்மட்ட சாமியார்களைத் 'தம்பிரான்', 'சன்னிதானம்' என்றெல்லாம் அழைப்பார்கள்.  இவர்களில் மிக மிக உயர்வான ஸ்தானம் 'ஸ்வாமீஜீ' என்று குறிப்பிடப்படுகிறவர்களுக்கு.  'சுவாமிஜி' என்று குறிப்பிடப்படுகிறவர் அடுத்த நிலை.  "'சாமி' என்ன பண்ணிக்கிட்டிருக்காரு?" என்ற கேள்விக்குரியவர் இன்னும் கீழே.  "சாமி என்ன பண்ணிக்கிட்டிருக்கு", என்றால் இன்னும் கீழே.

இதில் 'ஸ்வாமீஜீ'க்கு ஹைக்லாஸ் சீசர்கள் இருப்பார்கள். சீசைகளும் அதிகம். சில ஸ்வாமீஜீக்களுக்குப் பசையுள்ள சீசர்களும் பச்சுப் பச்சென்ற சீசைகளும் அதிகமிருப்பார்கள்.  இந்த மாதிரிப்பட்ட 'ஸ்வாமீஜீ'யின் பெயரைச் சொல்லவும் கூடாது.  "அயோ......ஸீ-லா திஸ் ·பெல்லோ! ஹீ இஸ் சொல்லுறான் த ஸ்வாமீஜீ'ஸ் பேரூ-லா! ஹவ் கேன்! ஹவ் கேன்!", என்று விடலை சீசர்களின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும்.  சுவாமிஜி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்தார். அவ்வப்போது வரப்போக இருந்தார்.  நாளடைவில் அவருக்கு ஏராளமான சீடர்கள்.

அவர் நல்லவர். பலருக்கு அவரால் மிகச் சிரமமான சமயங்களில் நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆரம்பகாலங்களில் அவர் தியானம், மந்திர ஜபம் போன்றவற்றையே எல்லாருக்கும் உபதேசித்தார். நம்பிக்கையை ஊட்டிவிட்டார். "நல்லதையே நினைத்து நல்லதையே பேசி நல்லதையே செய்யவேண்டும்" என்பார். ரொம்பவும் பாஸிட்டிவாக அவருடைய உபன்யாசங்கள் இருக்கும். சிவராஜயோகம் கற்றவர்.  அவருடைய சீடர்கள் அவருடைய சொந்த ஊரில் ஓர் அருமையான ஆசிரமம் கட்டுவிக்க ஏற்பாடு செய்தனர். ஏனெனில் அவர் வசித்தது ஒரு சுமாரான வீடு. நூற்றுக்கணக்கில் மலேசிய சீடர்களும் அபிமானிகளும் அங்கு செல்லும்போது சிரமமாக இருந்தது. 

ஆசிரமம் கட்ட ஆரம்பித்து சில காலத்துக்கெல்லாம் கட்டடவேலை தடங்கலாகிவிட்டது. பணத்தட்டுப்பாடு. 
சுவாமிஜி சோர்ந்துவிடவில்லை. பொறுமையாகக் காத்திருந்தார்.  ஒருநாள் திடீரென்று வீட்டில் அமர்ந்திருந்தவர் எழுந்தார். வெளியில் சென்றார். அங்கு மணல் குவியலில் விளையாடிக் கொண்டிருந்த சில சிறுவர்களை அழைத்துவந்தார்.  அவர்களுக்கு முறைப்படி மந்திரோபதேசம் செய்வித்தார்.  குபேர மந்திரம்.  ஆசிரமம் கட்டுமிடத்தில் ஒரே இடத்தில் இருக்கச்செய்து அனைவரையும் ஆளுக்குப் பத்தாயிரம் ஆவர்த்தி மந்திர உச்சாரணம் செய்யச்சொன்னார். சுவாமிஜியின் மேற்பார்வையில் அவர்களும் செய்தனர். சிலநாட்களில் மந்திர உச்சாரணம் பூர்த்தியாகிற்று.  நாற்பதெட்டு மணி நேரத்தில் மலேசியாவிலிருந்து பெரும் தொகை கிடைத்தது.  மளமளவென்று ஆசிரம வேலைகள் முடிந்தன. ஏர்கண்டிஷன் முதற்கொண்டு மலேசிய சீடர்கள் வைத்துக்கொடுத்தனர். அவருடன் அடிக்கடி டெலி·போனில் பேசவேண்டும்; அவரும் அடிக்கடி பேசவேண்டும் என்பதற்காக அவருக்கென்று டெலி·போன் வசதிகளைச் செய்து, அவருடைய டெலி·போன் பில்லையும் மலேசிய சீடர்களே கட்டலாயினர். 

அவருடைய நன்னம்பிக்கை; தன்னம்பிக்கை.  மந்திரமும் வேலைசெய்தது. 

காரியசித்தியும் ஏற்பட்டது.

உண்மைச் சம்பவம்.

Wednesday, 8 June 2011

மந்திரமாவது.....

தமிழகத்தின் பொன்னமராவதியைச் சேர்ந்த சுவாமி சிவாநந்தா என்பவர் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கோத்தாபாரு வந்திருந்தார். அவர் எல்லாருக்கும் தியானமும் லட்சுமி பூஜையும் சொல்லிக் கொடுத்தார். அவர் சொல்லிக் கொடுத்த மந்திரங்களில் மிகப் பெரும்பான்மையானவை ஒரு சிறுநூலாகிய 'வராகி மாலை' என்னும் நூலில் இருந்தன.  ஆனால் பிழைகளுடன் இருந்தன. 

ஒரு பெரிய கண்டுபிடிப்பை அப்போது செய்தேன். 

சிவாநந்தா பயன்படுத்திய மந்திரங்கள் பெரும்பாலும் ஸ்ரீஸ¥க்தத்திலிருந்த மந்திரங்கள்.  ஸ்ரீஸ¥க்தத்தில் பதினைந்து ஜோடி அடிகள் இருக்கின்றன.  ஸ்ரீஸ¥க்தம் முழுவதையும் ஒரே மந்திரமாகத்தான் பயன்படுத்துவார்கள்.  ஆனால் வராகி மாலை புத்தகத்தில் ஒவ்வொரு அடியும் மந்திரமாகப் பயன் படுத்தப் பட்டிருந்தது. ஒவ்வொரு நாமமும்கூட ஒரு மந்திரமாக விளங்கியது.  'நித்யபுஷ்டா', 'ஸ்வர்ணா', 'ஹிரண்மயீ', 'ஹரிணீ' போன்ற நாமங்களும்கூட மந்திரங்களாகப் பிரயோகமாயின. இப்படி மூன்று வகையான பிரயோக முறைகளை ஸ்ரீஸ¥க்தத்திற்கு அந்தச் சிறு புத்தகத்தில் கண்டேன்.

பல மந்திரப் பிரயோகங்களுக்கும் பிரயோகச் சக்கரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அவற்றிற்குரிய துதி, பீஜாட்சரங்கள், நைவேத்தியம், உரு ஆவர்த்தி முதலியவையெல்லாம் கொடுக்கப்பட்டிருந்தன.  ஆனால் பிழைகள் மிக அதிகம். அத்துடன் பல மந்திரங்களில் அட்சரங்களையும் பீஜங்களையும் மாற்றியிருந்தார்கள்.

ஆனால் சிவானந்தா சில மந்திரங்களைப் பிழைகளை நீக்கி, பிழையில்லாமலேயே சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார். 

'Manthras-Self-Taught', 'One Minute Maanthriika' என்ற மாதிரி மோட்டிவேஷனல் குருமார் தானாக என்னத்தையாவது செய்யாமலும் தடுப்பதற்கே இந்த மாதிரியாக ஒரு யுக்தி.

மலேசியாவில் உள்ள பெரிய புத்தக்கடை ஒன்றில் விசாரித்தேன். 
என்ன மாதிரியான புத்தகங்கள் அதிகம் விற்பனையாகின்றன? 

மோட்டிவேஷனல் புத்தகங்கள்.
பூஜைகள் செய்வது, துதிகள் போன்றவை.
ஜோதிடம் சம்பந்தப்பட்டவை.
மாந்திரீகம்

இந்தப் புத்தகங்கள் தமிழகத்தில் வெளியாகி இங்கே அனுப்பப்படுபவை.  மாந்திரீகப் புத்தகங்களைப் பார்த்தீர்களானால் மயிர் கூச்செறியும்.  மலையாள மாந்திரீகப் புத்தகங்கள் ஏராளமானவை இருக்கின்றன. அட்டையில் போடப்பட்டிருக்கும் படங்களைக் கொண்டு ஒரு எக்ஸிபிஷனே வைக்கலாம்.  நாக்கை நீட்டிக்கொண்டிருக்கும் காளியைப் படத்தில் போட்டிருப்பார்கள். பக்கத்தில் மந்திரவாதி.  மிகவும் செக்ஸியான மோஹினி படத்தைப் போட்டிருக்கும் புத்தகங்களும் உண்டு.  அந்தப் புத்தகங்களில் உள்ளவற்றைச்செய்து அந்த மாதிரிப்பட்ட மோஹினிகளை வசப்படுத்தி என்னவெல்லாம் செய்துகொள்ளலாம்; செய்யவைக்கலாம் என்று ஆட்கள் நினைத்து அதை வாங்குவார்கள்.  உண்மையிலேயே அப்படியெல்லாம் செய்துவிடமுடியுமா என்பதையோ அப்படியே செய்யமுயன்றாலும் அதன் பக்கவிளைவுகள் எப்பேற்பட்டவை என்பதையோ அவர்கள் அறிவதில்லை. 

சில பெயர்களை வைக்கக்கூடாது என்று மலேசிய இந்து சங்கம் மலேசிய அரசாங்கத்தின் பதிவுத்துறையிடம் பரிந்துரை செய்திருக்கிறது. அதுவும் இப்போது சட்டமாகிவிட்டது. 

மலேசிய இந்து சங்கம் தடைசெய்யச் சொல்லி தடைசெய்யப்பட்டிருக்கும் பெயர்களில் ஒன்று - 'கருப்பசாமி'

எப்பேற்பட்ட சாதனை!
எப்பேற்பட்ட சிந்தனை!
எப்பேற்பட்ட தொண்டு!
எப்பேற்பட்ட சேவை!

கருப்பசாமி என்ன செய்தாரோ தெரியவில்லை. 
இந்த யூஆர்எல்லைப் பார்க்கவும்.

ஆனால் இந்த மாதிரிப்பட்ட பயங்கரத்தன்மை படைத்த புத்தகங்களைத் தடைசெய்வதைப் பற்றியோ, தமிழ்ப்படங்களில் வரும் பயங்கரக் காட்சிகளைப் பற்றியோ கவலைப்படுவதில்லை.