Saturday 1 October 2011

PURATTASI SANI KILZAMAI




  

புரட்டாசி சனிக்கிழமை. 

ஒரு பழமையான மரபு அன்று அனுட்டிக்கப்படும். தீவிர சைவர்களைத் தவிர மற்றவர்கள் அஇன்று விரதம் இருந்து, திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவார்கள். 

என் மனைவி தன் இளமையில் இதனை மரபுபூர்வமாகக் கடைபிடித்து வந்ததாகவும், நடுவில் விடுபட்டுவிட்டதாகவும், வெறும் சைவ உணவுடன் இப்போது நின்றுவிடுவதாகவும் சொன்னார்கள்.
எனக்கு சற்று ஆச்சரியம். ஏனெனில் நாங்களெல்லாருமே தீவிர பைரவ சம்பிரதாய சைவ மரபைச் சேர்ந்தவர்கள். ஆனால் வைணவத்தை வெறுத்தது கிடையாது. 
என் மனைவியின் பாட்டியோ தீவிர சைவர். உணவுகூட மரக்கறி உணவுதான். மடி ஆசாரம் எல்லாம் பார்த்தவர்கள். மருத்துவமனைக்குச் சென்றுவந்தால்கூட குளிக்கவேண்டும். சாமி வரும்.
அவர்களிடம்தான் என் மனைவி வளர்ந்தவர்கள்.
மனைவி விளக்கினார்கள். பத்து வயதுவரை, ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும், நெற்றியில்  நாமம் போட்டுக்கொண்டு, கையில் ஒரு செம்பு ஒன்றை ஏந்திய வண்ணம் வீடுவீடாகச் சென்று, வீட்டுக்கு முன்னால் நிற்பார்கள். வீட்டுக்காரர்கள் செம்பில் அரிசி கொஞ்சம் போடுவார்கள். செம்பு நிறைந்தவுடன் வீடு திரும்புவார்கள். அந்த அரிசியைச் சமைத்து ஏழைகளுக்கு உணவாகப் படைப்பார்கள். அல்லது கோயிலில் கொடுப்பார்கள்.
எனக்கே வியப்பாக இருந்தது.
இதையெல்லாம் "நம்ம ஆட்களும்" செய்திருக்கிறார்களா என்ன! 


எது எப்படியிருந்தால் என்ன.
அந்த வழக்கத்தின் அடிப்படையாக அமைந்திருக்கிறதே - காருண்யம், தர்மம், இரக்கம் - அதுவல்லவா மிகப் பெரியது!
தானே உஞ்சவிருத்தி செய்து, அதனையும் தானே உண்டுவிடாமல், அதனை ஏழைகளுக்குக் கொடுப்பது என்பது பெரிய விஷயம்தானே?


ஆதிசங்கரர் தன்னுடைய ஐந்தாவது வயதில் ஒரு குறிப்பிட்ட மரபின்படி உஞ்சவிருத்தி செய்யப் போனார்.
அன்று ஏகாதசி. அன்று ஒரு பரம ஏழையின் வீட்டின் முன்னால் நின்று "பவதி பிக்ஷ¡ந்தேஹி" என்று குரல் கொடுத்தார். அவ்வாறு மூன்றே முறைதான் குரல் கொடுக்கலாம். அதற்குள் ஏதேனும் பிட்சை கிடைக்க வில்லை யென்றால் இடத்தைக் காலி பண்ணி விட வேண்டியதுதான்.
அன்று வயிறும் காலி.
அந்த ஏழையின் மனைவி வீட்டில் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தாள். ஒன்றுமே கிடைக்கவில்லை.
ஏகாதசி விரதம் முடிந்து, உண்ணாநோன்பை முறிப்பதற்காக வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக் கனி இருந்தது. அதுஇ இல்லையெனில் நோன்பை முடிக்கமுடியாது. மரபும் கெட்டும்விடும்.
தர்மமா, நோன்பு மரபா?
டக்கென்று நெல்லிக்கனியை எடுத்துப்போய், சங்கரரின் பிட்சைப் பாத்திரத்தில் போட்டாள்.
அந்த கருணையைப் பார்த்த சங்கரர் உள்ளத்தில் கழிவிரக்கம் பீரிட்டு, பெருகி ஓடி, அது பொன்மகளின்மீது அழகிய துதியாக உருவெடுத்தது. 
அந்த கனகதாரா தோத்திரத்தின் 21ஆம் பாடலின் போது பொன் நெல்லிக்கனிகளாக மழை பெய்தது.


புரட்டாசி சனிக்கிழமை இவ்வாறு செம்பில் அரிசியை உஞ்சவிருத்தியில் வாங்கி சமைத்துப் போடுவதற்குப் பெயர் "கோபாலம் எடுத்தல்" என்பார்கள்.
திருப்பதி வெங்கடாசலபதிக்கு என்று நல்ல தோத்திரம், மந்திரம் தருமாறு மனைவியார் கேட்டார்கள்.
"பிரபந்தத்திலிருந்தே பாடல் ஒன்றைத் தருகிறேன். அதுவே மந்திரம் தோத்திரம் எல்லாமே  ஆகும்." என்று சொல்லி அதனைப் படி எடுத்துக் கொடுத்து, "இது திராவிடவேதம். இதனையே ஓது", என்று கையில் கொடுத்தேன்.
அருமையாக பாயசம் வைத்து படைத்து, திராவிட வேதத்தை ஓதி, வேங்கடவனையும் அலர்மேலுத் தாயாரையும் வழிபட்டார்கள். வேங்கடவனையும் தாயாரையும் ஒருசேர நானும் வணங்கிவிட்டு வந்து அந்தப் பாயசத்தை சாப்பிட்டேன்.


அந்தப் பதிகத்தைத்தான் அடுத்த ப்லாகில் பார்க்கலாம்.
ஏதாவது தர்மத்தைச் செய்துவிட்டு, வேங்கடநாதனையும் தாயாரையும் வணங்கி, ஏற்ற நைவேத்தியம் வைத்து அந்தத் திருப்பதிகத்தைப் படித்து வழிபடலாமல்லவா?
யாராவது செய்வீர்கள்.


என்னடாயிது வழக்கத்துக்கு மாறாக நவராத்திரி சமயத்தில் அம்பாளையும் விட்டுவிட்டு சிவனையும் விட்டுவிட்டு வேங்கடவனைப்போய்......?
இப்படியும் நினைக்கத்தோன்றுகிறது அல்லவா?


:-)
"அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே" - அப்பர் வாக்கு.
எல்லாமே பொன்னரங்கம்தானே.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

2 comments:

  1. Aiyaa,
    ponnarangam enbathu edhai kuRikkinRadhu?

    kanaga sabaiyaana ponnambalathaiyaa? alladhu pon ranganaathanaiyaa?

    ariyalaal devi illai....konjam vilakkuga...

    ReplyDelete
  2. ivaRRai ERkanavee Agathiyar madal kulzuvil sila madalkaLil theLivaaga viLakkiyuLLEn. madalkaLai thEdipaarkkaveeNdum.

    ReplyDelete