Saturday, 23 April 2011

An Old Man, A Walking Stick, and Two Lions


புலியை முறத்தால் அடித்துத் துரத்திய மறத்தி ஒருத்தியைப் பற்றியும் படகுத் துடுப்பால் அடித்து விரட்டிய வீர வங்க வனிதையைப் பற்றியும் எழுதியிருந்தேன்.  இப்போது இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறேன்.


ஆ·ப்ரிக்காவில் நடந்தது. 

முதுமையும் நோயால் தளர்ந்து போன உடலும் கொண்ட வெள்ளைக்காரக் கிழவரும் கைத்தடியும்.

 பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஒரு டாக்டர் இருந்தார்.   பெயர் டேவிட் லிவிங்ஸ்டன்.  அவர் சமயத்தொண்டு ஆற்றவேண்டும் என்று எண்ணியதால் ஒரு மிஷனரியாக ஆவதற்கு சங்கல்பம் எடுத்துக்கொண்டு, ஆப்·ரிக்காவின் காடுகளுக்குள் சென்று விட்டார்.  ஆ·ப்ரிக்கக் காடுகளின் மத்தியப் பகுதிக்குள் - நடுக்காட்டுக்குள் சென்று அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்றவேண்டும் என்பது அவரது நோக்கம். அத்துடன் நைல் நதி எங்கு உற்பத்தி ஆகிறது என்பதையும் கண்டறியவேண்டும் என்று எண்ணி யிருந்தார்.   அவர் காட்டுக்குள் மறைந்தது மறைந்ததேதான்.

ரொம்பநாட்கள் ஆகிவிட்டன.   அவர் என்ன ஆனார் என்பதே தெரியாமலிருந்தது.  இங்கிலாந்தில் அவரைத் தேடிச் செல்ல யாரையாவது அனுப்பவேண்டும் என்று முடிவாயிற்று.  ஹென்ரி ஸ்டான்லி என்பவர் ஒரு பத்திரிக்கையாளர். நியூயார்க் ஹெரால்ட்  பத்திரிக்கையில் விசேஷ நிருபராக இருந்தார்.    லிவிங்ஸ்டனைத் தேடுவதற்கு ஸ்டான்லியை நியூயார்க் ஹெரால்ட் பத்திரிக்கை அனுப்பியது. 

அவர் தற்கால தான்ஸேனியா நாட்டுக்குச் சென்று அங்கிருந்து தங்கன்யீக்கா ஏரியை நோக்கிச் சென்றார். காட்டுக்குள்தான்.   ஏனெனில் அந்த வட்டாரத்தில்தான் லிவிங்ஸ்டன் கடைசியாகக் காணப்பட்டதாகத் தகவல்.    அங்கிருந்து அப்படியே காங்கோ காடுகளுக்குள் நுழைந்துவிட்டார்.  ஆங்காங்கிருந்த காட்டுவாசிகளிடம் விசாரித்துக்கொண்டே  சென்றார்.    கடைசியில் ஒரு சிறிய குக்கிராமத்தில் ஒரு குடிசையில் லிவிங்ஸ்டன் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. 

அந்த குக்கிராமத்துக்குச் சென்றார்.

குடிசைக்கு அருகில் ஸ்டான்லி வந்ததும் லிவிங்ஸ்டன் வெளியில் வந்தார்.

அவரைப் பார்த்ததும் ஸ்டான்லி தன் வலக்கையை நீட்டி, "டாக்டர் லிவிலிங்ஸ்டன் என்று நினைக்கிறேன்?"(Dr. Livingstone, I  presume?") 

அவருடைய கையைப் பிடித்தவாறு லிவிங்ஸ்டன் சொன்னார், "ஆம், ஆம்.  நீங்கள் வந்தது குறித்து கடவுளுக்கு நன்றி" (Yes. Yes. Thank God you have come")

மிகவும் நோயால் நலிவுற்றிருந்தார். சரியான ஆகாரமும் கிடையாது. 

போதாததற்கு ஒரு சிங்கம் அவரைத் தாக்கித் தோள்பட்டையைக் கௌவியதில் அவருடைய ஒரு கை செயலற்றுத் தொங்கிப்போயிருந்தது.

கொஞ்ச காலம் லிவிங்ஸ்டனுடன் ஸ்டான்லி இருந்தார். 

இருவரும் ஒரு நாள் ஓரிடத்தில் காற்று வாங்கியவாறு அமர்ந்திருந்தபோது இரண்டு மூன்று சிங்கங்கள் அங்கு வந்து விட்டன.  அவை மிகவும் அருகில் வந்து இவர்களின்மீது பாயப்போகும்போது லிவிங்ஸ்டன் தன் கையில் இருந்த வாக்கிங் ஸ்டிக்கை ஒரே கையால் ஓங்கிச் சுழற்றியவாறு பெரும் கூச்சலிட்டுக் கொண்டு சிங்கங்களை நோக்கி ஓடினார்.  அந்த சிங்கங்கள் நிதானித்தன.    பின்னர் எல்லாமே தலை தெரிக்க ஓடிவிட்டன. 

அவை எதிர்பார்த்திருக்க முடியாதல்லவா. தன்னுடைய இயற்கையான உணவுப்பொருள் தன்னையே எதிர்த்து விரட்டுகிறதே.  அவற்றிற்குப் பெரும் குழப்பம்.  அதன் பின் பயம்.

அதான் ஓடிவிட்டன. 

A Woman, A MuRam, and A Tiger

சிலநாட்களுக்கு முன்னர் பயம் என்னும் தலைப்பில் எழுதிக்கொண்டிருந்தேன்.  அப்போது புலியைப் பார்த்த மாத்திரத்தில் ஏற்படும் கிலியைப் பற்றியும் Panic Seizure, Panic Paralysis என்பனவற்றைப் பற்றியும் எழுதியிருந்தேன். 'புலி அடித்ததோ, கிலி அடித்ததோ' என்னும் முதுமொழியைப் பற்றியும் சொல்லியிருந்தேன்.   பல சமயங்களில் அந்த பயத்தையும் ஒழித்துவிட்டு தைரியத்துடன் செயல் பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். 

ரொம்ப நாட்களுக்கு முன்னர் 'சொர்க்கவாசல்' என்னும் படம் வந்தது. அந்தப் படத்தின் கதை வசனத்தை எழுதியவர் பேரறிஞர் அண்ணா. அதன் ஹீரோவாக நடித்திருந்தவர் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி. நன்றாகப் பாடுவார். பல எழுச்சி மிக்க, தமிழ் உணர்வையும் பற்றையும் தூண்டக்கூடிய பாடல்களைப் பாடியிருக்கிரார்.  அந்தப் படத்தில் ஒரு மெல்லிசைப் பாடல் வரும்.  'கன்னித் தமிழ்ச்சாலையோரம் போகையிலே கவிதைக் கனிகளுண்டு......(ஏதோ வரும். ஞாபகம் இல்லை) அந்தப் பாட்டிலே ஓரிடத்தில்.....

"சீறி வந்த புலியதனை முறத்தினாலே - அடித்து 
சிங்கார மறத்தி ஒருத்தி துரத்தினாளே!"

என்ற அடிகள் வரும். 

சில பெண்கள் ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு பெண், முறத்தை வைத்துக்கொண்டு ஏதோ செய்துகொண்டிருந்தாள்.  அப்போது ஒரு புலி அவர்களைப் பிடிப்பதற்காக சீறிக்கொண்டு பாய்ந்து வந்தது.  மற்றவர்கள் பயந்திருப்பார்கள். அவர்களில் அந்த முறத்துக்காரப் பெண் மட்டும் சற்றும் பயமே இல்லாமல் கையில் இருந்த முறத்தைக் கொண்டு அந்தப் புலியைத் தாக்கினாள். சங்க காலத்துத் தமிழச்சிகளில் இப்படிப்பட்ட தைரியசாலிகள் இருந்தனர் என்று முன்பெல்லாம் மேடைப்பேச்சாளர்கள் கூறுவது உண்டு.  இப்போதும் இருக்கின்றனர்.  எப்போதும் இருந்தனர்.  எங்கும் இருந்தனர்/இருக்கின்றனர். 

வங்காள தேசத்தில் ஓரிடத்தில் வேங்கைப் புலிகள் அதிகம்.  அங்கு நஸ்மா அக்டெர் என்னும் பெண்ணும் அவளுடைய கணவனும் ஒரு கால்வாயில் இரால் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.  அப்போது ஒரு வேங்கைப் புலி, கணவனின்மீது பாய்ந்து, முழங்காலைக் கௌவி, அவனைக் காட்டுக்குள் இழுத்துச் செல்ல முயன்றது.  இதைக் கண்ட அக்டெர், அருகில் உள்ள படகில் கிடந்த துடுப்பை எடுத்து அந்த வேங்கையை அடித்தாள். தொடர்ச்சியாக அடித்துக்கொண்டேயிருந்தாள்.  இவ்வாறு பத்து நிமிடங்கள் அடி கொடுத்து, அந்தப் புலியைத் தடுத்து நிறுத்திவிட்டாள். வேங்கை அதன் பிடியை விட்டுவிட்டது.  கடுமையாக அடி வாங்கிய வேங்கைப் புலி தப்பித்து, காட்டுக்குள் ஓடிவிட்டது.  கணவனுக்குச் சிறிய காயங்களே ஏற்பட்டன.  அக்டெருக்கு வயது பதினெட்டேதான். 

வங்கத்தில் ஒரு கேஅர் ஆர் இருந்திருந்தால் பாடியிருப்பார்...

"சீறிவந்த புலியதனைத் துடுப்பினாலே அடித்து 
சிங்கார வங்க வனிதைத் துரத்தினாளே....."