Thursday 14 April 2011

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - Part 1

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் ஆட்சியை திருமலை நாயக்கர் கைப்பற்றியவுடன் அபிஷேகப் பண்டாரத்தின் கீழ் கோயில் வருமானத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கோயில் ஸ்தானிகர்கள் முதலியோர் கலகம் செய்தனர்.

அவர்களுக்கு நிரந்தர வருமான வருமாறு மான்யங்கள் விட்டுக் கொடுத்தார். அது தவிர கோயிலின் வழிபாடுகள், ஊழியர்களின் கடமைகள், திருவிழாக்கள் ஆகியவற்றை சீர்படுத்தினார். அவை எப்போதுமே நடை பெற்று வருமாறு இருபது ஊர்களையும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு பட்டயம் போட்டுக் கொடுத்தார்.

இதுதான் "திருமலைநாயக்கன் கட்டளை" எனப்படுவது. 

How did he go about it?
What did he do?
விளக்குகிறேன்.

முதலில் சிதிலமடைந்த கோயிலை செப்பனிட்டார். திருமலை நாயக்கர் செய்த பல விஷயங்கள் குறித்து நமக்கு நிறைய குறிப்புகள் கிடைத்துள்ளன. திருப்பணி மாலை, ஸ்ரீதல புஸ்தகம் என்று பல ஆவணங்கள் உள்ளன.

அவற்றில் பலவற்றை நாயக்கரே எழுதச்செய்தார். 

அவருக்கு இந்த "PR" என்று இந்தக் காலத்தில் சொல்கிறார்களே, அது மிகவும் அத்துப்படி. சிதிலமடைந்த கோயிலைச் செப்பனிட மட்டும் நிறைய செலவிட்டார். அதற்காக விஷேசமாக தயாரிக்கப் பட்ட சுண்ணாம்பில் காரை தயாரிக்கப்பட்டது.

சாதாரணமாக பூமிக்கு அடியில் படிவங்களாகவும் பாறைகளாகவும் விளங்கும் சுண்ணாம்புப்பாறைகளை உடைத்து, கற்களாக்கி, காளவாயில் இட்டு, சுட்டு, பிறகு தண்ணீர் ஊற்றி சுண்ணாம்பு தயாரிப்பார்கள்.  சுண்ணாம்புடன் மணலைச் சேர்த்துத் தண்ணீர்விட்டு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து சாந்து தயாரிப்பார்கள்.

ஆனால் மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பயன்படுத்தியது வேறு வகை.  சுண்ணாம்புப் பாறைகளுக்குப் பதில் கடல் சங்குகளைக் காளவாயில் சுட்டு, எடுக்கப்பட்டதில் வெல்லச்சாறு விட்டு அறைத்தார்கள். அதன்பின் உளுந்து, நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், முதலியவை ஊறியநீர் விட்டு, மெல்லிய சல்லடைகளால் சலித்தெடுக்கப்பட்ட பொடி மணலைச் சேர்த்து அரைத்து, சாந்து செய்து வச்சிரக்காரை தயாரித்தார்கள்.

அதுபோலவே, நயமான களிமண் கலவையில் செய்யப்பட்ட செங்கற்களை அடுக்கி, இஇந்த வச்சிரக்காரையை வைத்துப் பூசியிருக்கிறார்கள்.  பழங்கற்கள், கெட்டுப்போன உத்திரங்கள், மோசமான பகுதிகளை எடுத்து நீக்கிவிட்டு அங்கெல்லாம் புதிதாக வேலைகளைச் செய்வித்தார்.

பல புதிய பகுதிகளையும் கட்டி சேர்த்தார்.

கிழக்குக் கோபுரத்துக்கு வெளிப்புறமாக கொலுமண்டபம் அல்லது வசந்தமண்டபம் எனப்படும் "புதுமண்டப"த்தைக் கட்டுவித்தார். 

அந்தக் காலத்துக்கு அதுவே மிக அலங்காரமானதாகவும் நீராழி, அகழி சூழ்ந்து புதுமுறையில் புதிதாகக் கட்டப்பட்ட வசந்தமண்டபமாகவும் திகழ்ந்தபடியால் மதுரை மக்கள் அதனைப் "புதுமண்டபம்" என்றே அழைத்தனர்.

அதன்பின்னர் வேறுபல மண்டபங்கள் பலரால் மீனாட்சியம்மன் கோயிலிலும் மதுரையிலும் கட்டப்பட்டுவிட்டன.

ஆனாலும் புதுமண்டபத்திற்கு மட்டும் "புதுமண்டபம்" என்ற பெயர் நிலைத்துவிட்டது. ஆனால் சமீபகாலமாகத்தான் அதை வீணடித்து பாழாக்கிக் கொண்டிருக்கின்றனர்.  அந்த "புதுமண்டப"த்திற்கு இப்போது வயது 384 ஆண்டுகள்.

No comments:

Post a Comment