Sunday 11 December 2011

TIRUPPADI TIRUVILZA

திருமுருகன் திருப்படி திருவிழா


ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா தேவியர் சமேத 
திருத்தணி ஸ்ரீமுருகன் - 

சில ஆண்டுகளுக்கு முன்புவரைக்கும் டிஸெம்பர் மாதம் 31-ஆம் தேதியன்று மாலையில் சுங்கைப் பட்டாணியிலுள்ள ஸ்ரீசுப்பிரமணியர் தேவஸ்தானத்தில் திருப்புகழ் திருப்படி திருவிழா கொண்டாடுவோம்.
இது முதன்முதலில் 1917-ஆம் ஆண்டில் வள்ளிமலை சுவாமிகள் என்னும் திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள் திருத்தணியில் தோற்றுவித்த விழா.
அக்காலத்தில் ஆங்காங்கு இருந்த வெள்ளைக்கார துரைத்தனத்தாரை டிஸெம்பர் மாதம் 31-ஆம் தேதி சென்று கண்டு மரியாதையும் விசுவாசமும் தெரிவித்துவருவது வழக்கம்.
அன்னியர்களைப் போய் இவ்விதம் பார்ப்பதை வள்ளிமலை சுவாமிகள் விரும்பவில்லை.
ஆகவே டிஸெம்பர் மாதம் 31-ஆம் தேதி மாலையில் திருத்தணி மலையில் ஏறிச்சென்று அங்கு இருக்கும் திருமுருகனை  நள்ளிரவில் விசேஷ ஆராதனைகளுடன் தரிசித்துவிட்டு வரும் வழக்கத்தை ஏற்படுத்தினார். திருத்தணி மலையின் மீது ஏறும்போது அங்குள்ள ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு திருப்புகழ்ப் பாடலாகப் பாடி ஒவ்வொரு படிக்கும் தீபாராதனை காட்டியவாறு மெதுவாக ஏறிச்செல்வார்கள்.
அதனால்தான் இந்த விழாவுக்கு திருத்தணி திருப்புகழ் திருப்படித் திருவிழா என்று பெயர்.
சுங்கைப் பட்டாணியிலுள்ள கோயிலில் பதினோரு படிகள் உண்டு. படிக்கொரு திருப்புகழாக பதினோரு பேர் பாடி, தேங்காய் உடைத்து, தீபாராதனை காட்டி வழிபடுவது வழக்கம். அதன் பின்னர் அன்னதானம் நடைபெறும்.
அடுத்த நாள் ஜனவரி 1-ஆம் தேதி சுங்கைப் பட்டாணி சித்தி விநாயகர் கோயிலில் விக்னநாசன விக்னேஸ்வரப் பூஜையை நிகழ்த்துவோம். அன்று மாலையும் அன்னதானம் இருக்கும்.
இதைச் சில ஆண்டுகள் நடத்திவந்தோம்.


திருத்தணித் திருப்புகழ்.


நினைத்த தெத்தனையிற் தவறாமல்
நிலைத்த புத்திதனைப் பிரியாமற்
கனத்த தத்துவமுற் றழியாமல்
கதித்த நித்திய சித் தருள்வாயே


மனித்தர் பத்தர்தமக் கெளியோனே
மதித்த முத்தமிழிற் பெரியோனே
செனித்த புத்திரரிற் சிறியோனே
திருத்தணிப் பதியிற் பெருமாளே


நினைத்தது எத்தனையில் தவறாமல்
நிலைத்த புத்திதனைப் பிரியாமல்
கனத்த தத்துவம் முற்று அழியாமல்
கதித்த நித்திய சித்து அருள்வாயே


மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே
மதித்த முத்தமிழில் பெரியோனே
செனித்த புத்திரரில் சிறியோனே
திருத்தணிப் பதியில் பெருமாளே


அந்தப் பாடலில் 'மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே' என்று குறிப்பிட்டிருப்பதுபோல் பாடலும் மிக எளிமையான எளிதான பாடல்.
காரியசித்திக்காக முருகனை வேண்டி பக்தர்கள் நம்பிக்கையோடு பாடும் பாடல் இது.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

1 comment: