Wednesday, 15 June 2011

வெள்ளெருக்கு விநாயகரும் கரும்பாம்பும்

1984-ஆம் ஆண்டு இறுதியில் மலாயாவின் வடமேற்கு மூலையில் இருக்கும் பெர்லிஸ் Perlis மாநிலத்தின் தலைநகர் கங்கார் Kangar என்னும் ஊரிலிருக்கும் மாநில மருத்துவமனயின் இயக்குனராக மாற்றலாகிப் போனேன். 
       
பெர்லிஸ் என்னும் இடம் பாம்புகளுக்குப் பேர் போனது. நான் இருந்த குவார்ட்டர்ஸைச் சுற்றிலும் பாம்புப்புற்றுகள்தாம். புல்தரையில் சில துவாரங்கள் இருக்கும். அவற்றிலும் பாம்புகள் இருக்கும்.  குவார்ட்டஸ¤க்குள் பாம்புகள் வந்துவிடுவதுண்டு.  பாம்புகள் நிறைய இருந்ததால் அங்கு பாம்புப் பண்ணை ஒன்றை அரசு வைத்திருந்தது. அங்கு பாம்பு விஷத்தை எடுப்பார்கள்.பாம்பு விஷத்தை வெகு சிறிய அளவில் குதிரைகளுக்குச் செலுத்தி, அவற்றின் ரத்தத்தை முறிய வைத்து பெறப்படும் ஸீரம் என்னும் நிணத்திலிருந்து 'அண்ட்டி வீனம்' என்னும் நஞ்சு முறிவு மருந்தைத் தயாரிப்பார்கள்.  பல மாதிரி பாம்புகள். நல்ல பாம்பு, கரும்பாம்பு, விரியன் என்று நச்சுப்பாம்புகள் விதம் விதமாக இருந்தன.

ஒருமுறை மாலையில் சமையலறையில் என் மனைவி வேலையாக இருந்தபோது, திடீரென்று என் மகளின் அலறல் சப்தம் கேட்டது.  பார்த்தால் என் மனைவியின் குதிகாலுக்கு மிக அருகில் ஒரு கரும்பாம்பு படமெடுத்துக் கொண்டு இருந்தது. அது என் மனைவியைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அப்போது மனைவி நிற்கவும் அதுவும் நின்றுவிட்டது.. நின்ற வாக்கில் படமெடுத்துக்கொண்டிருந்தது.

நான் அந்தப் பாம்பை அடிக்க முயன்றேன். ஆனால் அது சமையலறை குட்டி அலமாரிகளுக்கு அடியில் போய் நின்றுகொண்டது.  பயங்கரமாகச் சீறியது. இங்கும் அங்குமாகப் பாய்ந்தது.

அப்போதுதான் திடீரென்று ஞாபகம் வந்தது. 

என்னிடம் வெள்ளெருக்கு வேரால் செய்யப்பட்ட விநாயகர் சிலையொன்று இருக்கிறது. அது எனக்கு மேதை டாக்டர் ஜெயச்சந்திரனால் பூஜைக்காகக் கொடுக்கப்பட்டது. அதற்கு முன்னர் அவர் பல ஆண்டுகளாக அதற்குப் பூஜை செய்துகொண்டிருந்தார். நானும் அதைப் பூஜை செய்துவந்தேன்/வருகிறேன்.  அசல் வெள்ளெருக்கு வேர். நியமப்படி பார்த்து, காப்புக்கட்டி, மந்திரித்து, கிரமமாக எடுக்கப்பட்ட வேர்.  வெள்ளெருக்கு வேர் பாம்புக்கு ஆகாது என்று சொல்லி யிருக்கிறார்கள்.

ஆகவே ஓடிப்போய் பூஜையறையிலிருந்து வெள்ளெருக்கு விநாயகரை எடுத்து வந்துபாம்புக்கும் எங்களுக்கும் இடையே வெகு வேகமாக வைத்துவிட்டு ஒதுங்கினேன்.

ஒரு பயங்கர சீறலுடன் பாம்பு துள்ளிப் பாய்ந்து வேகமாக ஒதுங்கியது. அங்கேயிருந்த சாக்கடைக் குழாய்க்குள் நுழைந்துகொண்டது.

நான் உடனேயே பாம்புப் பண்ணைக்கு டெலி·போன் செய்தேன்.
அங்கிருந்து இரண்டு பேர் வந்தார்கள்.

கொதிக்கும் தண்ணீரை சாக்கடைத் துவாரத்திற்குள் ஊற்றச் சொன்னார்கள். அவ்வாறே ஊற்றினேன். பாம்பு அலறியடித்துக்கொண்டு வெளிச் சாக்கடைக்கு வந்துவிட்டது.  அவ்வளவுதான். நீண்ட கைப்பிடியுள்ள வளைந்த ஸ்ட்டீல் கம்பியால் பாம்பின் கழுத்தை அழுத்தி அமுக்கிக் கொண்டு தலையை ஒட்டிய கழுத்துப் பகுதியைக் கையால் அழுத்திப் பிடித்துத் தூக்கினார்கள்.

"Come Doctor. Catch." என்றவாறு என் கையில் கொடுத்தார்கள். 
பிடித்ததும் உடனேயே கையைச் சுற்றிக் கொண்டது. ரொம்பவும் இறுக்கமான சுற்றுகள். முறுக்கிக் கொண்டுவிட்டது.

பாம்பை அப்போதுதான் உற்றுப்பார்த்தேன். பளபளப்பான கருப்பு நிறம். வழுவழுப்பாக இருந்தது. ஆனால் ஒன்று. மீன் கவுச்சி அடித்தது.

 பாவமாக இருந்தது. கொதிக்கும் தண்ணீரையல்லவா ஊற்றி விட்டேன். நம்மால் பிடிபட்டுவிட்டது. இனிமேல் அது கண்ணாடிக் கூண்டுக்குள் அல்லவா இருக்கவேண்டும். அதன் சுதந்திரமும் பறி போய்விட்டதே.  ஆகவே தமிழில் மெதுவாக அதனிடம் பேசி மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

"டொக்டோர் சக்காப் ஆப்ப கெப்பாட ஊலார்னீ?" - "இந்தப் பாம்பிடம் டாக்டர் என்ன பேசினீர்கள்?" என்று பாம்பாளர்கள் கேட்டனர்.
"சும மிந்த்தா மா·ப் ஆஜ" - "சும்மா மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். அவ்வளவுதான்."
சிரித்துக்கொண்டார்கள்.

மிகவும் பிரயாசைப்பட்டு அந்த முறுக்கைப் பிரித்துக்கொண்டு, பாம்பைத் திருப்பிக் கொடுத்தேன்.  பாம்பை ஒரு சாக்குப்பையில் போட்டுக்கொண்டு திரும்பிச்சென்றார்கள்.

கரும்பாம்பு என்பதை King Cobra என்று சொல்வார்கள். பாம்புகளில் மிகக் கடுமையான விஷம் வாய்ந்தது அது.

அது வெள்ளெருக்கு வேர் பிள்ளையாருக்குப் பயந்து ஒதுங்கி ஓடி மறைந்ததைக் நேருக்கு நேர் கண்ணால் கண்டு அறிந்துகொண்டோம்.

4 comments:

 1. ஐயா
  உங்கள் அனுபவம், எங்களுக்கு பாடம்.

  ReplyDelete
 2. :-)
  இன்னும் அதிகமான அபூர்வ அனுபவங்கள் ஏராளமாக இருக்கின்றன.

  ReplyDelete
 3. where will get the original vellerukku vinayagar? please address & contact no .....

  ReplyDelete