Thursday 14 April 2011

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - Part 3

திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்னர், தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் முக்கிய திருவிழாக்கள் நடைபெற்றிருக்கின்றன. மாசியில் ஒரு தேர்திருவிழாவும் பங்குனியில் ஒரு தேரோட்டமும் நடைபெற்றன.

திருமலை நாயக்கர் தன்னுடைய திருப்பணிகளில் ஒன்றாக மிகப் பெரிய தேர்களைச் செய்துவைத்தார். தைப்பூசத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும்.

மாசி மாதத்தில் மண்டலபூசை நடைபெறும். அந்த சமயத்தில் மாசிமகத் திருவிழா நடைபெற்றது. அதன்போது, நாயக்கமன்னர் மீனாட்சியம்மனிடமிருந்து செங்கோல் வாங்கும் வைபவமும் நடந்தது. பங்குனியில் ஒரு தேரோட்டத் திருவிழா நடைபெற்றது.  பின்னர் சித்திரையில் வசந்த உற்சவம்.  வைகாசியில் வைகாசி வசந்த உற்சவம்.  அடிக்கடி திருவிழாக்கள். அடிக்கடி தேரோட்டம்.  அதுவும் நாயக்கர் செய்துவிட்ட தேரோ அளவில் மிகப் பெரியது.  அதை இழுக்க ஆட்கள் ஆயிரக்கணக்கில் வேண்டும். பழைய திருவாரூர் தேரை இஇழுக்கவே பன்னிரண்டாயிரம் பேர் தேவைப்பட்டனர். தை, மாசி மாதங்கள் அறுவடை நடந்து, முடியும் சமயம். அந்தச் சமயத்தில் தேரிழுக்க ஆள் கிடைப்பது மிகவும் சிரமம்.

தனது முதலமைச்சரும், ஆகமத்தில் விற்பன்னரும், சிறந்த ஸ்ரீவித்யா உபாசகருமான நீலகண்ட தீட்சிதர், கோயில் பட்டர்மார் ஆகியோருடன் கலந்து தீர்க்கமாக ஆலோசித்தார்.

அதன் பிறகு சில சீரமைப்புகளும் மாறுதல்களும் செய்தார்.  அந்தக் காலத்து மக்கள் இதற்கெல்லாம் எப்படிப்பட்ட உணர்வுகளைக் காட்டினர் என்பது இப்போது தெரியக்கூடுவதில்லை.

ஆனால் ஒன்று.

நாயக்கர் ஆட்சிக்கு வந்து ஆண்டபோது ஐந்து பெரும் யுத்தங்களில் மதுரை நாடு ஈடுபடவேண்டியிருந்தது. அவருடைய காலம் வரையில் அவருடைய மதுரைநாடு, விஜயநகரப் பேரரசுக்குக் கீழ் விளங்கியது. 

இது நாம்கேவாஸ்தே அல்லது de jure நிலைமைதான்.

அந்த காலகட்டத்தில் கோல்கொண்டா, பீஜாப்பூர் சுல்த்தானியரிடம் பெருமளவில் தன்னுடைய வடபாகத்தை தலைநகரங்களுடன் விஜயநகரம் இஇழந்துவிட்டு வேலூரில் மையம் கொண்டிருந்தது. அதன் கீழ் விளங்கிய மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய அரசுகள்,பேரரசைவிட வலிமை வாய்ந்தவையாக இருந்தன. நாயக்கர் விஜயநகரை அடியோடு ஒழித்துக்கட்ட நினைத்து, மேற்படி இரண்டு சுல்த்தானியரையும் மாற்றி மாற்றி பெரும் கையூட்டுக்கள் வழங்கி தூண்டிவிட்டார்.  அவர்கள் ஒருவழியாக விஜயநகரை சப்ஜாடா செய்துவிட்டார்கள். அதன் கடைசி ராயனான ஸ்ரீரங்க ராயனுக்கு முற்பட்ட ராயராகிய அவருடைய சிற்றப்பா, மைசூரில் அகதியாக வாழ்ந்து வாழ்வின் இறுதியில் மைசூர்க் காடுகளில் பைத்தியமாக அழைய நேரிட்டது. அந்த ராயருக்கு அத்தகைய கொடுமையைச் செய்த ஸ்ரீரங்க ராயன் சூழ்ச்சிகளாலும் கையாலாகாதத் தனத்தாலும் திருமலை நாயக்கர் செய்த துரோகத்தாலும் கோல்கொண்டா, பீஜாப்பூர் ஆகியவற்றிடம் நாட்டை இழந்து மைசூரில் அகதியாக பிறர் தயவில் வாழவேண்டியதாயிற்று. இவ்வாறு ஒரு பெரும் செல்வாக்கும் பலமுமிக்க ஒரு பேரரசு இருந்த இடம் தெரியாமற் போயிற்று.   தடுப்பாக விளங்கிய வேலூர் ஆட்சி அகன்றவுடன் சுல்தானியர் மதுரையின்மீது கண்ணோட்டமிட்டனர். அவர்களை நாயக்கர் ஒருவர்மீது ஒருவரை "ஜூட்" காட்டி ஏவிவிட்டு அவ்வப்போது தப்பிக்கொண்டிருந்தார்.

இதற்கெல்லாம் நிறைய செலவழிக்கவேண்டியிருந்தது. படைகளையும் அங்கும் இங்குமாக தனக்கு நேரடியாக சம்பந்தமே இஇல்லாத இடங்களுக்கெல்லாம் அனுப்பி ஊரான் போடும் சண்டையிலெல்லாம் கலந்து கொள்ளவேண்டியிருந்தது. 
போதாததற்கு தன் சொந்தப் போர்கள் வேறு.
மக்கள் மனோநிலை எப்படி இருக்கமுடியும்?
அதற்கும் உதவக்கூடியவகையில் சிலகற்களில் பல மாங்காய்களை விழச்செய்தார்.

கவனத்தை திசைதிருப்பிவிட்டால்......?

அவருக்கு போர்த்துகீசிய, ரோம், வெனிஸ் நகரத்து பரிச்சயம் நிறையவே உண்டு. அவர்களிடமிருந்து பண்டைய ரோமாபுரி வரலாற்றை அறிந்திருப்பார்போல! ஸீஸர்கள் செய்ததை நாயக்கரும் செய்தார்.

வேண்டுமென்றே செய்தாரா? 

பக்தியால்தான் செய்தார். 
சந்தேகமில்லை. 

ஆனால் அதே நேரம் அதில் சில மறைவான உள்நோக்கங்கள் இருந்தனவோ என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை.

ஸீஸர்கள் மக்களை திசைதிருப்ப விழாக்கள், கேளிக்கைகள், க்லேடியேட்டர் போட்டிகள், மிருகங்களுக்கிடையில் சண்டை, சர்க்கஸ் என்றெல்லாம் காட்டினார்கள். அந்த "சரக்கோஸ¤ பயாஸ¤க்கோப்பு" எல்லாத்தையுமே நாயக்கரும் மக்களுக்குக் காட்டியிருக்கிறார். மிருகங்களுக்கிடையில் சண்டை, பயில்வான்களின் குஸ்தி, ஆயுதப் போட்டி முதலியவற்றுக்காகவே ஒரு பெரிய மைதானத்தை நிறுவினார். அந்த அரங்கத்தின் பெயர் "தமுகமு" மைதானம்(மைதானமு?). அங்கு யானைச்சண்டைகூட நடத்தியிருக்கிறார்கள். இப்போதும் அது "தமுக்கம்" என்ற பெயரில் இருக்கிறது. அங்குதான் காந்தி நினைவு மண்டபம் கட்டியிருக்கிறார்கள். (What irony?)

ஆண்டு முழுமையிலும் ஏதாவது திருவிழாக்கள் நடந்துகொண்டேயிருக்க ஏற்பாடு செய்தார். மதுரையில் நடந்த அறுபத்துநான்கு திருவிளையாடல்களில் சிலவற்றை அடிப்படையாகக் கொண்ட விழாக்களும் இருந்தன. அதில் அவை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் அப்படியே உருவாக்கிக் காட்டப்படும். மற்ற திருவிழாக்களைவிட ஒரு மிகப் பெரிய திருவிழாவை மிக விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார்.

அதுதான் "The Festival among Festivals".

"La Grand Carnival".

அந்த விழாவுக்கு வழிவிடும்வகையிலும் வசதி செய்து கொடுக்கும் வகையிலும் மற்ற விழாக்களை இப்படி அப்படி மாற்றி அமைக்கலானார்.

No comments:

Post a Comment