Wednesday 24 October 2012

SRI DEVI STHUTHI-#1




                    ஸ்ரீதேவீ ஸ்துதி-#1

    'துர்க்கா சப்தசதி' என்னும் 'தேவி மாஹாத்ம்யம் மந்திர சரித நூலில்
காணப்படும் தேவி துதியின் தமிழாக்கம்.
    மஹிஷாசுர வதைக்குப் பின்னர் தேவர்களும் ரிஷிகளும் தேவியைப் புகழ்ந்து துதிக்கிறார்கள்.
    இது துதி வடிவாக, தேவியை நேரடியாக வழுத்துவதுபோல்
அமைந்திருக்கிறது.
    பிரார்த்தனை வடிவிலும் இது இருக்கிறது.
    துர்கா சப்தஸ்லோகி என்னும் ஏழுமந்திர நூலில் வரும்

துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிம் அசேஷ ஜந்தோ:
ஸ்வஸ்த; ஸ்ம்ருதாம் மதிமதீவ சுபாம் ததாஸி
தாரித்ரிய து·க்க பயஹாரிணி கா தவதன்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த்ர சித்தா

என்னும் சுலோகமும் இதில் காணப்படுவதுதான். தேவீ மாஹாத்ம்யத்தில் நான்கு சந்தர்ப்பங்களில் தேவர்கள் தேவியைத் துதிப்பார்கள்.
    அவற்றில் இது ஒன்று:
        இதையே பிரார்த்தனையாகப் படித்து வழிபாடு செய்யலாம்.
    அம்பிகையின் முன்னால் இருந்து அவளிடம் நேரில் பேசி, வழுத்துவது,
பிரார்த்திப்பது போல் அமைந்த துதி.

$$$$$$$$$$$$$$$

    தேவி தன் சக்தியால் இந்த பிரபஞ்சம் முழுவதையும் வியாபித்து
விளங்குகிறாள். எல்லா தேவதேவியரின் சக்தியும் அவளுடைய வடிவிலேயே ஒன்று கூடுகின்றது. அவள் எல்லா தேவர்கள், மகரிஷிகளால் பூஜை செய்யப் படுகிறாள். அந்த அம்பிகையை நாங்கள் பக்தியுடன் வணங்குகிறோம்.
எல்லா நன்மைகளையும் அவள் நமக்கு வழங்கி அருளவேண்டும்.

    அவளுடைய பெருமையையும் சிறப்பையும் பலத்தையும் மகாவிஷ்ணுவாலும், பிரம்மாவாலும் சிவனாலும்கூட வர்ணிக்க முடியாது. அந்தச் சண்டிகா தேவி அசுபத்தினால் ஏற்படும் அச்சத்தைப் போக்கி எல்லா உலகங்களையும் பாதுகாத்துக் காப்பாற்றி ஆள்வதற்கு திருவுள்ளம் கொள்ளவேண்டும்.

    புண்ணியம் செய்தவர்களின் இருப்பிடங்களில் அவள் லட்சுமியாக
வசிக்கிறாள். பாவம் செய்தவர்களின் வீடுகளில் அவள் அலட்சுமியாக இருக்கிறாள். சுத்தமான அறிவுடையவர்களுடைய உள்ளத்தில் அவள் புத்தியாகவும் நல்லவர்களிடம் சிரத்தையாகவும் நல்லகுடியினரிடம் கூச்சமாகவும் அவள் விளங்குகிறாள். ஓ தேவீ! நீயே அவள். உன்னை நாங்கள் வணங்குகிறோம். நீ அகில உலகத்தையும் காப்பாற்றவேண்டும்.

    ஓ தேவீ! நினைப்பிலும் அடங்கமாட்டாத உன்னுடைய வடிவு; அசுரர்களை அழிக்கக்கூடிய அளவில் அடங்காத வீரியம்; தேவாசுரப் போரில் நிகழ்ந்த உன்னுடைய அற்புதச் செயல்கள்; இவற்றையெல்லாம் எப்படி வர்ணிப்பது?

    எல்லா புவனங்களுக்கும் காரணையாக விளங்குபவள் நீயே. சத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய மூவகைக் குணங்களின் வடிவியாக நீ இருந்தாலும்கூட அவற்றின் தாக்கங்கள் இல்லாதவள் நீ. விஷ்ணு, சிவன் முதலியோருக்கும்கூட நீ எட்டாதவளாக இருக்கிறாய். எல்லாருக்குமே நீதான் புகலிடம். இந்த அனைத்து புவனங்களும் உன்னுடைய ஓர் அம்சத்திலிருந்துதான் தோன்றியவை. நீயே முதல்வி; மாறுபாடில்லாதவள்; உயர்ந்தவள்; இவை அனைத்துமாக விளங்கும்
ப்ரக்ருதி.

    ஓ தேவீ! எல்லா யாகங்களிலும் தேவர்களை மகிழ்விப்பது 'ஸ்வாஹா'
என்னும் மந்திர உச்சாரணம். அந்த 'ஸ்வாஹா" வடிவினளாக நீ இருக்கிறாய்.
பிதுர்களுக்கு ஏற்படும் திருப்திக்கும் நீயே காரணையாக இருக்கிறாய்.
ஆகையால் உன்னை மக்கள் 'ஸ்வதா' என்ற மந்திரத்தால் உச்சரித்து
வழிபடுகிறார்கள்.

    ஓ தேவீ! நீயே பகவதி. முத்திக்கு வித்தாக விளங்கும் பரவித்தையும்
மகாவிரதமும் நீயே. பஞ்சேந்திரியங்களை அடக்கியவர்கள், தத்துவங்களின் சாரத்தை உணர்ந்து வசமாக்கிக்கொண்டவர்கள், முக்தியில் நாட்டமுள்ளவர்கள், மாசுக்கள் அறவே அற்றவர்கள்; இத்தன்மைகள் படைத்த முனிவர்களால் நீ உபாசிக்கப்படுகிறாய். அவர்களால் நாடப்படுகின்றாய்.

    ஓசை, ஒலியின் வடிவமாக இருப்பாள் நீ. பரிசுத்தமான ரிக், யஜுர் வேதங்களுக்கும், இனிமையான பதங்களுடன் பாடப்படும் அழகிய
சாமவேதத்திற்கும் நீயே இருப்பிடம். வேதத்ரயம் என்னும் மூன்று வேதங்களாகவும் இருப்பவள் நீ. புவனங்களை காத்து வளர்க்கும் உயிராக இருப்பவள் நீ. அனைத்து உலகங்களின் துன்பங்களைப் போக்குபவள் நீ.

    ஓ தேவீ! சாஸ்திரங்கள் அனைத்தின் சாரத்தையும் உணர்ந்துகொள்ளும்
புத்தியாக நீயே இருக்கிறாய்.  பிறவி என்பது கடப்பதற்கரிய கடல். பற்றற்ற நிலை என்பது அந்தக் கடலைக் கடக்க உதவும் படகு. அந்தப் படகாகிய துர்க்காதேவி நீ. விஷ்ணுவின் நெஞ்சத்தில் குடியிருக்கும் ஸ்ரீ என்னும் லட்சுமியும் நீயே. சந்திரனை தலையில் அணிந்திருக்கும் சிவனைப் பிரியாமல் உறையும் கௌரியும் நீயே.

    பரிசுத்தமான புன்முறுவலுடனும் பூரண சந்திரனைப் போன்றும் மாசு மறுவற்ற பொன் போலும் பிரகாசமாகக் காணப்படுவது உன் திருமுகம். அதனால் கவரப்படாமல் கோபாவேசத்தால் பார்வை மறைக்கப்பட்ட மஹிஷாசுரன் உன்னைத் தாக்குவதற்கு முற்பட்டது வியப்பிலும் வியப்பு!

    அவனால் கோபமூட்டப்பட்ட உன்னுடைய முகம் சிவந்த உதய சந்திரன்
போலும் கோபத்தால் நெரிக்கப்பட்ட உன்னுடைய புருவத்தால் கடுமையாகத் தோன்றியது உன் முகம். அத்தகைய உன்னுடைய முகத்தைக் கண்ட மாத்திரத்திலேயே மஹிஷாசுரன் தன்னுடைய உயிரைவிடாததும் விந்தையே.
கோபம்கொண்ட யமனைக் கண்ட யாரும் உயிரோடு இருக்கமுடியுமா?

    ஓ தேவீ! நீ அருள்புரியவேண்டும். உன்னை மீறக்கூடியவர்கள் யாருமே இல்லை. நீ கோபம்கொள்ளும்போது உலகங்களின் நன்மைக்காக அசுரர்களை உடனேயே அழிக்கிறாய். மஹிஷாசுரனுடைய மாபெரும் படை நிர்மூலமாகியதே அதற்கு சான்று.

    உயர்ந்த சிறப்பான நலன்களைத் தரும் நீ யாரிடமெல்லாம் அன்பாக
இருக்கிறாயோ அவர்களெல்லாம் சமுதாயத்தில் சிறப்புகள் அடைகின்றனர். செல்வத்துக்கும் புகழுக்கும் அவர்களே உரியவர்களாக இருக்கிறார்கள். தர்மத்தின் வழியில் நிற்கக்கூடிய அவர்களின் சுற்றமும் கொடிவழியும் குறைவடைவதில்லை.  செல்வத்துடன் மனைவி மக்கள் ஏவலாட்கள் நிறைந்து விளங்க செல்வந்தர்களாக வாழ்வார்கள்.

    ஓ தேவீ! உன்னுடைய அருளால் நல்ல வாழ்வினை அடைந்தவன்
சமுதாயத்துக்கு ஆதரவாக இருந்துகொண்டு தர்மகாரியங்களைத் தடையின்றி செய்கின்றான். சொர்க்கலோகத்தை முடிவில் அடைகின்றான். ஆகையால் நீயே அனைத்து உலகங்களிலும் பயன்களைத் தருபவளாக விளங்குகிறாள்.

    கடப்பதற்கரிய கஷ்டத்தின் நடுவே நினைக்கப்பட்டால் நீ எல்லா உயிர்களின் அச்சத்தையும் போக்கடிக்கிறாய். இன்பமாக இருக்கும்போது நினைக்கபட்டால் நலமிகு மதியைத் தருகிறாய். வறுமையையும், துக்கத்தையும் பயத்தையும் அழிப்பவள் நீ. எல்லாருக்கும் எப்போதும் உதவுகிற உருகும் நெஞ்சம் படைத்தவர்கள் உன்னைத்தவிர வேறு யார்?

$$$$$$$$$$$$$$$$$$$

துர்கா சப்தஸ்லோகி என்னும் ஏழுமந்திர நூலில் வரும்

துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிம் அசேஷ ஜந்தோ:
ஸ்வஸ்த; ஸ்ம்ருதாம் மதிமதீவ சுபாம் ததாஸி
தாரித்ரிய து·க்க பயஹாரிணி கா தவதன்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்த்ர சித்தா

என்னும் சுலோகம் இதுதான்.

$$$$$$$$$$$$$$$$$$$$

    ஓ தேவீ! கொடியோர்கள் கொல்லப்பட்டால் உலகம் இன்பத்தை அடைகிறது. "நரகத்தில் எப்போதும் விழுந்து உழன்று கிடக்கக்கூடிய அளவுக்குப் பாவங்களை இவர்கள் செய்தாலும் செய்யட்டும். அதனால் அவர்கள் என்னால் போரில் கொல்லப்பட்டு அதன்மூலம் சொர்க்க லோகத்துக்கு அவர்கள் செல்லட்டும்" என்று நிச்சயமாக எண்ணித்தான் 

நீ கெட்ட எதிரிகளைக் கொல்கிறாய் போலும். அது உன் கருணை.

    ஓ தேவீ! உன்னுடைய லேசான பார்வை மட்டுமே அசுரர்களைச் சாம்பலாக்கி விடும். இருப்பினும்கூட நீ கெட்ட எதிரிகளின்மீது ஆயுதப்பிரயோகம் செய்கிறாய். "அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும். என்னுடைய ஆயுதங்களால் புனிதமாகி நல்ல உலகங்களுக்குச் செல்லட்டும்", என்பதுதான் உன்னுடைய நற்கருணையுடன் கூடிய நோக்கம்.

    உன்னுடைய வாளிலிருந்து மின்னல்போன்ற ஒளிக் கதிர்கள் வீசுகின்றன. அவற்றின் பிரகாசத்தாலும் உன்னுடைய திரிசூலத்தின் முனையிலிருந்து பெருக்கெடுக்கும் ஒளிவெள்ளத்தாலும் அசுரர்களின் கண்கள் அவிந்துபோக வில்லையென்றால் அதற்குக் காரணம், குளிர்ந்த கிரணங்கள் கொண்ட பூரண சந்திரனைப் போன்ற உன்னுடைய அழகிய திருமுகத்தைக் காணப்பெறும் பேறு பெற்றதால்தான்.

    ஓ தேவீ! தீயவர்களின் போக்கை அடக்கிவைப்பதுதான் உன்னுடைய
இயல்பு. உன்னுடைய அழகோ உவமைக்கும் ஒப்புக்கும் அப்பாற்பட்டது.
பிறரால் சிந்தித்துப் பார்ப்பதற்கும் அரியது. தேவர்களின் வலிமையையும்
வீரத்தையும் அடக்கியவர்களை உன்னுடைய வீரியத்தால் அழித்துவிட்டாய்.
இதன்மூலம் எதிரிகளிடமும் நீ காட்டும் உன்னுடைய மறக்கருணை அறை கூவப்பட்டிருக்கிறது.

    உன்னுடைய பராக்கிரமத்துக்கு எதைத்தான் உவமிக்கமுடியும்!
உன்னுடைய வடிவழகு அடியார்களை வசீகரிப்பதாக இருந்தாலும் எதிரிகளின் உள்ளத்தில் பயத்தை மூட்டும் இந்த மாதிரி பேரழகு எங்கு உண்டு. சித்தத்தில் கருணையும் அருளும், போரில் கடுமையும் கண்டிப்பும் இந்த மூவுலகங்களிலும் உன்னிடம் மட்டுமே  காணப்படுவது.

    சத்துரு சம்மாரத்தால் அனைத்து உலகங்களும் உன்னால் காப்பாற்றப் பட்டன. போர்களத்தில் அந்த சத்துருக்கள் உன்னால் கொல்லப்பட்டு வானுலுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மதம் பிடித்த தேவ விரோதிகளிடமிருந்த எங்களுடைய அச்சம் தீர்ந்தது.
உனக்கு நமஸ்காரம்.

    ஓ தேவீ! சூலத்தால் எங்களைக் கா. ஓ அம்பிகே! வாளாலும் எங்களைக்
காவாய். மணி ஓசையாலும் காவாய். வில்லின் நாண் ஒலியாலும் காவாய்.

    ஓ சண்டிகாதேவீ! கிழக்கிலும் காப்பாற்று. மேற்கிலும் காப்பாற்று.
ஓ ஈஸ்வரீ! உன்னுடைய சூலத்தைச் சுழற்றி தெற்கிலும் வடக்கிலும் அவ்வாறே காப்பாற்று.

    இம்மூன்று உலகங்களிலும் விளங்கும் உன்னுடைய அழகிய
திருவுருவங்களாலும் வர்ணிப்புக்கும் அடங்காத கோர வடிவங்கள் என்னவெல்லாம் உண்டோ அவற்றாலும் இந்த மூவுலகங்களையும் எங்களையும் காப்பாற்றி அருள்வாய்.

    ஓ அம்பிகே! உன்னுடைய இளந்தளிர்கள் போன்ற கரங்களால்
ஏந்தப்பட்டிருக்கும் வாள், சூலம், கதை போன்ற ஆயுதங்கள் எவை எவையோ அவை அனைத்தாலும் எல்லாத் திக்குகளிலும் எங்களைக் காப்பாற்றி அருளவேண்டும்.

   
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$