Thursday 27 October 2011

KAIYELZUTHTHU MARAIYUM NERAM


கையெழுத்து மறையும் நேரம்


தமிழர்களின் வழக்கில் பல சொற்களும் சொற்றொடர்களும் இருந்தன. தற்காலத்தில் அவை மறைந்துபோய்விட்டன. 
தூரத்தைக் குறிக்கும் சொற்களில் கூப்பீடு தூரம், காலத்தைக் குறிப்பதில் 'கையெழுத்து மறையும் நேரம் ஆகியவை அப்படிப்பட்டவை.
சிறு பொழுது என்பன மணி நேரம், நிமிஷம், விநாடி, நாடி, கணம், இமைப்பொழுது, ஜாமம், முகூர்த்தம், நாழிகை, போன்றவை. 
இவை போக இன்னும் சில சொல்வழக்குகளும் உண்டு. பெரும்புலர் காலை, உஷத், விடியல் போன்றவை.
இவற்றில் ஒன்று 'கையெழுத்து மறையும் நேரம்' என்பது. 
இது சற்று நுணுக்கமானது.  
வெளிச்சம் மங்கி, ஆனால் இன்னும் இருட்டாக ஆகாமல், ஆனால் twilight-ஐ விட இன்னும் கொஞ்சம் வெளிச்சம் உள்ளது, அந்த நேரம். 
அதைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால் அது எப்படியிருக்கும், அந்த நேரம் எப்போது என்பது தெரிந்ததில்லை. 
ஒருநாள் அதையும் கண்டுபிடித்தேன். 
கோத்தா பாரு என்னும் ஊர், மலேசியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள நகரம். 
அந்த ஊரில் 1978 முதல் 1981 வரை இருந்தேன்.
அங்கு ஐஸேயா என்னும் பெரியவர் இருந்தார். நல்ல நண்பர். நிறைய உதவியிருக்கிறார். அப்போதே அவருக்கு எண்பது வயது. கண்ணாடி போடவில்லை. எங்கும் பழைய ஹெர்க்குலெஸ் சைக்கிளில்தான் செல்வார். ஓர் இங்க்லிஷ் தொப்பியும் ஒரு பைப்பும் அவருடைய ட்ரேட் மார்க்.
ஒருநாள் மாலை, என் வீட்டுக்கு வந்திருந்தவர், தம் வீடு திரும்ப, வாசலைவிட்டு இறங்கிச் சொல்லிக்கொண்டார். 
"இருங்க மிஸ்டர் ஐஸேயா. இன்னும் கொஞ்ச நேரம். அப்புறம் போகலாமே. இன்னம் 
நேரமிருக்கே", என்றேன். 
அவர் தன்னுடைய உள்ளங்கையை விரித்துக் கண்களைச் சுருக்கிப்பார்த்தார். (சுமார் ஒரு முழதூரத்தில் கையை விரித்துப் பிடித்தார்)
"இல்ல, டாக்டர். சத்த நேரத்துல ரொம்ப இருட்டீரும். இப்பவே போயிட்டாத்தான் நல்லது", என்று தமக்கே உரிய கறகறப்பான குரலில் சொன்னார்.
கைரேகை, கையெழுத்து மங்கலாகத் தெரியும் நேரம் அது. இப்படியும் ஒரு கணிப்பு.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

3 comments: