Tuesday 3 January 2012

SERENDIPITY

ஸெரெண்டிப்பிட்டி - Serendipity-#1

பல சமயங்களில் ஒன்றைப் பற்றி ஆராயும்போது வேறேதாவது புதியதாகத் தட்டுப்படும்.
இதனை 'Serendipity' என்று சொல்வார்கள். 
'Serendip' என்பது இலங்கையின் பழைய ஐரோப்பியப் பெயர். 
இதேபோல Cathay, Chipango, Golden Chersonese போன்ற பெயர்கள் அப்போது வழக்கில் இருந்தன. இவை வேறெதுவுமல்ல; சீனா, ஜப்பான், மலாயா ஆகியவைதாம்.
ஒன்றைத் தேடிப்போகும்போது வேறு ஏதோ கிடைப்பது அல்லது கண்டுபிடிக்கப்படுவதுதான் serendipity என்பது.
இந்தியாவைத் தேடிச் சென்ற கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் அல்லவா? செரெண்டிப் ஆகிய இலங்கைக்கு பதில் மேற்கு இண்டீஸ் கிடைத்தன அல்லவா? அப்படி வந்ததுதான் அந்தச் சொல். ஏதோ ஆண்டிப்பட்டி அரசம்பட்டி மாதிரி இல்லை? - 
இந்த செரெண்டிப்பிட்டி சமாச்சாரம் ஒன்று ஏற்பட்டது.


வள்ளிமலை வள்ளல் என்று புகழப்பட்ட திருப்புகழ் சச்சிதாநந்த சுவாமிகளின் வரலாற்றைப் படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு சம்பவம் பார்வையில் பட்டது. 
திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகளின் மடத்தில் மேற்படி சுவாமிகளுக்கும் வள்ளிமலை சுவாமிகளுக்கும் ஒரு திருப்புகழ்ப் பாட்டு சம்பந்தமாக கருத்துப்பரிமாற்றம் நடைபெற்றது. அப்போது 'கள்ளமுள்ள வல்லவல்லி' என்னும் திருப்புகழ்ப்பாடலின் கருத்து சம்பந்தமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபட்டது. 
ஞானியார் சுவாமிகள் பன்மொழி மேதை: பேரறிஞர்; பெரும் கல்விமான். அப்போது ஞானியார் சுவாமிகள் வள்ளிமலை சுவாமிகளைப் பார்த்து இவ்வாறு கூறிக்கொண்டு, விவாதத்திலிருந்து ஒதுங்கிக்
கொண்டார்:


"'கற்றது கைம்மண்ணளவு' என்ற வரம்பிற்குட்பட்டுக் கல்வி பயின்ற எங்கள் அறிவுக்கு ஓர் எல்லையுண்டு. 'கல்லாதது உலகளவு' என்றவாறு ஓதாது உணர்ந்த நீங்கள் மெய்யருள் ஞானிகளே. உள்ளதை இல்லாதது என்று சொல்லி அதை நிரூபித்தும்விடுவீர்கள். உதாரணமாகக்
'கூராழியால் முன் வீய நினைபவன் ஈடேறுமாறு மறைவு செய் கோபாலன்' - ஆதவன் இருக்கும்போதே, அவனையும் அவன் சோதியையும் மறைத்தவரும், அமாவாசை திதியை அபிராமி பட்டருக்காகப்
பௌர்ணமி என்று உலகுக்குக் காண்பித்தோரும், ஏழைப் புலவர் வாக்கை மெய்ப்பிக்க ஆற்றின் திசையை மாற்றிப் புதிய சூழ்நிலையை உருவாக்கியோருமான அருள் வள்ளல் வழியில் வந்தவர்கள் அல்லவா நீவிர்! உமது அருள் திறத்தின் மகிமையை அளவிடவும் முடியுமோ?"


இது என்ன புதுக்கதை என்று பார்த்தேன்.


இது இரட்டைப் புலவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி.
இரட்டைப் புலவர்கள் என்போர் காளமேகப்புலவரின் சமகாலத்தவர். 
ஒருவர் குருடர்; இன்னொருவர் முடவர். முடவரைக் குருடர் தம் தோளில் ஏற்றிக்கொள்வார். முடவர் வழிகாட்ட, குருடர் நடந்து செல்வார். Team-work, Comensality என்பதற்கு இது ஓர் அருமையான உதாரணம். ஒரு மாதிரியான biological interdependance. முன்னவர் ஒரு வெண்பாவின் முதலிரண்டு அடிகளைச் சொல்ல இரண்டாமவர் மீதி இரண்டடிகளையும் சொல்லி முடிப்பார்.
இவர்கள் 'திருவாமாத்தூர்க் கலம்பகம்' என்னும் பிரபந்தம் இயற்றி யிருந்தனர். 
அதனை அரங்கேற்றம் செய்தபோது,


'மாதைநாதர் வலங்கொள் பம்பை மேற்கரையில், கோயில் கொண்டார்'


என வரும் பகுதி வந்தது. 
அதனைக் கேட்டவர்கள் சிரித்துவிட்டனர்.
ஏனெனில் அப்போது திருவாமாத்தூர் கோயில், பம்பையாற்றின் கீழ்க்கரையில் இருந்தது. அதனைப் பாராத குருடர், மேற்கில் வைத்துப் பாடிவிட்டார்.


"யானும் அறியேன்; அவளும் பொய் சொல்லாள்" என்று இரட்டையர் பேசாமலிருந்துவிட்டனர்.


அன்று இரவே பெருமழை பெய்தது. ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு, கரையையும் மீறிக்கொண்டு ஆறு பரந்து விரிந்து ஓடியது.
இதன் விளைவாக ஆற்றின் போக்கு மாறியது. விடிந்தபோது வலப்புறம் மாறி ஓடிக் கொண்டிருந்தது.
பிரபந்தத்தில் கண்டதுபோல் ஆறு இப்போது ஓடியது.
இன்றும் அந்த ஆறு ஓடிய பழைய படுகையையும் இன்றைய போக்கையும் நன்கு காணலாம்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

2 comments:

  1. மேற்கரை என்பது நீரோட்டத்தின் மேல் பக்கம் (upstream) என்று கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது; இல்லையேல், ஆறு எப்படிப் பாய்ந்தாலும், மேற்குக் கரை மேற்கில்தானே இருக்கும்?

    ReplyDelete
  2. பலமுறை படித்து மகிழ்ந்துகொண்டிருக்கிறேன் - புதிய செய்திகளும், ”கல்லாதது உலகளவு” என்பதற்கு புதிய பொருளும் கிடைத்தன! “கல்லாதது” என்ற சொல்லுக்கு இது நாள் “இன்னும் கற்க வேண்டியது” என்றே பொருள் கொண்டிருந்தேன்; இப்போதுதான் “கற்று வராமல், இறையருள் பெற்ற மெய்ஞானியர்க்கே கிடைக்கும் அறிவு” என்ற பொருள் கண்டேன்.

    “'கூராழியால் முன் வீய நினைபவன் ஈடேறுமாறு மறைவு செய் கோபாலன்' ” - இதையும் தயை செய்து விளக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete