Sunday 1 January 2012

கம்பன் விழாவும் கம்பன் அடிப்பொடியும்

செட்டிநாடுப்பகுதியைச் சேர்ந்த இஇரு நிலப்பகுதிகளை கானாடு அல்லது கானநாடு என்றும் கோனாடு என்றும் அழைப்பார்கள். கானாடுகாத்தான் என்ற ஊர்கூட இருக்கிறது. கானாட்டின் வடக்கில் இஇருப்பது கோனாடு. 


கானாடு, கோனாடு ஆகிய இருநாட்டிலும் வாழ்ந்த இஇருபத்துநான்கு கோட்டத்து வேளாளர்கள்தாம், வேளாளரைச் சிறப்பித்து 'ஏர் எழுபது' என்னும் நூலைக் கம்பரை இயற்றச்செய்து, அரங்கேற்றி, 
பரிசில்களும் வழங்கினர். பொன்னமராவதி என்னும் கோனாட்டைச் சேர்ந்த ஊரின் தலைவராகிய பொய் சொல்லா தேவன் என்னும் கள்ளர் மரபினரின் தலைவரிடம் இது குறித்து ஒரு சாசனம் இருந்தது. புதுக்கோட்டை அரசினரிடம் அந்த சாசனம் சேர்ப்பிக்கப்பட்டது. கம்பர் தன் இறுதிக் காலத்தில் செட்டிநாட்டில்தான் இருந்தார் என்று நம்பப்படுகிறது. 


கானாட்டின் முக்கிய ஊர்களில் ஒன்று நாட்டரசன்கோட்டை. அங்கு 'கண்ணுடைய நாயகி யம்மன்' கோயில் என்ற அம்பிகை கோயில் இருக்கிறது. அந்த ஊரையும் கம்பனையும் சம்பந்தப் படுத்துவார்கள். கம்பன் அடங்கிய இடம் என்று அதனைச் சொல்வார்கள். அங்கு கம்பன் அடங்கிய இடமாகக் குறிக்கப்படும் நடுகல்லுடன் கம்பன் செய், கம்பன் குளம், கம்பன் ஊருண்ணி என்ற பெயர்களும் வழங்குகின்றன. 


1775இல் முத்துநாயகப்புலவர் என்பவர் 'கண்ணுடைய நாயகியம்மன் பள்ளு' என்ற சிறு பிரபந்தத்தைப் பாடியுள்ளார். . 


அதில் ஓரிடத்தில், 


'வாசமான தென்பாண்டி நன்னாடு 
மதுரை நாட்டில் வளருமிந்நாடு 
காசினிக்குள் கதிர்க்கின்ற நாடு 
முன்கம்பர் வந்து துதிக்கின்றநாடு. 


பூசுரர்க் கன்னதானம் செய்நாடு 
புலவர் மேல்அபிமானஞ் செய்நாடு 
ராசலட்சுமி கண்ணுடை யாள்அருள் 
நல்கு நாட்டரசன் கோட்டை நாடே.' 


அந்தத் தொடர்பால் கம்பன் விழா சமயத்தில் அங்கும் ஒரு விழா நடக்கும். 


கம்பன் விழாவை முதன்முதலில் தோற்றுவித்தவர் 'காரைக்குடி கம்பன்' என்று மக்களால் அழைக்கப் பட்டு வந்த 'கம்பனடிப்பொடி' சா.கணேசன் அவர்கள். வரலாற்றாராய்ச்சிப் பேரறிஞர்; மிகச் சிறந்த தமிழறிஞர். தேசத் தியாகி. பாரதம் சுதந்திரம் அடையும்வரை சட்டையே போடுவதில்லை என்ற விரதத்தை மேற்கொண்டவர். பாரத விடுதலைக்குப் பிறகும்கூட சட்டை போடாமலேயே இருந்தவர். தனதூராகிய காரைக்குடியில் கம்பன் கழகத்தைத் தோற்றுவித்தவர். தன்னுடைய பேரனுக்கு 'கம்பன்' என்று பெயரிட்டு வாய்நிறைய அழைத்து இன்பம் கண்டவர். அவர்தான் காரைக்குடியில் தொடர்ந்து அவ்விழா நடைபெறும் வண்ணம் ஏற்படுத்தியவர். 


பக்தி இஇலக்கியம் என்ற தகுதியை மட்டுமே  பெற்றிருந்த கம்பராமாயணத்தை ஒரு பேரிலக்கியமாகப் புகழ் பெறச் செய்த பெருமையில் சா.கணேசனுக்குப் பெரும்பங்கு உண்டு. பல இடங்களில் கம்பன் கழகங்களையும் நிறுவக் காரணமாக இஇருந்தவர். 


முதன்முதலில் 1939ஆம் ஆண்டில் அவர் காரைக்குடியில் கம்பன் கழகத்தைத் தோற்றுவித்தார். 


கி.பி.886ஆம் ஆண்டு பங்குனி மாதம், நான்காம் நாள், புதன்கிழமை, ஹஸ்த நட்சத்திர நாளன்று கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்டதாக சா.கணேசன் தம் ஆராய்ச்சியால் நிறுவியுள்ளார். 


ஆகவே ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் மகம், பூரம், உத்தரம் ஆகிய மூன்று நாட்களில் காரைக்குடியிலும் ஹஸ்த நட்சத்திரன்று நாட்டரசன்கோட்டையிலுள்ள 'கம்பனுடைய பள்ளிப்படை' என்னும் இடத்திலும் கம்பன் திருவிழா கொண்டாடப்படுகிறது. 


1952ஆம் ஆண்டில் கம்பன் விழாவை முதன்முதலாகக் கொண்டாடத் தொடங்கினர். 


இவ்வழக்கத்தை ஏற்படுத்தியவர் சா.கணேசன்தான். 


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

No comments:

Post a Comment