Wednesday 5 March 2014

RARE LITERATURE-#01


"முன் தோன்றிய மூத்தகுடி"
ஓர் அரிய நூல் -#01

புறப்பொருள் வெண்பா மாலை

ஓர் அரிய நூலைனைப் பற்றி இங்கு கொஞ்சம் பார்ப்போம்.

ஆதிகாலத்தில் அகத்தியர் தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும்
தம்முடன் இருத்திக்கொண்டு தமிழாய்ந்த காலத்தில், அந்தப் பன்னிரு
சீடர்களும் 'பன்னிரு படலம்' என்னும் நூல் தொகுப்பை யாத்தனர்.
அதன் வழிநூல்களாகப் பல நூல்கள் எழுந்தன. அவற்றுள் பல,
மறைந்துபோயின.
சிலநூல்கள் கிடைத்துள்ளன. அவற்றில் ஒருநூல்தான்
'புறப்பொருள் வெண்பாமாலை'
அதன் பெயர் உணர்த்துவது போல, இது வெண்பாக்களால் ஆகிய
நூல். புறவொழுக்கத்தைப் பற்றி விளக்கிக்கூறும் நூல் இது.
ஒவ்வொரு திணையிலும் உள்ள துறைகளுக்குரிய சூத்திரங்களையும்
குறிப்பிட்டு, அவற்றை எடுத்துக்காட்டும் விதத்தில் ஒரு வெண்பாவையும் அமைத்திருக்கிறார் நூலாசிரியர்.

நூலாசிரியர் - ஐயனாரிதனார்.
அவர் சேரர்குடியைச்சேர்ந்தவர்.

கடவுள்வாழ்த்தில் வினாயகர் துதி:

நடையூறு சொல்மடந்தை அல்குவது நம்மேல்
இடையூறு நீங்குவதும் எல்லாம் - புடையூறும்
சேனைமுகத் தாளிரியச் சீறுமுகத் தூறுமதத்து
ஆனைமுகத் தானை நினைத்தால்

தொகுதி தொகுதியாக மேலும் மேலும் வந்து குவிகின்ற எதிரிகளின்
படைகள் எல்லாம் பயந்து சிதறி ஓடிப்போகுமாறு சீற்றமுடன்கூடிய
திருமுகத்தை ஆனைமுகன் கொண்டுள்ளான். சுரக்கும் மத நீரையும்
கொண்டிருக்கிறான். அவன் திருவடிகளை நினைத்தால்
சொல்மடந்தையாகிய சரஸ்வதி, நடைவளம் சுரக்கின்ற
நாவளத்தைத் தந்து அருளுவாள். அதுமட்டுமல்லாது, நம்மைத்
தாக்கும் இடையூறுகளெல்லாமே நம்மைவிட்டு நீங்குவதும் கைகூடும்.

அடுத்து சிவனை வழுத்துவார்:

கண்அவனைக் காண்கஇரு காதுஅவனைக் கேட்கவாய்ப்
பண்ணவனைப் பாடப் பதஞ்சூழ்க - எண்ணிறைந்த
நெய்யொத்து நின்றானை நீலமிடற்றானை என்
கையொத்து நேர் கூப்புக.

எள்ளினுள் விளங்கும் எண்ணெய் போல் அனைத்திலும் இரண்டறக்
கலந்து நின்றானாகிய முதல்வன் சிவன். திருநீலகண்டத்தை
உடையவன். அப்படிப்பட்ட சிவனையே என் கண்கள் பார்க்கட்டும்.
அவன் திருநாமத்தையே என் காதுகள் கேட்கட்டும். என் வாயில்
தோன்றும் பண்ணெல்லாமே அவனைப் போற்றிப் புகழ்வதற்காகவே
உரிய சொற்பதங்களைப் புனைந்து விளங்கட்டும். என் கைகள், என்
உள்ளத்தோடு ஒருமைகொண்டு, அவன் திருவின் முன்பாக குவிந்து
வணங்கியிருக்கக்கூடியவையாக விளங்கட்டும்.

பழங்கால மரபில் கலைமகள் வாழ்த்தும் காணப்படும்.
பிற்காலத்தில் அவ்வாறு காணப்படுவதில்லை.

நாமகள் வாழ்த்து:

தவளத் தாமரைத் தாதார் கோயில்
அவளைப் போற்றுதும் அருந்தமிழ் குறித்தே!

அருமையான இந்தத் தமிழ்நூல், இனிதாக நிறைவெய்துதலே குறி;
அதற்காக வெண்தாமரை மலர்களின் மகரந்தம் நிறைந்துவிளங்குகின்ற
கோயிலிடத்தே எழுந்தருளியிருப்பவளாகிய கலைமகளை நாம்
போற்றுவோம்.

இந்நூலின் சிறப்புப்பாயிரத்தையும் கவனிப்போம்.

மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை இருந்த சீர்சால் முனிவரன்
தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதல்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோன்
ஓங்கிய சிறப்பின் உலகமுழு தாண்ட
வாங்குவில் தடக்கை வானவர் மருமான்
ஐய னாரிதன் அகலிடத் தவர்க்கு
மையறு புறப்பொருள் வழாலின்று விளங்க
வெண்பா மாலை எனப்பெயர் நிறீஇப்
பண்புற மொழிந்தனன் பான்மையின் தெரிந்தே

இதன் உரையை அப்படியே கொடுக்கிறேன்.

'நிலைபெற்ற சிறப்பினை உடையவரானவானோர்கள் வேண்டிக்
கொள்ளுதலினாலே, தென்மலையாகிய பொதியத்திடத்தே வந்து
வீற்றிருந்தவர், சீர்மை நிறைந்த முனிவராகிய அகத்தியர்.
அவரிடத்தே, தண்மை செறிந்த தமிழ்மொழியின் நுட்பங்களிப்
பழுதின்றிக் கற்றுணர்ந்த கிடைத்தற்கரிய புகழினைப் பெற்றவர்கள்,
தொல்காப்பியர் முதலாகிய பன்னிரு புலவர்களும் ஆவர்.
அவர்கள் பகுதியோடும் அமையச் சொல்லிய புறப்பொருள் நூல்,
'பன்னிரு படலம்' என்பது.
அந்நூல் முழுவதையும் குற்றமின்றிக் கற்றுணர்ந்த சிறப்பினையுடையவர்
'ஐயனாரிதனார்' என்னும் இவர்.
உயர்ந்த மேம்பாட்டினையுடைய உலகம் முழுவதையுமே ஆட்சி
செலுத்திவந்தவரும், வளைந்த வில்லினைத் தம் பெரிய கையிடத்தே
கொண்டவருமான சேரர் குடியினரின் வழிவந்தவரும் இவராவர்.
அகற்சியை உடைய நிலப்பரப்பினதான தமிழ்நாட்டின்கண்
உள்ளவர்க்குக் குற்றமற்ற வகையிலே புறப்பொருள் இலக்கணம்
வழுவின்றி விளங்கும் பொருட்டாக, வெண்பாமாலை என்னும்
பெயரினை இட்டு, அப்பொருளினை முறையோடும் தெளிந்தவராக,
நூற்பண்பு பொருந்த, அவர் இதனைச் சொல்லி அருளினார்'.

இந்நூலைக் கண்டெடுத்து வெளியிட்டவர் தமிழ்த்தாத்தா
உ.வே.சாமிநாதய்யரவர்கள். அதற்குப் பொருளுதவி செய்தவர்
நான்காவது மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவியவரும் பாலவநத்தம்
ஜமீன்தாருமாகிய பாண்டித்துரைத் தேவரவர்கள்.

நமக்கெல்லாம் நன்கு அறிமுகமாகிய ஒரு சொற்றடர்
இந்நூலில் உள்ளதொரு வெண்பாவில் காணப்படுவதுதான்.
'கரந்தைப் படலம்' எனும் பகுதியில் 'குடிநிலை' என்னும்
துறையை விளக்கும்படியாக இயற்றப்பட்டது.

பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடி.

உரை:

'பண்டு, இந்த வையகத்தினைக் கவிந்துகொண்ட, தெளிந்து
ஆரவாரிக்கும் ஊழிக்கடல் வெள்ளமானது விட்டு நீங்கியதாக,
அதன்பின் முற்பட மலைதோன்றி மண்தோன்றாதிருந்த அந்தப்
பழங்காலத்திலேயே, எல்லா மக்கட்குடியினும் முற்படத்தோன்றி,
வாளாண்மையுடன் முதிர்ச்சி பெற்றுவருவதும் அம்மறவனின்
குடியாகும். அதனால் இவன், பொய்மை நீங்க நாள் தோறும்
புகழினை விளைத்துச் சிறப்புறுதல் என்னதான் வியப்போ?' 





          $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

No comments:

Post a Comment