Wednesday 30 November 2011

STRANGE AND TRUE-#1

அதிசயம் ஆனால் உண்மை -#1




இந்தப் பிரபஞ்சத்தில் பல விஷயங்கள் மர்மமான முறையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு விளங்கும்.
அந்த மாதிரியான தொடர்பின் பின்னால் உள்ள தத்துவம் நமக்குப் புரியாது. இதற்கும் அதற்கும் ஏன் அந்தத் தொடர்பு இருக்கிறது, அது எப்படி ஏற்பட்டது என்பன போன்றவற்றையெல்லாம் நாம் அறியவே முடியாது. ஏதோ ஒரு சூட்சுமமான தொடர்பு, அவ்வளவுதான். மந்திரங்களின் உச்சாரணம், அவற்றுடன் சேர்ந்த முத்திரைகள், உபசாரங்கள், யந்திர ஸ்தாபனம், பிரயோக முறைகள் - இவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு உண்டு. ஸ்தாபனம், சான்னித்தியம் என்று விஷயங்கள் எல்லாம் அவற்றின்
சம்பந்தம் உள்ளவைதாம்.
அந்த வெண்டைச்செடி ஏன் அத்தனை அடி உயரத்துக்கு வளர்ந்தது? அதே முறை ஏன் மீண்டும் மீண்டும் வேலை செய்தது?
It was a repeatable feat.
அதை அறிந்துகொள்வதற்கு முயலவேண்டும்.

பலாப்பழம் இருக்கிறது. அதை உடைக்காமல் அதன் உள்ளே எத்தனை சுளைகள் இருக்கின்றன என்று அறியமுடியுமா?
முடியும்.
'கணக்கதிகாரம்' என்றொரு நூல் இருக்கிறது. அதில் இதற்குரிய ·பார்முலா சொல்லப் பட்டிருக்கிறது.

பலவின் சுளையறிய வேண்டுதிரேல், ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருகு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே, ஐந்தினுக்கு ஈந்திடவே
வேறெண்ண வேண்டாம் சுளை.

பலாப்பழத்தின் காம்புக்கருகில் உள்ள சிறுமுட்களை எண்ணவேண்டும். 
அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்கவேண்டும்.  அந்த எண்ணை ஐந்தால் வகுக்கவேண்டும்.  முடிவாகக் கிடைக்கும் தொகைதான் அந்தப் பலாப்பழத்தில் உள்ள சுளைகளின் எண்ணிக்கை.
<இதை ஒருமுறை பரீட்சை செய்து பார்த்தேன். சரியாகவே இருந்தது.>

இந்த வித்தையை அறிந்த புலவர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் அப்துல் காதிர். சீறாப்புராணத்தை எழுதிய உமறுப் புலவரின் பேரர். அவர் அட்டாவதானமும் செய்வார்.
அட்டாவதானம் என்றால் என்ன?
ஒரே சமயத்தில் எட்டுப் பேர் சூழ்ந்திருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் எட்டு விதமான விஷயங்களைச் செய்யச்சொல்வார்கள்; அல்லது கேள்விகளைக் கேட்பார்கள். நோட்ஸ் ஏதும் எடுக்காமலேயே அத்தனை விஷயங்களையும் உடனடியாகச் செய்யவேண்டும், பதிலும் சொல்ல வேண்டும். கொஞ்சம்கூட யோசிக்கக்கூடாது. தயங்கவும் கூடாது. தவறாகவும் இருக்கக்கூடாது. 
ஒருவர் பூவை மேலே போட்டுக்கொண்டிருப்பார். இன்னொருவர் அவ்வப்போது மணி அடிப்பார். வேறொருவர் ராகங்களைப் பாடுவார். இன்னொருவர்  கேள்வி கேட்பார். வேறொருவர் எதாவது ஈற்றடி சொல்லி, அதை வைத்துக் கவிதை புனையச் சொல்வார். ஒருவர் முருகன் துணை என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். அதே நேரத்தில் சித்திரம் வரையவேண்டும். கொடுத்திருக்கும் வண்ண மணிகளை வரிசை மாறாமல் கோர்க்கவேண்டும்.
குறிப்பிட்ட நேரத்துக்குள் மணிகள் சரியான வரிசையில் கோர்க்கப் பட்டிருக்க வேண்டும். கவிதை சரியாக முடிக்கப்பட்டிருக்கவேண்டும். எத்தனை தடவை மணி அடிக்கப்பட்டது என்பதையும் சொல்லவேண்டும். கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்லியிருக்கவேண்டும். தம் மேல்  விழுந்த பூக்கள் எத்தனை என்பதையும் சொல்லவேண்டும். எத்தனை 'முருகன் துணை' சொல்லப்பட்டன என்பதையும் சொல்லவேண்டும். படமும் வரைந்து முடித்திருக்கவேண்டும். ரகங்களையும் சரியாகச் சொல்லியிருக்கவேண்டும்.
ஒருமுறை அவர் அட்டாவதானம் செய்துகொண்டிருக்கும்போது அவரைப் பரீட்சை செய்துகொண்டிருந்த எட்டுப் பேர்களில் ஒருவர் மாணிக்கம் பிள்ளையின் மகன் பெருமாள் என்பவர். அவர் புலவரிடம் ஒரு பலாப்பழத்தைக் கொடுத்து, சுளைகளின் எண்ணிக்கையைக் கேட்டார்.
அப்துல் காதிர், கணக்கதிகார ·பார்முலாவைப் பயன்படுத்தி யிருக்கிறார். அவருக்கு கிடைத்த எண்ணிக்கையை அப்படியே ஒரு வெண்பாவில் அடக்கிச் சொன்னார்.

மாணிக்கம் பிள்ளை மகனாம் பெருமாள்தம்
காணிக்கை யாயிங் களித்த - பாணிக்கைத்
தின்னத் தெவிட்டாத தேனார் பலாப்பழத்தில்
தொண்ணூற்றி யாறு சுளை.

பாருங்கள். Methodology and Application என்று சொல்வார்கள் அல்லவா? அது இதுதான்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

1 comment:

  1. மிகவும் சுவையும் பயனும் உள்ளது - தேனில் ஊறிய பலாச்சுளை போல! அடுத்த உண்மைக்குக் காத்திருக்கிறேன்.

    முத்துசுப்ரமண்யம்

    ReplyDelete