Thursday 28 April 2011

துவந்த யுத்தம்

துவந்த யுத்தம் என்பது இருவருக்கு இடையே மட்டும் நடக்கும் போர். இதனை Duel என்று அழைப்பார்கள்.  இதைப் பற்றி 'துவந்த யுத்தம்' என்னும் இழையொன்றை முன்பு எழுதியிருந்தேன். அதில் துரியோதனன் vs பீமன், வாலி vs சுக்ரீவன் முதலியவர்களுக்கு இடையே நடந்த துவந்த யுத்தத்தைப் பற்றியும் எழுதி, அந்த சம்பவங்களைக் குறிக்கும் சிற்பங்களின் படங்களையும் ஸ்கேன் செய்து போட்டிருந்தேன். ஜாவா, காம்போடியா ஆகிய இடங்களில் காணப்படும்
சிற்பங்கள் அவை.

அதற்கும் முன்னால் Throwing the Gauntlet என்னும் இழையில் இதே மாதிரியான விஷயங்களைப் பற்றி பேசியிருந்தோம்.  துவந்த யுத்தம் சம்பந்தமாக இன்னொரு சம்பவமும் நினவுக்கு வந்தது. வேடிக்கையான சம்பவம்தான்.

ருடால்·ப் விர்ச்சாவ் Rudolf Virchow என்பவர் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரஷ்யா நாட்டில் வாழ்ந்த மருத்துவ விஞ்ஞானி. அவர் Pathology, Bacteriology ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். பெரிய ஆராய்ச்சியாளர். மருத்துவத்துறையில் பல கண்டு பிடிப்புகளைச் செய்திருக்கிறார். சிலவகை கேன்சர்களில் கழுத்து, தோள்பட்டை குறுக்கெலும்புவுக்கு மேலே தோன்றக்கூடிய கழலைக் கட்டிக்கு Virchow's Gland என்று இவருடைய பெயரையே கொடுத்திருக்கின்றனர்.

இவர் தமக்கென்று கருத்துக்களை வைத்திருந்தவர்.  யாருக்காகவும் விட்டுக்கொடுத்துவிடமாட்டார்.  மகாகண்டனவாதி என்று பெயர் பெற்றவர்.  பிரஷ்ய அரசங்கத்தின் சுகாதாரப் பிரிவை அடிக்கடி கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்.

ஆகவே அவருக்கு ஏராளமான பெரிய இடத்து விரோதிகள் இருந்தனர்.

ஒருமுறை ஒரு ராணுவ ஆசாமியுடன் தகராறு ஏற்பட்டுவிட்டது. அந்த ஆள் ஒரு உயர் அதிகாரி.  பிரஷ்யாவின் ராணுவம் ஒரு தினுசானது.  அதில் அதிகாரியாக இருந்தவர்கள் எல்லாருமே பிரபுத்துவ மரபைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

அதுவும் சம்பந்தப்பட்ட அதிகாரி Fencing Master - வாள் வித்தையில் நிபுணன்.  குறி தவறாமல் இரண்டு கைகளாலும் துப்பாக்கியால் சுடக்கூடியவன்.  அப்பேற்பட்ட ஆளுடன் தகராறு.

அந்தக் கால மரபுப்படி விர்ச்சாவை அவன் துவந்த யுத்தத்துக்கு அழைத்தான்.  அவருடைய வயது, கல்வி, ஆயுதப் பயிற்சியின்மை ஆகியவற்றை நடுவர்களும் நண்பர்களும் சுட்டிக் காட்டிய பின்னர் விர்ச்சாவே தமக்கு உகந்த இஷ்டப்பட்ட ஆயுதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு விட்டுக்கொடுத்தான்.  அடுத்த நாள் நடுப்பகல் பன்னிரண்டு மணிக்கு துவந்தயுத்தம்.  பிரஷ்யாவின் முக்கிய அதிகாரிகள், கல்வியாளர்கள், அரச குடும்பத்தினர், பிரபுக்கள் எல்லாரும் பெருங்கூட்டமாகக் கூடினர்.  துவந்த யுத்தம் நடைபெறவேண்டிய மைதானத்தின் மத்தியில் ஒரு டேபில் போடப் பட்டிருந்தது.  போட்டியாளர்கள் இருவரும் அந்த டேபிலுக்குச் சென்றனர்.

அதில் ஒரு தட்டு. மூடப்பட்டிருந்தது.

விர்ச்சாவ் அந்த மூடியைத் திறந்தார்.

அதில் இரண்டு சாஸேஜ் தின்பண்டங்கள் இருந்தன.  ஸாஸேஜ் என்பது பன்றிக் குடலுக்குள் பொடிமாஸ் கீமா செய்யப்பட்ட பன்றிக்கறி திணிக்கப்பட்டு, குடலின் நுனிகள் முடிச்சுப் போடப்பட்டிருக்கும். ஸாஸேஜை சுட்டோ, வறுத்தோ, பொரித்தோ சாப்பிடுவார்கள்.
அந்த ஸாஸேஜ் தட்டை எடுத்து அதிகாரியிடம் நீட்டி விர்ச்சாவ் சொன்னார்:
"இந்த இரண்டு ஸாஸேஜ்களில் ஒன்று சாதாரணமானது. இன்னொன்றில் பயங்கரமான காலரா கிருமிகள் செலுத்தப் பட்டிருக்கின்றன. அதைச் சாப்பிடுபவர் நிச்சயமாக இறந்து விடுவார். இதைவிட பயங்கரமான ஆயுதத்தை என்னால் கற்பனை செய்யமுடியவில்லை.  ஆகவே ஒரு ஸாஸேஜை எடுத்துக்கொள்ளும். May the best man live", என்றார்.

அந்த அதிகாரி போட்டியிலிருந்து வாபஸ் வாங்கிக் கொண்டான்.

விர்ச்சாவ் தமது எண்பத்தோராவது வயதில் இருபதாம் நூற்றாண்டு பிறப்பதைப் பார்த்துவிட்டு 1902-ஆம் ஆண்டு நிம்மதியாகக் காலமானார்.

Russian Roullette என்றொரு பந்தயம் இருக்கிறது.

இந்தச் சொல்லை நம்ம ஆட்கள் ரஷ்யன் ரௌலெட் என்பார்கள். அவர்கள் இந்திய வரலாற்றைப் பள்ளியில் படித்திருப்பார்கள். இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுப்பதில் அழிசாட்டியம் செய்துகொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியர்கள் ஒரு சமயத்தில் ரௌலட் சட்டம் என்பதைப் போட்டனர். அந்த ஞாபகத்தில் இதையும் அப்படிச் சொல்வார்கள்.  சட்டம் போட்ட ஆசாமியின் பெயர் Sydney Rowlatt.  இது வேறு. ·பிரெஞ்சுச் சொல். ரூலே என்பது உச்சரிப்பு.

·பிரெஞ்சுக்காரர்கள் சூதாடுவதை ஒரு கலையாக வைத்திருப்பவர்கள். ரூலே என்பது ஒருவகை சூதாட்டம்.  அதில் ஒருவகைதான் ரஷ்யன் ரூலே.  அந்தக் காலத்தில் ரிவால்வர் என்றொருவகைக் கைத்துப்பாக்கி புழக்கத்தில் இருந்தது. அதில் Revolving Chamber என்னும் சங்கதி இருக்கும். அதில்தான் குண்டுகள் நிரப்பப் பட்டிருக்கும்.  ரஷ்யன் ரூலேயில் ஒரு ரிவால்வரின் சேம்பரில் இருக்கும் ஒரே ஒரு ஸ்லாட்டில்மட்டும் குண்டைத் திணித்துவிட்டு அதைச் சுழற்றிவிட்டு பந்தயத்தில் பங்கு பெறுபவர்களிடம் கொடுப்பார்கள்.  அதைத் தன் நெற்றிப்பொட்டில் வைத்து பிஸ்டல் குதிரையை அழுத்தவேண்டும்.

குண்டு வெடித்தால் ஹோகயா. வெடிக்கவில்லையென்றால் சூதாட்டத்தில் ஜெயித்ததாக அர்த்தம்.

இதையே துவந்த யுத்தத்திலும் பயன்படுத்திக்கொண்டார்கள்.  இரண்டு துப்பாக்கிகளை ஒரு தாம்பாளத்தில் வைத்து, போட்டியாளர்களிடம் கொடுப்பார்கள்.  அதில் ஒரு துப்பாக்கியில் மட்டும் குண்டு இருக்கும்.  இன்னொன்று காலி.  ஆனால் எந்தத் துப்பாக்கியில் குண்டு இருக்கிறது என்பது போட்டியாளர்களுக்குத் தெரியமாட்டாது.  ஆளுக்கொரு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, சற்று தூரத்துக்குச் சென்று துப்பாக்கியைக் குறிவைத்துக் குதிரையை அழுத்துவார்கள். குண்டு இருக்கும் பிஸ்டல் வெடிக்கும். குறியும் தப்பவில்லையென்றால் எதிரி காலி.

இதே அடிப்படையில்தான் வர்ச்சா·ப் தம்முடைய ஸாஸேஜ் போட்டியை நடத்திக் கொண்டிருக்கிறார்.

1 comment:

  1. அற்புதமான தகவல்களுக்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete