Thursday, 15 May 2014

EXILE

   தேசப்ரஷ்டம்
EXILE 'தேசப்ரஷ்டம்' என்பது அக்காலத்தில் வழங்கப்பட்ட தண்டனைகளில் ஒன்று.
    மிகக் கொடுமையானதாகக் கருதப்பட்ட தண்டனைகளில் இதுவும் ஒன்று. ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் தண்டனைக்குரியவன் நாட்டை விட்டுச் சென்றுவிடவேண்டும். அவனுக்கு யாரும் உணவோ இருக்கையோ கொடுக்கக்கூடாது. பேசவும்கூடாது. அவ்வாறு மீறிச் செய்பவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடும்தண்டனைக்கும் ஆளாவார்கள்.

    ப்ரஷ்டத்துக்கு உரிய ஆள் என்பதை அடையாளம்காட்ட நெற்றியில் அடையாளத்தைச் சுட்டுவிடுவார்கள்.
    அவனுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவனுடைய
குடும்பத்தினரும் ஆதரவற்றவர்களாக்கப்படுவார்கள். ப்ரஷ்டனுடைய
குடும்பத்தினர் என்ற வகையில் அவர்களுக்கு யாரும் உதவி செய்யக்கூடாது.

    அவனுக்குக் கொடுக்கப்படும் கெடுவுக்குள் அவன் செல்லவில்லை யென்றால் சித்திரவதைக்கு ஆளாகி முடிவில் கொல்லப்படுவான்.
  
    இன்னொரு நாட்டுக்குச் சென்றாலும்கூட அவன் ஒரு 'ப்ரஷ்டன்' என்பதைக் கண்டுபிடித்துவிடுவார்கள். என்ன காரணத்துக்காக அவன் ப்ரஷ்டம் செய்யப்பட்டான் என்பதை கவனத்தில் கொள்வார்கள். ப்ரஷ்டத்துக்கு ஆளாகியவன் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவன்தான். எங்கு போனாலும் அவனுக்கு மரியாதை இருக்காது. இன்னொரு நாட்டிலும் அவன் ஒதுக்கப் பட்டவனாகவும் தாழ்த்தப்பட்டவனாகவும் உரிமைகள் அற்றவனாகவும்தான் கருதப்படுவான். மற்றவர்களுக்காக இருக்கும் சட்டங்களின் பாதுகாப்பும் அவனுக்கு இருக்காது.
    ஒருநாட்டின் ப்ரஷ்டன் இன்னொரு நாட்டில் ஆதரிக்கப்பட்டால் அது முந்தைய நாட்டை அவமதிப்பதாகும்.
    அவன் அரசியல் காரணங்களுக்காக நாடு கடத்தப்பட்டு, அவனுடைய நாட்டுமன்னனுக்கு விரோதியாக இருக்கக்கூடிய இன்னொரு நாட்டுக்குச் சென்று, அந்த நாட்டில் அவனுக்கு asylum கிடைக்கக்கூடும். ஆனால் எல்லாருக்கும் இந்த வாய்ப்பு கிட்டாது அல்லவா?
    இப்படிச் செய்வது பல சமயங்களில் ஓர் Act of War என்று கருதப் படுவதுமுண்டு.
    சிரச்சேதம் போன்ற கொலைத்தண்டனை அக்காலத்தில்
merciful-ஆகக் கருதப்பட்டது.
    சுக்கிரநீதி, கௌட்டில்யம், பார்ஹஸ்பத்யம், மானவ்யம் போன்ற
நீதிநூல்களில் ப்ரஷ்டத்தைப் பற்றி காணலாம்.
  
    தீவாந்தர சிட்சை என்பதும் ஒரு நாடு கடத்தல் மாதிரிதான்.
    ஏதாவது அநாமத்துத் தீவில் கொண்டுபோய் இறக்கிவிட்டுவிடுவதும்
உண்டு.
    தீவாந்தர சிட்சைக்கென்று சில தீவுகள் வைத்திருந்தார்கள். தண்டனைக்குரியவர்களை அத்தகைய தீவுகளில் காவலில் வைப்பார்கள். சில தீவுகளில் சும்மா விட்டுவிடுவார்கள். சில தீவுகளில் கடுமையான காவலுடன் கூடிய சிறைச்சாலைகள் இருக்கும். பிற்காலத்தில் அந்தமான், Devils Island, Alcatraz போன்றவை இருந்தன.
    பினாங்கும் தீவாந்தர சிட்சைக்குரிய இடமாகத்தான் இருந்தது.
1801-இலேயே அது அவ்வாறு இயங்கியது. அங்கு பலகாலமாக அந்தத்
தீவின்வாசிகள் வசித்துவந்தனர். அவர்கள் ஏற்கனவே அங்கு இருந்தவர்கள்.
தீவாந்தர சிட்சைக்கு ஆளாகியவர்களை கூலிவேலைக்குப் பயன் படுத்தினார்கள்.
    அந்தக் காலத்தில் தீவாந்தர சிட்சைக்குரியவர்களின் நெற்றியிலும்
அடையாளக்குறி வைத்தார்கள். பிரிட்டிஷ்காரர்கள் நம்பர் போட்டு விட்டார்கள்.
    இந்தக் குறிகளை அழிப்பதற்குரிய Plastic Surgeryகூட இருந்தது. கன்னத்திலிருந்து Skin Graft எடுத்து நெற்றியில் ஒட்டிவிட்டார்கள்.
    இந்த ப்லாஸ்ட்டிக் ஸர்ஜரியைப் பற்றிய பழைய இழையை அகத்திய ஆவணத்தில் பார்க்கலாம்.

    ஆம். பினாங்குக்குத்தான் Prince of Wales Island என்று
பெயரிட்டிருந்தார்கள்.
    அந்தக் காலத்தில் சையாம் என்றழைக்கப்பட்ட தாய்லந்து ஒரு Regional Power. இப்போதைய மலாயாவின் வட பகுதிகள் எல்லாம் சையாம் நாட்டிற்கு உட்பட்டவை. அக்காலத்தில் இருந்த கடாரத்தின் சுல்த்தானும் சையாமுக்குக் கப்பம் செலுத்துபவராக இருந்தார்.
    கப்பப் பாக்கி, வரி, வட்டி, கிஸ்தி, வசூல் என்ற பிரச்னைகள் இருந்து கொண்டேயிருந்தன.
    அப்போது இந்தியாவில் வெகுவேகமாக பிரிட்டிஷ் கிழக்கிந்தியக்
கம்பெனியின் ஆதிக்கம் பரவிக்கொண்டிருந்ததால், பிரிட்டிஷ்காரர்களை தம் பக்கம் இழுத்துக்கொண்டால் நல்லது என்று நினைத்து கும்பினியில் அதிகாரியாக இருந்த Francis Light என்பவர் மூலமாக் கடாரத்து சுல்த்தான் கும்பினியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.
    அதன் மூலம் கடாரத்துக்குச் சொந்தமான 140 சதுரமைல்கள் பரப்பளவு கொண்ட தீவாகிய பினாங்கை அவர்களுக்கு வர்த்தகம், படையிருப்பு ஆகியவற்றுக்காகக் கொடுப்பதென முடிவாகியது.
    அந்த இடத்தில் பிரிட்டிஷ்காரர்கள் இருந்தால் சையாம் வாலாட்டாது என்ற எண்ணம்.
    ஆகவே பினாங்கை ஓசியாக வாங்கிக்கொண்டு அதற்கு Prince of Wales Island என்று பெயரிட்டார்கள். அப்போது இங்கிலாந்து மன்னராக இருந்த மூன்றாம் ஜார்ஜின் பேரால் பினாங்குத்தீவின் ஒரு பகுதியில் Georgetown என்ற ஊரை ஏற்படுத்தினர். அங்கு ஏற்கனவே மக்கள் இருந்தனர். பிரிட்டிஷார் ஏற்படுத்தியது ஒரு Grid-plan படி ஆறுவீதிகள், ஆறு குறுக்குத்தெருக்கள் கொண்ட அமைப்பு. அதிலிருந்து வடக்கும் தெற்குமாய் பல பாகங்களுக்கும்
செல்லும் வீதிகள்.
    அத்துடன் ஒரு கோட்டையையும் கட்டிக்கொண்டனர். மலாக்கா ஜலசந்தியைக் காவல் புரியும்வண்ணமும் தென்கிழக்காசியா, கல்கத்தா, மதராஸ் ஆகியவற்றுடன் நேரடித் தொடர்பு கொண்டதாகவும் அக்கோட்டையும் பட்டனமும் விளங்கியது.
    அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்ட்டனிடம் தோல்வியுற்றுத் திரும்பிய Lord Cornwallis பிரபு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தார். ஆகவே அவருடைய பெயரையே அந்தக் கோட்டைக்கு வைத்தனர். தோத்துப்போன ஆசாமிக்கு இப்படி ஒரு யோகம், பாருங்கள். The Patriot படத்தில் அவருடைய கால்சட்டை, அண்டர்வேர், முதற்கொண்டு நாய்கள்வரைக்கும் Mel Gibson கைப்பற்றி வைத்துக்கொண்டு போனால்போகிறதென்று திருப்பிக்கொடுப்பதாகக் காட்டுவார்கள். அற்புதமான படம். மெல் கிப்ஸனின் முத்திரை பதிந்த படம்.    ஆனால் பினாங்கில் வர்த்தகத்துக்கு அதிகம் வாய்ப்பில்லை.
    அதை ஏதாவது ஒரு காரியத்துக்குப் பயன்படுத்த வேண்டுமே. சும்மா வேஸ்ட்டாப் போடமுடியுதே. கும்பினி கணக்குக் கேட்குமே. இல்லையா, பின்னே.
    ஆகவே அதை தீவாந்திர சிட்சைக்குரிய இடமாக ஆக்கிவிட்டார்கள்.
    அப்போது கர்நாட்டிக் நாட்டின் பாளையக்காரர்கள் போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களில் தூக்கில் போடப்படாதவர்களையும் சந்தியில் வைத்து சாட்டையடி வாங்காதவர்களையும் பினாங்குக்கு தீவாந்தர சிட்சையில் கும்பினி அனுப்பியது.
    ஆர்காட்டு நவாபின் ஆட்சிக்குட்பட்ட பகுதிதான் கர்நாட்டிக் நாடு. அந்த ஆளின் பதவிக்குப் பெயரே Nawab of Carnaticதான். திப்பு சுல்த்தானின் மைசூர், ஏதோ ஒரு ராவ்ஜியின் தஞ்சாவூர், என்னமோ ஒரு வர்மாவுடைய திருவாங்கூர் போன்றவை நீங்கலாக உள்ள தமிழ்நாடு - அதுதான் கர்நாட்டிக். இப்போதுள்ள கர்நாடகா இல்லை. இது வேறு.
    1820-ஆம் ஆண்டு பினாங்கில் தீவாந்திர சிட்சையின்கீழ் 200 பேர் இருந்தனர்.
    அவர்களில் ஒருவர் துரைச்சாமி சேர்வைக்காரர்.
    சின்ன மருதுவின் கடைசி மகன்.
    எப்படி இத்தனை கணக்காகச் சொல்கிறேன்?
    அது ஒரு பெரிய கதை.

    $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

1 comment: